சுஸ்ரீ திப்யதர்ஷினி பிரதான்: கிழக்கில் இருந்து கிளம்பும் ஒரு ஸ்பின் பௌலரின் கனவு

சுஸ்ரீ திப்யதர்ஷினி பிரதான்:

சுஸ்ரீ திப்யதர்ஷினி பிரதான், கிரிக்கெட்டுக்கு பெரிதும் பெயர் போகாத ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர். எனினும், குறைந்த வசதிகள் இருந்தாலும், தன் கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் இவர் முன்னேறியிருக்கிறார்.

வலது கை ஆஃப் ஸ்பின் சுழற் பந்து வீச்சாளரான பிரதான், ஒடிஷா மாநில அணிக்காக விளையாடுகிறார். டொமெஸ்டிக் சேலஞ்சர்ஸ் கோப்பைக்கான 23 வயத்துக்குட்பட்டோருக்குக்கான போட்டியில் இந்தியாவின் பச்சை நிற அணியின் கேப்டனாக இருந்து, அணியை வெற்றி பெற வைத்து 2019ன் இறுதிப் போட்டிக்கு முன்னேற வைத்தார் பிரதான்.

2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண்களுக்காக டி20 போட்டியில் வெலாசிட்டி கிரிக்கெட் அணியில் புகழ்பெற்ற மிதாலி ராஜ் தலைமையில் இவர் விளையாடினார். இந்த போட்டி பிசிசிஐ-ஆல் ஒருங்கிணைக்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை

தனது வீட்டுக்கு அருகில் உள்ள சிறுவர்களுடன் 7 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கினார் சுஸ்ரீ பிரதான். அதுதான் அவரது வாழ்க்கையாவும் தொழிலாகவும் மாறப்போகிறது என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. பெண்களுக்கான கிரிக்கெட் அணி ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்றும், பெண்கள் தொழில்முறையாக கிரிக்கெட் விளையாடலாம் என்றுகூட அப்போது அவருக்கு தெரியாது.

தடகளம் போன்று வேறு ஏதேனும் ஒரு விளையாட்டில் சேர்ந்து கொள்ளும்படி பிரதானின் தந்தை அவரை வலியுறுத்தினார். ஆனால், கிரிக்கெட் மட்டுமே வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த பிரதான், உள்ளூரில் உள்ள ஜக்ருத கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து, பயிற்சியாளர் கிரோத் பெஹராவிடம் பயிற்சி எடுக்க தொடங்கினார்.

சுஸ்ரீ திப்யதர்ஷினி பிரதான்: கிழக்கில் இருந்து கிளம்பும் ஒரு ஸ்பின் பௌலரின் கனவு

கிரிக்கெட் என்பது விலை உயர்ந்த விளையாட்டு என்பதால் ஆரம்பத்தில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்ததாக கூறுகிறார் பிரதான். மேலும் கிரிக்கெட் பயிற்சிக்கு மகாராஷ்டிரா அல்லது கர்நாடகாவில் இருப்பது போல உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கிரிக்கெட் கலாசாரம் ஒடிஷாவில் இல்லை. எனினும், பிரதான் கிரிக்கெட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ள, ஒரு கட்டத்தில் அவரது பெற்றோரும் அதற்கு ஆதரவளித்தனர்.

ஒரு வழியாக 2012ஆம் ஆண்டு கிழக்கு மண்டல பெண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார். அதோடு ஒடிஷாவின் சீனியர் அணிக்காகவும் ஆடுகிறார். டி20 போட்டிகளில் 23 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் அணிக்கு தலைமை தாங்கினார்.

சாதனைகள்

2019ல் டொமெஸ்டிக் சேலஞ்சர்ஸ் கோப்பை பெண்களுக்கான 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இந்தியாவின் பச்சை நிற அணிக்கு விளையாட தேர்வானதுதான் பிரதானின் மிகப்பெரிய வெற்றிப்படி. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அணியை இறுதிப்போட்டி வரை இட்டுச் சென்றார். ஆனால், இறுதிப்போட்டியில் நீல நிற அணியுடன் விளையாடி பிரதானின் அணி தோல்வி அடைந்தது.

பின்னர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்பட்டார்.

2019-ல் பெண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் பிரதான். இந்தியாவுக்காக அப்போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார்.

சுஸ்ரீ திப்யதர்ஷினி பிரதான்: கிழக்கில் இருந்து கிளம்பும் ஒரு ஸ்பின் பௌலரின் கனவு

அதைத் தொடர்ந்து 2020ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த பெண்களுக்கான டி20 போட்டியில் வெலாசிட்டி அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். பிரதானுக்கும் அவரது அணிக்கும் இது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அந்த போட்டியில் பல சர்வதேச பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடன் விளையாடி பல விஷயங்களை கற்றுக் கொண்டதாக பிரதான் கூறுகிறார்.

கிரிக்கெட்டில் அடுத்த நிலை செல்ல, பெண்களுக்கான இந்திய சீனியர் அணியில் சேர கடினமாக உழைத்து வருகிறார் சுஸ்ரீ பிரதான். ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பது இவரது கனவு.

பல கனவுகள் பிரதானுக்கு இருந்தாலும், பொருளாதார ரீதியாக இருக்கும் பிரச்சனைகள் அவரது மனதிற்கு நெருடலாகவே இருக்கிறது. நாட்டில் இருக்கும் திறமை வாய்ந்த வீராங்கனைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த உதவி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கிறார்.

உதாரணமாக, கிழக்கு ரயில்வேயில் ஒடிஷா போன்ற கிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் பெண் வீராங்கனைகளுக்கு வேலை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அப்படி இருந்தால், வாழ்வாதாரம் குறித்து சிந்திக்காமல் விளையாட்டில் கவனம் செலுத்த முடியும் என்று பிரதான் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :