இரான் குறித்த டிரம்ப் அறிவிப்பால் இந்தியா மீதான அமெரிக்காவின் வரி 75%-ஆக மாறுமா?

பட மூலாதாரம், AFP via Getty Images
- எழுதியவர், ரௌனக் பைரா
- பதவி, பிபிசி செய்தியாளர்
"இந்தியா தனது முதுகெலும்பை வலுப்படுத்தி, எங்கள் (இரான்) மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு அடிபணிய மறுக்க வேண்டும்."
2019-ஆம் ஆண்டு நவம்பரில் இரானின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஸாரிஃப் தெரிவித்த கருத்து இது. ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே தற்போதைய சூழலுக்கும் இந்தக் கருத்து பொருத்தமானதாக இருக்கிறது.
இரான் உடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
"இரான் இஸ்லாமியக் குடியரசுடன் வணிகம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகளும் அமெரிக்கா உடனான தங்களின் வர்த்தகத்தில் 25% வரிகளை உடனடியாக எதிர்கொள்ள வேண்டும். இந்த உத்தரவு முழுமையானது மற்றும் இறுதியானது," என டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் கூட இந்தியா 50% வரி சுமையை எதிர்கொண்டு வருகிறது.
அமெரிக்கா முதலில் இந்தியா மீது 25% வரிகளை விதித்தது, அதன் பின்னர் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த அழுத்தம் கொடுப்பதற்கானக கூடுதல் 25% வரியை விதித்தது. தற்போது இரான் மற்றும் இந்தியா இடையேயான வர்த்தகம் தொடர்ந்தால் ஒட்டுமொத்த வரி என்பது 75% ஆகும்.
எனினும் இத்தகைய சூழலை இந்தியா மட்டும் எதிர்கொள்ளவில்லை. இரான் உடன் வர்த்தகம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகளும் இந்தப் பிரச்னையை சந்திக்க உள்ளன.
இந்தியா - இரான் வர்த்தகம்

பட மூலாதாரம், AFP via Getty Images
டிரேடிங் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் ஒரு ஆய்வின்படி, இரானுக்கான இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளில் 512 மில்லியன் டாலர் மதிப்புள்ள ரசாயனங்கள் மற்றும் 311 மில்லியன் டாலர் மதிப்புள்ள பழங்கள், உலர் கொட்டைகள் உள்ளிட்டவை அடங்கும்.
கனிம எரிபொருட்கள், எண்ணெய் மற்றும் வடிகட்டக்கூடிய பொருட்களின் (பெட்ரோலிய பொருட்கள், மதுபானம் மற்றும் வாசனை திரவியங்கள் இதிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன) இறக்குமதி மதிப்பு 86 மில்லியன் டாலராக உள்ளது.
அமெரிக்க பொருளாதார தடைகளால் இந்தியா ஏற்கெனவே இரான் உடனான வர்த்தகத்தை கணிசமாக குறைத்துள்ளது. 2018-2019 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் சுமார் 17 பில்லியன் டாலராக இருந்தது.
ஆனால் பொருளாதார தடைகளால் அதற்கு அடுத்த நிதியாண்டிலே இது 4.77 பில்லியன் டாலராக குறைந்தது. 72 சதவிகித வர்த்தகம் நேரடியாக சரிந்திருந்தது. 2025-ஆம் ஆண்டில் இது 1.68 பில்லியன் டாலராக குறைந்தது.
இதனால் தான் 2019-ஆம் ஆண்டில் அப்போதைய இரான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவிடம் 'வலுவான முதுகெலும்பு வைத்திருக்க வேண்டும்' என்றும் 'அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிய வேண்டாம்' என்றும் கேட்டிருந்தார்.
இந்தியா மீதான தாக்கம்
இரான் உடனான வர்த்தகத்தை இந்தியா நிறுத்திக் கொண்டால் அது 1.68 பில்லியன் டாலர் வர்த்தகத்தை மட்டும் பாதிக்காது. அதனுடன் சேர்த்து ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா உடனான வர்த்தகமும் பாதிப்புக்கு உள்ளாகும். இரான் மூலமாகத் தான் இந்தியா இந்த நாடுகளை அணுகுகிறது.
இரானின் தென் கிழக்கு கரையில் சாபஹார் துறைமுகம் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா நேரடியாக வர்த்தகம் செய்ய இந்த துறைமுகம் அனுமதிக்கிறது.
இதன் ஒரு நன்மை என்னவென்றால் இந்தியா பாகிஸ்தான் வழியாக செல்லும் பாதையை பயன்படுத்த வேண்டியதில்லை.
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடமும் (ஐஎன்எஸ்டிசி) இரான் வழியாகத் தான் செல்கிறது. இதனால் இந்தியா நீண்ட மற்றும் பொருட்செலவு மிக்க கடல் வழித்தடங்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை.
டிரம்பின் அழுத்தத்திற்கு அடிபணிந்து இரான் உடனான வர்த்தகத்தை இந்தியா நிறுத்தினால் இரானும் இந்தியா மீது கடுமையாக நடந்து கொள்ளும் என்கிறார் மத்திய கிழக்கு விவகாரங்களில் நிபுணரான காமர் அகா.
இதைப்பற்றி மேலும் பேசிய அவர், "இரான் மாற்று வாய்ப்புகளை பரிசீலிக்க நிர்பந்திக்கப்படும். சீனா உடனான தனது நெருக்கத்தை அதிகரித்து இந்த வர்த்தக வழித்தடங்களை சீனாவிற்கு வழங்கலாம். முக்கியமான வர்த்தக வழித்தடங்களிலிருந்து இந்தியா துண்டிக்கப்படுவதில் சீனாவும் மகிழ்ச்சியடையும்." என்றார்.
இரானில் நிலைத்தன்மை இருப்பது முக்கியம் என மணிகன்ட்ரோல் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் முன்னாள் தூதர் அணில் திரிகுணாயத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இந்தியா அதிக அளவிலான ஷியா மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. சாபஹார் துறைமுகமும் ஐஎன்எஸ்டிசியும் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. இரானில் நீண்டகாலம் நிலையற்றத்தன்மை நிலவுவது இந்தியாவின் நலனிற்கு மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்." என்றார்.

பட மூலாதாரம், Getty Images
"வர்த்தகமும் பிராந்திய இணைப்பும் சுமூகமாக செல்ல வேண்டும் என இந்தியா விரும்புகிறது. உள்கட்டமைப்பு அல்லது துறைமுகங்களைப் பாதிக்கும் விதமாக இரானில் நிகழும் எந்த இடையூறுகளும் இந்தியாவின் பிராந்திய தளவாடங்கள் மற்றும் பொருளாதார மேலாண்மையில் நேரடியான தாக்கம் செலுத்தும்." என்றார்.
ஐஏஎன்எஸ் செய்தி முகமையின்படி. சாபஹாரில் உள்ள ஷாஹித் பெஹெஸ்தி துறைமுகத்தின் வளர்ச்சியில் கூட்டு ஒத்துழைப்பிற்கு 2015-ஆம் ஆண்டில் இந்தியாவும் இரானும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளன.
"இந்தியாவும் இரானும் சாபஹார் துறைமுகத்தை ஒரு முக்கியமான பிராந்திய மற்றும் சர்வதேச மையமாக மாற்றும் நோக்கம் கொண்டுள்ளன. உணவு மற்றும் மருந்துகள் போன்ற மனிதாபிமான உதவிகள் மற்றும் வர்த்தக பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்வதில் இந்த துறைமுகம் முக்கியமான பங்கு வகிக்கும்."
"முன்னதாக, இந்த விவகாரத்தில் அமெரிக்கா கடுமையாக இருந்தது. ஆனால் சமீபத்தில் சாபஹார் துறைமுகத்தை தொடர்ந்து பயன்படுத்த கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி முதல் இந்தியாவிற்கு ஆறு மாத காலம் விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது."
இந்த விலக்கு இந்தியாவிற்கு ராஜ்ஜிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் 25% வரி என்கிற டிரம்பின் அறிவிப்பு இந்தியாவிற்கு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு எந்த பாதை பலன் தரக்கூடியது?

பட மூலாதாரம், AFP via Getty Images
இரான் உடனான வர்த்தகத்தை நிறுத்துவதா அல்லது அமெரிக்காவின் கூடுதல் 25% வரிகளை ஏற்றுக்கொள்வதா என்கிற சூழல் இந்தியாவிற்கு எழுந்துள்ளது. இதில் எது இந்தியாவிற்கு பலனளிக்கும் என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
இந்தியா மற்றும் இரான் இடையே வர்த்தகம் ஏற்கெனவே குறைந்த அளவில் இருப்பதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முன்னாள் பேராசிரியரான ஏ.கே. பாஷா கூறிகிறார்.
இது தொடர்பாக மேலும் விளக்கிய அவர், "இந்தியா ஏற்கெனவே இரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது. தற்போது மற்ற வர்த்தகத்தையும் இந்தியா குறைக்கலாம். இரானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என இந்தியா முடிவெடுத்தால், ஐக்கிய அரபு அமீரகத்தை ஒரு மாற்று நாடாகக் கருதலாம். இரான் அனுப்பும் அதே சரக்குகளை அவர்களாலும் இந்தியாவிற்கு அனுப்ப முடியும். அமெரிக்காவின் 25% வரிகளை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." என்றார்.
இந்தியா தன்னிறைவாக இருக்க வேண்டுமென்றால் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பயப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

"இந்தியா ஏற்கெனவே மலிவான எண்ணெயை இரானிடமிருந்து வாங்குவதை நிறுத்திவிட்டது. தற்போது அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் சாபஹார் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்ய பல மில்லியன் டாலர்களும் வீணாகப் போகின்றது."
"இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதையும் அமெரிக்கா தடை செய்துள்ளது. இரான் மற்றும் ரஷ்ய எண்ணெயை விட விலை அதிகமான அமெரிக்க எண்ணெயை இந்தியா வாங்க வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார். அமெரிக்கா படிப்படியாக இந்தியாவை வலுவிழக்கச் செய்து வருகிறது." என்றார்.
நாம் சுதந்திரமாக முடிவு எடுக்கிறோமா அல்லது அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஆளாகப் போகிறோமா என்பதை முடிவெடுக்க வேண்டும் எனக் கூறும் ஏகே பாஷா, இந்தியா அமெரிக்காவிற்குச் சவால் விட வேண்டுமென்றால் சீனாவின் பாதையைப் பின்பற்றி பிரிக்ஸ் உடன் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரண்டுமே இந்தியாவிற்கு முக்கியம் எனக் கூறுகிறார் காமர் அகா. "வர்த்தக கண்ணோட்டத்தில் மட்டுமல்ல, கலாசார மற்றும் நாகரிக உறவுகள் வலுவாக இருப்பதால் இரான் இந்தியாவிற்கு முக்கியமானது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நன்றாக இருந்து வருகிறது. இரான் உடன் இந்தியாவிற்கு எந்த தனிப்பட்ட பகையும் இல்லை. எனவே டிரம்பின் அழுத்தத்தால் நல்ல நட்பு நாட்டுடன் உள்ள உறவுகளை இந்தியா கெடுத்துக் கொள்ளக்கூடாது." என்றும் அவர் தெரிவித்தார்.
எந்த நாட்டிற்கு பாதிப்பு அதிகம்?

பட மூலாதாரம், AFP via Getty Images
இரான் உடனான வர்த்தகம் நிறுத்தப்படுவதால் சீனா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கியும் இழப்புகளைச் சந்திக்கும்.
2022-ஆம் ஆண்டு உலக வங்கி தரவுகளின்படி சீனா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் இந்தியாவுடன் தான் அதிக அளவிலான வர்த்தகத்தை இரான் மேற்கொண்டுள்ளது.
2022-இல் இரானின் ஒட்டுமொத்த வர்த்தகத்தின் அளவு கிட்டத்தட்ட 140 பில்லியன் டாலராக இருந்தது. இதில் இரானின் ஏற்றுமதியின் அளவு 80.9 பில்லியன் டாலராகவும் இறக்குமதியின் அளவு 58.7 பில்லியன் டாலராகவும் இருந்தது.
இரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா உள்ளது. 2022-இல் இரான் உடனான சீனாவின் வர்த்தகம் 22.4 பில்லியன் டாலராக இருந்தது. டிரம்பின் அழுத்தத்திற்குப் பணிந்தால் சீனா அதிக அளவில் பாதிக்கப்படும்.
சீனாவைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












