இரான் அதன் அண்டை இஸ்லாமிய நாடுகளைத் தாக்குவது 'பயத்தின்' வெளிப்பாடா?

பட மூலாதாரம், Fadel Senna/AFP via Getty Images
- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
பிப்ரவரி 28, சனிக்கிழமை அன்று இரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கிய சில மணிநேரங்களிலேயே, மத்திய கிழக்கில் உள்ள பல இஸ்லாமிய நாடுகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது.
இந்த நாடுகளில் அமெரிக்க ராணுவத் தளங்கள் இருப்பதாலும், இரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு நடவடிக்கைகளுக்கு அவை ஆதரவு அளித்ததாலும் இவை இரானின் இலக்குகளாக மாறியுள்ளன.
இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டு வரும் பெரிய அளவிலான மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியம் முழுவதும் இரான் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இரானிய ராணுவம் தெரிவித்துள்ளது.
தற்காப்புக்காக இரான் அனைத்து ராணுவ வழிமுறைகளையும் பயன்படுத்தும் என்று இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறினார்.
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 'ட்ரூத்ஃபுல் ப்ராமிஸ் 4' (Truthful Promise 4) என்ற நடவடிக்கையின் கீழ் அமெரிக்கத் தளங்கள் மற்றும் சொத்துக்களை இரான் குறிவைத்து வருவதாக, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இரான் குறிவைத்த நாடுகளில் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் அடங்கும் என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் நிலைமை மிகவும் மோசமாகி, பிராந்திய நிலைத்தன்மை குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன.
இரானிய தாக்குதல்களில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், AFP via Getty Images
இரானியத் தாக்குதல்களைத் தொடர்ந்து துபை மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.
சயீத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்த ட்ரோன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதை அபுதாபி அதிகாரிகள் உறுதிப்படுத்தினர், ஆனால் அதன் இடிபாடுகள் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.
உலகின் மிகவும் பரபரப்பான பயணிகள் விமான நிலையமான துபை சர்வதேச விமான நிலையமும் தாக்குதல்களில் சேதமடைந்தது, மேலும் நான்கு ஊழியர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 1, ஞாயிற்றுக்கிழமை அன்றும் இரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தொடர்ந்தது, தோஹா, துபை மற்றும் மனாமா ஆகிய இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.
தனது உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் மரணத்தைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கூட்டாளிகள் மற்றும் தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி இரான் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
சனிக்கிழமை காலை அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் காமனெயி உயிரிழந்ததை இரானின் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தின.
இதற்கிடையில், கத்தார், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்கள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்ததாகக் கூறின, ஆனால் விழுந்த இடிபாடுகள் அங்கிருந்த அமெரிக்க ராணுவத் தளங்களுக்குப் பரவலான சேதத்தை ஏற்படுத்தின.
துபையில், முறியடிக்கப்பட்ட வான்வழித் தாக்குதலின் இடிபாடுகள் உலகின் ஒன்பதாவது பரபரப்பான துறைமுகமான ஜெபல் அலி ஆழ்கடல் துறைமுகத்தின் ஒரு பகுதியில் தீயை ஏற்படுத்தின.
பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் டிரோன் தாக்குதலால் தனது விமான நிலையம் சேதமடைந்ததாகத் தெரிவித்தது.
ஞாயிறு காலை இதுபோன்ற தாக்குதல்கள் நடந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வெளியாகின.

பட மூலாதாரம், Aggelos NAKKAS/AFP via Getty Images
சனிக்கிழமையன்று, பஹ்ரைன் தலைநகர் மனாமாவி்ல் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படை தலைமையகத்தைத் தாக்கியதாக, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. அப்பகுதியில் இருந்து கரும்புகை எழுவதைக் காண முடிந்தது.
இதற்கிடையில், டுக்மின் வணிகத் துறைமுகத்தில் இரண்டு ட்ரோன்கள் விழுந்ததில் ஒரு ஊழியர் காயமடைந்ததாக, ஓமனின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை எத்தகைய எதிர்வினை எழுந்துள்ளது?
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் மீது இரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது தங்களின் இறையாண்மையை மீறும் செயல் என்றும் கூறியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய அரசுகளுக்கிடையேயான அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் இரானின் தாக்குதல்களைக் கண்டித்துள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு 57 நாடுகளை உள்ளடக்கியது. இது பெரும்பாலும் இஸ்லாமிய உலகின் கூட்டுக்குரல் என்று அழைக்கப்படுகிறது.
1969-இல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டக் கொள்கைகளைத் தொடர்ந்து மீறுவது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குவதுடன், நல்ல அண்டை நாட்டு உறவுகள், பரஸ்பர மரியாதை மற்றும் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த சர்வதேச உறவுகளின் அடித்தளத்தைச் சீர்குலைப்பதாக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சௌதி அரேபியாவின் மெக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச இஸ்லாமிய அரசு சாரா அமைப்பான முஸ்லிம் உலக லீக், அண்டை அரபு நாடுகளுக்கு எதிரான இரானின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்துள்ளது.
பல கேள்விகளை எழுப்பியுள்ள இரானின் தாக்குதல்கள்

பட மூலாதாரம், Reuters
இரானின் அண்டை நாடுகள் மீதான தாக்குதல்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
உடனடி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், கூட்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு இரானுக்குக் கிடைத்திருக்கக்கூடிய சர்வதேச அனுதாபத்தை அதுவே சிதைத்துக்கொண்டதா?
இந்தத் தாக்குதல்கள் வளைகுடா நாடுகளை இரானிடமிருந்து விலகிச் செல்ல வைக்குமா?
மேலும், ஏவுகணைத் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் பரவியுள்ள பீதி, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டது மற்றும் அபுதாபியில் ஒரு குடிமகன் உயிரிழந்தது போன்ற நிகழ்வுகள், இரான் தனது பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் ராஜீய அபாயங்களை அதிகரித்துள்ளது என்ற கேள்வியை மிக முக்கியமானதாக மாற்றுகிறதா?
பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகள் நிதானத்தையும் பேச்சுவார்த்தையையும் வலியுறுத்தும் வேளையில், இரானின் இத்தகைய ஆக்ரோஷமான நிலைப்பாடு எதிர்கால பேச்சுவார்த்தைகளில் அதன் நிலையை பலவீனப்படுத்துமா? இந்த நடவடிக்கை சர்வதேச அரங்கில் ஆதரவைத் திரட்டுவதற்குப் பதிலாக, இரானுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்துமா?
இரானின் தாக்குதல்கள் 'ராஜீய' ரீதியில் தவறானவையா?

பட மூலாதாரம், Getty Images
அஸ்வினி மகாபத்ரா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) சர்வதேச ஆய்வுகள் துறையின் பேராசிரியராகவும், மத்திய கிழக்கு விவகாரங்களில் நிபுணராகவும் உள்ளார்.
அவர் கூறுகையில், "இது ராஜீய ரீதியான தவறு கிடையாது. இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அரசாங்கத்தின் அதிகாரம் சரிந்துவிட்டது. எனவே, அதற்குப் பிறகு இரான் எடுக்கும் இந்த நடவடிக்கைகள், அரசாங்கம் இன்னும் சிதையாமல் அப்படியே இருக்கிறது என்பதைத் தனது மக்களுக்குக் காட்டுவதாகும்"என்றார்.
இரானின் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடம் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கும், எனவே அங்கு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கே தாங்கள் எப்படி முன்னோக்கிச் செல்வோம் என்பது தெரியாது என்று பேராசிரியர் அஸ்வினி மகாபத்ரா கூறுகிறார்.
இரானின் தாக்குதல்கள் அதன் அரசாங்கத்துக்குள் ஒரு குழப்பமான நிலை இருப்பதைக் காட்டுவதாக அவர் கூறுகிறார்.
இதுகுறித்து பேராசிரியர் அஸ்வினி மகாபத்ரா கூறுகையில், "வெளியில் இருந்து பார்க்கும்போது இது ராஜீய ரீதியான தவறாகத் தோன்றலாம், ஆனால், உள்ளிருந்து உருவாகும் சூழ்நிலைகளில், இரானின் கொள்கையை யார் உருவாக்குவார்கள், எத்தகைய பதில் அளிக்கப்பட வேண்டும் மற்றும் எந்தத் திசையை நிர்ணயிக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பார்கள் என்பதைப் பொறுத்தே இதைப் பார்க்க வேண்டும்" என்கிறார்.
"ஒன்று நீங்கள் பீதியில் செயல்படுகிறீர்கள். மற்றொன்று, இந்த ஆட்சி இன்னும் சிதையாமல் இருக்கிறது மற்றும் இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் உள்ளது என்பதை நீங்கள் வேண்டுமென்றே காட்ட முயற்சிக்கிறீர்கள். காமனெயியை எதிர்த்தவர்களை அவர்களால் ஒழிக்க முடியும். எனவே, இரானிய அரசாங்கம் தனது வலிமையைக் காட்டுகிறது. அரசாங்கத்தின் சட்டபூர்வமான அங்கீகாரம் தான் அவர்களுக்கு இப்போதுள்ள கேள்வி. ஒரு நிலையான அரசாங்கம் இல்லாதபோது இது ஒரு பீதியின் அடிப்படையிலான எதிர்வினையாக இருப்பதால், இதை நான் ராஜீய தவறு என்று நம்பவில்லை."
இரானிடம் "நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகள் உள்ளன, எனவே கத்தாரிலிருந்து ஜோர்டான் வரை உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களையும் அவர்களால் தாக்க முடியும். அவை அவற்றின் எல்லைக்குள் உள்ளன. இதை அவர்கள் தங்கள் மக்களுக்கும் காட்ட வேண்டும், இல்லையா?" என்று பேராசிரியர் மகாபத்ரா கூறுகிறார்.
முனைவர் பிரேம் ஆனந்த் மிஸ்ரா, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் நெல்சன் மண்டேலா அமைதி மற்றும் மோதல் தீர்வு மையத்தில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.
இரான் ஒரு ராஜீய தவறைச் செய்துவிட்டதாக அவர் கருதுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இது நிச்சயமாக ஒரு ராஜீய தவறு, இதற்கு இரான் வளைகுடா நாடுகளை அரசியல் ரீதியாக குறிவைக்க முயன்றது காரணமல்ல. இந்தத் தாக்குதல்கள் இரானின் ராணுவத் திறன் வரம்புக்குட்பட்டது என்பதைக் காட்டுகின்றன. அந்த நடவடிக்கையின் குறைபாடுகள் இப்போது அம்பலமாகியுள்ளன" என்கிறார்.

பட மூலாதாரம், Stringer/Anadolu via Getty Images
இந்தத் தாக்குதல்கள் விரக்தியின் காரணமாக மேற்கொள்ளப்பட்டவை என்பதைக் காட்டுகின்றன, இதில் இரான் எப்படியாவது பதிலடி கொடுப்பதாகத் தோன்ற முயல்கிறது என்று முனைவர் பிரேம் ஆனந்த் மிஸ்ரா கூறுகிறார்.
"எனவே, இந்த அவநம்பிக்கை கொண்ட நடவடிக்கை ஒரு ராஜீய ரீதியான தவறில் முடிந்துள்ளது. இதன் விளைவு என்னவென்றால், ஆரம்பத்தில் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்த வளைகுடா நாடுகள், இப்போது கூட்டாக அமெரிக்கப் பாதுகாப்பை ஏற்றுக்கொண்டு, இஸ்ரேலுக்குத் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளன" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இஸ்லாமிய நாடுகளுடனான இரானின் உறவுகள் என்ன ஆகும்?
இரானின் இந்தத் தாக்குதல்கள் அண்டை இஸ்லாமிய நாடுகளுடனான அதன் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
பேராசிரியர் அஸ்வினி மகாபத்ரா இதனைக் குறித்து கூறுகையில், "அமெரிக்காவும் இஸ்ரேலும் எதைச் செய்திருந்தாலும், அவை இரானின் அதிகாரத்தை மாற்றுவதற்காகவே செய்துள்ளன. இனி எதிர்காலத்தில் இரானில் யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்காவின் கூட்டாளிகள். இந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன"என்று விளக்கினார்.
முனைவர் பிரேம் ஆனந்த் மிஸ்ரா கூறுகையில், "வளைகுடா நாடுகளின் பொதுக்கருத்து இரானுக்கு ஆதரவாக இருக்காது என்பது நிச்சயம், ஏனெனில் பொதுமக்களின் உணர்வுகள் தேசியவாதத்தை மிகவும் வலுவான முறையில் பார்க்கின்றன. அவர்கள் தங்களை மதம் சார்ந்த கோணத்தில் மட்டும் பார்க்கவில்லை. சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் அல்லது கத்தார் மக்கள் என யாராக இருந்தாலும், அவர்களுக்கு இரான் மீது அத்தகைய நல்ல மனப்பான்மை இருக்காது. குறிப்பாக ஐஆர்ஜிசியின் ஆட்சி தொடர்ந்தால் இது தான் நிலை" என்கிறார்.
"பிராந்திய பாதுகாப்பு இந்த குழப்பமான சூழலில் ஆபத்துக்குள்ளாகும், ஆனால், இரானில் ஏற்படும் மாற்றங்கள் குறைந்தபட்ச குழப்பத்துடன் இருக்க வேண்டும் என்றே வளைகுடா நாடுகள் விரும்பும். ஏனெனில், அங்கு ஏற்படும் குழப்பம் இரானின் அண்டை நாடுகளையே பெரிதும் பாதிக்கும்" என்று முனைவர் பிரேம் ஆனந்த் மிஸ்ரா கூறுகிறார்.
வருங்காலத்தில் இந்த இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்கப் படைகளின் இருப்பு அதிகரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதுகுறித்து பேராசிரியர் அஸ்வினி மகாபத்ரா கூறுகையில், "இது அமெரிக்காவைப் பொறுத்தது. அதிபர் டிரம்ப் இருக்கும் வரை, அந்த ராணுவத் தளங்கள் அதே நிலையிலேயே இருக்கும். பிற நாடுகளில் இத்தகைய ராணுவத் தளங்களை நிறுவி பராமரிக்க அதிக மூலதனம் தேவைப்படுகிறது. இந்த நிலை எதிர்காலத்தில் தொடருமா என்பது அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பொறுத்தே அமையும். இது முற்றிலும் பொருளாதார வளங்கள் சார்ந்த விஷயமாகும்"என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
முனைவர் பிரேம் ஆனந்த் மிஸ்ரா தொடர்ந்து இதுகுறித்து கூறுகையில், "பாருங்கள், இரானின் அண்டை நாடுகளில் ஏற்கெனவே அமெரிக்காவின் இருப்பு உள்ளது. ஆனால், அமெரிக்காவின் இடம் நிச்சயமாக அதிகரிக்கும். அதிபர் டிரம்ப் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். இஸ்ரேலும் அமெரிக்கா ஒரு 'பாதுகாப்பு காவலராக' இந்தப் பிராந்தியத்தில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றே விரும்பும்" என்று விளக்குகிறார்.
மேலும், "மூலோபாயம் என்பது அரசியல் மற்றும் ராணுவம் ஆகிய இரண்டு நோக்கங்களைக் கொண்டது. இரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அரசியல் நோக்கம் நிறைவேறிவிடும். ஆனால், ராணுவ நோக்கம் என்பது நீண்ட காலத் திட்டமிடலை உள்ளடக்கியது, ஏனெனில் அங்கு ஏற்படும் அதிகார வெற்றிடம் பெரும் குழப்பத்துக்கு வழிவகுக்கும். இரான் அடுத்த இராக்காக மாறுவதை அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் விரும்பவில்லை"என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரான் ராஜீய ரீதியாக தனிமைப்படுத்தப்படுமா?
இந்த சமீபத்திய நிகழ்வுகளுக்கு பிறகு இரான் 'ராஜீய தனிமைப்படுத்தலை' சந்திக்க நேரிடுமா என்ற கேள்வியும் எழுகிறது.
பேராசிரியர் அஸ்வினி மகாபத்ரா இதுகுறித்து கூறுகையில், "ராஜீய ரீதியான தனிமைப்படுத்தல் ஏற்கெனவே இருந்து வருகிறது, ஏனெனில் இந்தப் பிராந்தியம் பெரும்பாலும் சுன்னி பிரிவினரைக் கொண்டது. பஹ்ரைனில் ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக இருந்தாலும், சுன்னி பிரிவினரே அதிகாரத்தில் உள்ளனர். எனவே, ஷியா-சன்னி என்ற கோணத்தில் பார்த்தால், ராஜீய சிக்கல்கள் ஒன்றும் புதியவை அல்ல. அவை ஏற்கெனவே இருக்கின்றன"என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், "இரானுக்கு உடனடியாக எந்த ஆதரவோ அல்லது அனுதாபமோ கிடைக்காது, ஏனெனில், இரான் இப்படிச் செய்திருக்கக் கூடாது என்றே மக்கள் கூறுவார்கள். போர் என்பது இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலானது, அதில் அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளது எனும்போது, இரான் ஏன் இந்த நாடுகளை உள்ளே இழுக்கிறது என்ற விமர்சனங்கள் எழும்"என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












