இமயமலையில் குறையும் பனிப்பொழிவு – ஆபத்தில் 200 கோடி பேரின் வாழ்வாதாரம்

இமயமலையில் குறையும் பனிப்பொழிவு – ஆபத்தில் 200 கோடி பேரி வாழ்வாதாரம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நவீன் சிங் கட்கா
    • பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர்

இமயமலைத் தொடரில் குளிர்காலப் பனிப்பொழிவு கணிசமாகக் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பனியால் மூடப்பட்டு இருக்கவேண்டிய பருவ காலத்தில் மலைத்தொடரின் பல இடங்களில் வெற்றுப் பாறைகளாகக் காட்சியளிக்கின்றன.

கடந்த 1980 மற்றும் 2020க்கு இடைப்பட்ட சராசரி பனிப்பொழிவுடன் ஒப்பிடுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும்பாலான குளிர்காலங்களில் பனிப்பொழிவு குறைந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

உயர்ந்து வரும் வெப்பநிலை காரணமாக, குறைந்த அளவில் பெய்யும் பனியும் மிக விரைவாகவே உருகிவிடுகிறது. மேலும், சில தாழ்வான பகுதிகளில் அதிக மழையும் குறைந்த பனிப்பொழிவும் காணப்படுகிறது. இது புவி வெப்பமடைதல் காரணமாகவே ஏற்படுவதாக காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையிலான குழு மற்றும் பிற அறிவியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இமயமலைத் தொடரின் பல பகுதிகளில் குளிர்காலத்தில் 'பனி வறட்சி' எனப்படும் நிலை இப்போது நிலவுவதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.

புவி வெப்பமடைதலின் விளைவாக பனிப்பாறைகள் வேகமாக உருகுவது, இந்தியாவின் இமயமலை மாநிலங்களும் பிராந்தியத்தின் பிற நாடுகளும் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய நெருக்கடியாக நீண்ட காலமாக இருந்து வருகிறது.

பனிப்பொழிவு குளிர்காலத்தில் குறைவது இந்த நிலைமையை மேலும் மோசமாக்குவதாக நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

பனி மற்றும் பனிக்கட்டிகளின் குறைபாடு இமயமலையின் தோற்றத்தை மாற்றுவது மட்டுமின்றி, பிராந்தியத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களையும் பல இயற்கையான சூழலியல் அமைப்புகளையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வசந்த காலத்தில் வெப்பநிலை உயரும்போது, குளிர்காலத்தில் குவிந்த பனி உருகி, அந்த நீர் ஆறுகளில் கலக்கிறது. பனி உருகுவதால் கிடைக்கும் இந்த நீரானது பிராந்தியத்தின் ஆறுகள் மற்றும் நீரோடைகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. இது குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் உற்பத்திக்குத் தேவையான தண்ணீரை வழங்குகிறது.

இது நீர் விநியோகத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், வறண்ட நிலைமைகள் காரணமாக இந்தப் பகுதிகள் காட்டுத்தீயால் பாதிக்கப்படும் அபாயத்தையும் ஏற்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

இமயமலையில் குறையும் பனிப்பொழிவு – ஆபத்தில் 200 கோடி பேரி வாழ்வாதாரம்

பட மூலாதாரம், Yunish Gurung

படக்குறிப்பு, மத்திய இமயமலைப் பகுதிகளில் குளிர்கால பனிப்பொழிவு கணிசமாகக் குறைந்து, மலைகள் வெறுமையாகவும், பாறைகளாகவும் மாறியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

எவ்வளவு தீவிரமான பிரச்னை?

மறைந்து வரும் பனிப்பாறைகள், குறைந்து வரும் பனிப்பொழிவு ஆகியவை மலைத்தொடரை நிலைத்தன்மையற்றதாக ஆக்குகின்றன. ஏனெனில், மலைகளை நிலையாக வைத்திருக்க சிமென்ட் போலச் செயல்படும் பனி மற்றும் பனிக்கட்டிகளை அவை இழக்கின்றன.

பாறை சரிவுகள், நிலச்சரிவுகள், பனிப்பாறை ஏரிகள் உடைவதால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு போன்ற பேரழிவுகள் ஏற்கெனவே பொதுவானவையாகி வருகின்றன.

இமயமலைத் தொடரில் பனிப்பொழிவின் அளவு குறைவது எவ்வளவு தீவிரமான பிரச்னை?

இந்திய வானிலை ஆய்வு மையம், டிசம்பர் மாதத்தில் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மழை, பனிப்பொழிவு என எதையும் பதிவு செய்யவில்லை.

உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய பல பகுதிகளில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், நீண்ட கால சராசரியைவிட 86% குறைவான மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீண்ட கால சராசரி (LPA) என்பது ஒரு பிராந்தியத்தில் 30 முதல் 50 ஆண்டுகள் காலகட்டத்தில் பதிவான மழை அல்லது பனிப்பொழிவின் சராசரியாகும். தற்போதைய வானிலையை இயல்பானது, அதிகமானது அல்லது பற்றாக்குறை என வகைப்படுத்த இந்த சராசரி பயன்படுத்தப்படுகிறது.

வானிலை ஆய்வு மையத்தின்படி, 1971 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் வட இந்தியாவின் நீண்ட கால சராசரி மழைப் பொழிவு 184.3 மில்லிமீட்டராக இருந்தது.

இந்தத் திடீர் வீழ்ச்சி ஒரு தற்காலிக நிகழ்வு மட்டுமல்ல என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இமயமலையில் குறையும் பனிப்பொழிவு – ஆபத்தில் 200 கோடி பேரி வாழ்வாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உத்தராகண்ட் மாநிலத்தில் பெண்கள் ஒரு மலைப் பாதையில் நடந்து செல்கின்றனர்

"இமயமலையில் குளிர்கால மழை பனிப்பொழிவு உண்மையில் குறைந்து வருகிறது என்பதற்கு வெவ்வேறு தரவுத் தொகுப்புகளில் இப்போது வலுவான சான்றுகள் உள்ளன," என்று பிரிட்டனில் உள்ள ரீடிங் பல்கலைக் கழகத்தின் வெப்பமண்டல வானிலை ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளர் கீரன் ஹன்ட் கூறினார்.

ஐரோப்பிய மத்தியகால வானிலை முன்னறிவிப்பு பகுப்பாய்வு மையத்தின் (ERA-5) தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தி, ஜம்முவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆய்வாளர் ஹேமந்த் சிங், "கடந்த ஐந்து ஆண்டுகளில் வடமேற்கு இமயமலையில் பனிப்பொழிவு 40 ஆண்டு நீண்ட கால சராசரியுடன் (1980-2020) ஒப்பிடும்போது 25% குறைந்துள்ளது" என்று கூறுகிறார்.

மத்திய இமயமலை அமைந்துள்ள நேபாளத்திலும் குளிர்கால பனிப்பொழிவு மற்றும் மழையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"அக்டோபர் முதல் நேபாளத்தில் மழைப்பொழிவு இல்லை, மேலும் இந்தக் குளிர்காலத்தின் மீதமுள்ள காலமும் பெரும்பாலும் வறண்டே இருக்கும் எனத் தெரிகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து குளிர்காலங்களிலும் ஏறக்குறைய இதே நிலைதான் இருந்து வருகிறது," என்று காத்மாண்டூவில் உள்ள திரிபுவன் பல்கலைக் கழகத்தின் வானிலை ஆய்வுத் துறை இணைப் பேராசிரியர் பினோத் போக்ரெல் கூறுகிறார்.

இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் சில குளிர்காலங்களில் கனமழை பெய்துள்ளதாகவும், ஆனால் இவை கடந்த கால குளிர்காலங்களில் சீராகப் பரவியிருந்த மழைப்பொழிவு போலன்றி, தனிப்பட்ட, தீவிர நிகழ்வுகளாக இருந்ததாகவும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இமயமலையில் குறையும் பனிப்பொழிவு – ஆபத்தில் 200 கோடி பேரி வாழ்வாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பனிப்பொழிவு குறைந்து வருவது இப்பகுதியில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்

பனி நீடிப்பு

மலைகளில் எவ்வளவு பனி குவிந்துள்ளது, அதில் எவ்வளவு பனி உருகாமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தரையில் நீடிக்கிறது என்பதை அளவிடுவது, பனிப்பொழிவு குறைந்து வருவதை மதிப்பிடுவதற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்தும் மற்றுமொரு வழியாகும். இது 'பனி நீடிப்பு' என்று அழைக்கப்படுகிறது.

சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD) வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, 2024-2025 குளிர்காலத்தில், கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இயல்பைவிட கிட்டத்தட்ட 24% குறைவான 'பனி நீடிப்பு' காணப்பட்டது.

கடந்த 2020-2025க்கு இடைப்பட்ட கடந்த ஐந்து குளிர்காலங்களில் நான்கில், இந்துகுஷ் இமயமலை பிராந்தியத்தில் இயல்பைவிடக் குறைவான பனி நீடிப்பு காணப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது.

"இது பொதுவாக, இந்துகுஷ் இமயமலை பிராந்தியத்தின் கணிசமான பகுதியில் குளிர்கால மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவில் ஏற்படும் குறைபாடுகளுடன் ஒத்துப் போவதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது," என்று சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையத்தின் தொலை உணர்வு மற்றும் புவி தகவல்களின் மூத்த அசோசியேட் ஸ்ரவன் ஸ்ரேஸ்தா கூறினார்.

ஜம்முவில் உள்ள ஐஐடியுடன் இணைந்து ஹேமந்த் சிங் எழுதி 2025இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, இமயமலை பிராந்தியம் இப்போது பனி வறட்சிகளை, அதாவது பனிப்பொழிவு கணிசமாகக் குறைவதை, அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. குறிப்பாக 3,000 முதல் 6,000 மீட்டர் உயரங்களுக்கு இடையில் இது காணப்படுகிறது.

"இந்தப் பிராந்தியத்தில் உள்ள 12 முக்கிய நதிப் படுகைகளின் மொத்த ஆண்டு நீர்வரத்தில் சராசரியாக நான்கில் ஒரு பங்கு அளவுக்கு பனி உருகுவதால் கிடைக்கும் நீரின் பங்கே இருப்பதால், பருவகால பனி நீடிப்பில் ஏற்படும் குறைபாடுகள் இந்த நதிப் படுகைகள் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 200 கோடி மக்களின் நீர் பாதுகாப்பைப் பாதிக்கின்றன," என்று சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையத்தின் பனி நிலவர அறிக்கை எச்சரிக்கிறது.

இமயமலையில் குறையும் பனிப்பொழிவு – ஆபத்தில் 200 கோடி பேரி வாழ்வாதாரம்

பட மூலாதாரம், Getty Images

இமயமலையில் உருகும் பனிப்பாறைகள் நீண்ட கால நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் அபாயத்தை உருவாக்குகின்றன. அதே நேரத்தில் குறைந்த பனிப்பொழிவு, வேகமாக உருகும் பனி ஆகியவை குறுகிய கால நீர் விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

பெரும்பாலான வானிலை வல்லுநர்கள், மேற்குத் திசை காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் வலுவிழந்ததால், குளிர்கால மழை மற்றும் பனிப்பொழிவு குறைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

இவை மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் குறைந்த காற்றழுத்த வானிலை அமைப்புகளாகும், அவை குளிர்ந்த காற்றைக் கொண்டு வருகின்றன. இவை வலுவாக இருக்கும்போது, வட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் மழையையும், சில நேரங்களில் பனிப்பொழிவையும் ஏற்படுத்துகின்றன. அவை வலுவிழக்கும்போது, குளிர்காலத்தில் மழையும் பனிப்பொழிவும் குறைவாகவே இருக்கும்.

கடந்த காலங்களில், மேற்குத் திசை காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் குளிர்காலத்தில் குறிப்பிடத்தக்க மழை மற்றும் பனிப்பொழிவைக் கொண்டு வந்தன. அது பயிர்களுக்கு உதவியது, மலைகளில் பனியை நிரப்பியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்த ஆய்வுகள் கலவையாக உள்ளன: சிலர் அதில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகின்றனர், மற்றவர்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காணவில்லை என்கின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"இருப்பினும், குளிர்கால மழை மற்றும் பனிப்பொழிவில் ஏற்படும் மாற்றம் மேற்குத் திசை காற்றழுத்தத் தாழ்வு மண்டங்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதை அறிவோம், ஏனெனில் அவை இமயமலை முழுவதும் பெரும்பாலான குளிர்கால மழைப்பொழிவுக்கு காரணமாகின்றன," என்று ஹன்ட் கூறினார்.

மேலும் அவர், "இங்கே இரண்டு விஷயங்கள் நடப்பதாக நாங்கள் நினைக்கிறோம்: முதலாவதாக, மேற்குத் திசை காற்றழுத்த மண்டலங்கள் பலவீனமடைந்து வருகின்றன. இரண்டாவதாக, அவை முன்பைவிட சற்று வடக்கே நகர்ந்திருக்கலாம். இதன் காரணமாக அவற்றால் அரபிக் கடலில் இருந்து போதுமான ஈரப்பதத்தைச் சேகரிக்க முடியவில்லை. இதன் விளைவாக, அவை குறைந்த மழையையும் பனியையும் பொழிகின்றன" என்று கூறினார்.

இந்த குளிர்காலத்தில் வட இந்தியா இதுவரை அனுபவித்த மேற்குத்திசை காற்றழுத்த மண்டலங்கள் "பலவீனமானவை" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பதிவு செய்துள்ளது. ஏனெனில் இதனால் மிகவும் பெயரளவுக்கு மட்டுமே மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவை உருவாகக்கூடும்.

குளிர்கால மழை மற்றும் பனிப்பொழிவு குறைவதற்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகள் விரைவிலோ அல்லது பின்னரோ கண்டுபிடிக்கலாம். ஆனால் இமயமலைப் பகுதி இப்போது இரட்டை சிக்கலை எதிர்கொள்கிறது என்பது ஏற்கெனவே தெளிவாகி வருகிறது.

அதாவது, அது தனது பனிப்பாறைகள் மற்றும் பனிப் பிரதேசங்களை விரைவாக இழந்து வரும் சூழலில், குறைவான பனிப்பொழிவைப் பெறத் தொடங்கியுள்ளது. இந்தக் கலவையான சிக்கல் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு