ஜார்க்கண்டில் 9 நாளில் 22 பேரை கொன்ற ஒற்றை காட்டுயானை - ஏன் இந்த ஆக்ரோஷம்?

புண்டி டோப்னோ

பட மூலாதாரம், Mohammad Sartaj Alam/BBC

படக்குறிப்பு, புண்டி டோப்னோவின் கண் முன்னே அவரது கணவர், மகன் மற்றும் மகளை யானை கொன்றது.
    • எழுதியவர், முகமது சர்தாஜ் ஆலம்
    • பதவி, ராஞ்சியிலிருந்து பிபிசி ஹிந்திக்காக

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சாய்பாசா மற்றும் கோல்ஹான் வனப் பிரிவு பகுதிகளில் கடந்த ஒன்பது நாட்களில் ஒரு யானை 22 பேரை கொன்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்களிடையே யானை குறித்த அச்சம் நிலவுகிறது. செய்தி எழுதப்படும் வரை அந்த யானையைப் பிடிக்கப்படவில்லை.

மாவட்ட ஆட்சியர் சந்தன் குமார் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளார். மண்டல வன அதிகாரி குல்தீப் மீனா கூறுகையில், "ஒற்றை ஆண் யானையினால் இத்தகைய சூழல் உருவாவது இதுவே முதல் முறை. இனி உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படாமல் இருக்க இப்பகுதி 'ஹை அலர்ட்'டில் வைக்கப்பட்டுள்ளது," என்றார்.

மேலும் அவர், "உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் இறுதிச் சடங்கிற்காக வனத்துறை சார்பில் இருபதாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது," என்றார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்போது அவர்களின் முதல் முன்னுரிமை யானையைப் பிடித்து பாதுகாப்பாகக் காட்டுக்குள் திருப்பி அனுப்புவதுதான். இதற்காக வங்காளம் மற்றும் ஒடிசா குழுக்களின் உதவியுடன் விரிவான மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

யானையால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த வனத்துறை ஊழியர் வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் மாவட்ட ஆட்சியர் சந்தன் குமார் தெரிவித்தார். இப்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால், உள்ளூர் சமூக ஆர்வலர் மான்கி துபித், வனத்துறை எடுத்த நடவடிக்கைகளில் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளார். "முதல் உயிரிழப்பு ஏற்பட்ட உடனேயே வனத்துறை சுறுசுறுப்பாகச் செயல்பட்டிருந்தால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் கண்டிருக்க வேண்டி இருந்திருக்காது," என்கிறார்.

என்ன நடந்தது?

யானையை சுற்றி விரட்டும் மக்கள்

பட மூலாதாரம், Mohammad Sartaj Alam/BBC

படக்குறிப்பு, வனத்துறை யானையை மீட்டு மீண்டும் காட்டுக்குள் அனுப்ப முயற்சி செய்து வருகிறது.

ஜனவரி 1 முதல் 9 வரை யானையால் கொல்லப்பட்ட 22 பேரில், முதல் பலியானவர் 34 வயதான மங்கள் சிங் ஹெம்ப்ரம்.

அவர் ஆண்டின் முதல் நாள் மாலை சுமார் ஆறு மணியளவில் டோண்டோ பிளாக்கில் உள்ள பாடிஜாரி கிராமத்தில் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். வீட்டிற்கு அருகில் சென்றபோது திடீரென யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

அன்று இரவு பத்து மணியளவில் டோண்டோ பிளாக்கின் பிர்சிங் ஹாது கிராமத்தில் அதே யானை 62 வயதான உருதுப் பஹாதாவைத் தாக்கியது. குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவர் அப்போது வயலில் நெல்லை காவல் காத்துக்கொண்டிருந்தார்.

டோண்டோ பிளாக்கைச் சேர்ந்த 22 வயதான ஜெக்மோகன் சவையா மூன்றாவது பலியானவராக அடையாளம் காணப்பட்டார். அவரது மரணம் ஜனவரி ஐந்தாம் தேதி இரவு பத்து மணியளவில் குயில்சுதே கிராமத்தில் யானை தாக்கியதால் ஏற்பட்டது.

சதர் பிளாக்கின் ரோடோ கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான விஷ்ணு சுண்டி, ஜனவரி ஒன்றாம் தேதி இரவு 11:30 மணியளவில் வீட்டின் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார்.

குஷ்ணு சுண்டி

பட மூலாதாரம், Mohammad Sartaj Alam/BBC

படக்குறிப்பு, குஷ்ணு சுண்டியின் கூற்றுப்படி, யானை தாக்கியபோது நெல்லைக் காவல் காப்பதற்காக அனைத்து உறுப்பினர்களும் வெளியில் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அவரது 25 வயதான மகன் குஷ்ணு சுண்டியின் கூற்றுப்படி, நெல்லைக் காவல் காப்பதற்காக அனைத்து குடும்ப உறுப்பினர்களும் வெளியில் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென யானை வந்ததும் அனைவரும் வீட்டிற்குள் ஓடினர், ஆனால் தந்தை விஷ்ணு வெளிப்புறமாக ஓடினார்.

"திடீரென அப்பா கீழே விழுந்துவிட்டார், யானை அவரது காலைப் பிடித்து இழுத்துச் சென்றது. பிறகு அவரைத் தூக்கி எறிந்தது. இதனால் அப்பா இறந்துவிட்டார். நாங்கள் அனைவரும் பயந்துபோய் அப்பா இறப்பதை பார்த்துக் கொண்டிருந்தோம்," என்று அவர் கூறினார்.

மகன் மாற்றுத்திறனாளி. அந்த குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக விஷ்ணு இருந்தார். அவர் விறகு விற்று மாதத்திற்கு இரண்டாயிரத்து ஐந்நூறு முதல் மூவாயிரம் ரூபாய் வரை சம்பாதித்தார். இப்போது அந்தப் பொறுப்பு குஷ்ணுவின் தோள்களில் விழுந்துள்ளது.

கோயில்கேராவில் கொல்லப்பட்ட ஆறு பேரில் ஒருவரான சாயத்பா கிராமத்தைச் சேர்ந்த 13 வயது ரேகா காயம், ஜனவரி இரண்டாம் தேதி களத்து மேட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். சுமார் 11 மணியளவில் யானை வரும் சத்தம் கேட்டு அவர் வீட்டை நோக்கி ஓடினார், ஆனால் யானையிடமிருந்து தப்பிக்க முடியவில்லை.

கின்தேபி கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான சம்பா குய், ஜனவரி மூன்றாம் தேதி அதிகாலை நான்கு மணியளவில் தனது களத்து மேட்டில் நெல்லைப் பார்க்கச் சென்றபோது யானை தாக்கி உயிரிழந்தார்.

'சிறிது தெரிந்திருந்தாலும் என் குடும்பம் உயிரோடு இருந்திருக்கும்'

காயமடைந்த மகளுடன் புண்டி டோப்னோ

பட மூலாதாரம், Mohammad Sartaj Alam/BBC

படக்குறிப்பு, புண்டி டோப்னோ தனது காயமடைந்த மகளுக்கு ரூர்கேலா மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார்.

ஜனவரி நான்காம் தேதி இரவு 11 மணியளவில் பிலா கிராமத்தைச் சேர்ந்த 56 வயதான ஜோங்கா குய்யையும் யானை கொன்றது. அவரது குடும்பத்தினர், "தங்கள் களத்து மேட்டில் யானை நெல்லைத் தின்று கொண்டிருப்பதை அவர் அறிந்தார். டார்ச் விளக்கை எடுத்துக்கொண்டு அதை விரட்டச் சென்றார், ஆனால் யானை ஜோங்கா குய்யைப் பிடித்துத் தரையில் அடித்தது," என்று கூறினார்கள்.

கோயில்கேரா பிளாக்கின் கம்ஹரியா பஞ்சாயத்தில் உள்ள சோவா கிராமத்தைச் சேர்ந்த குந்த்ரா பஹாதா, ஆறு வயது மகள் கோத்மா பஹாதா மற்றும் எட்டு வயது மகன் சாமு பஹாதா ஆகியோரையும் யானை கொன்றது.

ஜனவரி ஐந்தாம் தேதி இரவு எட்டு மணியளவில் குந்த்ரா வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த நெல்லைக் காவல் காக்க குடும்பத்துடன் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அவரது மனைவி புண்டி டோப்னோ கூறுகையில், "அருகில் யானைத் தாக்குதல்கள் நடந்தது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. சிறிதளவு தகவல் தெரிந்திருந்தாலும் என் குடும்பம் இன்று உயிரோடு இருந்திருக்கும்," என்றார்.

அன்று இரவு திடீரென யானை தாக்கியபோது, புண்டி தனது இரண்டு வயது மகள் ஜிங்கியுடன் ஓடினார். அப்போது ஜிங்கி கீழே விழுந்து காயமடைந்தார். ஆறு வயது மகள் கோத்மா மற்றும் எட்டு வயது மகன் சாமுவைக் காப்பாற்ற முயன்றபோது குந்த்ரா யானையிடம் சிக்கிக் கொண்டார்.

புண்டி கூறுகையில், "காயமடைந்த ஜிங்கியுடன் நான் உதவியற்றவளாகப் பார்த்துக் கொண்டிருந்தேன், என் கணவர், மகன் மற்றும் மகள் ஒவ்வொருவராகத் தங்கள் உயிரை இழந்தனர்," என்றார்.

எப்படியோ தப்பித்த புண்டி தற்போது தனது காயமடைந்த மகளுக்கு ரூர்கேலா மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார்.

"மகளின் சிகிச்சையின் காரணமாக துரதிர்ஷ்டசாலியான எனக்கு கணவர், மகன் மற்றும் மகளை இறுதியாக பார்க்கக்கூட முடியவில்லை," என்றார்.

கிராமத் தலைவர் உதய செர்வா மற்ற கிராம மக்களின் உதவியுடன் மூன்று உடல்களையும் அடக்கம் செய்தார். ஆனால் மண் வீட்டில் வசிக்கும் புண்டியின் குடும்பத்தில் இப்போது சம்பாதிப்பவர் யாரும் இல்லை.

ஜனவரி ஆறாம் தேதி இரவில் ஆறு மரணங்கள்

ஜெய்பால் மெரல்

பட மூலாதாரம், Mohammad Sartaj Alam/BBC

படக்குறிப்பு, சனாதன் மெரலின் குடும்பத்தில் ஜெய்பால் மெரல் (வலது) தவிர 5 வயது சுஷீலா மட்டுமே மிஞ்சியுள்ளார்.

நோவாமுண்டி பிளாக்கில் உள்ள சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் வசிக்கும் பாபாடியா கிராமத்தின் வெளிப்புறப் பகுதியில் சனாதன் மெரலின் மண் வீடு உள்ளது.

அவர் அருகிலேயே களத்து மேடு அமைத்திருந்தார். ஜனவரி 6-ஆம் தேதி இரவு அங்கு வைக்கோலால் செய்யப்பட்ட ஒரு குடிசையில் குடும்பத்தின் ஆறு உறுப்பினர்களும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இரவு பதினொரு மணியளவில் திடீரென வந்த யானை முதலில் குடிசையைத் தரைமட்டமாக்கியது. பின்னர் அங்கு 50 வயதான சனாதன் மெரல், அவரது மனைவி ஜொல்கோ குய், ஒன்பது வயது மகள் தமயந்தி மெரல் மற்றும் ஐந்து வயது மகன் முங்ரு மெரல் ஆகியோரைக் கொன்றது. பதினொரு வயது ஜெய்பால் மெரல் மற்றும் அவரது ஐந்து வயது தங்கை சுஷீலா எப்படியோ தப்பினர்.

கிராமத் தலைவர் சஞ்சித் குமார் கூறுகையில், "சனாதன் சென்ற பிறகு இப்போது அவரது மகன் ஜெய்பால் மற்றும் காயமடைந்த மகள் சுஷீலாவை வளர்க்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்?" என்கிறார்.

பாபாடியா கிராமத்தின் மற்றொரு முனையில் இரவு சுமார் 11:30 மணியளவில் களத்து மேட்டில் தனது ஏழு வயது மருமகன் ஹிந்து லாகூரி மற்றும் 10 வயது கோமியா லாகூரியுடன் தூங்கிக் கொண்டிருந்த 28 வயது குருச்சரன் லாகூரியையும் யானை தாக்கியது.

யானை சென்ற பிறகு குருச்சரனின் அண்ணன் ஹேமந்த் லாகூரி மூவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். "என் தம்பியின் வயிறு கிழிந்திருந்தது. ஹிந்துவும் கோமியாவும் காயமடைந்து கிடந்தனர்," என்கிறார்.

குருச்சரன் உயிரிழந்துவிட்டார், அவரது இரண்டு மருமகன்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குருச்சரனின் தாய் ஜேமா குய் மற்றும் மகன் மோரன் சிங்.

பட மூலாதாரம், Mohammad Sartaj Alam/BBC

படக்குறிப்பு, குருச்சரனின் தாய் ஜேமா குய் மற்றும் மகன் மோரன் சிங்.

குருச்சரனின் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். அவரது குடும்பத்தில் 60 வயது தாய் ஜேமா குய் தவிர ஐந்து வயது மகன் மோரன் சிங் இருக்கிறார். அவர்களின் பராமரிப்புப் பொறுப்பு அண்ணன் ஹேமந்த் லாகூரியின் தோள்களில் விழுந்துள்ளது.

இந்த ஐந்து மரணங்களுக்குப் பிறகு அன்று இரவு ஆறாவது மரணம் மங்கள் போபோங்காவுடையது (25). அவர் பாபாடியா கிராமத்திற்கு அருகிலுள்ள படா பாசேயா கிராமத்தில் தனது களத்து மேட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12:30 மணியளவில் யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

ஜகன்னாத் பூர் பிளாக்கின் சியால்ஜோடா கிராமத்தைச் சேர்ந்த 47 வயது டிபிர்யா ஹெம்ப்ரம், ஜனவரி 7-ஆம் தேதி காலை ஆறு மணியளவில் வீட்டிலிருந்து கழிவறைக்காக வெளியே வந்தபோது, யானை பின்னால் வந்து தாக்கியதில் உயிரிழந்தார்.

சாய்பாசா பிரிவின் டி.எஃப்.ஓ ஆதித்ய நாராயண் கூறுகையில், "வெள்ளிக்கிழமை காலை மஜ்காவ் பிளாக்கின் ஜார்க்கண்ட்-ஒடிசா எல்லைப் பகுதியில் உள்ள பெனிசாகர் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்," என்றார்.

உயிரிழந்தவர்கள் 40 வயது பிரகாஷ் மால்வா மற்றும் ஒரு சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மரணங்கள் குறித்து மான்கி துபித் கூறுகையில், "யானை போன்ற புத்திசாலி விலங்கு ஏன் திடீரென இவ்வளவு ஆக்ரோஷமாக மாறி 22 பேரின் உயிரைப் பறித்தது என்பது குறித்து வனத்துறை ஆய்வு செய்ய வேண்டும்," என்றார்.

இவ்வளவு ஆக்ரோஷம் ஏன்?

மண்டல வன அலுவலர் ஆதித்ய நாராயண்

பட மூலாதாரம், Mohammad Sartaj Alam/BBC

படக்குறிப்பு, மண்டல வன அலுவலர் ஆதித்ய நாராயணின் கூற்றுப்படி, யானை குறித்த தகவல் எங்கிருந்து கிடைத்தாலும் அவர்களது குழு உடனடியாக அந்த திசையில் புறப்பட்டுச் செல்கிறது.

22 பேரின் உயிரிழப்பிற்குப் பின்னால் இந்த யானையின் ஆக்ரோஷத்திற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த கோல்ஹான் டி.எஃப்.ஓ குல்தீப் மீனா, "இந்த யானை இனப்பெருக்க நிலையில் இருப்பது போல் தெரிகிறது. இந்த நேரத்தில் இனப்பெருக்க ஹார்மோன் ஆன டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதன் காரணமாக ஒற்றை ஆண் யானை மிகவும் ஆக்ரோஷமாக மாறுகிறது. இது 15-20 நாட்களில் தானாகச் சரியாகிவிடும்," என்றார்.

யானை தனது கூட்டத்திலிருந்து பிரிந்து வழிதவறி வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

"அதனால்தான் யானையைக் கண்டறிந்து பாதுகாப்பாகக் காட்டிற்குள் விடுவது அவசியம், அப்போதுதான் அது தனது கூட்டத்தில் இணைய முடியும்," என்று அவர் கூறினார்.

ஆனால் சாய்பாசா வனக் கோட்ட அதிகாரி ஆதித்ய நாராயணின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை மாலை வரை ஒற்றை ஆண் யானையின் இருப்பிடம் துல்லியமாகக் கண்டறியப்படவில்லை.

குல்தீப் மீனாவின் கூற்றுப்படி, "யானை இளமையாகவும் மிகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது, அதனால் அது தனது இடத்தை வேகமாக மாற்றுகிறது, குறிப்பாக இரவில்."

டி.எஃப்.ஓ ஆதித்ய நாராயணின் கூற்றுப்படி, "இந்த நேரத்தில் யானை குறித்த தகவல் எங்கிருந்து கிடைத்தாலும், அவர்களது குழு உடனடியாக அந்தத் திசையில் புறப்பட்டுச் செல்கிறது."

"முயற்சிகள் தொடர்கின்றன. உள்ளூர் குழுவினர் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், வெளியே தூங்க வேண்டாம் என்று மான்கி-முண்டா (உள்ளூர் மேளம்) உதவியுடன் மக்களை எச்சரித்து வருகின்றனர்," என்று அவர் கூறினார்.

யானையை தேடும் பணிகள்

பட மூலாதாரம், Mohammad Sartaj Alam/BBC

படக்குறிப்பு, வனத்துறை 10 சிறப்பு குழுக்களில் சுமார் 100-க்கும் மேற்பட்டோரை இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. டிரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன.

வனத்துறை 10 சிறப்பு குழுக்களில் சுமார் 100-க்கும் மேற்பட்டோரை இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. டிரோன்களின் உதவியும் பெறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு என்ன? இந்தக் கேள்விக்கு பதிலளித்த குல்தீப் மீனா, உயிரிழந்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், காயமடைந்தவர்களுக்குச் சூழலுக்கு ஏற்ப அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாயும் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

"உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் அனைத்தும் மிகவும் ஏழ்மையானவை, அவர்கள் மண் வீடுகளில் வசிக்கின்றனர். எனவே அவர்களுக்கு வீட்டு வசதி திட்டத்தின் பலன் உடனடியாக வழங்கப்படும்," என மாவட்ட ஆட்சியர் சந்தன் குமார் பிபிசியிடம் கூறினார்.

"வனத்துறை சார்பில் வழங்கப்படும் இழப்பீடு தவிர, மாவட்ட நிர்வாகம் முறைப்படி மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும்," என்றார்.

"யானை-மனித மோதல் மேலும் அதிகரிக்கும்"

பேராசிரியர் டி.எஸ். ஸ்ரீவஸ்தவா

பட மூலாதாரம், Mohammad Sartaj Alam/BBC

படக்குறிப்பு, யானை-மனித மோதல் புள்ளிவிவரங்கள் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்கிறார் பேராசிரியர் டி.எஸ். ஸ்ரீவஸ்தவா.

வனத்துறையின் கூற்றுப்படி, கோல்ஹான் மற்றும் சாய்பாசா வனப்பகுதிகளில் சுமார் 53 யானைகள் வெவ்வேறு கூட்டங்களாக உள்ளன.

அரசுத் தரவுகளின்படி, ஜார்க்கண்டில் 2019 முதல் 2024 வரை யானைகள் தாக்கியதில் 474 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் தற்போதைய உயிரிழப்புகள் குறித்து 1976 முதல் யானைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ராஞ்சி பல்கலைக்கழகப் பேராசிரியர் டி.எஸ். ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "யானை-மனித மோதல் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும்," என்கிறார்.

காரணம் கேட்டதற்கு, "காடுகள் அழிக்கப்படுவதால் யானைகளுக்கு உணவுப் பிரச்னை அதிகரிக்கிறது. யானைகளின் பாதையில் நீங்கள் நெடுஞ்சாலைகளை உருவாக்குகிறீர்கள், திறந்தவெளிச் சுரங்கங்களை அமைக்கிறீர்கள், ரயில் பாதைகள் அமைக்கிறீர்கள், கால்வாய்கள் வெட்டுகிறீர்கள், எனவே அவற்றின் நடமாட்டப் பாதையில் தடைகள் வரும்போது, புத்திசாலி விலங்குகள் நம்மைத் தாக்குவது இயல்பானது," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு