மசினகுடி யானையை தீ வைத்து விரட்டிய வீடியோ வெளியானது - இருவர் கைது

- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மசினகுடியில் யானைக்கு தீ வைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஒருவரை தேடி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் காது மற்றும் முதுகுப் பகுதியில் தீவிர காயங்களோடு சிகிச்சைப் பெற்று வந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சிகிச்சைப் பலனின்றி இருதினங்களுக்கு முன் உயிரிழந்தது.
இந்த யானை ஊருக்குள் வந்தபோது சிலர் அதன் மீது பெட்ரோல் ஊற்றிய சாக்கை தூக்கி எரிந்து பின்னர் நெருப்பு வைத்தாகவும், ஆசிட் போன்ற திரவங்களை வீசி காட்டுக்குள் விரட்ட முயற்சித்த போது ஏற்பட்ட காயத்தால் யானை உயிரிழந்ததாகவும் வனவிலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.
இன்று அந்த யானையை விரட்ட அதன் மீது எரிந்து கொண்டிருக்கும் பொருள் ஒன்றை வீசிய வீடியோ வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நீலகிரியில் உள்ள மாவநல்லா பகுதியைச் சேர்ந்த ரேமண்ட் மற்றும் பிரசாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஈடுபட்ட ரையன் என்பரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மூன்று பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சகோதரர்களாகிய ரேமண்ட் மற்றும் ரையன் இருவரும் தங்களின் தந்தைக்கு சொந்தமான வீட்டில், சட்ட அனுமதியில்லாத விருந்தினர் தங்கும் வசதியான `ஹோம் ஸ்டே` வசதியை நடத்தி வந்துள்ளனர் என்றும் இவர்களுடன் பிரசாந்த் என்பவரும் அங்கு தங்கியிருந்துள்ளார் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த விடுதியின் அருகில் வந்த யானையைதான் இவர்கள் தீயை வைத்து விரட்டியுள்ளனர் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக இவர்கள் நடத்தி வந்த தங்கும் விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் தற்போது சீல் வைத்துள்ளது.
வெளியான வீடியோவில் யானை மீது எரிந்து கொண்டிருக்கும் ஒரு பொருளை வீசியதும், யானையின் தலை மற்றும் முதுகப் பகுதியில் தீப்பிடித்து அது காட்டுக்குள் ஓடி மறைகிறது.
முன்னதாக, மசினகுடி அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிங்கார வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காயங்களோடு நின்றிருந்த யானைக்கு பழங்களில் மருந்து வைத்து வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். ஒரு கட்டத்தில் யானையின் காயம் குணமடையாமல், காதுப்பகுதி முழுவதுமாக கிழிந்து விழுந்தது. இதனால், யானைக்கு ரத்த போக்கு ஏற்பட்டது.

பின்னர், மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் உதவியோடு தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயற்சித்தனர். இருந்தும் யானையின் உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
`யானைகளை எதிரிகளாக பார்க்கின்றனர்`
இந்த சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் கோவை சதாசிவம், யானைக்கு தீ வைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
"மசினகுடியில் யானைகளின் பிரதானமான மூன்று வலசை பாதைகள் உள்ளன. தற்போது அந்த பாதைகளில் சமவெளி பகுதியைச் சேர்ந்த பழங்குடி அல்லாத மக்கள் வணிக நோக்கில் ஆக்கிரமித்து வருகின்றனர். தங்கும் விடுதிகள், தேனீர் கடைகள் உட்பட ஏராளமான வணிக வளாகக் கட்டடங்கள் யானைகளின் வலசை பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன,"

பட மூலாதாரம், Getty Images
"ஒரு கட்டத்தில் யானை வருவதை ஆபத்தாகவும் அச்சுறுத்தலாகவும் நினைத்து விரட்டிய அப்பகுதியினர், தற்போது அதனை ஒரு எதிரியாக கருதி அழிக்க நினைக்கின்றனர். காடு என்பது யானைகளின் வாழ்விடம். அதை ஆக்கிரமித்து யானைகளை கொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. எனவே வன விலங்குகளை துன்புறுத்தி உயிரிழக்கச் செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்டங்கள் பாய்ந்திட வேண்டும். சாதாரண வழக்குகளை போல அபராதம் அல்லது குறைந்த காலத்திற்கு சிறை தண்டனை வழங்குவது என்பதை தவிர்த்து ஆயுள் தண்டனை அளவிற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்" என்கிறார் இவர்.
`அது சுற்றுச்சூழலுக்கான இடம்`
மசினகுடியில் கேளிக்கை விடுதிகளுக்கு தடை விதித்து சுற்றுச்சூழல் தொடர்பான சுற்றுலாவை மட்டுமே ஊக்குவிக்க வேண்டும் என வன விலங்கு நல ஆர்வலர் ஓசை காளிதாஸ் தெரிவிக்கிறார்.
"மசினகுடி என்பது சுற்றுச்சூழல் சுற்றுலாக்கான இடம் என்பதை மறந்து, கேளிக்கைக்கான இடமாக தற்போது மாறி வருகிறது. இதன் விளைவாகவே வனவிலங்குகள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் நடக்கிறது."
" மசினகுடி பகுதியில் உள்ள யானைகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள கட்டடங்கள் அகற்றிட உச்சநீதிமன்றம் குழு அமைத்துள்ளது. அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இருந்தும் ஆக்கிரமிப்புகள் தொடர்வதால் இது போன்ற வன விலங்குகளின் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. எனவே மசினகுடி பகுதியை சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் குறித்து தெரிந்து கொள்வதற்கான சுற்றுலா தளமாக மாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது யானைக்கு தீவைத்து உயிரிழக்க காரணமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க எங்களைப் போன்ற வன விலங்கு நல ஆர்வலர்களும் இந்த வழக்கில் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
பிற செய்திகள்:
- `தேடுபொறி சேவையை நிறுத்திக் கொள்வோம்` - மிரட்டும் கூகுள்; அடிபணிய மறுக்கும் ஆஸ்திரேலியா
- “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - நடராஜனின் தந்தை தங்கராஜ்
- விவசாயிகள் போராட்டம், அர்னாப், பட்ஜெட் தொடர்: காங்கிரஸ் காரிய கமிட்டியில் சோனியா பேச்சு
- கமலா ஹாரிஸ் முதல் நாள் செயல்பாடு என்ன? அமெரிக்கத் துணை அதிபர்களின் பணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












