"சசிகலா சுய நினைவோடு, தெளிவாக இருக்கிறார்" - விக்டோரியா மருத்துவமனை அறிக்கை

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சசிகலா

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் வி.கே. சசிகலாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 27-ம் தேதி தனது தண்டனை முடிந்து அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், கடந்த புதன்கிழமை அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அவர் பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இந்த நிலையில், சசிகலா உடல்நிலை குறித்த அறிக்கையை விக்டோரியா மருத்துவமனை இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்டுள்ளது.

அதில் சசிகலாவுக்கு கொரனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் குறைந்திருப்பதாகவும், மேலும் அவர் சுய நினைவோடு, தெளிவாக இருக்கிறார் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.

சசிகலாவின் இருதயத் துடிப்பு நிமிடத்துக்கு 58 ஆகவும், அவரது ரத்த அழுத்தக் 110/58 ஆகவும் இருக்கிறது. சுவாசவீதம், அதாவது ரெஸ்பிரேட்டரி ரேட் நிமிடத்துக்கு 16ஆக இருக்கிறது.

ஆக்ஸிஜன் செறிவு, அதாவது ஆக்ஸிஜன் சேச்சுரேஷன் ஐந்து லிட்டர் ஆக்ஸிஜனில் 95 சதவீதமாக இருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலா நிலையாகவும், வழக்கம் போல வாய் வழியாக உணவுகளை உட்கொள்வதாகவும், மருத்துவமனை வழங்கும் சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்னும் சசிகலாவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது எனவும் விக்டோரியா மருத்துவமனையின் அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கையை விக்டோரியா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ரமேஷ் கிருஷ்ணா மற்றும் இயக்குநர் சி.ஆர். ஜெயந்தி ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கிறார்கள்.

சசிகலா தண்டனை பெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் குற்றவாளி. ஆனால், அவரது மரணத்துக்குப் பிறகே உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததால், அவருக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.

இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சசிகலா தமக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திவிட்டார். இதன் அடிப்படையில் அவர் 27-ம் தேதி விடுதலை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழகத்துக்கு வந்த பின், பல அரசியல் காட்சிகள் மாறும் என அரசியல் விமர்சகர்கள் ஆரூடம் கூறிவருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :