சம்பளம் கேட்டு கிளர்ச்சி செய்த பிரிட்டிஷ் படையினர் - இதற்கு ஈடாக தோற்கடிக்கப்பட்ட கடற்கரை கோட்டை

டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களை ஈர்த்த பந்தரு கோட்டையின் இப்போதைய நிலை
படக்குறிப்பு, பந்தரு கோட்டை
    • எழுதியவர், அமரேந்திர யார்லகட்டா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஆந்திராவின் பந்தரு லட்டுகளுக்கு மட்டுமல்ல, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைக்கும் பிரபலமானது.

இந்தக் கோட்டை வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் சகாப்தத்திற்கு ஒரு சான்றாக விளங்குகிறது. குதுப் ஷாஹிகளின் ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டினர் இங்கு கால் பதிப்பதற்கு முன்பே, பந்தரு கோட்டையில் இருந்து வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

பந்தரு கோட்டை எப்போது கட்டப்பட்டது? இந்தக் கோட்டை யாருடைய ஆட்சியின்கீழ் இருந்தது?

இந்த பந்தரு கோட்டை மச்சிலிப்பட்டினத்தில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோட்டைக்குச் செல்லும் சாலை, கோட்டைச் சாலை என்று அழைக்கப்படுகிறது.

"மச்சிலிப்பட்டினம் பந்தரு என்றும் அழைக்கப்படுகிறது. பந்தரு என்றால் பாரசீக மொழியில் துறைமுகம் என்று பொருள்" என்று வரலாற்று ஆய்வாளரும் 'மச்சிலிப்பட்டினம் சர்வஸ்வம்' புத்தகத்தின் ஆசிரியருமான முகமது சிலார் பிபிசியிடம் கூறினார்.

பந்தரு கோட்டை என்பது பெரிய கட்டடங்கள், பெரிய சுவர்கள், உயரமான தூண்களால் ஆன கட்டமைப்பு இல்லை. இதுவொரு சாதாரண கட்டடம் போலத் தெரிகிறது. அதுவும் இப்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.

பார்வையாளர்களும் இந்தப் பகுதிக்கு அடிக்கடி வருவதில்லை. நான் அங்கு சென்றபோது, ஓரிருவர் மட்டுமே காணப்பட்டனர்.

பந்தரு கோட்டைக்குள் நுழைந்ததும், கூரை கிட்டத்தட்ட இடிந்து விழுந்த நிலையில் ஒரு கட்டடத்தைக் காண்பீர்கள்.

"கோட்டையின் நிலை சுமார் 40-45 ஆண்டுகளாக மோசமடைந்து வருகிறது. கூரை இடிந்து விழுகிறது" என்று 75 வயதான வெங்கடேஸ்வர ராவ் பிபிசியிடம் கூறினார்.

அவரது குடும்பம் பந்தரு கோட்டைக்கு அடுத்ததாக வசித்து வருகிறது.

கோட்டை கட்டடத்திற்கு சற்று அப்பால், ஆயுதக் கிடங்கு கட்டடம் (டச்சு கோட்டை) இருப்பதைக் காணலாம். அதன் உள்பகுதி அரைவட்ட வடிவமாகவும், மேல் பகுதி முக்கோண வடிவமாகவும் உள்ளது.

கோட்டை கட்டடத்திற்கு அருகில் சிறைச்சாலைகள் அமைந்திருந்தாலும், அவை முற்றிலும் பழுதடைந்துவிட்டன.

டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களை ஈர்த்த பந்தரு கோட்டையின் இப்போதைய நிலை
படக்குறிப்பு, பந்தரு கோட்டை இப்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது

'துறைமுகக் கோட்டை'யாக பிரபலமானது எப்படி?

இந்தக் கோட்டை 1617ஆம் ஆண்டு வாக்கில் டச்சுக்காரர்களால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், குதுப் ஷாஹிகள் மற்றும் கோல்கொண்டா நவாப்கள் காலத்தில் இருந்தே வர்த்தகம் நடைபெற்று வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கட்டடத்தின் காரணமாக, இந்தப் பகுதிக்கு 'பந்தரு கோட்டா' என்ற பெயர் வந்தது.

குதுப் ஷாஹிகள், கோல்கொண்டா நவாப்களின் ஆட்சிக் காலத்தில், பந்தரு கோட்டா பகுதியில் இருந்து கடல் வழிகள் வாயிலாக வர்த்தகம் நடந்ததாக வரலாற்று ஆய்வாளர் முகமது சிலார் கூறுகிறார்.

"கோல்கொண்டா நவாப்களின் ஆட்சிக் காலத்தில், வைரங்கள், மாணிக்கங்கள், ரத்தினக் கற்கள், ரவசெல்லாக்கள் மற்றும் கலங்கரி ஜவுளிகள் துறைமுகத்தில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன," என்று டி.வி.ராகவ் ராவ் 'மச்சிலிப்பட்டினத்தின் வரலாற்று' புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அதற்கு முன்பே, பஹ்மனி சுல்தான்கள் பந்தரு கோட்டா பகுதியில் தங்கள் ரிசர்வ படை வீரர்களை நிறுத்தியிருந்தனர்.

"கடந்த 1638ஆம் ஆண்டு ஹோவர்ட் என்ற வரலாற்றாசிரியர் பந்தரு வந்த போது, அங்குள்ள இரண்டு மைல் நீளமுள்ள மரப் பாலத்தின் படத்தை வரைந்தார். இந்தப் படத்தை இன்னும் இத்தாலியில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் காணலாம்," என்று முகமது சிலார் விளக்கினார்.

டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களை ஈர்த்த பந்தரு கோட்டையின் இப்போதைய நிலை

'இரண்டு மைல் நீளமுள்ள மரப் பாலம்'

பந்தரு கோட்டா பகுதி சதுப்பு நிலங்களால் சூழப்பட்டிருந்தது. நடுவில் ஒரு மேடு (மெராக்கா) இருந்தது. பொருட்கள், ஆடைகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அந்த மேட்டில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.

"தொழிலாளர்கள் இடுப்பு வரை மூழ்கக்கூடிய சதுப்பு நிலத்தின் வழியாக நடந்து சென்று பொருட்களை சுமந்து செல்ல போராட வேண்டியிருந்தது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, கோல்கொண்டாவின் ஏழாவது சுல்தான் அப்துல்லாவிடம் அமைச்சராக இருந்த பக்கீர், இரண்டு மைல் நீளமுள்ள ஒரு மரப் பாலத்தைக் கட்டினார்," என்று முகமது சிலார் விளக்கினார்.

"திவிசீமா தாலுகாவில் இருந்து தேக்கு மரங்கள் கொண்டு வரப்பட்டதற்கும், 12 அடி அகலமுள்ள ஒரு மரப் பாலம் கட்டப்பட்டதற்கும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ஹோவர்ட் தனது படத்தின் மூலம், பொருட்களை இறக்குவதற்கு இருபுறமும் ஏணி போன்ற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததை வெளிப்படுத்தினார்," என்று சிலார் கூறினார்.

கடந்த 1672ஆம் ஆண்டு துறைமுகப் பகுதிக்குச் சென்ற டச்சுக்காரர் ஃபிலிப் பால்டோரஸ் எழுதிய 'சிலோன் மற்றும் கோரமண்டல்' என்ற புத்தகத்திலும் இந்த மரப் பாலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர், பிரெஞ்சு வணிகர்களின் ஆட்சிக் காலத்தில், இந்தப் பாலம் தேவைப்படாததால் அகற்றப்பட்டது.

டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களை ஈர்த்த பந்தரு கோட்டையின் இப்போதைய நிலை

பட மூலாதாரம், 'Machilipatnam Sarwaswam' book

படக்குறிப்பு, இரண்டு மைல் நீளத்திற்கு அமைக்கப்பட்ட மரப் பாலம்

டச்சுக்காரர்கள் வருகைக்கான காரணம் என்ன?

டச்சுக்காரர்கள் முதன்முதலில் 1605ஆம் ஆண்டு ஜவுளி வர்த்தகத்திற்காக பந்தருவுக்கு வந்ததாக வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன.

"கடந்த 1602ஆம் ஆண்டில், டச்சு அட்மிரல் வேண்டர் ஹேகனிடம் ஆடை வர்த்தகத்திற்காக மச்சிலிப்பட்டினத்தில், ஒரு வர்த்தக நிலையத்தை அமைக்க வணிகர்கள் கேட்டுக்கொண்டனர். டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஒரு சிறப்புக் குழு 1605இல் கோல்கொண்டாவின் நவாப்களை சந்தித்து பந்தரு கோட்டையில் நான்கு சதவிகித வரியுடன் ஒரு வர்த்தக நிலையத்தை அமைத்தது," என்று சிலார் கூறினார்.

"முதலில் அவர்கள் குடியேற்றங்களை நிறுவி பின்னர் விரிவுபடுத்தினர். குதுப் ஷாஹிகளின் ஒப்புதலுடன், டச்சுக்காரர்கள் ஆகஸ்ட் 1606இல் வலந்தபாலத்தில் ஒரு தொழிற்சாலை கட்டுமானத்தை மேற்கொண்டனர்." இது 'மச்சிலிப்பட்டினத்தின் வரலாறு' புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பந்தரு கோட்டையில் குதுப் ஷாஹிகளால் ஏற்கெனவே சிறிய கிடங்குகள் கட்டப்பட்டன. ஆனால், டச்சுக்காரர்கள் அவற்றை மேம்படுத்தினர். 1618ஆம் ஆண்டு பந்தரு கோட்டையில் ஒரு மேடு போன்ற பகுதியில் கோட்டைக் கட்டடம் உருவாக்கப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

'கிருஷ்ணா மாவட்ட கையேடு' புத்தகத்தில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. டச்சுக்காரர்கள் பந்தரு கோட்டா கட்டடத்தை தங்களது செயலகமாகப் பயன்படுத்தியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். பின்னர் கட்டடத்தின் ஒரு பகுதி மருத்துவமனையாகவும் பயன்படுத்தப்பட்டது.

டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களை ஈர்த்த பந்தரு கோட்டையின் இப்போதைய நிலை
படக்குறிப்பு, வரலாற்று ஆய்வாளர் முகமது சிலார்

தொடர்ச்சியான கண்காணிப்பு

பந்தரு கோட்டா கட்டடம் நவீன மேற்கத்திய கட்டடக்கலை பாணியில் உள்ளது. நீங்கள் கட்டடத்திற்குள் நுழையும்போது, ஒரு பக்கத்தில் அறைகளைக் காணலாம், ஜன்னல்கள் ஓவல் வடிவத்தில் இருப்பதைக் காணலாம்.

ரிசர்வ் படை இங்கு நிறுத்தப்பட்டிருந்தது. 'கிருஷ்ணா மாவட்ட கையேடு' புத்தகம், கோட்டை 11 உயரமான கோபுரங்களைக் கொண்ட மண் சுவர்களால் சூழப்பட்டு இருந்ததாகவும் தொடர்ந்து வீரர்களால் பாதுகாக்கப்பட்டதாகவும் கூறுகிறது.

"அங்கிருந்து, நீங்கள் எல்லாவற்றையும், கடலையும்கூட பார்க்க முடியும். வீரர்கள் ஷிஃப்ட் ரீதியில் பணியில் இருந்தனர்," என்று முகமது சிலார் விளக்கினார். இருப்பினும், அவை எதுவும் இப்போது பந்தரு கோட்டையில் தெரியவில்லை.

கப்பல்களின் வருகையை சமிக்ஞை செய்வதற்காக துறைமுகக் கோட்டைக்கும் ஆயுதக் கிடங்குக்கும் இடையே ஒரு பெரிய மணி கோபுரம் கட்டப்பட்டது. நேரத்தைக் கூறுவதற்கு கோட்டையின் மீது மற்றுமொரு மணி கோபுரம் நிறுவப்பட்டதாகத் தெரிகிறது.

டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களை ஈர்த்த பந்தரு கோட்டையின் இப்போதைய நிலை

டச்சு ஆயுதக் கிடங்கு

இந்தியாவில் பத்து ஆண்டுகள் தங்கியிருந்த காலத்தில், ஆல்பர்ட் ஹார்வி என்ற டச்சு கேப்டன் ஆர்சனல் ஸ்டோர் என்ற ஆயுதக் கிடங்கை கட்டினார். இங்கிருந்து, ஹைதராபாத் மற்றும் நாக்பூரில் உள்ள படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கினார்.

"ஆயுதக் கிடங்கின் உட்புறம் ஐந்து பெட்டகங்களாக பிரிக்கப்பட்டது. அவர்கள் பீரங்கி வெடிமருந்துகளை பெட்டகங்களில் சேமித்து வைப்பார்கள். அவற்றில் ஒவ்வொரு பெட்டகத்தையும் காலி செய்து முன்னேறுவார்கள்," என்று முகமது சிலார் விளக்கினார்.

சர் சார்லஸ் டிராவலின் வடிவமைப்புகளின்படி, அங்கு ஒரு பூங்கா மற்றும் பிற வசதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவையனைத்தும் 1864இல் ஒரு பெரிய புயல் காரணமாக அவை அழிக்கப்பட்டன.

டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களை ஈர்த்த பந்தரு கோட்டையின் இப்போதைய நிலை

டச்சுக்காரர்கள், பிரெஞ்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள்

"டச்சுக்காரர்களால் உருவாக்கப்பட்ட கோட்டை, 1750ஆம் ஆண்டு பிரெஞ்சுகாரர்களால் கைப்பற்றப்பட்டது. சிறிது காலம், பிரெஞ்சுகாரர்கள் துறைமுக கோட்டையில் இருந்து வர்த்தகத்தை மேற்கொண்டனர். பின்னர் ஆங்கிலேயர்கள் கோட்டையைக் கைப்பற்றினர்" என்று 'மச்சிலிப்பட்டினத்தின் வரலாறு' புத்தகம் கூறுகிறது.

கடப்பா நவாப் நசீர் ஜங்கைக் கொல்ல உதவியதற்காக, குதுப் ஷாஹியான முசாபர் ஜங், 1751 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களுக்கு மச்சிலிப்பட்டினம் மற்றும் திவிசீமாவை பரிசாக அளித்ததாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

மூன்றாம் கர்நாடகப் போரின் ஒரு பகுதியாக, 1758ஆம் ஆண்டு, கர்னல் ஃபோர்ட் தலைமையிலான பிரிட்டிஷ் படை, விஜயநகர மன்னர்களின் ஆதரவுடன், மச்சிலிப்பட்டினத்தை ஆக்கிரமிக்க விசாகப்பட்டினம் வழியாக வந்தடைந்தது.

'மச்சிலிப்பட்டின வரலாறு' என்ற புத்தகம், விஜயநகர பேரரசின் ஆனந்த கஜபதி, ஹைதராபாத் நிஜாம் சலபத் ஜங், பிரெஞ்சுகாரர்களை ஆதரிக்க அதிக எண்ணிக்கையில் வருவதை அறிந்ததும், ஆங்கிலேயர்களை ஆதரிக்க முடியாது என்று கூறித் திரும்பிச் சென்றதாகக் கூறுகிறது.

டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களை ஈர்த்த பந்தரு கோட்டையின் இப்போதைய நிலை
படக்குறிப்பு, புயல் பேரிடரில் உயிரிழந்த மக்களின் நினைவாக கட்டப்பட்ட ஒரு ஸ்தூபி

பிரெஞ்சுக்கு எதிராக பிரிட்டிஷ் ராணுவம் நடத்திய போர்

பிரிட்டிஷ் ராணுவம் மார்ச் 6, 1759 அன்று மச்சிலிப்பட்டினத்தை அடைந்து பிரெஞ்சுகாரர்களுக்கு எதிராகப் போரிட்டது. ஆனால், மார்ச் 19 அன்று, கம்பெனியின் ராணுவம் சம்பளத்திற்காகக் கிளர்ச்சி செய்தது. கோட்டையில் இருந்த அனைத்து செல்வங்களையும் ராணுவத்திடம் கொடுப்பதாக ராணுவத்தைச் சமாதானப்படுத்தி அவர்கள் கோட்டையைத் தாக்க வீரர்களை அனுப்பினர்.

அந்தப் போரில் ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுகாரர்களை தோற்கடித்து, ஏப்ரல் 7, 1759 அன்று துறைமுகக் கோட்டையைக் கைப்பற்றினர்.

அதன் பிறகு, பந்தரு கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயர்கள் தங்களது வணிக நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர்.

"கடந்த 1957-60 வரையிலான காலப்பகுதியில் இப்பகுதி மிகவும் பரபரப்பாக இருந்தது. கோட்டையிலிருந்து சுமார் பத்து மைல் தொலைவில் கப்பல்கள் நின்றன. அங்கிருந்து பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டன," என்கிறார் வெங்கடேஸ்வர ராவ்.

துறைமுகக் கோட்டை ஒரு துறைமுக அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் காக்கிநாடாவுக்கு சென்றதால் அது பயனற்றதாகி விட்டதாகவும் வெங்கடேஸ்வர ராவ் கூறினார்.

டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களை ஈர்த்த பந்தரு கோட்டையின் இப்போதைய நிலை

பல புயல்களை தாங்கி நின்ற பந்தரு கோட்டை

பந்தரு கோட்டை பல புயல்களைத் தாங்கி நின்றது என்பது தெளிவாகிறது.

குறிப்பாக, நவம்பர் 1, 1864 அன்று, மச்சிலிப்பட்டினம் ஒரு பெரிய வெள்ளத்தில் மூழ்கியது.

அந்தப் பேரிடரில், சுமார் 30,000 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. அப்போதைய சென்னையின் தலைமை நீதிபதி ஜி. தோர்ன்ஹில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பந்தரு கோட்டையில் ஒரு நினைவு ஸ்தூபியை கட்டினார்.

அதை இன்னும் பந்தரு கோட்டா பகுதியில் காணலாம்.

பின்னர் பந்தரு கோட்டை 1949, 1977, 1990 ஆகிய ஆண்டுகளில் பெரும் புயல்களைத் தாங்கி நின்றது. இருப்பினும், சுவர்களும் கூரைகளும் பழுதடைந்துவிட்டன. அவை பழுதுபார்க்கப்படவில்லை.

தற்போது, பந்தரு கோட்டை மற்றும் ஆயுதக் கிடங்கு (டச்சு கோட்டை) தொல்பொருள் துறையின் அதிகார வரம்பில் உள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள்

பந்தரு கோட்டையை மீட்டெடுக்க படிப்படியாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தொல்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

"வெடிமருந்துகளை சேமித்து வைத்திருந்த கட்டடத்தை நாங்கள் தற்போது புதுப்பித்து வருகிறோம். அதைச் சுற்றி ஒரு தோட்டத்தை உருவாக்குவோம், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை உருவாக்குவோம். மேலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை உறுதி செய்வோம்," என்று தொல்பொருள் துறையின் மேற்பார்வை தொல்பொருள் ஆய்வாளர் (பொறுப்பு) டி.என்.போய் பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும், 2026-27இல் துறைமுகக் கோட்டையை மீட்டெடுக்க திட்டங்கள் வகுக்கப்படுவதாக அவர் விளக்கினார்.

"கோட்டைச் சுவர்கள், கூரைகள் உள்பட கட்டடம் முழுமையாக புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்குச் சிறிது காலம் எடுக்கும்," என்று டி.என்.போய் பிபிசியிடம் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு