வி.கே. விஸ்மாயா: பொறியாளராகும் வாய்ப்பை மறுத்து தடகள வீராங்கனையாக சாதித்த கதை

பட மூலாதாரம், VK Vismaya
23 வயது வி.கே.விஸ்மாயா தான் எதிர்பாராதவிதமாகத் தடகள வீராங்கனை ஆனதாக தெரிவிக்கிறார். கேரளாவில் கன்னூர் மாவட்டத்தில் பிறந்த அவருக்கு பொறியாளர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது.
விளையாட்டுத் துறையில் தான் பெரிதும் சாதிக்கவில்லை என்று நினைத்திருந்த அவருக்கு தான் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லப்போவது என்று தெரிந்திருக்கவில்லை.
விஸ்மாயாவின் சகோதரி ஒரு தடகள வீராங்கனை. விஸ்மாயாவை அவர் ஊக்குவித்தார்.
பின் தனது பள்ளியில் உள்ள விளையாட்டு ஆசிரியர்களின் உதவியுடனும், கேரளாவின் கோட்டயம் மாவட்டம் சங்கனசேரியில், சிறப்பான தடகள வீராங்கனைகளை உருவாக்கும் அசம்ஷன் கல்லூரியின் பேராசிரியர்களின் துணையுடனும் விஸ்மாயா பிரகாசிக்க தொடங்கினார்.
2014ஆம் ஆண்டு தனது மாநிலமான கேரளாவிற்காக விளையாடி இரு வெள்ளிப் பதக்கங்களை பெற்று தந்ததில் தொடங்கியது விஸ்மாயாவின் தடகள வாழ்க்கை. தற்போது 2021 ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தேர்வாகியுள்ளார். ஆனால் விளையாட்டுத் துறையை தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயமாக இல்லை.
கடினமான தேர்வு
விஸ்மாயாவின் தந்தை ஓர் எலக்ட்ரீஷியன் ஆவார். அவரது தாய் வீட்டை நிர்வகிக்கிறார். விஸ்மாயாவின் குடும்பச் சூழல் காரணமாக அவருக்கு கிடைத்த பொறியியல் படிப்பு வாய்ப்பை விடுத்து விளையாட்டுத் துறையை தேர்ந்தெடுக்க பெரிதும் யோசிக்க வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
தங்களது இரு மகள்களும் தடகளத் துறையை தேர்ந்தெடுத்தபின் அதற்கு நிதி ஆதரவு வழங்குவது பெற்றோருக்கு எளிதான ஒன்றாக இல்லை என்று தெரிவிக்கிறார் விஸ்மாயா. இருப்பினும் தனது பெற்றோர் முடிந்தவரை சிறப்பாக ஆதரவு வழங்கினர் என்கிறார்.
ஆரம்பக் கட்டத்தில் சிந்தெடிக் டிராக் கால் சட்டையோ அல்லது நவீன உடற்பயிற்சி வசதிகளோ இல்லாமல் சிரமப்பட்டார் விஸ்மாயா. மண் தரையில் தனது பயிற்சியை மேற்கொண்டார்; அது மழைக்காலங்களில் பெரும் சிரமமாக இருக்கும்.
ஒரு தடகள வீரரின் வளர்ச்சிக்கு, ஆரம்ப கால கட்டத்தில் தகுந்த கட்டமைப்பு, உபகரணம், மற்றும் பயிற்சி ஆகியவை தேவை. ஆனால் அது இந்தியாவில் போதுமானதாக இல்லை என்கிறார் விஸ்மாயா.
மேலும் இது தடகள வீரர்கள் எளிதாகக் காயம் அடைவதற்கான வாய்ப்பாகவும் அமைந்துவிடுகிறது. விஸ்மாயாவுக்கு காயங்கள் ஏற்பட்டன.
தனது விளையாட்டுப் பயணத்தை தடை தாண்டி ஓட்டத்தில் தொடங்கிய விஸ்மாயா, தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இடைத்தொலைவு ஓட்ட வீராங்கனையாக மாற நேர்ந்தது.
தங்கம் வெல்லுதல்
2017ஆம் ஆண்டு 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்க பதக்கம் வென்றது விஸ்மாயாவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டியில் 25 ஆண்டு சாதனையை அவர் முறியடித்தார். அதே சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதன்பிறகு அவர் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தார்.
அது தேசிய அளவில் தேர்ச்சி பெற அவருக்கு உதவியது. அதன்பிறகு அவருக்கு நவீன பயிற்சி வசதிகளும், பயிற்சியாளர்களின் உதவியும் கிடைத்தன.
2018ஆம் ஆண்டு ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் இந்திய அணியின் முக்கிய வீராங்கனையானார் விஸ்மாயா. அந்த போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
அந்த வெற்றியை விஸ்மாயா தனது வாழ்க்கையின் சிறந்த தருணம் என்கிறார்.
2019ஆம் ஆண்டு செக் குடியரசில் நடைபெற்ற தடகள வீரர்களுக்கான போட்டியில் விஸ்மாயா 400மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். 52.21 நொடிகளில் இலக்கை கடந்தார் விஸ்மாயா.
அதன்பின் 2019ஆம் ஆண்டு தோஹோவில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் கலந்து கொண்டார். அந்த அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று பின் டோக்கியோவில் இந்த அண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
உங்களது மிகப்பெரிய வலியே உங்களின் மிகப்பெரிய வலிமையாகிறது என்பதை ஆழமாக நம்புகிறார் விஸ்மாயா.
விஸ்மாயாவுக்கு பிபிசி அனுப்பிய மின்னஞ்சலுக்கு கிடைத்த பதில்களை கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












