அனிதா தேவி: காவல்துறையில் பணியாற்றிக் கொண்டே துப்பாக்கிச் சுடுதலில் சாதனை படைக்கும் வீராங்கனையின் கதை

நல்லதொரு இலக்கு சில நேரங்களில் தனி மனிதர்களுக்குள் இருக்கும் திறமையை வெகுவாக வெளிக்கொணரும். இதுவே அனிதா தேவியின் வாழ்க்கைச் சுருக்கம். ஹரியாணா மாநில காவல்துறையில் பணியாற்றி வரும் அனிதா தேவி, தேசிய அளவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகிறார்.
2008ஆம் ஆண்டு ஹரியாணா காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்த அனிதா தேவி, தனக்கு பதவி உயர்வு கிடைக்க துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்டார்.
அவரின் இந்த பயணத்தில் அவரின் கணவர் தரம்பிர் குலியா வலுவான ஆதரவு வழங்கினார். ஆனால் அவரின் இந்த முடிவு ஒரு நாள் தேசிய அளவில் தனக்கு பதக்கம் வாங்கி கொடுக்கும் என அனிதா தேவி நினைக்கவில்லை.
2011ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு வருடமும் பதக்கங்களை வென்று கொண்டிருந்தார் அனிதா தேவி.
இருப்பினும் சர்வதேச அளவில் விளையாடவில்லை என்பது குறித்து அவர் கவலை கொள்கிறார். இந்தியாவில் மூன்றாவது இடத்தில் இருந்தபோதும் தனக்கு போதுமான விழிப்புணர்வும், வழிகாட்டுதலும் இல்லை என்பதால் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பில் இணைய முடியவில்லை என தெரிவிக்கிறார்.
இந்த உறுப்பினர் சேர்க்கை, இந்திய அரசு அதன் தடகள வீரர்களை வெளிநாடுகளுக்கு இந்திய அணி சார்பில் விளையாட அனுப்புவதற்கு தேவை.
இந்த இணைப்பு தேவையில்லாத ஹானோவரில் நடைபெற்ற ஒரு தனியார் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், குழுவாக 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
36 வயது தேவி தொடர்ந்து துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். தற்போது 14 வயது மகனுக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அளிப்பதில் முனைப்பு காட்டி வருகிறார்.
பெற்றோரின் ஆதரவு
ஹரியாணாவின் பல்வால் மாவட்டத்தில் உள்ள லால்ப்ரா கிராமத்தில், பிறந்தார் தேவி. தேவிக்கு அவரின் பெற்றோர் தொடர்ந்து ஊக்கமளித்தனர். தேவியின் தந்தை ஒரு மல்யுத்த வீரர், எனவே தேவியும் அதில் ஈடுபட வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் தேவி அதை மறுத்துவிட்டார். மல்யுத்தம் ஒருவரின் காதை பாதிக்கும் என்கிறார் அவர்.
அனிதா தேவிக்கு முதலில் துப்பாக்கிச் சுடுதல் குறித்து பெரிதாக தெரிந்திருக்கவில்லை. ஹரியாணா காவல்துறையில் சேர்ந்த பிறகு சிறப்பு அனுமதி பெற்று, குருக்ஷேத்ரா நகரில் உள்ள குருக்குல் பயிற்சி மையத்தில் அனிதா தேவி பயிற்சியை தொடங்கினார். அதற்காக அவர் தனது வீட்டிலிருந்து இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டும். ஆனால் பயிற்சியில் ஈடுபட்ட ஒரு மாதத்தில் ஹரியாணா மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
தேவிக்கு அவரின் கணவர் பொருளாதார ரீதியாகவும் ஆதரவு வழங்கினார்.

துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி பெற வேண்டும் என்று விரும்பியபோது அனிதா தேவியின் மாதச் சம்பளம் 7,200 ரூபாய். ஆனால் அவரின் கணவர் 90,000 ரூபாய் மதிப்புள்ள துப்பாக்கி ஒன்றை அனிதா தேவிக்கு வாங்கி தந்தார்.
காவல்துறையும் அனிதா தேவி பயிற்சி செய்ய விரும்பும் போதெல்லாம் அவருக்கு அனுமதி வழங்கியது.
நாட்கள் செல்ல செல்ல தேவி தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவர் தனது பணியைக் காட்டிலும் விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதாக பணியிடத்தில் பேசப்பட்டது.
எனவே ஏதேனும் ஒன்றை தேவி தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டபோது, தேவி தனது பணியை ராஜிநாமா செய்வதாகக் கடிதம் வழங்கினார். இருப்பினும் காவல்துறை அவரின் ராஜிநாமாவை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஹரியாணா காவல்துறையில் தனது பணியைத் தொடரும் தேவி தற்போது தலைமைக் காவலராக உள்ளார். விரைவில் உதவி துணை ஆய்வாளராகும் வாய்ப்பும் அவருக்கு உள்ளது.
கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி
2013ஆம் ஆண்டுதான் அனிதா தேவிக்கு மிகவும் வெற்றிகரமான ஒரு ஆண்டு. அப்போதுதான் அவர் தேசிய போட்டியில் வெற்றி பெற்றார். 2013ஆம் ஆண்டு அனைத்திந்திய காவலர்களுக்கான போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். மேலும் சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரர் என்ற பட்டத்தையும் வென்றார்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளிலும் தேவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். தற்போது தனது மகனுடன் இணைந்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற விரும்புகிறார் அனிதா தேவி.
ஒருநாள் தனது மகன் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பதக்கம் வெல்வார் என்றும் தேவி நம்பிகை கொண்டுள்ளார்.
விளையாட்டுத்துறையில் வெற்றி என்பது தியாகங்கள் மீது கட்டெழுப்பப்படும் ஒன்று என்று கூறும் தேவி, 2013ஆம் ஆண்டு போட்டி ஒன்றில் பங்கெடுக்க வேண்டிய சூழலால் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்கிறார்.
தனது பெற்றோர் மற்றும் கணவரின் ஆதரவில்லை என்றால் தன்னால் இந்த அளவிற்கு சாதித்திருக்க முடியாது என்கிறார் அனிதா தேவி. இதேபோன்றதொரு ஆதரவைதான் தனது மகனுக்கும் அவர் வழங்க விரும்புகிறார்.
(அனிதா தேவிக்கு பிபிசி அனுப்பிய மின்னஞ்சலுக்கு கிடைத்த பதில்களை கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












