தங்கம் விலை அதிகரிக்க, அமெரிக்கா-இரான் பதற்றம் காரணமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே ஏற்ற-இறக்கமாகவே உள்ளது. பிப்ரவரி 25 நிலவரப்படி சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,287க்கு விற்பனையானது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ. 14,930 க்கு விற்பனையானது.
தீபாவளி பண்டிகையை அடுத்து, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. இப்படியாக, ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ. 1.2 லட்சம் வரை விற்பனையாகிறது.
இந்த நிலையில், தங்கத்தின் விலையை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார். "பண்டிகை காலங்களில் ஏற்படும் வழக்கமான உயர்வே ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை குறிப்பிட்ட எல்லையை தாண்டவில்லை" எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தங்கத்தின் விலை இனியும் பெரிய மாறுதலுக்கு உட்படுமா? இரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் தங்கம் விலையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
விலை அதிகரித்தது ஏன்?
தங்கத்தின் விலை குறிப்பாக மூன்று முக்கியமான சூழல்களில் அதிகரிக்கும் என்கிறார், தனியார் நிதி ஆலோசகர் சுதாகர்.
"போர் சூழலில் தங்கத்தின் விலை உயரும். பங்குச்சந்தை மீது மக்களுக்கு பெரிதாக ஆர்வம் இல்லையென்றாலும் தங்கம் விலை உயரும். அதேபோன்று, டாலரின் மதிப்பு உலகளவில் வீழ்ச்சியடைந்தாலும் தங்கம் விலை உயரும்." என கூறுகிறார் சுதாகர்.
அப்படியிருக்கும்போது, அமெரிக்கா- இரான் இடையேயான பதற்றம் தங்கத்தின் விலையில் தாக்கத்தை செலுத்தக்கூடும் என்கிறார் அவர்.
இரான் - அமெரிக்கா பதற்றம்

பட மூலாதாரம், Getty Images
சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இரானுடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தை எட்டுமா அல்லது ராணுவ நடவடிக்கை எடுக்குமா என்பது, அநேகமாக, 10 நாட்களில்" உலகத்திற்கு தெரியவரும்" என தெரிவித்திருந்தார்.
வாஷிங்டன் டி.சி.யில் நடந்த தனது அமைதி வாரியத்தின் முதல் கூட்டத்தில், இஸ்லாமிய குடியரசுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் குறித்து டிரம்ப் கூறுகையில், "நாம் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும், இல்லையெனில் மோசமான விஷயங்கள் நடக்கும்." என எச்சரித்திருந்தார்.
சமீபத்திய நாட்களில், அமெரிக்கா மத்திய கிழக்குக்கு ராணுவப் படைகளை அனுப்பியுள்ளது, அதே நேரத்தில் சுவிட்சர்லாந்தில் அமெரிக்க மற்றும் இரானிய பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், அமெரிக்கா கூறுவது போன்று இரான் மீது "இராணுவ நடவடிக்கை" எடுத்தால், தங்கத்தின் விலை மேலும் அதிகமாகக் கூடும் என சுதாகர் தெரிவிக்கிறார்.
"அமெரிக்கா - இரான் இடையே போர் வந்தால் தங்கத்தின் விலை மீண்டும் உயரக்கூடும். ஒரு சாத்தியமான போர்ச்சூழலில் ஆண்டு இறுதியில் தங்கத்தின் விலை கணிசமாக உயரலாம்" என கணிக்கப்படுவதாக கூறுகிறார் அவர். எனினும் இது சந்தை நிலவரங்களின் அடிப்படையிலான மாறுதலுக்கு உட்பட்டது.
குறுகிய காலத்திற்கு குறையுமா?

பட மூலாதாரம், Getty Images
எனினும், முதலீட்டு ஆலோசகர் சதீஷ், தங்கத்தின் விலை குறுகிய காலத்திற்கு சிறிது குறையக்கூடும் என நம்புகிறார்.
"குறுகிய காலத்திற்கு தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம். ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்ச ரூபாய்க்கும் கீழ் குறையக்கூடும் என பல நிபுணர்களும் கணிக்கின்றனர். " என்றார்.
மேலும், "தங்கத்தில் செல்வாக்கு செலுத்த வேண்டும் என சீனா நினைக்கிறது. அமெரிக்க கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டை கணிசமாக குறைத்து வரும் சீனா, தங்க கையிருப்பை அதிகப்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல், ரஷ்யாவும் யுக்ரேனும் தொடர்ந்து அதிகமாக தங்கத்தை வாங்கிக் கொண்டிருந்ததால் அதன் விலை உயர்ந்தது. உலகின் சில முக்கிய மத்திய வங்கிகளுமே தங்கத்தை வாங்குவதை வேகப்படுத்த ஆரம்பித்துள்ளன. எனினும், குறுகிய காலத்திற்கு தங்கம் விலை குறையக்கூடும்" எனவும் சதீஷ் கூறுகிறார்.
தங்கம் விலை தற்போது நிலைத்திருப்பதாக கூறுகிறார் சுதாகர். "தங்கத்திற்கு அதிக தேவை இருந்து குறைவான விநியோகம் இருந்தால் தான் விலை உயரும். இப்போது விலை ஓரளவுக்கு நிலையாகியிருக்கிறதென்றால், தேவை குறையவில்லை, ஆனால் வாங்குபவர்கள் அதிகமாக இல்லை. வாங்குபவர்கள் அதிகமாக வரும்போது மீண்டும் அதிகரிக்கும்." என கூறுகிறார்.
ஆனால், நீண்ட காலத்திற்கு தங்கத்தின் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
"ஆனால், அது எப்போது அதிகமாகும் என்பது தெரியாது. இரான் - அமெரிக்கா இடையேயான பதற்றத்தால் தங்கத்தின் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதன் தாக்கம் பெரிதாக இல்லை. பங்குச்சந்தை நிலையாக இல்லாததால் தான் உலோகங்களில் முதலீடு செய்கின்றனர்." என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவுகள், டாலரின் மதிப்பு போன்றவையும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக கூறுகிறார், நிதி ஆலோசகர் சுதாகர்.
"டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருப்பதாக கூற முடியாது. ஆனால், அமெரிக்காவின் முடிவுகள், போர் போன்ற விஷயங்களால் நிலையின்மை இருக்கிறது. இந்த நிச்சயமற்ற சூழல்களில் பல்வேறு நாடுகளுக்கு தங்கம் பாதுகாப்பான வாய்ப்பாக இருக்கிறது." என கூறுகிறார் அவர்.

பிரிக்ஸ் நாடுகள் என்ன செய்கின்றன?
உலகளவில் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற பிரிக்ஸ் நாடுகள் அதிகமாக தங்கத்தை வாங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரிக்ஸ் நாடுகளில், குறிப்பாக உலகின் மிகப்பெரிய இரண்டு தங்க உற்பத்தியாளர்களான சீனா மற்றும் ரஷ்யா, தங்களின் தங்கக் கையிருப்புகளை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
யுக்ரேன் படையெடுப்பு, மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளுக்கு மத்தியில், ரஷ்யாவின் தங்கக் கையிருப்பு அதிகரித்தது.
அதேசமயம், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையும் போது, வாங்கும் போக்கை சீனா அதிகரித்தது. ஆனால், 2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சீனா தங்கம் வாங்கும் வேகத்தை குறைத்தாலும், குறைந்த அளவில் தங்கத்தை வாங்குவதை தொடர்ந்து வந்தது.
"டிரம்ப் பிரிக்ஸ் நாடுகளுக்கு வெளிப்படையாகவே சவால் விடுக்கிறார். அமெரிக்காவுக்கு எதிராக பிரிக்ஸ் முடிவெடுத்தால் அதற்கு டிரம்ப் நேரடியாகவே எச்சரிக்கை விடுக்கிறார். ஏற்கெனவே, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அதிகப்படியான இறக்குமதி வரியை டிரம்ப் விதித்தார். ஆனால், இப்போது, அமெரிக்காவின் உச்சநீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அமல்படுத்திய உலகளாவிய இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் சட்டவிதிகளின்படி இந்த வரிக்குறைப்பு தற்காலிகமானதே, சிறிது காலத்திற்கு பிறகு வரிகுறைப்புக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும். டிரம்பின் இந்த முடிவுகள் சந்தையில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கலாம்" என அவர் கூறுகிறார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












