'இந்தியாவை விட சிறந்த சுழலை கொண்டுள்ள இங்கிலாந்து அரையிறுதியில் வெல்லும்'

டி20 உலகக்கோப்பை, இங்கிலாந்து - இந்தியா, அரையிறுதி, சுழற்பந்து வீச்சு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மேத்யூ ஹென்றி
    • பதவி, பிபிசி விளையாட்டுப் பிரிவு பத்திரிகையாளர்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இங்கிலாந்து அணி இந்தியாவை விட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளதாகவும், மும்பையில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடக்கும் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று தமக்கு ஒரு 'விசித்திரமான உணர்வு' இருப்பதாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகிறார்.

கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இந்தியா இந்தத் தொடருக்குள் நுழைந்தது.ஆனால் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவால் தோற்கடிக்கப்பட்டது மற்றும் குரூப் போட்டிகளில் தடுமாறியது.

இங்கிலாந்து இன்னும் ஒரு முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, ஆனால் தொடர்ச்சியான நெருக்கமான முடிவுகளைக் கடந்து ஐந்து தொடர் வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

"அவர்கள் வெற்றிக்கான ஒரு வழியைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது," என்று வாகன் 'டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல்' பாட்காஸ்ட்டில் பேசுகையில் கூறினார்.

"நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி, அது அதிக முக்கியத்துவம் இல்லாத ஒரு போட்டியாக இருந்தபோதிலும், அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது ஒரு சிறந்த முயற்சியாகும்."

இந்தத் தொடர் முழுவதும் இங்கிலாந்தின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. கேப்டன் ஹாரி புரூக் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு அற்புதமான சதத்தை அடித்தார். ஆனால் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு உதவும் பங்களிப்புகள் என்று பார்த்தால் குறைவாகவே இருந்தன.

குறிப்பாக அடில் ரஷித், லியாம் டாவ்சன் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோரின் சுழல், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கர்ரன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரின் வேகப்பந்துவீச்சை ஒரு பலமாக மைக்கேல் வாகன் குறிப்பிட்டார்.

'இந்தியாவை விட சிறந்த சுழற்பந்துவீச்சு'

டி20 உலகக்கோப்பை, இங்கிலாந்து - இந்தியா, சுழற்பந்து வீச்சு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அடில் ரஷித்

"இங்கிலாந்து இந்தியாவை விட சிறந்த சுழல் தாக்குதலை கொண்டுள்ளது," என்று வாகன் கூறினார்.

"வருண் சக்ரவர்த்தி அதிக ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். சுழலை பொறுத்தவரை டாவ்சன், ரஷித் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் இந்தத் தொடரின் சிறந்த மூவர் கூட்டணியாக இருந்துள்ளனர்."

வருண் சக்ரவர்த்தி இந்தத் தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் எடுத்த வீரராக உள்ளார், ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முக்கியமான போட்டிகளில் அவர் முறையே 40 மற்றும் 47 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை இந்தியா அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்திற்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் அவர் இந்தத் தொடரில் மூன்று ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார்.

"இங்கிலாந்தின் ஃபீல்டிங் முற்றிலும் தனித்துவமாக உள்ளது," என்றும் வாகன் கூறினார்.

"அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள். விக்கெட்டுகளுக்கு இடையே ரன் எடுப்பதற்கான இங்கிலாந்து வீரர்களின் ஓட்டம் சிறப்பாக உள்ளது. மும்பையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் இங்கிலாந்து அணி வேலையை கச்சிதமாக முடிக்கும் என்று எனக்கு ஒரு விசித்திரமான உணர்வு இருக்கிறது" என்கிறார்.

டி20 உலகக் கோப்பை, இங்கிலாந்து, இந்தியா, சுழற்பந்து வீச்சு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வருண் சக்ரவர்த்தி

'உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு'

இந்தத் தொடரில் தொடர்ந்து ஐந்து முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த, ஃபார்மில் இல்லாத தொடக்க வீரர் ஜோஸ் பட்லரை இங்கிலாந்து மீண்டும் களமிறக்கத் தயாராக உள்ளது.

பட்லர் தனது மோசமான நிலையிலிருந்து மீண்டு வர முயற்சிக்கும்போது தனது பேட்டிங் நுட்பத்தில் (Technique) அதீத கவனம் செலுத்துவதாக வாகன் கூறினார்.

"நீங்கள் முன்பு ஆடியது போல ஒரு சிறப்பான ஆட்டத்தை உணராத போது, உங்கள் நுட்பத்தில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள்," என்று அவர் கூறினார்.

"பட்லரின் கண் - கை ஒருங்கிணைப்பு சிறப்பானது. பந்தை மையப் பகுதியில் பார்த்து பந்துவீச்சுக்கு ஏற்றாற் போல் அவர் ஆடினாலே போதுமானது"

"அவர் இதுவரையிலும் ரேம்ப் ஷாட்களை (Ramp shots) ஆடவில்லை. இந்த பிட்ச் அந்த ஷாட்டிற்குப் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். அந்த ஷாட்டை விளையாட நீங்கள் பந்தை நேராக பேட்டில் படுமாறு பார்க்க வேண்டும்."

"அவர் நன்றாக விளையாடும்போது அந்த ஷாட்களை ஆரம்பத்திலேயே ஆடுவார்" என்கிறார் வாகன்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை நடக்கும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும், குறிப்பாக உள்ளூர் ரசிகர்கள் தங்கள் அணியை பெரும் ஆரவாரத்தோடு ஆதரிக்கும் போது.

டி20 உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே தொடர்ச்சியாக நடக்கும் மூன்றாவது அரையிறுதிப் போட்டி இதுவாகும். 2022-இல் அடிலெய்டில் நடந்த மோதலில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2024-இல் கயானாவில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டு அணிகளுமே தாங்கள் வென்ற அந்தந்த தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்றன.

முந்தைய இரண்டு மோதல்களிலும் விளையாடிய ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன், '2022 வெற்றி என்பது இங்கிலாந்து உற்றுநோக்க வேண்டிய ஒரு முன்மாதிரி' என்று கூறினார்.

டி20 உலகக் கோப்பை, இங்கிலாந்து, இந்தியா, சுழற்பந்து வீச்சு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாம் கர்ரன்

"வெற்றிக்கான வழியை தேடுகிறோம் என்றால், அதுபோன்ற செயல்திறனை முன்மாதிரியாகக் கொண்டு நமது ஆட்டத்திற்கான திட்டத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும்" என்று அவர் பிபிசி ஸ்போர்ட்டிடம் கூறினார்.

"ரசிகர்கள் கூட்டம் அட்டகாசமாக இருக்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது, இங்கு வந்து விளையாடுவது எங்களுக்குக் கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு."

"நாங்கள் இந்தியாவிலும் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளோம், எனவே அவர்களிடம் இருந்து எதை எதிர்பார்ப்பது என்பது எங்களுக்குத் தெரியும், அவர்கள் ஒரு சிறந்த அணி. சுற்றிலும் அழுத்தம் இருக்கும்" என்றார் சாம் கர்ரன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு