`கூகுள் தேடுபொறி சேவையை நிறுத்திக் கொள்வோம்` - மிரட்டும் நிறுவனம்; அடிபணிய மறுக்கும் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Reuters
தனது தேடுபொறி சேவையை ஆஸ்திரேலியாவில் இருந்து நீக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.
செய்தி நிறுவனங்களுடன் ராயல்டி என்றழைக்கப்படும் ஆதாய உரிமைகளை, கூகுள் நிறுவனம் பகிர்ந்து கொள்வதற்கு ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக, இப்படி ஒரு மிரட்டலை விடுத்திருக்கிறது கூகுள் நிறுவனம்.
ஊடக நிறுவனங்களின் செய்திகளை கூகுள், ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு பணத்தைச் செலுத்தும் விதத்தில் ஆஸ்திரேலியா ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஆனால் அதற்கு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களோ கடுமையாக தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன. இந்த சட்டம் கடினமானது எனவும், இது உள்ளூரில் மக்கள் தங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை பாதிக்கும் எனவும் வாதிட்டிருக்கின்றன தொழில்நுட்ப நிறுவனங்கள்.
அச்சுறுத்தலுக்கு நாங்கள் அடிபணியமாட்டோம் என ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இந்தச் சட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், செய்திகளின் மதிப்பைத் தீர்மானிக்க கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஊடக நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இந்தச் சட்டம் ஏற்பாடு செய்யும்.
"இந்தச் சட்டங்களில் வேலை செய்ய முடியாது" எனக் கடந்த வெள்ளிக்கிழமை செனட் விசாரணைக் கூட்டத்தில் கூகுள் ஆஸ்திரேலியாவின் நிர்வாக இயக்குநர் மெல் சில்வா கூறினார்.
மேலும் "இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், கூகுள் தேடுதல் சேவையை ஆஸ்திரேலியாவில் நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை," எனக் தெரிவித்தார்.
தன் அரசு நாடாளுமன்றம் வழியாக இந்தச் சட்டத்தை, 2021-ம் ஆண்டில் கொண்டு வருவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் மாரிசன்.

பட மூலாதாரம், Getty Images
தற்போது இந்த சட்டத்துக்கு பெருவாரியாக அரசியல் ரீதியிலான ஆதரவும் இருக்கிறது.
"நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை ஆஸ்திரேலியா வகுக்கிறது. அதை நாடாளுமன்றத்தில் செய்துவிட்டோம். அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்பட விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் நாங்கள் மிரட்டலுக்கு எல்லாம் பதிலளிக்கமாட்டோம்," எனக் கடந்த வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் பிரதமர் மாரிசன்.
ஆஸ்திரேலியாவின் பல்வேறு அரசியல்வாதிகளும் கூகுளின் இந்த அறிவிப்பை ஒரு அச்சுறுத்தல் எனவும், பெரு நிறுவனங்கள் ஜனநாயகத்தை அடக்குவதாகவும் கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலியா ஏன் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறது?
ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி அதிகளவில் பயன்படுத்தப்படும் ஒன்று. கூகுள் தேடுபொறியை கிட்டத்தட்ட ஒரு அத்தியாவசிய சேவையாக (near-essential utility) வரையறுத்திருக்கிறது ஆஸ்திரேலிய அரசு. ஆனால் கூகுள் தேடுபொறிக்கு மிகக் குறைந்த அளவிலேயே போட்டி இருக்கிறது.
தொழில்நுட்ப நிறுவனங்கள், செய்திகளைப் படிக்க விரும்பும் மக்கள் மூலம் தங்களுக்கான வாடிக்கையாளர்களைப் பெறுகிறார்கள். எனவே தொழில்நுட்ப பெரு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊடகத் துறைக்குக் கொடுக்க வேண்டும் என வாதிடுகிறது ஆஸ்திரேலிய அரசு.
ஜனநாயகத்துக்கு வலுவான ஊடகங்கள் தேவை. நிதி நெருக்கடியில் போராடிக் கொண்டிருக்கும் ஊடகங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் வாதிடுகிறது ஆஸ்திரேலிய அரசு.
ஆஸ்திரேலிய அச்சு ஊடகங்களின் விளம்பர வருவாய், கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 75 சதவீதம் சரிவைக் கண்டிருப்பதாகக் கூறுகிறது ஆஸ்திரேலியா. சமீபத்தில் பல ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. பல செய்தி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கின்றன.
கூகுள் தன்னுடைய முதன்மைச் சேவையான தேடு பொறி சேவையை ரத்து செய்வேன் எனக் கூறியது மிகவும் கடுமையானது. தற்போது ஆஸ்திரேலியாவிடம் இதைக் கூறியிருக்கிறது. இதை பல்வேறு உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
இந்த சட்டத்தை கைவிடுமாறு ஆஸ்திரேலியாவிடம், இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகள் கோரியிருக்கிறார்கள்.
கூகுள் தரப்பு சொல்வதென்ன?
கூகுள் நிறுவனம் லிங்குகள் மற்றும் தேடுதல் மூலம் கிடைக்கும் முடிவுகளுக்கு பணம் செலுத்த வேண்டுமென்றால், டிஜிட்டல் பொருளாதாரத்துக்கும் தங்கள் வியாபாரங்களுக்கும் ஒத்துவராத முன்னுதாரணத்தை இந்தச் சட்டங்கள் அமைக்கும் என்கிறார் சில்வா.
இணையத்தில் இலவசமாகப் பகிர்ந்து கொள்ளப்படும் விவரங்களுக்கு இது பொருந்தாது அல்லது இணையம் இப்படி செயல்படுவதில்லை என வாதிட்டார் சில்வா.

பட மூலாதாரம், Getty Images
"நிதிச் சிக்கல் மற்றும் செயல்பாட்டு ஆபத்துக்களுடன், ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து எங்கள் சேவையை வழங்க எங்களால் ஒரு வழியைக் காண முடியவில்லை," என்றார் அவர்.
கடந்த வாரம் தனது ஒரு சதவீத உள்ளூர் பயனர்களுக்கு ஆஸ்திரேலிய செய்தி தளங்களின் செய்திகள் வரமால் தடுத்ததை கூகுள் உறுதி செய்துள்ளது. ஆஸ்திரேலிய செய்தி சேவைகளின் மதிப்பை சோதிக்கவே இவ்வாறு செய்ததாக கூகுள் தெரிவித்தது.
இந்த சட்டம் முன்னேற்றம் கண்டால், தங்கள் தளத்தில் செய்திகள் பகிரப்படுவது தடுக்கப்படும் என கடந்த ஆண்டே அச்சுறுத்தியது ஃபேஸ்புக்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், மீண்டும் தன் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரி சைமன் மில்னர் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய செனட் விசாரணையில் "இந்த சட்டங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை," எனக் குறிப்பிட்டார்.
ஃபேஸ்புக் நிறுவனம் செய்திகளை தன் தளத்தில் வைத்திருப்பதால் வணிக ரீதியாக எந்த நன்மையையும் அடையவில்லை எனக் கூறினார் சைமன்.
கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய தளங்கள் மூலம், செய்தி நிறுவனங்கள் தங்களின் வலைதளங்களை நோக்கி வாசகர்களை இழுத்துக் கொள்ளும் பலனை அடைகிறார்கள் என இரு நிறுவனங்களும் வாதிட்டதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












