மதுரோ கைது மற்றும் 'ரஷ்ய' கப்பல் சிறைபிடிப்புக்கு பதிலடி தராமல் புதின் மௌனம் காப்பது ஏன்?

அமெரிக்கா - ரஷ்யா, வெனிசுவேலா, புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது, ஆனால் ரஷ்யா மௌனம் காக்கிறது
    • எழுதியவர், பிரையன் வின்ட்சர் மற்றும் டாரியா மொசோலோவா
    • பதவி, பிபிசி மானிட்டரிங்

வெளிநாட்டு மண்ணில் அமெரிக்கா இவ்வளவு ஆக்ரோஷமாக தனது அதிகாரத்தை காட்டும் நிகழ்வுகள் இதற்கு முன்பெல்லாம் நடந்திருந்தால் அதற்கு ரஷ்யாவிடமிருந்து உடனடியான மற்றும் கடுமையான பதிலடி கிடைத்திருக்கும்.

ஆனால் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து நிலைமை வேறாக இருக்கிறது.

  • வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைபிடித்ததை அமெரிக்கா கொண்டாடியது
  • ரஷ்யக் கொடி ஏந்திய எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது
  • கிரீன்லாந்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான மிரட்டல்களையும் அமெரிக்கா மீண்டும் விடுத்தது.

இவற்றிற்கெல்லாம், ரஷ்யா மற்றும் ரஷ்ய அரசுடன் தொடர்புடைய விமர்சகர்கள் ஆச்சரியமளிக்கும் வகையில் மௌனத்தைக் கடைபிடிக்கின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடக்கும் ஆட்சி மாற்றங்கள் மற்றும் வளங்களைக் கைப்பற்றுதல் ஆகியவற்றை நீண்டகாலமாக எதிர்த்து வந்த ஒரு அரசாங்கத்திடம் தென்படும் இந்தக் கட்டுப்பாடு ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.

அமெரிக்காவின் செல்வாக்கைச் சமநிலைப்படுத்துவதற்காக வெனிசுவேலா மற்றும் ஆர்க்டிக் போன்ற பகுதிகளில் ரஷ்யா பெருமளவில் முதலீடு செய்துள்ளது.

அதிபர் விளாதிமிர் புதின் இந்த நிகழ்வுகள் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, அவர் ஜனவரி 6-ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மட்டுமே பொதுவெளியில் தோன்றினார்.

அவரது செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மற்றும் ரஷ்ய அரசு தொலைக்காட்சி சேனல்களும் விடுமுறை நாட்களில் இந்த விவகாரத்தில் மௌனம் காத்தன.

டொனால்ட் டிரம்பின் சமீபத்திய சர்வதேச நகர்வுகள், யுக்ரேன் விவகாரத்தில் அமெரிக்காவுடன் ரஷ்யா மேற்கொண்டு வரும் நடைமுறை ரீதியான ஆனால் நுட்பமான பேச்சுவார்த்தைகளைச் சேதப்படுத்துவதை ரஷ்யா விரும்பவில்லை என்பதை இந்த மௌனம் காட்டக்கூடும்.

சிறப்பு ராணுவ நடவடிக்கைகள்

அமெரிக்கா - ரஷ்யா, வெனிசுவேலா, புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

டொனால்ட் டிரம்ப் 2026-ஆம் ஆண்டைத் தனது பலத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளுடன் தொடங்கினார்.

வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யவும், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் அவரை நாடு கடத்தி நியூயார்க் அழைத்து வரவும் அவர் உத்தரவிட்டார். இந்த லத்தீன் அமெரிக்க நாடு தற்காலிகமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

விடுமுறை நாட்களில் ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தாலும், மதுரோ அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ரஷ்யாவின் நலனுக்கு உகந்தது என்ற கருத்தையே முக்கிய அரசு ஊடகங்களுடன் தொடர்புடைய ஆய்வாளர்கள் முன்வைத்தனர்.

தமது செல்வாக்குள்ள பகுதிகளில் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதன் மூலம், ரஷ்யாவுக்கும் அதையே செய்ய அமெரிக்கா மறைமுகமாக சுதந்திரம் அளித்துள்ளதாகச் சில ஆய்வுகள் வாதிடுகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட டிரம்ப் நிர்வாகத்தின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியின் நடைமுறை உதாரணம் இது என ரஷ்ய ஆதரவு விமர்சகர்கள் விவரித்தனர்.

'செல்வாக்கு உள்ள பகுதிகள்' மற்றும் வல்லரசுகளின் சிறப்பு உரிமைகள் ஆகியவற்றை வலியுறுத்தியதற்காக இந்த உத்தி ரஷ்ய அதிகாரிகளால் வெளிப்படையாகப் பாராட்டப்பட்டது.

மதுரோவின் கைது குறித்து கருத்து தெரிவித்த கிரெம்ளினுக்கு நெருக்கமான வெளியுறவுக் கொள்கை நிபுணர் ஃபியோடர் லுகியானோவ், அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு உத்தியைக் குறிப்பிட்டார்.

"டிரம்ப் கோட்பாடு செல்வாக்கு உள்ள பகுதிகள் மீண்டும் சர்வதேச உறவுகளின் முக்கிய அங்கமாக மாறுவதை உறுதிப்படுத்துகிறது," என்று கொம்மர்சன்ட் வணிகச் செய்தித்தாளிடம் அவர் தெரிவித்தார்.

ரஷ்ய எம்பி-யும் அரசு தொலைக்காட்சி தொகுப்பாளருமான யெவ்ஜெனி போப்போவ், அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகள் உத்தி ரீதியாக ரஷ்யாவிற்கு "அசௌகரியமாக" இருப்பதை ஒப்புக்கொண்டார், ஆனால் அவை நீண்ட கால அடிப்படையில் ரஷ்யாவிற்கு "நன்மை பயக்கும்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

"நடப்பவை நமது கைகளை விடுவித்து, வெளிப்புற அழுத்தத்தைக் குறைக்கின்றன. உலக அரங்கில் ஏற்படும் பின்னடைவு என்பது நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு வாய்ப்பு," என்று போப்போவ் டெலிகிராமில் குறிப்பிட்டிருந்தார்.

சில ரஷ்ய ஆதரவு விமர்சகர்கள், விருப்பமில்லாவிட்டாலும், அமெரிக்காவின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைக்குத் தங்களின் மரியாதையை வெளிப்படுத்தினர்.

ரஷ்யாவும் ஒரு காலத்தில் யுக்ரேனில் இத்தகைய நடவடிக்கையைத்தான் கற்பனை செய்தது, ஆனால் அங்குள்ள நிலைமை முழு அளவிலான போராக மாறியது, அது இப்போது ஐந்தாவது ஆண்டில் உள்ளது.

ரஷ்ய அரசு ஊடகமான ரஷ்யா டுடேவின் தலைமை ஆசிரியர் மார்கரிட்டா சிமோனியன், அமெரிக்காவின் நடவடிக்கையைக் கண்டு தனக்கு "பொறாமையாக" இருப்பதாக டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்திகளுக்குப் பின்னால் ஒரு எளிய உண்மையும் உள்ளது: மதுரோவின் கைது ரஷ்யாவுக்கு ஒரு பெரிய அடி.

வெனிசுவேலாவில் ரஷ்யா பெருமளவில் முதலீடு

ரஷ்யா பல தசாப்தங்களாக வெனிசுவேலாவில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. ஆனால் அதன் வளங்களும் கவனமும் யுக்ரேன் போரின் பக்கம் இருப்பதால், இப்பகுதியில் அதன் செல்வாக்கு பலவீனமடைந்துள்ளது.

பிபிசி மானிட்டரிங்கிடம் ஜேம்ஸ் மார்ட்டின் ஆயுத பரவல் எதிர்ப்பு ஆய்வு மையத்தின் யுரேசியா திட்ட இயக்குநர் ஹனா நோட்டே கூறுகையில், வெனிசுவேலா விவகாரத்தில் ரஷ்யா கடுமையான விமர்சனத்தைத் தவிர்ப்பது, ரஷ்ய அதிபர் தற்போது டிரம்பைக் கோபப்படுத்த விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் அவர் "கையாள வேண்டிய இன்னும் பெரிய பிரச்னைகள் உள்ளன." என்றார்.

யுக்ரேன் விவகாரத்தில் டிரம்பைத் தனது பக்கம் கொண்டு வருவது அல்லது குறைந்தபட்சம் அவர் முற்றிலும் ரஷ்யாவிற்கு எதிராக மாறுவதைத் தடுப்பதே ரஷ்யாவின் முன்னுரிமை என்று அவர் கூறினார்.

அமெரிக்கா - ரஷ்யா, வெனிசுவேலா, புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யா பல தசாப்தங்களாக வெனிசுவேலாவில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது.

"கடந்த ஓராண்டில் ரஷ்யா இதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது, அந்த வெற்றியைத் தக்கவைக்க விரும்புகிறது, ஏனெனில் யுக்ரேன் அதன் முதன்மையான முன்னுரிமை."

லுகியானோவ் இந்த உணர்வையே வெளிப்படுத்துகிறார். "வெனிசுவேலா போன்ற இரண்டாம் நிலை விவகாரங்களுக்காக அமெரிக்கா போன்ற "மிக முக்கியமான தரப்புடன்" ரஷ்யா தனது விரிவான உத்தியில் சமரசம் செய்து கொள்ளாது." என்றார்.

"புதின் டிரம்புடன் விவாதிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் யுக்ரேன்," என்று அவர் கொமர்சன்ட் இதழிடம் கூறினார்.

வெனிசுவேலாவின் புதிய இடைக்காலத் தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸின் நியமனத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், ஜனவரி 6-ஆம் தேதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் வரவேற்றது.

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் நிலைத்தன்மையை நோக்கிய ஒரு படியாக இது விவரிக்கப்பட்டது.

அமெரிக்காவை நேரடியாகக் குறிப்பிடாமல், "எந்தவொரு அழிவுகரமான வெளிப்புற தலையீடும் இன்றி தனது சொந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்" உரிமை வெனிசுவேலாவிற்கு உறுதி செய்யப்பட வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

ஆழ்கடலில் பெரிய பந்தயங்கள்

அமெரிக்கா - ரஷ்யா, வெனிசுவேலா, புதின்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமெரிக்கக் கடலோரக் காவல்படை 'மாலினேரா' என்று பெயரிடப்பட்ட கப்பலை பல வாரங்களாகக் கண்காணித்து வந்தது

ரஷ்யக் கொடி ஏற்றப்பட்ட எண்ணெய் கப்பலான மலினேராவை அமெரிக்கா கைப்பற்றியதற்கும் ரஷ்யாவின் பதில் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது.

ரஷ்ய கப்பல் ஊழியர்களைப் பாதுகாப்பாகத் திரும்ப ஒப்படைக்குமாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கோரியது. இதற்கு டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறுகிறது.

சர்வதேச கடல்சார் சட்ட மீறல்கள் என்ற பின்னணியிலேயே ரஷ்யா தனது முதன்மையான விமர்சனமாக முன்வைத்தது.

சூழலைக் கருத்தில் கொண்டால், அதாவது நடுக்கடலில் ரஷ்யப் பதிவும் உரிமையும் கொண்ட கப்பலில் அமெரிக்கப் படைகள் ஏறியது என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் ரஷ்யாவின் எதிர்வினை இன்னும் கடுமையாக இருந்திருக்கலாம்.

இப்பகுதியில் ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் இருப்பதாகத் தகவல்கள் வந்தபோதிலும், ரஷ்யா அந்தக் கப்பலைத் திரும்பக் கோரவோ அல்லது அதை மீட்க பலத்தைப் பயன்படுத்துவோம் என்றோ குறிப்பிடவில்லை.

அமெரிக்கா அல்லது பிற நாடுகளின் கப்பல்களுக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கையையும் ரஷ்யா அறிவிக்கவில்லை.

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக ரஷ்யா மென்மையான போக்கைக் கடைபிடிப்பதாக கடும்போக்காளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸி ஜுராவ்லியோவ் இதற்கு ராணுவ ரீதியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோரியதோடு, பதிலடியாக "அமெரிக்கக் கடலோரக் காவல்படையின் இரண்டு படகுகளைத் நீர்மூழ்கி குண்டுகளால் ரஷ்யா மூழ்கடிக்க வேண்டும்." என்றார்.

ரஷ்ய ஆதரவு டெலிகிராம் வலைப்பதிவான விஷனரி, யாருக்கும் சொந்தமில்லாத சர்வதேச கடல் பகுதியில் கப்பலைக் கைப்பற்றுவது "ரஷ்யா மீதான முழுமையான தாக்குதலாகக்" கருதப்படலாம் என்று தனது வாசகர்களுக்கு நினைவுபடுத்தியது.

"கடல் வழித்தடங்களை ராணுவ ரீதியாகத் தடுப்பது என்பது போர் பிரகடனம் செய்வதற்கு தெளிவான ஒரு காரணம்," என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.

ஆர்க்டிக் லட்சியங்கள்

அமெரிக்கா - ரஷ்யா, வெனிசுவேலா, புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்க்டிக் பிராந்தியத்தில் ராணுவ மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளில் ரஷ்யா பெருமளவில் முதலீடு செய்துள்ளது.

ஜனவரி 2025-இல், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், கிரீன்லாந்தில் நடக்கும் முன்னேற்றங்களை ரஷ்யா "தீவிரமாக கவனித்து வருவதாகக்" கூறினார்.

ஆனால் டென்மார்க்கிற்குச் சொந்தமான இந்த ஆர்க்டிக் பிராந்தியத்தின் மீதான அமெரிக்காவின் உரிமை கோருதலை அமெரிக்காவுக்கும் டென்மார்க்குக்கும் இடையிலான இருதரப்பு விஷயம் என்று அவர் விவரித்தார்.

ஜனவரி 7-ஆம் தேதி இப்பகுதியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா உத்தேசித்துள்ளதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் இது குறித்து ரஷ்யாவிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் ஏதுமில்லை.

இதற்கிடையில், கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்துவதில் டிரம்பின் புதிய பிடிவாதம் குறித்து ரஷ்ய ஆதரவுக் குரல்கள் மகிழ்ச்சியடைந்தன.

ஐரோப்பாவின் பலவீனத்திற்கு இது ஒரு அடையாளம் என்றும், யுக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் மற்றொரு வாதமாகவும் அவர்கள் இதை முன்வைத்தனர்.

புதினின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் எக்ஸ் தளத்தில், "கிரீன்லாந்து கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனது அடிமைத்தனத்தையே தொடர்ந்து செய்யும்: அதாவது 'சூழ்நிலையைக் கண்காணிப்பது' மற்றும் இரட்டை நிலைப்பாடுகளுக்கு உதாரணமாக இருப்பது." "அடுத்தது கனடாவா?" என்றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஜனவரி 6-ஆம் தேதி சிஎன்என் நேர்காணலில் டிரம்பின் மூத்த உதவியாளர் ஸ்டீபன் மில்லர் குறிப்பிட்டது போல, "வலிமை உடையவனுக்கே அதிகாரம்" என்ற அரசியலை நோக்கி உலகம் மாறுவதை ரஷ்யா அங்கீகரிப்பது போலத் தோன்றினாலும், இதில் கிரீன்லாந்து விவகாரத்தில் ரஷ்யா தோல்வியடையும் அபாயமும் உள்ளது.

அமெரிக்கா - ரஷ்யா, வெனிசுவேலா, புதின்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆர்க்டிக் பிராந்தியத்தில் ராணுவ மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளில் ரஷ்யா பெருமளவில் முதலீடு செய்துள்ளது.

அதிபர் புதின் இங்கே "ரஷ்யாவின் உலகளாவிய தலைமைப் பொறுப்பை வலுப்படுத்துவதாக" உறுதியளித்துள்ளார்.

2023-இல் வெளியிடப்பட்ட ரஷ்யாவின் புதிய வெளியுறவுக் கொள்கைக் கருத்தாக்கத்தில், ஆர்க்டிக் பகுதி மாஸ்கோவின் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளில் இரண்டாவது இடத்தில் இருந்தது.

இதற்கு மேலே, யுக்ரேன் உள்ளிட்ட முன்னாள் சோவியத் நாடுகளுடனான உறவுகள் மட்டுமே முன்னுரிமையாக வைக்கப்பட்டிருந்தன.

ஜனவரி 12-ஆம் தேதி ரஷ்யாவில் வழக்கமான பணிகள் மீண்டும் தொடங்கும்போது, விடுமுறை நாட்களில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் கொந்தளிப்புகள் குறித்து அதிபர் புதின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போதைக்கு, டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை நகர்வுகள் மாஸ்கோவுடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மூடுவது போல் தெரியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு