'சசிகலாவை இனி சகோதரி என அழைக்கப்போவதில்லை': திவாகரன்

சசிகலா இனி தன் சகோதரி அல்ல என்றும், அவருடன் இனி எந்த உறவும் கிடையாது என்றும், அவரது சகோதரர் திவாகரன் தெரிவித்திருக்கிறார். தனது படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக்கூடாது என சசிகலா அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீஸை அடுத்து இந்த முடிவெடுத்திருப்பதாக அவர் கூறினார்.

'சசிகலாவை இனி சகோதரி என அழைக்கப்போவதில்லை':

பட மூலாதாரம், ARUN SANKAR

சமீபத்தில் அம்மா அணி என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் துவங்கிய திவாகரன், இன்று (திங்கள்கிழமை) காலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சசிகலாவை இனி சகோதரி என அழைக்கப்போவதில்லை என்று கூறினார்.

"ஒரு பக்கத்து செய்தியை மட்டும் கேட்டுக்கொண்டு, அடுத்தவர்கள் கருத்தைச் சொல்ல வாய்ப்பே இல்லாமல் இருக்கும்போது இவர்கள் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டு அவர் மிகப் பெரிய வக்கீல் நோட்டீஸை அனுப்பியிருக்கிறார். இதில் சசிகலாவைக் கோபித்துக்கொண்டு ஏதும் ஆகப்போவதில்லை. ஆனால், எங்கள் அரசியல் பயணம் இதனால் நிற்கப்போவதில்லை" என்றும் தெரிவித்தார் திவாகரன்.

"சசிகலாவின் படத்தைத்தானே பயன்படுத்த முடியாது? ஜெயலலிதாவின் படத்தைப் பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது. இந்த வக்கீல் நோட்டீஸே தினகரனின் பிளாக்மெயில் அரசியலின் உச்சகட்டம். முதலில் இதைக் குடும்பப் பிரச்சனை எனத் திசை திருப்பினார். இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, பயத்தால் சசிகலா படத்தை பயன்படுத்தக்கூடாது என நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்" என்றும் திவாகரன் குறிப்பிட்டார்.

"சசிகலாவை தூண்டி விட்டு என் மூலம் பழி வாங்க நினைக்கிறார் தினகரன். நான் தொடங்கிய அம்மா அணி கட்சி பணி தொடரும்" என்றும் தற்போதைய தமிழக சில விஷயங்களின் நன்றாகவும் சில விஷயங்களில் மோசமாகவும் செயல்பட்டுவருவதாகவும் திவாகரன் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா சொத்துககுவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு தற்போது பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரகார சிறையில் இருக்கிறார். தான் சிறை செல்வதற்கு முன்பாக தனது சகோதரி மகனான டிடிவி தினகரனை அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக நியமித்தார். ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, எடப்பாடி கே. பழனிச்சாமியை முதலமைச்சராகவும் நியமித்தார்.

ஆனால், அவர் சிறை சென்ற சில நாட்களிலேயே எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அணியினர் சசிகலா குடும்பத்தினருக்குக் கட்டுப்பட்டிருக்க முடியாது என்று கூறி, தினகரனின் தலைமையை ஏற்க மறுத்தனர். அதன் பிறகு ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்துகொண்டார்.

தினகரன் - திவாகரன் இடையில் வெடிக்கும் மோதல்

இதன் பிறகு, ஜெயலலிதா மறைவால் காலியான சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

அ.இ.அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயரும் இரட்டை இலைச் சின்னமும் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு தலைமை தாங்குவது யார் என டிடிவி தினகரனுக்கும் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும் இடையில் மோதல் வெடித்தது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை டிடிவி தினகரன் துவக்கினார். இதற்கு திவாகரன் எதிர்ப்புத் தெரிவித்தார். "அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியது குறித்து எங்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசிக்கவில்லை. அந்த பெயரில் திராவிடம் என்ற வார்த்தையும் இல்லை'' என திவாகரன் குற்றம்சாட்டினார்.

'சசிகலாவை இனி சகோதரி என அழைக்கப்போவதில்லை': திவாகரன்

பட மூலாதாரம், Getty Images

இதற்குப் பதிலளித்த டிடிவி தினகரன், தற்போது திவாகரன் உடல்நலக்குறைவால் உளறிக்கொண்டு இருக்கிறார் என்றார். இந்த நிலையில்தான் கடந்த மார்ச் 29ஆம் தேதி அம்மா அணி என்ற அமைப்பை ஆரம்பித்தார். மேலும் திவாகரனின் மகன் ஜெயானந்த், போஸ் மக்கள் பணியகம் என்ற அமைப்பைத் துவங்கி தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்துவருகிறார்.

சசிகலாவின் குடும்பத்திற்குள் உருவாகியிருக்கும் இந்த அதிகாரப் போட்டியில் அவருடன் சிறையில் உள்ள அவரது தம்பி ஜெயராமனின் மனைவி இளவரசியின் மகன் விவேக்கின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடாக செயல்பட்டுவந்த நமது எம்.ஜி.ஆர்., அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக செயல்பட்ட ஜெயா தொலைக்காட்சி ஆகியவை அவரது கட்டுப்பாட்டில் உள்ளன.

சசிகலாவின் தம்பியான திவாகரன் தற்போது ஆட்சியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருவதாக தினகரன் குற்றம்சாட்டிவருகிறார். தனக்கு ஆதரவாக உள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களில் பலரை திவாகரன் ஆளும் எடப்பாடி பழனிச்சாமி பிரிவுக்கு ஆதரவாக திருப்பிவருவதாகவும் தினகரன் குற்றம்சாட்டிவருகிறார். மே எட்டாம் தேதியன்று சிறையில் சசிகலாவைச் சந்தித்த தினகரன், இது குறித்து அவரிடம் பேசியதையடுத்தே திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்ப சசிகலா ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

ஆளும்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: