டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது இலங்கை அணி

நியூசிலாந்து, இலங்கை, டி20 உலகக் கோப்பை, கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கொழும்பில் நேற்று (பிப்ரவரி 25) நடந்த நியூசிலாந்து- இலங்கை இடையேயான போட்டியில், இலங்கை 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்து, அந்த அணி டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு, 168 ரன்கள் எடுத்தது.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், நியூசிலாந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தனது முதல் சூப்பர் 8 ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்ற இலங்கை அணி, இந்தப் போட்டியிலும் சந்தித்த தோல்வி காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

தீக்ஷனாவின் சுழற்பந்து வீச்சில் திணறிய நியூசிலாந்து

நியூசிலாந்து, இலங்கை, டி20 உலகக் கோப்பை, கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா

கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, தொடக்கத்தில் இலங்கையின் சுழற்பந்து வீச்சை எதிராக எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

குறிப்பாக இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா, தான் வீசிய நான்கு ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 13-வது ஓவரில் 86/6 என்ற ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டதற்கு அவரது பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணம்.

மற்றொரு இலங்கை வீரரான துஷ்மந்த சமீர, 4 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்படி தடுமாறிக்கொண்டிருந்த நியூசிலாந்து அணியை, தனது அட்டகாசமான பந்துவீச்சின் மூலம், 130 ரன்களுக்குள் இலங்கை அணி சுருட்டிவிடும் என்றே முதலில் தோன்றியது.

இருப்பினும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் மற்றும் கோல் மெக்கோஞ்சி, 7வது விக்கெட்டுக்கு ஒரு சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தனர். அவர்கள் எடுத்த 84 ரன்கள், நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீள உதவியது.

நியூசிலாந்து, இலங்கை, டி20 உலகக் கோப்பை, கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேப்டன் மிட்செல் சான்ட்னர் மற்றும் கோல் மெக்கோஞ்சி

வெறும் 44 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட இந்த ஜோடி, ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் ஏழாவது விக்கெட்டுக்கான அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை 84 ரன்கள் மூலம் பதிவு செய்தது.

இதற்கு முன்பு 2010 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹஸ்ஸி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் 74 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

26 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த சான்ட்னர் (2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட), அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மெக்கோஞ்சி அவருக்குச் சரியாக ஈடுகொடுத்து, அணியின் ரன்களை 168/7 ஆக உயர்த்த உதவினார். குறிப்பாக நியூசிலாந்து அணி கடைசி நான்கு ஓவர்களில் 70 ரன்களைக் குவித்தது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 22 பந்துகளில் விரைவாக 32 ரன்களை (3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா ஒரு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தாலும், இலங்கையின் பிற பந்துவீச்சாளர்கள், டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினர், இது நியூசிலாந்து அணிக்கு ஒரு நல்ல ஸ்கோரைப் பதிவு செய்ய உதவியது.

விரைவாகச் சரிந்த இலங்கையின் டாப் ஆர்டர்

நியூசிலாந்து, இலங்கை, டி20 உலகக் கோப்பை, கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கையின் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 23 பந்துகளில் 31 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்தார்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை, நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சுத் தாக்குதலுக்கு எதிராகப் போராடியது. குறிப்பாக இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இலங்கையின் டாப் ஆர்டர் விரைவாகச் சரிந்தது.

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி பவர்பிளேயில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின், ரச்சின் ரவீந்திரா 9-வது ஓவரில், இலங்கையின் குசல் மெண்டிஸ் மற்றும் பவன் ரத்நாயக்க ஆகிய இருவரது விக்கெட்டுகளையும் வீழ்த்திய பிறகு, ​​இலங்கை 29-4 என்ற நிலையில் தடுமாறியது.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களை மட்டுமே இலங்கை அணி எடுத்தது. இதைத் தொடர்ந்து, நியூசிலாந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கையின் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 23 பந்துகளில் 31 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்தார். மற்றொரு இலங்கை வீரர் துனித் வெல்லாலகே 23 பந்துகளில் 29 ரன்கள் (2 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) எடுத்தார்.

இறுதியில், துஷ்மந்த சமீர 12 பந்துகளில் 7 ரன்களுடனும் தீக்ஷனா ஒரு ரன் எடுத்த நிலையிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப்போட்டியில் இலங்கையின் ரன் ரேட் வெறும் 5.35 ஆக இருந்தது, நியூசிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்தை எடுத்துக்காட்டுகிறது.

குறிப்பாக நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா, நான்கு ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே கொடுத்து, 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

நியூசிலாந்து, இலங்கை, டி20 உலகக் கோப்பை, கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்டநாயகன் விருதைப் பெற்ற, ரச்சின் ரவீந்திரா.

போட்டிக்குப் பிறகு பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார், "பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகத் திரும்பியது. பந்துவீச்சில் இலங்கைக்கு ஒரு பலமான தொடக்கம் கிடைத்த பிறகும் கூட எங்களால் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை," என்று அவர் கூறினார்.

இந்த வெற்றி மூலம் இரண்டு புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து அணி, அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அதே நேரத்தில், தங்களின் முதல் சூப்பர் 8 ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்ற பிறகு, இந்தத் தோல்வியின் மூலம் இலங்கை டி20 உலககோப்பையிலிருந்து வெளியேறியது.

இரு அணிகளுக்கும் தலா ஒரு சூப்பர் 8 ஆட்டம் எஞ்சியுள்ளது. வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) இங்கிலாந்தை வீழ்த்துவதன் மூலம் நியூசிலாந்து அரையிறுதிப் போட்டிக்கான தனது இடத்தை வசதியாக உறுதி செய்யலாம். வேறு போட்டிகளின் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படவெண்டியதில்லை.

இந்த குரூப்பில் இங்கிலாந்துக்கான இடம் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மற்றொரு இடத்திற்காக காத்திருக்கின்றன.

அதே சமயம் இலங்கை சனிக்கிழமை (பிப்ரவரி 28) பல்லேகலேயில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதில், சல்மான் அலி அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி தகுதி பெற வேண்டுமானால், பிப்ரவரி 27 அன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்தை கணிசமான வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அதே சமயம், பிப்ரவரி 28 அன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் இலங்கையை மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். இவற்றில் எது நடக்காவிட்டாலும் நியூசிலாந்து அந்த ஒரு அரையிறுதி இடத்தைப் பெறும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு