பாகிஸ்தான், செளதி மற்றும் துருக்கி 'பாதுகாப்பு' ஒப்பந்தம் ஏற்பட்டால் இந்தியாவுக்கு சிக்கலா?

பட மூலாதாரம், Getty Images
சுமார் ஓராண்டு நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாகிஸ்தான், செளதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு உற்பத்தித் துறை அமைச்சர் ரசா ஹயாத் ஹர்ராஜ் புதன்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பிராந்திய வன்முறைகள் வெடிக்கக் கூடும் என்ற அச்சங்களுக்கு மத்தியில், இந்த நாடுகள் ஒரு பொதுவான பாதுகாப்பு அரணைத் தேடுகின்றன என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மூன்று பிராந்திய சக்திகளுக்கு இடையில் ஏற்பட சாத்தியமுள்ள இந்த ஒப்பந்தம், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட செளதி-பாகிஸ்தான் இருதரப்பு ஒப்பந்தத்திலிருந்து வேறுபட்டது என்று ரசா ஹயாத் ஹர்ராஜ் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு மூன்று நாடுகளுக்கும் இடையே இறுதி உடன்பாடு அவசியம் என்றும் அவர் கூறினார்.
"பாகிஸ்தான்-செளதி அரேபியா-துருக்கி இடையிலான முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் உள்ளது," என ஹர்ராஜ் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
"வரைவு ஒப்பந்தம் எங்களிடம் உள்ளது. வரைவு ஒப்பந்தம் செளதி அரேபியா மற்றும் துருக்கியிடமும் உள்ளது. மூன்று நாடுகளும் இது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்த ஒப்பந்தம் கடந்த 10 மாதங்களாக நடைமுறையில் உள்ளது" என்றார்.
வியாழக்கிழமை இஸ்தான்புல்லில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, மூன்று தரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்த ஊடக செய்திகள் பற்றி கேட்கப்பட்ட போது, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான், பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறினார். ஆனால் இதுவரை எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்று அவர் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் அவநம்பிக்கையினால் ஏற்படும் "பிளவுகள் மற்றும் பிரச்னைகளை" போக்க பரந்த பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையின் அவசியத்தை ஃபிடான் வலியுறுத்தினார்.
இக்காரணங்களால்தான் வெளிநாட்டு ஆதிக்கம் அல்லது பயங்கரவாதத்தால் உருவான போர் மற்றும் உறுதியற்ற தன்மை முன்னுக்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.
ஃபிடான் கூறுகையில், "இவை அனைத்தின் முடிவில் அனைத்து பிராந்திய நாடுகளும் பாதுகாப்பு விவகாரத்தில் ஒரு ஒத்துழைப்பு தளத்தை உருவாக்க ஒன்றிணைய வேண்டும் என்று எங்களிடம் ஒரு முன்மொழிவு உள்ளது, " என்றார்.
சம்பந்தப்பட்ட நாடுகள் "ஒருவரையொருவர் நம்பினால்" பிராந்திய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
"தற்போது கூட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன, ஆனால் நாங்கள் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை." என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஜனவரி 9-ஆம் தேதி அமெரிக்க செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் ஒரு செய்தியை வெளியிட்டது, அதில் செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் துருக்கியும் சேர விரும்புவதாகக் கூறப்பட்டது.
"செளதி அரேபியா மற்றும் அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தான் இடையிலான பாதுகாப்பு கூட்டணியில் துருக்கி இணைய முயற்சிக்கிறது. இது மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் உள்ள அதிகார சமநிலையை மாற்றக்கூடிய ஒரு புதிய பாதுகாப்பு சமன்பாட்டிற்கு வழிவகுக்கக்கூடும்," என ப்ளூம்பெர்க் எழுதியது.

பட மூலாதாரம், Getty Images
செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம்
செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, செளதி அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்படும் "எந்தவொரு ஆக்கிரமிப்பும்" இருவருக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்.
இது நேட்டோவின் 5-வது பிரிவைப் போன்றது. நேட்டோவில் துருக்கியும் உறுப்பினராக உள்ளது மற்றும் அந்த கூட்டணியில் துருக்கி ராணுவம் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரியது.
"துருக்கி, செளதி மற்றும் பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன என பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசிய நபர்கள் கூறினர். தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் துருக்கியின் நலன்கள் செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுடன் பெருகிய முறையில் ஒத்துப்போவதால் இந்த கூட்டணியின் விரிவாக்கம் தர்க்க ரீதியானது," என ப்ளூம்பெர்க் எழுதியுள்ளது.
"அமெரிக்காவின் நம்பகத்தன்மை மற்றும் நேட்டோ குறித்த அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பொறுப்புணர்வு ஆகியவை குறித்து கேள்விகள் எழும் வேளையில், துருக்கி இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்பு மற்றும் தற்காப்புத் திறனை வலுப்படுத்தும் ஒரு வழியாகவும் பார்க்கிறது. அமெரிக்கா இந்த மூன்று நாடுகளுடனும் வலுவான ராணுவ உறவுகளைக் கொண்டுள்ளது."
"செளதி அரேபியாவிடம் நிதி பலம் உள்ளது. பாகிஸ்தானிடம் அணுசக்தி திறன், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ராணுவ ஆள் பலம் உள்ளது, அதேநேரத்தில் துருக்கிக்கு ராணுவ அனுபவம் உள்ளது மற்றும் ஒரு பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் ஒப்பீட்டளவில் மேம்பட்டுள்ளது" என்று அங்காராவைச் சேர்ந்த TEPAV சிந்தனைக்குழுவின் மூலோபாய நிபுணர் நிஹாத் அலி ஓஸ்கான் ப்ளூம்பெர்க்கிடம் கூறினார்.
"இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தனது மற்றும் இஸ்ரேலின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதால், மாறிவரும் சூழ்நிலைகள் மற்றும் பிராந்திய மோதல்களின் விளைவுகள், நண்பன் மற்றும் எதிரியை அடையாளம் காண புதிய வழிமுறைகளை உருவாக்க நாடுகளை தூண்டுகின்றன," என ஓஸ்கான் கூறினார்.
துருக்கி வருகையால் என்ன தாக்கம்?

பட மூலாதாரம், Getty Images
துருக்கி இந்த கூட்டணியில் கையெழுத்திட்டால், அது ஒரு காலத்தில் சுன்னி முஸ்லிம் உலகின் தலைமைக்காக போட்டியாளர்களாக இருந்த துருக்கி மற்றும் செளதி அரேபியா இடையிலான உறவில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கும்.
பல ஆண்டுகால கசப்புகளைத் தூக்கியெறிந்த பிறகு, இரு நாடுகளும் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்து வருகின்றன.
துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக நெருக்கமான ராணுவ உறவுகள் உள்ளன.
துருக்கி பாகிஸ்தான் கடற்படைக்காக போர்க்கப்பல்களை தயாரித்து வருகிறது மற்றும் பாகிஸ்தானின் எஃப்-16 விமானங்களை மேம்படுத்தியுள்ளது. துருக்கி ஏற்கனவே இரு நாடுகளுடனும் டிரோன் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்கிறது என ப்ளூம்பெர்க் குறிப்பிடுகிறது.
மூன்று நாடுகளுக்கு இடையிலான இந்தப் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள், கடந்த ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்குப் பிந்தைய போர் நிறுத்தத்திற்கு பிறகு நடந்துள்ளன.
அந்த போர் நிறுத்தத்தின் மூலம் இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நான்கு நாட்கள் நீடித்த ராணுவ மோதல் முடிவுக்கு வந்தது.
பாகிஸ்தானுக்கும் அதன் வடக்கு அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயும் பதற்றம் நிலவுகிறது.
தனக்கு எதிரான ஆயுதக்குழுக்களுக்கு ஆப்கனை ஆளும் தாலிபன் அரசு புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியதை அடுத்து இருதரப்புக்கும் இடையே பல மோதல்கள் வெடித்தன.
சண்டையை முடிவுக்கு கொண்டு வர துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தைக்கு முயன்ற போதிலும் உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் கவலை அதிகரிக்குமா?
துருக்கி இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக உதவி வருகிறது. கடந்த ஆண்டு நடந்த மோதலின் போது, இந்திய நகரங்களை தாக்க 300 முதல் 400 துருக்கிய டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
துருக்கி அதிபர் எர்டோகன் அப்போது பாகிஸ்தான் மக்கள் சகோதரர்கள் போன்றவர்கள் என்றும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார். காஷ்மீர் விவகாரத்திலும் துருக்கி பாகிஸ்தானின் நிலைப்பாட்டையே ஆதரிக்கிறது.
இந்நிலையில், செளதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் துருக்கி இணைவது இந்தியாவின் கவலையை அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுகிறது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஷ்வினி மகாபத்ரா கூறுகையில், "துருக்கியின் வருகை இந்தியாவின் கவலையை அதிகரிக்கும். பாகிஸ்தானும் துருக்கியும் ஏற்கனவே வெளிப்படையாக இந்தியாவிற்கு எதிராக உள்ளன. இதில் செளதி அரேபியா இந்தியாவுடன் ஆழ்ந்த உறவைக் கொண்ட நாடாகும். எனவே செளதி அரேபியா இதை எவ்வளவு தூரம் இந்திய எதிர்ப்பு போக்காக மாற்ற அனுமதிக்கும் என்பது முக்கியமானது" என்கிறார்.
"இது பாகிஸ்தானுக்கு சாதகமானது. கடந்த ஆண்டு இந்தியா தொடங்கிய ராணுவ நடவடிக்கையை மீண்டும் செய்யாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதி செய்ய முயற்சிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டே இந்த கூட்டணி உருவாக்கப்படுகிறது."
பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான சக்திகளைத் தொடர்ந்து ஆதரிக்கலாம், ஆனால் இந்தியா இந்த கூட்டணியின் பயத்தால் ராணுவ நடவடிக்கை எடுக்காது என்று பாகிஸ்தான் நினைக்கிறது. இதனால் பாகிஸ்தான் பலனடையக்கூடும் என நான் நினைக்கிறேன். ஆனால் மறுபுறம் செளதி அரேபியா அமெரிக்காவின் கூட்டாளி மற்றும் துருக்கி நேட்டோ உறுப்பினர் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அவர்கள் இந்தியாவிற்கு எதிராக எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்."

பட மூலாதாரம், Getty Images
இந்த கூட்டணியில் எகிப்தும் சேர வாய்ப்புள்ளதாக சில ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
புவிசார் அரசியல் நிபுணர் செர்ஜியோ ரெஸ்டெல்லி, 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' இதழில் 'செளதி -பாகிஸ்தான்-துருக்கி-எகிப்து பாதுகாப்பு ஒப்பந்தம், மேற்கு ஆசியாவில் நெருக்கடி' (Saudi-Pakistan-Turkey-Egypt Defense Pact, Crisis in West Asia) என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவை எழுதியுள்ளார்.
சாத்தியமுள்ள இந்த அரசியல் கூட்டணி குறித்து எழுதியுள்ள செர்ஜியோ ரெஸ்டெல்லி, "இதன் விளைவுகள் மத்திய கிழக்கோடு மட்டும் நின்றுவிடாது. பாகிஸ்தானின் பங்களிப்பு தெற்காசிய பிராந்தியத்தில் நீடிக்கும் மோதல் போக்கை சர்வதேசமயமாக்கும்." என்று எழுதியுள்ளார்.
இது இந்திய-பாகிஸ்தான் உறவுகளை பாதிக்கும் மற்றும் பதற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளை பலவீனப்படுத்தும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மத்திய கிழக்கு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தானின் மூலோபாய நிலையில் ஏற்படும் எந்தவொரு மேம்பாடும், தவிர்க்க முடியாமல் இந்திய-பாகிஸ்தான் உறவுகளைப் பாதிக்கும், பதற்றங்களைக் குறைப்பதற்கான முயற்சிகளை பலவீனப்படுத்தும்."
"இஸ்ரேல், வளைகுடா நாடுகள் மற்றும் எகிப்து ஆகியவற்றுடன் மூலோபாய கூட்டணிகளில் அதிகளவில் முதலீடு செய்துள்ள இந்தியா, தனது மேற்கு கடல்வழிப் பாதைகளைச் சுற்றி மிகக் கடுமையான பகைமைச் சூழலை எதிர்கொள்ளும்," என்று செர்ஜியோ எழுதினார். "வர்த்தகம் மற்றும் எரிசக்தி தொடர்புகள் மூலம் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள இந்தியப் பெருங்கடல், செங்கடல் மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் ஆகிய பகுதிகள் போட்டித்தன்மை கொண்ட ராணுவ மோதல்களுக்கான தளங்களாக மாறக்கூடும். உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் எரிசக்தி வழித்தடங்கள் அழுத்தத்தில் இருக்கும் இந்த நேரத்தில் இது குறிப்பாக ஆபத்தானது."
"ராணுவத் தளவாட ரீதியான பரிசீலனைகளுக்கு அப்பால், இத்தகைய ஒப்பந்தம் கருத்தியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது," என்று செர்ஜியோ நம்புகிறார். "இது முஸ்லிம் உலகைப் பற்றிய குழுக்கள் அடிப்படையிலான ஒரு கருத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது, இது பாதுகாப்பு மற்றும் மத அடையாளங்களுக்கு இடையிலான எல்லைகளை மங்கச் செய்கிறது."
இந்த நாடுகள் கருத்தியல் ரீதியாக ஒரே மாதிரியானவை அல்ல என்றாலும், அவற்றின் அணிசேர்க்கையானது மேற்கத்திய மற்றும் இஸ்ரேலிய மேலாதிக்கத்திற்கு எதிரான 'நாகரிக ஒற்றுமை' எனும் கருத்தாக்கத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்கும். இந்த கருத்தாக்கம், உலகளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் கூட, இது அரசு சாரா அமைப்புகளை உற்சாகப்படுத்தும், பிராந்திய அளவில் மிதவாதக் குரல்களைப் பலவீனப்படுத்தும், மேலும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை இன்னும் சிக்கலாக்கும்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் செளதி அரேபியா முக்கியமான நாடாகும். செளதி அரேபியா பாகிஸ்தானுக்கு பலமுறை நிதி நெருக்கடிகளில் உதவி செய்துள்ளது.
செளதி அரேபியா பாகிஸ்தானுக்கு வழங்கிய உதவியானது, இதற்கு முன் துருக்கி ஒருபோதும் பார்த்திராத அளவிற்கு மிக உயரிய மட்டத்தில் உள்ளது. பாகிஸ்தானுக்குத் தான் எவ்வளவு முக்கியம் என்பதையும் செளதி அரேபியா புரிந்து வைத்திருக்கிறது.
இந்தியாவுடனும் செளதி அரேபியா விரிவான உறவுகளைக் கொண்டுள்ளது. அதில் அனைத்து அம்சங்களும் உள்ளடங்கியுள்ளன. இருப்பினும், பாகிஸ்தான் வழங்குவதைப் போன்ற பாதுகாப்பு உத்தரவாதங்களை இந்தியா செளதி அரேபியாவிற்கு வழங்குவதில்லை.
சுவாரஸ்யமாக, மத்திய கிழக்கில் இரண்டு முக்கியமான சக்திகள் உள்ளன; அவற்றில் துருக்கி முழுமையாகப் பாகிஸ்தானுடனும், இஸ்ரேல் இந்தியாவுடனும் நிற்கின்றன."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












