இரானுக்கான ராணுவ திட்டங்கள் பற்றி டிரம்புக்கு விளக்கம் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டேனியல் கேய்
- பதவி, பிபிசி
- எழுதியவர், கிளேர் கீனன்
- பதவி, பிபிசி
இரானில் பயன்படுத்துவதற்கான பரந்த அளவிலான உளவு மற்றும் ராணுவ முறைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் இருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர்.
நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்கள், அமெரிக்காவின் சாத்தியமான தலையீட்டிற்கான ஒரு வழியாகத் தொடர்கின்றன.
அதே நேரத்தில், சைபர் நடவடிக்கைகள் மற்றும் உளவியல் ரீதியான பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முன்வைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இரானில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களில், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
இதற்கிடையில், இரானுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகளின் பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் திங்களன்று அறிவித்தார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இரான் தயாராக இருப்பதாகவும், அதே சமயம் "போருக்கும் தயாராக" இருப்பதாகவும் இரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
'மிகவும் வலிமையான வழிகள்'
இரான் குறித்து விவாதிக்க டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு குழு செவ்வாய்க்கிழமையன்று வெள்ளை மாளிகையில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொள்வாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.
மேலும் இரானில் அதிகமான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் தலையீடு செய்ய "மிகவும் வலிமையான வழிகள்'' குறித்து தனது ராணுவம் பரிசீலித்து வருவதாக டிரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இரான் தலைவர்கள் "பேச்சுவார்த்தை" நடத்த தன்னை அழைத்ததாகக் குறிப்பிட்ட டிரம்ப், ஆனால் "ஒரு சந்திப்பு நடைபெறும் முன்பே அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்," என்றும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
திட்டம் என்ன?
இரானிய நாணயத்தின் வீழ்ச்சி மற்றும் பொருளாதார நிர்வாக சீர்கேடு ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள விரக்தி, தற்போது இரானின் அதிஉயர் தலைவர் காமனெயியின் ஆட்சிக்கு எதிரான ஒரு நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.
இரான் அரசுடன் தொடர்புடைய செய்தி முகமையான ஃபார்ஸ், பல வார போராட்டங்களைத் தொடர்ந்து திங்கட்கிழமை இரவு அமைதியான சூழல் நிலவியதாகவும், தலைநகர் டெஹ்ரான் உட்பட பல நகரங்களில் போராட்டம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
எனினும் நாட்டில் பல இடங்களில் போராட்டம் நடைபெறுவதாக கூறும் மக்களிடமிருந்து காணொளிகளை பிபிசி பெற்றுள்ளது. தற்போது இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதால் இந்தக் காணொளிகள் எங்கு படமாக்கப்பட்டன என்பதை உறுதி செய்வது கடினமாக உள்ளது.
திங்களன்று, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், இரானிய அதிகாரி ஒருவர் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப்பைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்தார். அதிபர் டிரம்ப் தேவை என்று கருதினால், "ராணுவ நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்க மாட்டார்." என்று அவர் எச்சரித்தார்.
சிபிஎஸ் நிறுவனத்துடன் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு நபர்கள் பேசுகையில், இரானில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை என்பது பெரும்பாலும் விமானப் படைத் தாக்குதல்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், அதே சமயம் இரானின் கட்டளை அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான வழிகளையும் இத்தாக்குதல் குறித்து திட்டமிடுபவர்கள் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தனர்.
இரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படியோ அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் உதவி இல்லாமல் வெளியேறும் திட்டத்தை வைத்திருக்கும்படியோ அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இரானில் நடைபெற்ற அரசு ஆதரவுப் பேரணிகளைப் பாராட்டிய காமனெயி, அமெரிக்கா "ஏமாற்று வேலை" செய்வதாகவும், "துரோகமிழைக்கும் கூலிப்படையினரை" நம்பியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், "இரானிய தேசம் ஒரு வலிமையான தேசம், அது விழிப்புணர்வுடன் உள்ளது, தனது எதிரிகளை அறியும், மேலும் ஒவ்வொரு களத்திலும் அது இருக்கும்" என்றார்.
அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கான அழைப்புகளைத் தொடர்ந்து, பல நகரங்களில் பெருந்திரளான மக்கள் திரண்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
நாட்டிற்குள் இருப்பவர்களை இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தும், அதே சமயம் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்தும் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை பிபிசி பாரசீக சேவை கண்டது.

பட மூலாதாரம், Getty Images
25% வரி
திங்கள்கிழமை அன்று, டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், இரானுடன் "வணிகம் செய்யும்" நாடுகளின் பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்படும் என்று பதிவிட்டார். இது குறித்து கூடுதல் விளக்கம் அளிக்காத அவர், "இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது" என்று கூறினார்.
ஏற்கனவே அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளின் கீழ் இருக்கும் இரான், தற்போது நாணய வீழ்ச்சியையும் கடுமையான பணவீக்கத்தையும் எதிர்கொள்கிறது.
இதனால் உணவுப் பொருட்களின் விலை 70% வரை உயர்ந்துள்ளது. இரானின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பொருட்கள் ஆகும். டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரிக் கட்டுப்பாடுகள், உணவுத் தட்டுப்பாட்டையும் செலவுகளையும் மேலும் மோசமாக்கக்கூடும்.
புதிய வரிகள் குறித்து வெள்ளை மாளிகை கூடுதல் தகவல்களைப் பகிரவில்லை. சீனா இரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இராக், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.

அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க இரான் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த புதிய நகர்வு இரான் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதற்கிடையில், அமெரிக்காவில் வாழும் இரானின் கடைசி மன்னரின் மகனான ரெஸா பஹ்லவி, போராட்டக்காரர்களின் உயிரிழப்புகளைக் குறைக்க அதிபர் டிரம்ப் "விரைவாக" தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சிபிஎஸ் நியூஸிற்கு அளித்த பேட்டியில், தற்போதைய இரானிய அரசு "மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறி உலகை ஏமாற்ற முயல்கிறது" என்று பஹ்லவி கூறினார்.
அதிபர் டிரம்ப்பை "தான் சொல்வதைச் செய்பவர், செய்வதைச் சொல்பவர்" என்றும், "தற்போதைய சூழலின் விபரீதத்தை நன்கு அறிந்தவர்" என்றும் அவர் விவரித்தார்.
மேலும், "அதிபர் மிக விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்றும் பஹ்லவி கூறினார்.
நார்வேயைத் தளமாகக் கொண்ட 'இரான் மனித உரிமைகள்' (IHRNGO) அரசு சாரா அமைப்பின் தகவல்படி, இரானில் 18 வயதிற்குட்பட்ட 9 பேர் உட்பட குறைந்தது 648 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கலாம் என்று இரானுக்குள் உள்ள வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன.
பிபிசி மற்றும் பிற சர்வதேச செய்தி நிறுவனங்களால் இரானுக்குள் இருந்து செய்தி சேகரிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதால், தகவல்களைப் பெறுவதும் அவற்றை உறுதிப்படுத்துவதும் கடினமாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












