4 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய பிடிஎஸ் - பிரமாண்ட உலகப்பயணத்தின் முழு விவரம்

4 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய பிடிஎஸ் - ரூ. 8,000 கோடி சம்பாதிக்க திட்டமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மார்க் சாவேஜ்
    • பதவி, பிபிசி

கே-பாப் இசை குழுவான பிடிஎஸ் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மேடைக்குத் திரும்புகிறது. 79 நிகழ்ச்சிகள் கொண்ட பிரமாண்டமான உலகப் பயணத்தை குழுவினர் அறிவித்துள்ளனர்.

லண்டன், டோக்கியோ, சிட்னி, லாஸ் ஏஞ்சலிஸ் என உலகின் பல நகரங்களில் நடைபெறவுள்ள இந்த இசைப்பயணம், இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, 2019-க்குப் பிறகு அமெரிக்கா மற்றும் தென் கொரியா வெளியே பிடிஎஸ் நிகழ்ச்சி நடத்தாத நிலையில், இந்த சுற்றுப்பயணம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களின் முந்தைய உலகச் சுற்றுப்பயணம், கே-பாப் குழுக்களுக்கான பல சாதனைகளை படைத்தது. அந்த சுற்றுப்பயணம் உலகளவில் சுமார் 246 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியது.

லண்டனின் புகழ்பெற்ற வெம்பிளி ஸ்டேடியத்தில் முதன்மை நிகழ்ச்சியை நடத்திய முதல் கொரியக் கலைக்குழு என்ற பெருமையையும் பிடிஎஸ் பெற்றது.

இந்த இசைக்குழுவின் புதிய உலகப் பயணம் 2026 ஏப்ரல் 9 அன்று தென் கொரியாவின் கோயாங் ஸ்டேடியத்தில் மூன்று இரவுகள் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளுடன் தொடங்கும். அதன் பிறகு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

BTS குழு, கே-பாப் இசை

பட மூலாதாரம், Getty Images

கட்டாய ராணுவச் சேவை

2010-களின் தொடக்கத்தில் உருவான பிடிஎஸ் இசைக்குழு, தங்களின் துள்ளலான நடனம், ஹிப்-ஹாப் இசை மற்றும் கருத்தாழம் கொண்ட பாடல்களின் மூலம் மேற்கத்திய நாடுகளின் ரசிகர்களிடையே 'கே-பாப்' இசையை பிரபலப்படுத்தியது.

கடந்த ஜூன் மாதம், ராப் பாடகரும் பாடலாசிரியருமான சுகா தனது 18 மாதங்கள் கட்டாய ராணுவச் சேவையை நிறைவு செய்தது முதலே, இந்த இசைக்குழுவின் மீள்வருகை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது.

ஜின், ஜே-ஹோப், வி, ஆர்எம், ஜங் குக் மற்றும் ஜிமின் ஆகிய சக உறுப்பினர்களுக்குப் பிறகு சுகா கட்டாய ராணுவ சேவையை முடித்து திரும்பிய கடைசி உறுப்பினராக இருந்தார்.

கடந்த ஜூலை மாதம் 'வீவர்ஸ்' எனும் ரசிகர்களுக்கான பிரத்யேகத் தளத்தில் நேரலையில் தோன்றி, தங்களின் மீள்வருகை குறித்த திட்டங்களை இசைக்குழு அறிவித்தபோது, அதை 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நேரலையில் பார்த்தனர்.

திட்டம் என்ன?

ஒவ்வொரு அரங்கிலும் அதிக ரசிகர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் 360-டிகிரி கோணத்தில் சுழலும் மேடையில் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில், பாரிஸ், மாட்ரிட், பிரஸ்ஸல்ஸ் போன்ற நகரங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

2027-ஆம் ஆண்டில், ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பிற இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குழுவின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகளுக்கான முன்பதிவு ஜனவரி 22 முதல் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கான விற்பனை அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகும் தொடங்கும்.

பில்போர்டு தகவலின்படி, நிகழ்ச்சி, வணிகப் பொருட்கள், உரிமம், ஆல்பம் விற்பனை மற்றும் ஸ்ட்ரீமிங் வருவாய் ஆகியவற்றின் மூலம் பிடிஎஸ் குழுவும் அவர்களின் பிக் ஹிட்/ஹைப் இசை நிறுவனமும் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது.

கடந்த 2024-இல் பிடிஎஸ் இசைக்குழு சற்று இடைவேளை எடுத்துக் கொண்டபோது, ஹைப் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் சுமார் 37.5% சரிந்தது. இதற்கு "பிடிஎஸ்-இன் தற்காலிக இடைவேளை" முக்கியக் காரணம் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

சுகா, ராணுவ சேவை, இசை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுகாவுக்கு சற்று முன்பு, கடந்த ஜூன் மாதம் ஆர்.எம் (இடது) மற்றும் வி (வலது) தங்கள் ராணுவ சேவை முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில் இசைக்கும் காட்சி

மிகுந்த எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் நிகழ்ச்சிக்கான வருவாய் என நிகழ்ச்சி தொடர்பான புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டெய்லர் ஸ்விஃப்ட்டின் 'ஈராஸ் டூர்' மற்றும் 2024-இல் நடந்த ஓயாசிஸ் ரீயூனியன் இசை பயணத்திற்கான டிக்கெட் விற்பனையைப் போலவே, பிடிஎஸ் குழுவின் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளுக்கு கடும் போட்டி இருக்கும் என்பது புரிகிறது.

பல பிடிஎஸ் ரசிகர்களுக்கு, கடந்த ஏழு ஆண்டுகளில் நேரடியாக இந்த இசைக்குழுவின் கச்சேரியைக் காண்பதற்கான முதல் வாய்ப்பாக இது அமையப்போகிறது.

இவர்கள் உருவாக்கிய டைனமைட், மைக்கேல் ஜாக்சனின் தாக்கத்தால் உருவான, பழைய பாணியிலான டிஸ்கோ-ஃபங்க் பாடலான 'பட்டர்' போன்றவை மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கோல்ட் பிளே குழுவுடன் இணைந்து பிடிஎஸ் உருவாக்கிய 'மை யுனிவர்ஸ்' பாடல் சர்வதேச அளவில் பிரபலமானது.

இருப்பினும், பிடிஎஸ் குழு 2020-இல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த உலகச் சுற்றுப்பயண இசை கச்சேரிகள் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டன. நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, அவர்கள் ராணுவ சேவையைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த முடிந்தது.

இந்த நீண்ட இடைவெளியின்போது அவர்களின் ஸ்ட்ரீமிங் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், குழு உறுப்பினர்களின் பல்வேறு தனிப்பட்ட திட்டங்கள் தீவிர ரசிகர்களைத் தொடர்ந்து ஈடுபாட்டுடன் வைத்திருக்கின்றன.

புத்தாண்டு தினத்தன்று அந்தக் குழு புதிய ஆல்பத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்தபோது, ​​தகவல்களைப் பெறுவதற்காக ரசிகர்கள் அதிக அளவில் உள்நுழைந்ததால், வீவர்ஸ் தளம் முடங்கிப்போனது பிடிஎஸ் குழுவின் செல்வாக்கு குறையவில்லை என்பதைக் காட்டுகிறது.

பிடிஎஸ் இசைக்குழு, கச்சேரி, நடன அசைவுகள், இசைக்கலவை, ராப்

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock

இன்னும் பெயரிடப்படாத இந்த ஆல்பம், கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஆறு மாதங்களாகப் பதிவு செய்யப்பட்டது. இது எதிர்வரும் மார்ச் 20 அன்று ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த இசைத் தொகுப்பு குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்ட இசைக்குழுவின் தலைவர் ஆர்.எம், "குழுவினர் தீவிரமாக உழைத்து வருகிறார்கள்" என்று கூறினார்.

அதேசமயம், ராணுவ வாழ்க்கைக்குப் பிந்தைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது சற்று விசித்திரமாக இருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

"நான் குழுவின் பிற உறுப்பினர்களுடன் இணைந்து வேலை செய்கிறேன், விளையாடுகிறேன், வாழ்கிறேன். இது உண்மையிலேயே வித்தியாசமான அனுபவம்," என்று அவர் கூறினார்.

"இந்த நண்பர்களுடன் இணைந்து இசைத்தொகுப்பை உருவாக்குவதற்காக என்னை நான் முழுமையாக அர்ப்பணிக்கப் போகிறேன்... நான் என்னவாக மாறப்போகிறேன் என்பதைத் தேடிக்கொண்டிருக்கிறேன்."

BTS இசைக்குழுவினர், பிடிஎஸ் உலகச் சுற்றுப்பயணம் 2026

பட மூலாதாரம், BTS / BigHit

படக்குறிப்பு, மீண்டும் களமிறங்குவதற்கு முன்னதாக அந்த இசைக்குழுவினர் தங்கள் ரசிகர்களுக்கு தனிப்பட்ட கடிதங்களை எழுதினர்

கடந்த டிசம்பர் மாதம் ரசிகர்களுக்குப் புதிய தகவல்களைப் பகிர்ந்த ஆர்.எம், "ஆல்பம் வெளியாகும் நேரம் நெருங்கிவிட்டது. அது உண்மையாகவே தயாராகிவிட்டது," என்று கூறினார்.

புதிய ஆல்பம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, ARMY என்று அழைக்கப்படும் தங்கள் ரசிகர்களுக்கு பிடிஎஸ் உறுப்பினர்கள் கையால் எழுதப்பட்ட கடிதங்களை அனுப்பியிருந்தனர்.

ரசிகர்களின் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்பட்ட அந்தக் கடிதங்களில், மீண்டும் இணைவது குறித்த தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தியிருந்த அவர்கள், ரசிகர்களுக்கு தங்கள் நன்றியையும் தெரிவித்திருந்தனர்.

பிடிஎஸ் உலகச் சுற்றுப்பயணம் - இதுவரை அறிவிக்கப்பட்ட தேதிகள்

பிடிஎஸ் உலகச் சுற்றுப்பயணம் 2026

பட மூலாதாரம், Getty Images

2026 - பயணத் தேதிகள்

தேதிகள் நகரம் மற்றும் நாடு

ஏப்ரல் 9, ஏப்ரல் 11-12 கோயாங், தென்கொரியா

ஏப்ரல் 17-18 டோக்கியோ, ஜப்பான்

ஏப்ரல் 25-26 டாம்பா, அமெரிக்கா

மே 2-3 எல் பாசோ, அமெரிக்கா

மே 7, மே 9-10 மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ

மே 16-17 ஸ்டான்போர்ட், அமெரிக்கா

மே 23-24, மே 27 லாஸ் வேகாஸ், அமெரிக்கா

ஜூன் 12-13 பூசான், தென்கொரியா

ஜூன் 26-27 மாட்ரிட், ஸ்பெயின்

ஜூலை 1-2 பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்

ஜூலை 6-7 லண்டன்,

ஜூலை 11-12 முனிக், ஜெர்மனி

ஜூலை 17-18 பாரிஸ், பிரான்ஸ்

ஆகஸ்ட் 1-2 ஈஸ்ட் ரூதர்ஃபோர்ட், அமெரிக்கா

ஆகஸ்ட் 5-6 ஃபாக்ஸ்பரோ, அமெரிக்கா

ஆகஸ்ட் 10-11 பால்டிமோர், அமெரிக்கா

ஆகஸ்ட் 15-16 ஆர்லிங்டன், அமெரிக்கா

ஆகஸ்ட் 22-23 டொராண்டோ, கனடா

ஆகஸ்ட் 27-28 சிகாகோ, அமெரிக்கா

செப்டம்பர் 1-2, 5-6 லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

அக்டோபர் 2-3 பொகோட்டா, கொலம்பியா

அக்டோபர் 9-10 லிமா, பெரு

அக்டோபர் 16-17 சாண்டியாகோ, சிலி

அக்டோபர் 23-24 பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா

அக்டோபர் 28, 30-31 சாவோ பாலோ, பிரேசில்

நவம்பர் 19, 21-22 காவோசியுங், தைவான்

டிசம்பர் 3, 5-6 பாங்காக், தாய்லாந்து

டிசம்பர் 12-13 கோலாலம்பூர், மலேசியா

டிசம்பர் 17, 19-20, 22 சிங்கப்பூர்

டிசம்பர் 26-27 ஜகார்த்தா, இந்தோனீசியா

2027 - பயணத் தேதிகள்

தேதிகள் நகரம் மற்றும் நாடு

பிப்ரவரி 12-13 மெல்போர்ன், ஆஸ்திரேலியா

பிப்ரவரி 20-21 சிட்னி, ஆஸ்திரேலியா

மார்ச் 4, மார்ச் 6-7 ஹாங்காங்

மார்ச் 13-14 மணிலா, பிலிப்பின்ஸ்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு