'பொங்கல், தீபாவளி என எதுவுமில்லை' - ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் சந்திக்கும் சிரமங்கள்

ஜல்லிக்கட்டுக் காளை வளர்க்கும் பெண் ஒருவரின் புகைப்படம்
படக்குறிப்பு, தொட்டியபட்டி கிராமத்தின் கிடை மாடுகளுடைய சாணத்திற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக வரவேற்பு இருப்பதாகக் கூறுகிறார் அழகம்மாள்
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

"மூன்று தலைமுறைகளாக நாட்டு இன மாடுகளை வளர்த்து வருகிறோம். அவை அழிந்துவிடக் கூடாது என்பதற்காக இரவு பகலாக உழைக்கிறோம். ஆனால், ஜல்லிக்கட்டுக்கு கிடைக்கும் மரியாதைகூட எங்கள் தொழிலுக்குக் கிடைப்பதில்லை."

மதுரை மாவட்டம் தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் பிபிசி தமிழிடம் வேதனையுடன் கூறிய வார்த்தைகள் இவை.

இவரைப் போலவே இந்தக் கிராமம் முழுவதும் ஏராளமானோர் நாட்டு மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரியல் எஸ்டேட் வணிகம் பெருகுவதால் மேய்ச்சல் நிலங்கள் சுருங்கி வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

மாடு வளர்ப்பில் இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன? ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இவர்கள் உருவாக்கும் காளைகளின் பங்கு என்ன?

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் படும் சிரமங்கள்

ஜனவரி மாதம் வந்துவிட்டாலே மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களைகட்டத் தொடங்கிவிடும். வாடிவாசலில் தங்கள் காளைகளை எப்போது அவிழ்ப்போம் எனப் பலரும் காத்திருப்பர்.

ஆனால், ஜல்லிக்கட்டுக்கான நாட்டு இன காளைக் கன்றுகளை உருவாக்கும் பணியில் ஒரு கிராமமே சத்தமின்றி ஈடுபட்டு வருகிறது. அப்படியொரு கிராமத்திற்கு பிபிசி தமிழ் சென்றது.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு பெரிய ஆலங்குளம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள தொட்டியபட்டி கிராமத்தில் பெரும்பாலானோரின் பிரதான தொழிலாக மாடு வளர்ப்பு உள்ளது.

மிக அமைதியாகக் காட்சியளிக்கும் இந்தக் கிராமத்தில் பரந்தவெளி மைதானங்களில் வலைகள் சூழப்பட்ட இடத்தில் மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் கிடை மாடுகள் எனவும் கிழக்கத்தி மாடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

காளைகள்

'சில அம்சங்களை பார்த்து வாங்குகிறார்கள்'

இங்குள்ள மாடுகள் கன்றுகளை ஈன்ற சில மாதங்களில் ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தும் வகையில் மதுரை உள்படப் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து வாங்கிச் செல்வதாகக் கூறுகிறார், தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்.

ஜல்லிக்கட்டுக் காளைகளில் புலிக்குளம், காங்கேயம் வரிசையில் மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கிழக்கத்திக் காளைகளுக்கு தனி வரவேற்பு உள்ளது. இவற்றை இனப்பெருக்கம் செய்து விற்கும் பணியில் இக்கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

"கிழக்கத்தி மாடுகள்தான் வேண்டும் என்று நேரில் வந்து பார்த்து வாங்கிச் செல்வார்கள். ஜல்லிக்கட்டுக்கு எந்தக் கன்று சரியாக வரும் எனப் பார்த்துக் கொடுப்போம். கன்று வாங்கிய மூன்று ஆண்டுகளில் ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்துகிறார்கள்" எனக் கூறுகிறார் சுரேஷ்.

தொட்டியபட்டியை சேர்ந்த சுரேஷ்
படக்குறிப்பு, கன்றுக்குட்டியின் உடலிலுள்ள மூன்றுக்கும் மேற்பட்ட சுழிகள், முகம், சிறிய கொம்பு எனச் சில அம்சங்களைப் பார்த்து மக்கள் வாங்கிச் செல்வதாகக் கூறுகிறார் சுரேஷ்

கன்றுக்குட்டியின் உடலிலுள்ள மூன்றுக்கும் மேற்பட்ட சுழிகள், முகம், சிறிய கொம்பு எனச் சில அம்சங்களைப் பார்த்து மக்கள் வாங்கிச் செல்வதாகக் கூறிய சுரேஷ், "அவை தாவி வரும் நடையைப் பார்த்தும் வாங்கிச் செல்கின்றனர்" என்றார்.

ஆனால், "கன்று வடிவத்தில் பெரும்பாலும் எதையும் கணிக்க முடியாது" என்கிறார், இதே கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார். "சிலர் ராசி பலன் பார்த்து கன்றுக் குட்டிகளை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் அவரவர் வளர்ப்பைப் பொறுத்துதான் அவை ஜல்லிக்கட்டில் பாயும்" எனவும் குறிப்பிட்டார்.

கிழக்கத்தி மாடுகளை அதன் இனத்திற்கு உள்ளேயே இனப்பெருக்கம் செய்ய வைப்பதாகக் கூறும் சரத்குமார், "கன்று ஈனும் வரை சுமார் பத்து மாதங்கள் குழந்தையைப் போல அவற்றைப் பராமரிக்கிறோம்" என்கிறார்.

அதோடு, "பால் சுரக்கும்போதே விரைவில் கன்றுக்குட்டியை ஈன்றுவிடும் எனத் தெரியும். அதை மட்டும் கவனமாகக் கண்காணிப்போம். மருத்துவர்களிடம் கூட்டிச் செல்லும் பழக்கம் இல்லை. இயல்பாகவே பிரசவம் நடக்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.

காளை மாடுகளை வளர்க்கும் சரத்குமார்
படக்குறிப்பு, "சில குட்டிகள் எதிர்பார்த்த அளவுக்கு அமையாவிட்டால் மனம் சற்று வருத்தமாக இருக்கும்" என்கிறார் சரத்குமார்

'கன்று சரியாக அமையாவிட்டால் வருத்தம்'

மேலும் பேசிய சரத்குமார், "யாராவது கன்றுகளை வாங்கிச் செல்லும்போது மனம் வேதனையாக இருக்கும். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த வருமானத்தை நம்பித்தான் வாழ்க்கை ஓடுகிறது என்பதால் கன்றுகளை மிகுந்த வருத்தத்துடன் விற்போம்," என்றார்.

புதிதாகப் பிறக்கும் கன்றுக் குட்டிகளில் இவர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களுடன் அவை பிறந்துவிட்டால் சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் விலை போவதாகவும் அவர் தெரிவித்தார்.

"சில குட்டிகள் எதிர்பார்த்த அளவுக்கு அமையாவிட்டால் மனம் சற்று வருத்தமாக இருக்கும். மேய்ச்சலுக்காக அதன் பெற்றோரை கூட்டிச் செல்வதற்காக நாங்கள் அடைந்த சிரமங்களை எண்ணிப் பார்ப்போம். ஒரு கட்டத்தில் எங்களை நாங்களே சமாதானப்படுத்திக் கொள்வோம்," என்றார்.

சரத்குமார் சொல்வதைப் போல தினமும் மாடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்வதில் மாடு வளர்ப்பவர்கள் பெரிதும் சிரமப்படுவதைப் பார்க்க முடிந்தது. சாலைகளில் வாகன நெரிசலுக்கு மத்தியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை இவர்கள் ஓட்டிச் செல்கின்றனர்.

மேய்வதற்காக விடப்பட்ட மாடுகள்
படக்குறிப்பு, மாடுகள் ஊருக்கு வெளியில் சுமார் 5 கி.மீ தொலைவில் ஒரே இடத்தில் புற்களை மேய்வதற்காக விடப்படுகின்றன.

மாடுகளை மேய்ப்பதில் என்ன சிரமம்?

"மூன்று தலைமுறைகளாக மாடுகளை வளர்த்து வருகிறோம். இவற்றை அவ்வளவு எளிதில் மேய்ச்சலுக்குக் கொண்டு போக முடியாது" எனக் கூறுகிறார், தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார்.

தொட்டியபட்டி கிராமத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவு வரை தனது மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். காலை சரியாக பத்து மணியளவில் மேய்ச்சலுக்காக மாடுகளை இவர்கள் ஓட்டிச் செல்கின்றனர்.

மாலை சுமார் 6 மணிவரை மேய்ச்சல் பணிகள் நடக்கின்றன. மாடுகளுக்கு புற்கள், தண்ணீர் தவிர வேறு எந்த உணவையும் இவர்கள் தருவதில்லை.

"ஒரு தனி நபர் ஆசைக்காக காளையை வளர்த்தால் அதற்கு பாதாம், பிஸ்தா, பேரீச்சம் பழங்களைத் தருவதாகக் கூறுகிறார்கள். நாங்கள் நூற்றுக்கணக்கான மாடுகளை வளர்க்கிறோம். சற்று சிரமமான சூழலில் வாழ்வதால் மேய்ச்சல் நிலங்களை மட்டுமே நம்பியிருக்கிறோம்" என்றார் சரத்குமார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் மாடுகளுக்கு ஏற்ற மேய்ச்சல் நிலங்கள் கிடைப்பதில்லை எனக் கூறும் அவர், "நிலத்தின் மதிப்பு உயர்ந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் ரியல் எஸ்டேட் வர்த்தகம் நடக்கிறது. பலரும் நிலங்களுக்குக் கம்பி போடுவதால் மாடுகளால் சரியாக மேய முடிவதில்லை" எனவும் ஆதங்கப்பட்டார்.

"மனிதர்களால் பசியுடன் இருக்க முடியும். ஆனால் மாடுகளைப் பட்டினி போட முடியாது. மேய்ச்சலுக்கு அழைத்துப் போவதால் நம்மைப் பார்த்தவுடன் பாசத்துடன் அவை கத்தும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ் சென்றபோது ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மாடுகளை அதன் உரிமையாளர்கள் ஓட்டிச் சென்ற வண்ணம் இருந்தனர். இவை ஊருக்கு வெளியில் சுமார் 5 கி.மீ தொலைவில் ஒரே இடத்தில் புற்களை மேய்வதற்காக விடப்படுகின்றன.

"மாடுகளைக் கண்டறிவதில் உரிமையாளர்களுக்கு குழப்பம் வராதா?" என்று சரத்குமாரிடம் கேட்டபோது, "எத்தனை கூட்டத்தில் இருந்தாலும் நாங்களே விட்டுவிட்டுப் போய்விட்டாலும் தேடி வந்துவிடும். தவிர என்னுடைய மாடு எனக்குத் தெரியும். கன்றுகளை மட்டும்தான் கவனிக்க வேண்டும். மற்றவை தேடி வரும்" என்றார்.

மாடுகள் அமர்ந்திருக்கும் காட்சி
படக்குறிப்பு, தனக்குப் பிறகு தனது குடும்பத்தில் யாரும் இந்தத் தொழிலைச் செய்யப் போவதில்லை என்கிறார் மாடுகளை வளர்க்கும் சரத்குமார்

'தீபாவளி, பொங்கல் என்பதே இல்லை'

ஆனால், மேய்ச்சல் நிலங்கள் குறுகியபடியே இருப்பதால் மாடு வளர்ப்பு சவாலானதாக மாறுவதாகக் கூறும் சரத்குமார், "முதலில் 250 மாடுகளை வைத்திருந்தேன். இப்போது 150 மாடுகள் மட்டுமே வைத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு இதன் எண்ணிக்கை மேலும் குறையலாம்" என்றார்.

"காலை முதல் மாலை வரை மாடுகளைக் கூட்டிக் கொண்டு நடந்து கொண்டே இருக்க வேண்டும். அதன் பிறகு மாடுகள் உறங்கும் இடத்தைச் சுத்தம் செய்வோம். கன்றுகளைத் தனியாகப் பிரித்து வைத்து விடுவோம்" என்றும் அவர் விளக்கினார்.

அதுமட்டுமின்றி, "இதுவரை தீபாவளி, பொங்கல் என எதையும் கொண்டாடியது இல்லை. விழாக் காலங்களிலும் மாடுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை தனியாக விட்டுவிட்டு திருமணம், இறப்பு என எந்த நிகழ்வுக்கும் செல்ல முடியாது" என்றார்.

"எனக்குப் பிறகு என் குடும்பத்தில் யாரும் இந்தத் தொழிலை செய்யப் போவதில்லை" எனக் கூறும் அவர், "மேய்ச்சலுக்காகச் செல்லும்போது பலரின் வசவுகளை எதிர்கொள்கிறோம். வாயில்லா ஜீவனை கூட்டிச் செல்கிறோம் என்ற கருணை இருந்தால்கூட போதும். சாலையில் செல்கிறவர்களை எதிர்கொள்ள முடிவதில்லை" எனவும் வேதனைப்பட்டார்.

இதை வழிமொழியும் இதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், "ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்றால் கிடை மாட்டுக்காரர்களிடம் இருந்துதான் மாடுகளை வாங்க வேண்டும். ஆனால் மாடு மேய்க்கப் போகும்போது சிலர் அடிக்க வருகிறார்கள்" என்கிறார்.

"இரவும் பகலும் மாடுகளுடனே இருக்கிறோம். எங்கு போனாலும் எங்களுக்கு மரியாதை என்பதே இல்லை. சாலையில் மாடுகளைக் கூட்டிச் செல்லும்போது, 'மாட்டுக்காரா' என சத்தம் போடுவார்கள். நாங்களும் சக மனிதர்கள்தான் என யாரும் நினைப்பதில்லை. எந்த மரியாதையும் இல்லை" எனவும் அவர் வேதனைப்பட்டார்.

குவித்து வைக்கப்பட்ட சாணம்
படக்குறிப்பு, கிடை மாடுகளின் சாணத்திற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக வரவேற்பு உள்ளதாகக் கூறுகிறார் அழகம்மாள்

'மாட்டு சாணத்துக்கு வரவேற்பு'

இங்குள்ள கிடை மாடுகளின் சாணத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரவேற்பு அதிகம் உள்ளது. "புற்களை மட்டுமே மாடுகள் மேய்கின்றன. இவற்றின் சாணியை உலர வைத்து மூட்டைக்கு 50 ரூபாய் என விற்கிறோம். இந்த வருமானம் சாப்பாட்டுக்குப் போதுமானதாக உள்ளது" என்கிறார், தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகம்மாள்.

மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் உள்ள சாணத்தை ஒரே இடத்தில் சேர்ப்பது இவரது பணியாக உள்ளது. "விவசாயிகள் அதிகமாக இவற்றை வாங்கிச் செல்கின்றனர். ஆண்டு முழுக்க மாடுகளைக் கவனிக்க வேண்டும். எந்த நிகழ்வுக்கும் போக முடியாது" எனவும் அவர் தெரிவித்தார்.

தாங்கள் வளர்த்த மாடுகள் ஜல்லிக்கட்டில் நன்றாக ஆடும்போது அது தொடர்பான காணொளிகளைப் பார்த்து மகிழ்ச்சியடைவதாகக் கூறும் அழகம்மாள், "சாணத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான் எனது குடும்பமே நடந்து வருகிறது" என்றார்.

சாணத்தை சேகரிக்கும் அழகம்மாள்
படக்குறிப்பு, மாட்டு சாணம் விற்பதால் கிடைக்கும் வருமானம் சாப்பாட்டுக்கு போதுமானதாக இருப்பதாக சொல்கிறார் அழகம்மாள்

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது. இதுதவிர, பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணிகளில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான பணியை அரசு தொடங்கியுள்ளது.

இதைக் குறிப்பிட்டுப் பேசும் சரத்குமார், "ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அரசு ஊக்குவிக்கிறது. ஆனால், அந்தக் காளைகளை உருவாக்கும் எங்களுக்கு தரிசு நிலங்களில் மாடுகளை மேய்ப்பதற்கு அனுமதி கொடுத்தாலே போதுமானது" எனக் கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"எங்களுக்குப் பதவிகள் எதுவும் தேவையில்லை. மரியாதை கிடைத்தால் போதும்" எனக் கூறும் சுரேஷ், "பாம்பு கடித்தால்கூட தெரியாது என்ற சூழலில் மாடுகளை வளர்க்கிறோம். இவற்றைக் காப்பாற்றுவது சிரமம்தான். ஆனாலும் இதைக் கைவிட மாட்டோம்" என்றார்.

மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ரசிப்பதற்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருகின்றனர். அவை இப்பகுதி மக்களால் பெருமித உணர்வுடன் பார்க்கப்படுகின்றன.

அதேநேரம், நாட்டு மாடு இனங்களைப் பாதுகாக்கும் தங்களுக்கு அரசு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என்பது தொட்டியபட்டி கிராமத்தில் மாடு வளர்ப்போரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு