இரான் உண்மையில் அணு ஆயுதத்தை தயாரிக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ
- பதவி, பிபிசி உலக சேவை
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இரான் அதன் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், தாக்குதல் நடத்துவதற்குத் தயாராக இருக்கும் வகையில் அமெரிக்கா அப்பகுதியில் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களைக் குவித்துள்ளது.
பிப்ரவரி 19 அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரு "அர்த்தமுள்ள ஒப்பந்தம்" எட்டப்படாவிட்டால் "மோசமான விஷயங்கள்" நடக்கும் என்று எச்சரித்தார்.
"அவர்களிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது, இது மிகவும் எளிமையானது... அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால் மத்திய கிழக்கில் அமைதி நிலவ முடியாது" என்று தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அணு குண்டை உருவாக்க, தான் எப்போதும் முயன்றதில்லை என இரான் மறுக்கிறது, ஆனால் உலகின் பல்வேறு நாடுகளும், உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையும் இக்கருத்தை நம்பவில்லை.
இரானின் அணுசக்தி திட்டம் எந்த நிலையில் உள்ளது?
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் இரான் இடையே நடந்த 12 நாள் போரின் போது, முக்கிய அணுசக்தி தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, இரானின் அணுசக்தி திட்டத்தின் நிலை குறித்து முழுமையாகத் தெரியவில்லை.
பிறகு இப்போரில் இணைந்த அமெரிக்கா, மூன்று அணுசக்தி தளங்களைத் தாக்கியது. அவை இஸ்ஃபஹானில் உள்ள இரானின் மிகப்பெரிய அணு ஆராய்ச்சி வளாகம் மற்றும் யுரேனியம் செறிவூட்டலுக்குப் பயன்படுத்தப்படும் நடான்ஸ் மற்றும் ஃபோர்டோ ஆகிய இடங்களில் உள்ள தளங்களாகும். செறிவூட்டல் என்பது குறிப்பிட்ட ஐசோடோப்புகளின் விகிதத்தை அதிகரிப்பதாகும், இதன் மூலம் அதை அணுசக்திக்கான எரிபொருளாகப் பயன்படுத்த முடியும்.
தாக்குதல்களுக்குப் பிறகு, அந்தத் தளங்கள் "அழிக்கப்பட்டுவிட்டன" என்று டிரம்ப் கூறினார்.
ஒரு வாரம் கழித்து, சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் குரோசி, தாக்குதல்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அவை "முழுமையானவை அல்ல" என்று கூறினார்.
மேலும், சில மாதங்களுக்குள் செறிவூட்டல் பணிகளை மீண்டும் தொடங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜூன் 13 அன்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியபோது, இரான் 60% தூய்மை வரை செறிவூட்டப்பட்ட 440 கிலோ யுரேனியம் கையிருப்பை வைத்திருந்ததாக சர்வதேச அணுசக்தி முகமை மதிப்பிடுகிறது. ஆயுதத் தரமான 90% செறிவூட்டல் நிலையை எட்டுவதற்கு மிகக் குறுகிய இடைவெளி உள்ளதாக இந்த அளவு கருதப்படுகிறது.
இந்த அளவு யுரேனியம் மேலும் செறிவூட்டப்பட்டால், அது 10 அணு குண்டுகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று குரோசி அக்டோபர் மாதம் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
யுரேனியம் செறிவூட்டல் "இப்போது நிறுத்தப்பட்டுள்ளது" என்று நவம்பர் மாதம் இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தி எகனாமிஸ்ட்டிடம் கூறினார்.
கடந்த மாதம், அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறுகையில், "ஆம், நீங்கள் தளங்களையும் இயந்திரங்களையும் அழித்துவிட்டீர்கள்... ஆனால் தொழில்நுட்பத்தை குண்டு வீசி அழிக்க முடியாது, உறுதியையும் குண்டு வீசி அழிக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.
ஜனவரி மாதம் ராய்ட்டர்ஸிடம் பேசிய குரோசி, சர்வதேச அணுசக்தி முகமையால் இரானில் குண்டுவீசப்படாத 13 அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடிந்தது, ஆனால் குண்டுவீச்சுக்கு உள்ளான மூன்று முக்கிய நிலையங்களை ஆய்வு செய்ய முடியவில்லை, சர்வதேச அணுசக்தி முகமை கடைசியாக இரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பை சரிபார்த்து ஏழு மாதங்கள் ஆகின்றன என்றார்.
முக்கியமான கேள்விகள் குறித்து, குறிப்பாக கையிருப்பின் இருப்பிடம் மற்றும் அதன் நிலை, மேலும் செறிவூட்டல் நிலையங்களின் தற்போதைய சூழ்நிலை குறித்து இன்னும் உறுதியற்ற நிலை தொடர்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தச் சூழல் உருவானது எப்படி?
இரானிய அரசாங்கம் தனது அணுசக்தி நடவடிக்கைகள் முற்றிலும் பொதுமக்களின் பயன்பாடு நோக்கங்களுக்காக மட்டுமே என்று வலியுறுத்துகிறது.
இரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மருத்துவம், விவசாயம் மற்றும் எரிசக்தி போன்ற சிவில் நோக்கங்களுக்காக அணுசக்தி தொழில்நுட்பத்தை அனுமதிக்கிறது, ஆனால் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடை செய்கிறது.
இருப்பினும்,சர்வதேச அணுசக்தி முகமை நடத்திய பத்தாண்டு கால விசாரணையில், 1980-களின் பிற்பகுதியிலிருந்து 2003 வரை "அணு வெடிப்பு சாதனத்தை உருவாக்குவதற்குத் தொடர்புடைய பல்வேறு நடவடிக்கைகளை" இரான் மேற்கொண்டது குறித்து கண்டறியப்பட்டது.
ஆனால், 'புராஜெக்ட் அமத்' என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் பின்னர் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என சர்வதேச அணுசக்தி முகமை கூறுகிறது. இருப்பினும், 2009-ல் மேற்கத்திய உளவு அமைப்புகள் ஃபோர்டோ தளத்தை அடையாளம் கண்டறிந்தன.
2015-ல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், "2009-க்குப் பிறகு அணு வெடிப்பு சாதனத்தை உருவாக்குவதற்குத் தொடர்புடைய நடவடிக்கைகள் இரானில் நடந்ததற்கான நம்பகமான அறிகுறிகள் எதுவும் இல்லை" என்று சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்தது.
மேலும், 2015 ஆம் ஆண்டு இரான் ஆறு உலக வல்லரசு நாடுகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்படி, தடைகள் தளர்த்தப்படுவதற்கான பதிலாக, தனது அணுசக்தி செயல்பாடுகளுக்கு கடுமையான வரம்புகளை ஏற்க இரான் ஒப்புக்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் படி, செறிவூட்டல் அளவு 3.67% ஆக மட்டுப்படுத்தப்பட்டது. இது அணுசக்தி உற்பத்திக்கு ஏற்ற அளவாகும். மேலும், கடுமையான கண்காணிப்பின் கீழ் ஃபோர்டோவில் நடைபெற்று வந்த செறிவூட்டல் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
ஆனால் 2018-ல், இந்த ஒப்பந்தம் இரான் அணு குண்டு தயாரிப்பதைத் தடுக்கத் தவறிவிட்டது என்று வாதிட்டு, அதிபர் டிரம்ப் அதிலிருந்து விலகி மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
இதற்குப் பதிலாக, இரான் ஒப்பந்தத்தின் வரம்புகளை மீறத் தொடங்கி, யுரேனியத்தை 60% வரை செறிவூட்டியது, மேம்பட்ட மையவிலக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தியது மற்றும் ஃபோர்டோவில் மீண்டும் செறிவூட்டலைத் தொடங்கியது.
ஜூன் 12, 2025 அன்று, சர்வதேச அணுசக்தி முகமையின் ஆளுநர்கள் குழு, இரான் தனது அணு ஆயுதப் பரவல் தடை கடமைகளை மீறியுள்ளதாக இரண்டு தசாப்தங்களில் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதற்கு அடுத்த நாள், இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images
இரானில் தற்போது நடைபெறும் கட்டுமானங்கள்
சமீபத்திய மாதங்களில் நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இரண்டு இடங்களிலும் பணிகள் நடைபெற்று வருவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
இஸ்ஃபஹானில், அதன் சுரங்கப்பாதை வளாகத்தின் அனைத்து நுழைவாயில்களும் இப்போது மண்ணால் மூடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது, மேலும் ஒரு புதிய கூரை கட்டப்பட்டுள்ளது என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன.
மேலும், நடான்ஸ் தளத்திலும் ஒரு கூரை கட்டப்பட்டுள்ளதை புகைப்படங்கள் காட்டுகின்றன.
அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனத்தால் (ஐஎஸ்ஐஎஸ்) முதன்முதலில் ஆய்வு செய்யப்பட்ட சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள், இரான் ஒரு நிலத்தடி வளாகமான மவுண்ட் கோலாங் காஸ் லாவை பலப்படுத்தி வருவதையும் காட்டுகின்றன.
பிகாக்ஸ் மலை என்றும் அழைக்கப்படும் இந்தத் தளம், இஸ்ரேல் அல்லது அமெரிக்காவால் தாக்கப்படவில்லை. இது நடான்ஸ் அணுசக்தி நிலையத்திற்கு தெற்கே சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது.

அணு ஆயுதத்தை உருவாக்க இரானுக்கு எவ்வளவு காலம் ஆகும்?
ஆயுதத் தரத்திலான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தயாரிப்பதும், ஏவக்கூடிய ஒரு அணு ஆயுதத்தை உருவாக்குவதும் ஒன்றல்ல.
அதற்கு மேற்கொண்டு பல்வேறு தொழில்நுட்ப நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க பாதுகாப்பு உளவு முகமை மேற்கொண்ட மதிப்பீட்டின்படி, அந்த நேரத்தில் இரான் தனது முதல் அணுசக்தி சாதனத்திற்குத் தேவையான போதிய அளவு ஆயுதத் தர யுரேனியத்தை "நேரடியாக ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில்" உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிவித்தது.
இருப்பினும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஆயுதமாக மாற்றுவதற்கான திறனை உருவாக்க இரான் முயன்று வருகிறதா என்பது குறித்த மதிப்பீடுகள் மாறுபடுகின்றன.
"இரான் அநேகமாக அணு ஆயுதங்களைத் தயாரிக்கவில்லை, ஆனால் ஒருவேளை அது தயாரிக்க முடிவு செய்தால், அதற்கேற்ற சிறந்த நிலையில் தன்னை வைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொண்டுள்ளது" என்றும் அமெரிக்க பாதுகாப்பு உளவு முகமையின் மதிப்பீடு கூறியது.
இருப்பினும், "அணு ஆயுதத்துக்கு ஏற்ற ஆயுதக் கூறுகளைத் தயாரிப்பதற்கான இரான் அரசின் முயற்சிகளில் 'குறிப்பிடத்தக்க முன்னேற்றம்' ஏற்பட்டுள்ளதைக் காட்டும் உளவுத் தகவல்களைத் தாங்கள் சேகரித்துள்ளதாக" இஸ்ரேலிய ராணுவம் ஜூன் மாதம் தெரிவித்தது.
"இரான் 2003-ஆம் ஆண்டு வரை போர்முனை (Warhead) வடிவமைப்பில் சில திறன்களை உருவாக்கியிருந்தது, அதன் பிறகு அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதாகத் தெரிந்தது," என்று ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணரான முனைவர் பாட்ரிசியா லூயிஸ் கூறுகிறார்.
இருப்பினும், "2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் முறிவு மற்றும் புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தோல்விகளுக்குப் பிறகு, இரான் மீண்டும் ஒரு போர்முனைத் திறனை உருவாக்கத் தொடங்க முடிவு செய்திருக்க வாய்ப்புள்ளது" என்றும் அவர் கூறுகிறார்.
பிப்ரவரி 18 அன்று, இரான் தீவிரமாக ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளை சர்வதேச அணுசக்தி முகமை கண்டுள்ளதா என்று கேட்டதற்கு, குரோசி பிரெஞ்சு ஊடகமான டிஎப்ஃ1-இடம் "இல்லை" என்று பதிலளித்தார்.
மேலும், அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு தரப்பிலுமே "ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான விருப்பம்" இருப்பதாக தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இரானின் அணு ஆயுதத் திட்டம் ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது?
இரானுக்கு அணு ஆயுதம் கிடைக்கக் கூடாது என்ற நம்பிக்கையை மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இரான் அணு ஆயுதம் பெற்றால் "உலகமே அழிந்துவிடும்" என்று மே 2025-ல் டிரம்ப் கூறினார். 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது, இது "முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகம்... முற்றிலும் மாறுபட்ட ஒரு பேச்சுவார்த்தை" என்று பொருள்படும் என்றும், இஸ்ரேல் "அழிந்துவிடும்" என்றும் அவர் கூறினார்.
பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அணு ஆயுதம் ஏந்திய இரானை "பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு விடுக்கப்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல்" என்று விவரித்துள்ளார்.
"இது பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் மற்றும் நெருக்கடி மேலாண்மையைச் சிக்கலாக்கும், குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு இது சவாலாக அமையும்" என்று பிரிட்டனைச் சேர்ந்த ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் என்ற சிந்தனைக்குழுவின் மத்திய கிழக்கு நிபுணர் முனைவர் எச். ஏ. ஹெல்லியர் கூறுகிறார்.
அணு ஆயுதம் பெறுவது இரானை பிராந்திய ரீதியாகத் வலிமையடையச் செய்யும், சீனா மற்றும் ரஷ்யாவுடனான அதன் வளர்ந்து வரும் உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் சவுதி அரேபியாவுடன் ஒரு ஆயுதப் போட்டியைத் தூண்டக்கூடும் என்றும் சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இஸ்ரேலும் அணு ஆயுதம் வைத்திருப்பதாக அறியப்படுகிறது. இருப்பினும் இஸ்ரேல் அக்கருத்தை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

இரானுக்கு அணு ஆயுதம் கிடைத்தால் அதன் "சாத்தியமான விளைவு" உடனடி மோதல் அல்ல, மாறாக "பரஸ்பரத் தடுப்பாகத் தான் இருக்கும்" என்று ஹெல்லியர் குறிப்பிடுகிறார்.
மேலும், பெரும்பாலான பிராந்திய நாடுகள், "கற்பனையான இரானிய குண்டை விட, இஸ்ரேலிய அதிகாரத்தையே உடனடி மற்றும் சீர்குலைக்கும் பாதுகாப்பு கவலையாகப் பார்க்கின்றன" என்று கூறிய அவர்,
அணு ஆயுதம் ஏந்திய இரானால் ஏற்படும் ஒரு பெரிய ஆபத்து "மோதல் காலங்களில் ஏற்படும் தவறான கணக்கீடாக " இருக்கும் என்றும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












