குடல் ஆரோக்கியம் உங்கள் வாழ்நாளை அதிகரிக்குமா? மல ஆய்வில் தெரியவந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஹ்யூக் பிம்
- பதவி, பிபிசி சுகாதார பிரிவு ஆசிரியர்
மனித உடலிலுள்ள உறுப்புகளில் குடல் வியப்புக்குரிய விவாதப் பொருட்களில் ஒன்றாக மாறியுள்ளது. சமூக ஊடக இன்ஃப்ளுயன்சர்கள், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படும் நிரூபிக்கப்படாத துணைப் பொருட்களை விளம்பரப்படுத்துகின்றனர்.
குடல் மீதான இந்த மோகத்தைச் சிலர் தற்காலிகமான போக்கு என்று புறக்கணிக்கின்றனர். இருப்பினும், பல மருத்துவர்கள் நமது குடல் நுண்ணுயிரிகள் உளவியல் ஆரோக்கியம் முதல் சில புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்பு வரை பலவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நினைக்கிறார்கள்.
இவையன்றி எனக்கு ஆர்வத்தைத் தூண்டும் மற்றுமொரு மருத்துவ சாத்தியக்கூறு உள்ளது. அதாவது, நமது குடல் எவ்வளவு சிறப்பாக அல்லது மோசமாக முதிர்ச்சியடைகிறோம் என்பதை எவ்வாறு பாதிக்கிறது என்பதே அது.
அதனால்தான், சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில், என்னுடைய சொந்த குடல் ஆரோக்கியம் குறித்த அறிக்கையை பெறுவதற்காகக் காத்திருந்தேன்.
நான் மருத்துவர் ஜேம்ஸ் கின்ரோஸை சந்திக்க அங்கு சென்றிருந்தேன். அவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பேராசிரியராகவும், குடல் மற்றும் மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றுகிறார். ஆனால், அவர் மக்களின் மலத்தை ஆய்வு செய்கிறார் என்பதே அவரது பணியின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம்.
அதற்கு சில வாரங்களுக்கு முன்பு, எனது சொந்த மல மாதிரியை ஓர் ஆய்வகத்திற்கு அனுப்பியிருந்தேன்.
இதுபோன்ற பரிசோதனைகளால் நமது குடல் நுண்ணுயிரிகள், அதாவது நம் வயிற்றுக்குள் வாழும் டிரில்லியன் கணக்கான நுண்ணுயிரிகள் (பெரும்பாலும் பாக்டீரியாக்கள், ஆனால் வைரஸ்களும் பூஞ்சைகளும்கூட இதில் அடங்கும்) பற்றி அறிய முடியும்.

மருத்துவர் ஜேம்ஸ் கின்ரோஸ் "நான் ஒரு நுண்ணுயிரி ஆதரவாளர். இவை நமது ஆரோக்கியத்தின் அனைத்து அம்சங்களிலும் ஆழமாகப் பதிந்துள்ளன," என்கிறார்.
வயது முதிர்ச்சி செயல்முறையில் குடல் முக்கியப் பங்கை வகிக்கக்கூடும் என்று அவர் நம்புகிறார். இது நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம், நமது முதுமைக் காலங்களில் நாம் எவ்வளவு உடல் வலிமையுடன் இருக்கிறோம் என்பதில் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறார் அவர்.
ஆனால், வயது முதிர்ச்சி செயல்முறையில் குடல் நுண்ணுயிரிகளின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்பட்டு இருப்பதாகச் சில நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், என்னிடம் பேசிய அனைவருமே இதில் மேலதிக ஆராய்ச்சி தேவை எனக் கருதுகின்றனர்.
இப்போது எனக்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டதாலும், சமீபத்தில் தாத்தா ஆனதாலும், வரும் தசாப்தங்களில் நான் எப்படி இருப்பேன் என்பது பற்றி எனது சொந்தக் குடல் சொல்வது என்ன என்பதைக் கண்டறிய இது சரியான நேரம் எனத் தோன்றியது.
அதோடு, குடல் ஆரோக்கியம் உண்மையில் முதுமை மீது தாக்கம் செலுத்துமெனில், அதை மேம்படுத்திக் கொள்ள நாம் என்ன செய்ய முடியும் என்ற பெரியதொரு கேள்விக்குப் பதில் தேட முயன்றேன்.
117 வயது மூதாட்டி
மரியா பிரான்யாஸ் மொரேரா உலகின் மிக வயதான நபராக அறியப்பட்டார். 2024இல் வடக்கு ஸ்பெயினில் 117 வயதில் அவர் உயிரிழந்த பிறகு, விஞ்ஞானிகள் அவரது மலம், ரத்தம், உமிழ்நீர், சிறுநீர் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்து, ஐபீரிய தீபகற்பத்தைச் சேர்ந்த பிற 75 பெண்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினார். "அவர் கிராமப்புறத்தில் வசித்தார். தினமும் ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்தார். மேலும், எண்ணெய்ச் சத்து நிறைந்த மத்திய தரைக்கடல் உணவை உட்கொண்டார்."
ஆனால், அவர் தினசரி மூன்று வேளை தயிர் சாப்பிட்டார் என்பதுதான், அவரை மற்றவர்களிடம் இருந்து தனித்து நிற்கச் செய்தது.
இந்த ஆய்வை இணைந்து மேற்கொண்ட பார்சிலோனா பல்கலைக் கழகத்தின் மரபியல் நிபுணர் மருத்துவர் மானெல் எஸ்டெல்லர், மொரேராவின் தயிர் சாப்பிடும் பழக்கம் அவருக்கு இன்ஃப்ளமேஷனை குறைக்கக்கூடிய அதிகளவிலான நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வழங்கியிருக்க வாய்ப்புள்ளது எனக் கருதுகிறார்.
"தனது வயதைவிட இளமையாகத் தோன்றும் செல்கள் அவரிடம் இருந்தன," என்று எஸ்டெல்லர் கூறுகிறார்.
நூறு வயதைக் கடந்தவர்கள் பற்றிய பிற ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Shutterstock
தொடர்ச்சியாக, 100 வயதைத் தாண்டியவர்களின் குடல்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள், வியக்க வைக்கும் அளவிலான பாக்டீரியாக்கள் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்ட மற்றோர் ஆய்வில், தென்கிழக்கு சீனாவிலுள்ள ஜியாவோலிங் நகரிலுள்ள ஆய்வாளர்கள் நூறு வயதைக் கடந்த 18 பேரிடம் இருந்து மல மாதிரிகளை எடுத்து, இளம் வயதினருடன் ஒப்பிடும்போது, அதிக பன்முகத்தன்மை கொண்ட பாக்டீரியாக்களை கண்டறிந்தனர்.
குடல் 'பன்முகத்தன்மை கொண்ட தோட்டம்' போல் இருக்க வேண்டும்
லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முதியோர் மருத்துவத் துறையின் மருத்துவ விரிவுரையாளரான மருத்துவர் மேரி நி லோக்லைன் என்பவருக்கு இது அர்த்தமுள்ள விஷயமாகப்படுகிறது.
நமது குடல் நுண்ணுயிர்த் தொகுதியை ஒரு தோட்டம் போலக் கருதுவது உதவியாக இருக்கும் என்கிறார் அவர். "அந்தத் தோட்டம் இயன்ற வரைக்கும் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்."
"செடிகளே இல்லாத, தரிசாகக் காணப்படும், பன்மை குறைந்த தோட்டத்தைவிட, நிறைய பூக்கள், வண்ணங்கள், விதைகள் நிறைந்த தோட்டமே உங்களுக்குத் தேவையானது" என்று அவர் விளக்குகிறார்.
ஆனால், நமக்கு வயது ஆக ஆக, நம்முடைய நுண்ணுயிர்த் தொகுதியின் பன்முகத்தன்மை கணிசமாகக் குறைகிறது என்பதே பிரச்னை. முதிர்ச்சியின் காரணமாகச் சில நன்மை தரும் பாக்டீரியாக்கள் குடலில் இருந்து மறைந்துவிடுகின்றன.
ஆனால், இந்த வழக்கத்திற்கு மாறாக நல்ல பாக்டீரியாக்களை தக்கவைத்துக் கொள்ளும் முதியவர்கள், நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.
நி லோக்லைனை பொறுத்தவரை, அந்த ஆய்வுகள் நம் குடலுக்கும் முதுமைக்கும் இடையே இருக்கும் தொடர்புக்குச் சான்றாக உள்ளன. "நூறு வயதைக் கடந்தவர்களிடம், அதிக பன்முகத்தன்மை கொண்ட நுண்ணுயிர்த் தொகுதி உள்ளது என்பது நமக்குத் தெரியும்."

பட மூலாதாரம், Getty Images
"அவர்கள் ஒரு வகையில் உயர்ந்த மனிதர்களைப் போன்றவர்கள். அவர்களால் தங்கள் நுண்ணுயிர்ப் பன்முகத்தன்மையைப் பராமரிக்க முடிந்துள்ளது," என்று குறிப்பிட்டார் லோக்லைன்.
அதுமட்டுமின்றி, இது ஒருவரது நீண்ட வாழ்நாள் பற்றியது மட்டுமல்ல. அவர்கள் தங்கள் பிற்காலங்களில் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்பதைப் பற்றியது. குடல் பாக்டீரியாக்களுக்கும் பலவீனத்திற்கும் அல்லது ஒரு முதியவர் நோய் அல்லது காயத்தில் இருந்து மீண்டு வரும் திறனுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக கின்ரோஸ் விளக்குகிறார்.
என் உண்மையான வயது vs என் குடலின் வயது
செயின்ட் மேரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில், கின்ரோஸ் தனது பரிசோதனை முடிவுகளை அறிவித்தார்: எனது குடலில் உள்ள நுண்ணுயிரிகளில் நல்ல "பல்வகைமை" உள்ளது. அது "பரவலாக ஆரோக்கியமாக" இருக்கிறது. இதுவொரு நல்ல செய்தி. ஆனால், அவரது தொனியில் சில எச்சரிக்கைகள் இருப்பதையும் உணர்ந்தேன்.
முதலில், குடலிலுள்ள சில "காரணிகள்" இதய நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று அவர் விளக்கினார். மிகவும் கவலைக்குரிய வகையில், சில மோசமான நுண்கிருமிகளும் காணப்பட்டன. ஈ.கோலை, சி-டிஃபிசில் ஆகியவை என் குடலில் உள்ளன. இது அசாதாரணமானது அல்ல. (ஆன்டிபயாடிக் பயன்பாடு அல்லது முன்பு ஏற்பட்ட இரைப்பைக் குடல் அழற்சி இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.)
சரி, என் வயது குறித்த கேள்விக்கு வருவோம்.
எனது குடல் நுண்ணுயிரி அமைப்பு, ஏறக்குறைய என்னைவிட ஐந்து வயது மூத்த இத்தாலிய மனிதர் ஒருவரின் அமைப்புக்கு நிகரானதாக இருப்பதாக கின்ரோஸ் என்னிடம் கூறினார். வடக்கு இத்தாலியில் உள்ள 62 பேரிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வுடன் எனது பரிசோதனை முடிவுகளை ஒப்பிட்டு அவர் இதைக் கண்டறிந்துள்ளார்.
அந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் 22 முதல் 109 வயது வரையிலான வெவ்வேறு வயதுடையவர்களின் மல மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்தனர். இதுவொரு நபரின் குடல் வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளில் எப்படி இருக்கும் என்பதற்கான விவரங்களைப் புரிந்துகொள்ள ஆய்வாளர்களுக்கு உதவியது.
இதன் முடிவு, துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளுடன் கழித்த அந்த ஆண்டுகளைப் பற்றிய குற்ற உணர்ச்சியுடன் என்னைச் சிந்திக்கத் தூண்டியது.

பட மூலாதாரம், Universal Image Group / Getty
கடந்த 2008ஆம் ஆண்டு வங்கி நெருக்கடி, கோவிட்-19 காலத்தின் தீவிரமான வேலை அட்டவணைகள், அதிகப்படியான கேக்குகள் மற்றும் இனிப்புகளைச் சாப்பிட வழிவகுத்தன.
என் இருபதுகளின் நடுப்பகுதி முதல் லண்டனில் அவ்வப்போது வாழ்ந்தது, வடக்கு இத்தாலியின் தூய்மையான காற்றைவிட, போக்குவரத்துப் புகையுடன் வாழ்வதைக் குறித்தது.
எனவே, என் குடல் என்னைவிட ஐந்து வயது மூத்ததாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
பீதியில் என் முகம் மங்கலாவதை கின்ரோஸ் பார்த்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் உடனடியாக என்னை ஆசுவாசப்படுத்தினார். மேற்கூறிய ஆய்வில் பங்கெடுத்த இத்தாலிய ஆண்கள் அனைவரும் மத்திய தரைக்கடல் உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்திருக்கலாம் அல்லது நகர்ப்புற மாசுபாட்டால் பாதிக்கப்படாத கிராமப்புறங்களில் வாழ்ந்திருக்கலாம் என்று கூறினார்.
அதோடு, இதுவொரு சிறிய மாதிரி அளவுதான். "ஆரோக்கியமான முதுமைக்கான அனைத்து அமைப்புகளும்" அதில் உள்ளன. அதை மேம்படுத்தினாலே போதுமானது என்று கூறிய அவர், என்னை மேலும் ஆசுவாசப்படுத்தினார்.
வேறுவிதமாகக் கூற வேண்டுமெனில், நான் எனது உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தினால், ஆரோக்கியம் மேம்படுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமா?
மக்கள் தங்கள் உணவுமுறை மூலமாக முதுமைப் பருவத்தை மேம்படுத்த முடியுமா என்பதைப் பொறுத்தவரை, எஸ்டெல்லர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
குடல் ஆரோக்கியத்திற்கும் முதுமைக்கும் இடையிலான தொடர்பு குறித்துச் சில "நிச்சயமற்ற தன்மைகள்" இன்னும் நீடிப்பதை வலியுறுத்தும் அவர், "ஆனால் நாம் உண்ணும் உணவு நமது நோயுறும் தன்மை, இறப்பு விகிதம் ஆகிய இரண்டையும் பாதிக்கக்கூடும் என்பதற்கு இப்போது சான்றுகள் மிகவும் தெளிவாக உள்ளன" என்று கூறுகிறார்.
எளிதாகக் கூற வேண்டுமெனில், நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம், நமது முதுமைப் பருவத்தில் நாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றில் இது பங்கு வகிக்கிறது.
"ஒரே நகரத்தில், அதிக வருமானம் உள்ளவர்களிடையே கூட, சிறந்த உணவு உண்பவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்" என்று அவர் விவரித்தார்.
பாக்டீரியாவை அதிகரிக்கும் பாலிஃபினால்களை கொண்ட ஆலிவ் எண்ணெய், கொழுப்பு அமிலங்களைக் கொண்ட ஒரு கடல் உணவான ப்ளூஃபிஷ் மீன் ஆகியவற்றை உண்ணுமாறு அவர் பரிந்துரைக்கிறார். இந்த மீன் ஜப்பானில் மிகவும் பிரபலமானது. உலக சுகாதார அமைப்பின்படி, ஜப்பான் உலகில் மிக உயர்ந்த ஆயுட்காலங்களில் ஒன்றைக் (84.5) கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், பெரும்பாலான பிரிட்டன் பல்பொருள் அங்காடிகளில் ப்ளூஃபிஷ் மீன் கிடைப்பது கடினம். இது பொதுவாக சிறப்பு மீன் கடைகள் அல்லது உணவகங்களில் மட்டுமே காணப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைகள், அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பதற்கும் அவர் பரிந்துரைக்கிறார். ஏனெனில், இவை நமது குடலில் உள்ள பாக்டீரியாக்களின் பன்முகத்தன்மையைச் சேதப்படுத்தும்.
ஆனால், தங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயல்வதில் சிலருக்கு மற்றவர்களைவிட அதிக அதிர்ஷ்டம் இருப்பதாகவும், இதில் மரபணுக்களும் பங்கு வகிப்பதாகவும் எஸ்டெல்லர் சுட்டிக்காட்டுகிறார்.
வெவ்வேறு மக்கள் குழுக்களில் நுண்ணுயிரிகளின் தொகுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த ஆராய்ச்சி அதன் ஆரம்பக் கட்டத்தில் உள்ளதாக கின்ரோஸ் எச்சரிக்கிறார். இப்போதைக்கு ஒவ்வொரு நோயாளியும் தனித்தனியாக மதிப்பிடப்பட வேண்டுமென்று அவர் கூறுகிறார்.
நுண்ணுயிர்களுக்கு பலன் தரக்கூடிய உணவுமுறை மாற்றங்கள்
என் பரிசோதனை முடிவுகளுடன், நான் ஓர் உணவியல் நிபுணரான ராகேல் பிரிட்ஸ்கேவை சந்திக்க முயன்றேன். அவர் அதன் முடிவுகளை மதிப்பாய்வு செய்து, நான் சிறப்பாக முதுமையடைய உதவும் என்ற நம்பிக்கையில், எனது குடல் பாக்டீரியாக்களின் பன்முகத்தன்மையை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட ஓர் உணவுத் திட்டத்தை வடிவமைத்தார்.
அவரது திட்டம் எனது சொந்த முடிவுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. வாரத்தின் முதல் சில நாட்களுக்கு, காலை உணவாக ஆளி விதைகள், சியா விதைகள், கெஃபிர், அவுரிநெல்லிகள், கிவி அல்லது மாதுளை ஆகியவற்றைச் சாப்பிட அவர் பரிந்துரைக்கிறார்.
மதிய உணவுக்கு, அவர் பச்சை சாலட், பீன்ஸ் அல்லது பருப்பு வகைகள், ப்ராக்கோலி, அஸ்பாரகஸ் அல்லது பீட்ரூட் மற்றும் தோலுரிக்கப்பட்ட வறுத்த கோழி ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறார்.
இது சற்று கடினமானதாகத் தெரிகிறது. செய்திப் பணிகளுக்கு இடையில் விரைவாக ஏதாவது சாப்பிட நினைக்கும்போது இந்தப் பொருட்களைக் கண்டுபிடிப்பது எப்போதுமே எளிதல்ல. மேலும், இரவு உணவுக்கு, காலா மீன், அஸ்பாரகஸ், பழுப்பு அரிசி ஆகியவற்றைப் பரிந்துரைத்தார்.
இதற்குப் புருவத்தை உயர்த்திய என் மனைவி, ஒவ்வொரு நாள் மாலையிலும் இதை நான் கடைபிடிப்பேனா என்பதில் சந்தேகம் தெரிவித்தார்.

பானங்களைப் பொறுத்தவரை, எனக்கு பழச்சாறுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. முதல் நாளில், நான் விடாமுயற்சியுடன் புதினா, ஆப்பிள், கிவி, கேல், எலுமிச்சை சாறு, சூரியகாந்தி விதைகள், தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து சாறு தயாரித்தேன். ஆனால், புதினாவின் சுவை பிற சுவைகளை மறைத்துவிடுகிறது.
கெஃபிர், கொம்புச்சா (பாக்டீரியா நிறைந்த, நொதிக்கப்பட்ட பானம்) ஆகியவையும் பரிந்துரைக்கப்படுகின்றன. அவை பருகுவதற்கு நன்றாக இருக்கின்றன. இப்போது இரண்டுமே என் குளிர்சாதனப் பெட்டியில் இடம்பிடித்துள்ளன.
ஒமேகா-3, வைட்டமின் D3 போன்ற ப்ரோபயாடிக்குகள் கொண்ட சில மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும் ராகேல் பிரிட்ஸ்கே பரிந்துரைக்கிறார். அவை மலிவானவை அல்ல, மேலும் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டிய குறிப்பிட்ட நேரங்களை நினைவில் வைத்துக் கொள்வது கடினம் (ஏனெனில், அவற்றில் சிலவற்றை வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும்).
முதுமையடைவதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, ஊட்டச்சத்து மாற்றம் "குறிப்பிடத்தக்கதாக" இருக்க வேண்டும் என்றார் கின்ரோஸ்.
நான் இந்தப் புதிய உணவுத் திட்டத்தை கடுமையாகப் பின்பற்றினால், "சில வாரங்களுக்குள்" எனது குடல் நுண்ணுயிர்த் தொகுப்பில் ஒரு மாற்றத்தைக் காண முடியும் என்று விளக்கினார் அவர்.
ஆனால் உணவுப் பழக்கத்தில் செய்யப்படும் "மிதமான" மாற்றங்கள், உதாரணமாக, ஒரு நாள் செய்துவிட்டு அடுத்த நாள் செய்யாமல் இருப்பது, போன்ற செயல்களால் நுண்ணுயிர்த் தொகுப்புக்குப் பெரிய பலன் கிடைக்காது என்று அவர் எச்சரிக்கிறார். அதன் விளைவாக, முதுமை எய்துவதற்கான வாய்ப்புகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
குடல் ஆரோக்கியத்தின் சிக்கல்
இதில் மற்றுமொரு புதிரும் இருப்பதாகக் கூறும் லோக்லைன் அதை "முதலில் வந்தது கோழியா முட்டையா" என்பதைப் போன்ற சிக்கல் என்கிறார்.
அதாவது, "அதிக பன்முகத்தன்மை கொண்ட குடல், முதுமையில் நமக்கு வலிமையைத் தருகிறதா அல்லது முதுமையில் வலிமையாக இருப்பதுதான் குடல் அதிக பன்முகத்தன்மை கொண்டதாக இருப்பதற்கான காரணமா?"
வரலாற்று ரீதியாக, எது எதற்குக் காரணமாகிறது என்பதைக் கண்டறிவது கடினமாக இருந்தது.
ஆனால், மல மாற்று அறுவை சிகிச்சை ஆராய்ச்சி அந்தக் கேள்விக்கு இப்போது விடையளிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆராய்ச்சியில், ஒரு மனிதன் அல்லது விலங்கிடம் இருந்து மலம் எடுக்கப்பட்டு, ஒரு காப்ஸ்யூல் அல்லது குழாய் வழியாக ஒரு விலங்கின் (பொதுவாக சுண்டெலி) வயிற்றுக்குள் செலுத்தப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2020இல் வெளியிடப்பட்ட அத்தகைய ஓர் ஆய்வில், அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் 11 ஆரோக்கியமான சுண்டெலிகளைக் கொண்ட இரண்டு குழுக்களை ஆய்வு செய்தனர். முதல் குழுவுக்கு வயதான சுண்டெலிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மலம் வழங்கப்பட்டது; இரண்டாவது குழுவுக்கு இளம் சுண்டெலிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மலம் கொடுக்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்குள் வயதான சுண்டெலிகளின் மலத்தைப் பெற்ற சுண்டெலிகள் மனச்சோர்வு போன்ற நடத்தைகளை வெளிப்படுத்தத் தொடங்கின. அவற்றின் குறுகிய கால நினைவாற்றல் மோசமடைந்தது. அதேபோல், அவற்றின் இடஞ்சார்ந்த அறிவும் குறைந்தது.
உண்மையில், அவற்றின் உடல் வயதானவையாக மாறின.
பலருக்கு இது விரும்பத்தகாததாகத் தோன்றுகிறது என்பதை லோக்லைன் ஒப்புக்கொள்கிறார். ஆனால், இந்த ஆய்வுகள் முக்கியமானவை. ஏனெனில், அவை, குடல் நுண்ணுயிரிகளில் இருந்து உடலின் வயது வரையிலான நேரடி காரண-காரியத் தொடர்பைக் காட்டுகின்றன.
முதுமையைக் கட்டுப்படுத்தும் குடலின் சக்தி குறித்து அனைவரும் ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை.
ஜிபி ராயல் கல்லூரியின் தலைவரான பேராசிரியர் கமிலா ஹாவ்தோர்ன், குடல் நுண்ணுயிரிகள் குறித்த ஆராய்ச்சி "உற்சாகமூட்டுவதாக" இருப்பதாகவும் "இது நிச்சயமாக பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளதாகவும்" கூறுகிறார். ஆனால், அவர் மேலும் கூறுகையில், "குறிப்பாக இந்தத் துறையில் ஆராய்ச்சி இன்னும் வளர்ந்து வரும் நிலையில், 'குடல் ஆரோக்கியம்' என்பது பெரிய சித்திரத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்."

இறுதியில், உங்கள் உணவுமுறை மூலமாக முதுமை செயல்முறையை மேம்படுத்த முடியுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும், உணவு மட்டுமே எல்லாமல்ல எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
முதுமையின் விளைவுகளில் மூன்றில் ஒரு பங்கை உணவுமுறை தீர்மானிப்பதாக எஸ்டெல்லர் மதிப்பிடுகிறார். பின்னர் மீதமுள்ளவை மரபியல், உடற்பயிற்சி, புகைப் பிடித்தலைத் தவிர்ப்பது போன்ற பிற வாழ்க்கை முறை காரணிகளின் கலவை தீர்மானிக்கின்றது.
என் சொந்த குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எனது புதிய உணவுமுறையில் இது ஆரம்பக் கட்டம்தான்.
பரிந்துரைக்கப்பட்ட ஆப்பிள்கள், திராட்சைகள், விதைகள் தவிர வேறு தின்பண்டங்களால் நான் ஈர்க்கப்படுவதில்லை. ஆனால் கணிக்க முடியாத வேலை நேரங்களைக் கொண்ட ஒரு பரபரப்பான வாழ்க்கை முறையில், இந்த வகையான நுணுக்கமான திட்டத்தைப் பின்பற்றுவது சவாலாக இருக்கும். அதை என்னால் வெற்றிகரமாகச் செய்ய முடியுமா என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது.
இருப்பினும், இந்தச் சோதனைகளும் பயணமும் எனது சொந்த குடல் மற்றும் எனது எதிர்கால ஆரோக்கியம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் தகவல்கள்: லூக் மின்ட்ஸ்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












