இளவேனில் வாலறிவன்: துப்பாக்கி சுடுதலில் உலகின் முதலிடம்; ஒலிம்பிக் கனவில் இந்திய வீராங்கனை

இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் உலகில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் விளையாட்டில் ஜொலித்தாலும், இவரது குடும்பம் படிப்பை பின்னணியாக கொண்டது. இவரது பெற்றோர் இருவருமே முனைவர் பட்டம் பெற்றவர்கள்.
எனினும் வாலறிவன் விளையாட்டை எடுத்து, அதில் தொடர அவர்கள் முழு ஆதரவை வழங்கினார்கள். தன்னை முழுமையாக ஆதரித்ததோடு மட்டுமல்லாமல், தன்னை படிக்குமாறு என்றுமே அவர்கள் வற்புறுத்தியது இல்லை என்கிறார் வாலறிவன்.
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு (ISSF) ஒருங்கிணைத்த போட்டிகளில் இதுவரை அவர் ஏழு தங்கப்பதக்கங்களும், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
2018ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஜூனியர் உலகக்கோப்பைப் போட்டியில் முதல் பெரிய சர்வதேச வெற்றியை பெற்ற வாலறிவன் அதில் தங்கம் வென்றதோடு, தான் போட்டியிட்ட பிரிவில் புதிய உலக சாதனையும் படைத்தார்.
ஒரு சில காரணங்களால் இந்த வெற்றி தனக்கு மிகவும் நெருக்கமானது என்று அவர் கூறுகிறார். போட்டிக்கு ஒரு நாள் முன்புதான் சிட்னி சென்று சேர்ந்த அவர், விமானப் பயணத்தால் சோர்ந்துபோய், கால்களில் அதிக வீக்கம் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
அதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் நடந்த ISSF உலகக் கோப்பையில் அவர் தங்கம் வென்றார். மேலும் 2019ஆம் ஆண்டு சீனாவின் புடியனில் நடந்த ISSF உலகக் கோப்பை போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார். இந்த நிகழ்வுகளில் அவர் வெளிப்படுத்திய திறன், அவரை உலக அளவில் முதலிடத்தை பெற வைத்தது.
உலகின் முதலிடம் என்ற நிலையை அடைந்தவுடன், பொதுவாக மக்கள் தன் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகள் உயர்ந்ததாக கூறும் வாலறிவன், ஆனாலும் அது தன் விளையாட்டை எந்த வகையில் பாதிக்கவில்லை என்கிறார்.
ஆரம்ப காலம்
ஆரம்பத்தில் வாலறிவனுக்கு தடகள நிகழ்வுகளில்தான் அதிக ஆர்வம் இருந்தது. அவரது தந்தையே துப்பாக்கிச் சுடுதலை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். தந்தையின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட வாலறிவனுக்கு, உடனடியாக அந்த விளையாட்டு பிடித்துவிட்டது. துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபடுவது தன்னை சாந்தப்படுத்தியதாக அவர் கூறுகிறார்.
தன்னை அமைதியற்றவர் என்று கருதும் வாலறிவன், இந்த விளையாட்டுக்காக அவரது அணுகுமுறையை மாற்ற பல முயற்சிகளை எடுக்க வேண்டியிருந்ததாக அவர் கூறுகிறார்.

துப்பாக்கி சுடுதலில், அதிக கவனமும் பொறுமையும் தேவை. அதனால் இந்த விளையாட்டுக்கு அவர் மன ரீதியாக தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. போட்டிகளில் பங்கேற்க அவருக்கு சரியான மனநிலை இருப்பதை அவர் உறுதி செய்ய வேண்டும்.
பயிற்சியின் ஆரம்ப காலத்திலேயே, அவருக்கு இந்த விளையாட்டில் இயற்கையாகவே திறன் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனை தொடர்ந்து முன்னாள் இந்திய துப்பாக்கிச்சுடும் வீரரான ககன் நரங்கின் கவனத்தை ஈர்த்தார் வாலறிவன். துப்பாக்கிச்சுடுதலில் வாலறிவனின் திறன்களை மேம்படுத்த உதவ முன்வந்தார் நரங்.
2014ல் தொழில்முறையாக துப்பாக்கிச்சுடுதலில் ஈடுபட்ட வாலறிவன், ககன் நரங் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்திருந்த மாவட்ட நிலையிலான விளையாட்டுப் பள்ளியில் பயிற்சியை மேற்கொண்டார்.
உலகின் முதலிடம்
பயிற்சியின் ஆரம்ப காலத்தில் தான் சந்தித்த சவால்களை நினைவுகூரும் இவர், முதலில் பயிற்சி எடுக்க தினமும் துப்பாக்கிச் சுடும் சரகத்தை (manual range) அமைத்து, மீண்டும் கழட்ட வேண்டி இருந்ததாக கூறுகிறார்.
அங்கு 2017ஆண்டு வரை பயிற்சியாளர்கள் நேஹா சௌஹான் மற்றும் நரங் ஆகியோரிடம் இருந்து பயிற்சி பெற்றார் வாலறிவன்.
சர்வதேச அளவில் துப்பாக்கிச்சுடும் போட்டியில் தான் பங்கேற்க, நரங்கின் பயிற்சி மற்றும் ஆதரவு முக்கிய பங்கு வகித்ததாக அவர் கூறுகிறார்.
மேலும் குஜராத் விளையாட்டு ஆணையம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையமும் தனக்கு மிகுந்த ஆதரவு அளித்ததாக வாலறிவன் குறிப்பிடுகிறார்.
பலருக்கும் இந்த ஆணையங்களில் இருந்து ஆதரவு கிடைக்காத போது, இந்திய விளையாட்டு ஆணையம் உட்பட இந்திய விளையாட்டு நிர்வாக அமைப்புகளிடம் இருந்து தனக்கு சிறந்த ஆதரவு கிடைத்ததாக அவர் கூறுகிறார்.
2017ல் தான் தேசிய அணியில் இடம் பெற்றதில் இருந்து, வசதிகள், இருப்பிடம் என அனைத்தும் தரம் உயர்ந்துள்ளதாகவும் வாலறிவன் குறிப்பிடுகிறார்.
2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வெல்லும் நம்பிக்கையில் இருக்கிறார் வாலறிவன்.
(பிபிசி அனுப்பிய கேள்விகளுக்கு, இளவேனில் வாலறிவன் அளித்த பதில்களின் அடிப்படையில் இந்த கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது.)
பிற செய்திகள்:
- BDSM பாலுறவு என்பது என்ன? வலிக்கும், பாலுறவுக்கும் என்ன தொடர்பு?
- பணி நீக்கம் செய்ததால் தூய்மை பணியாளர் தற்கொலை - வீடியோ வாக்குமூலம் கண்டுபிடிப்பு
- விவசாயக் கடன்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி - முதல்வர் உத்தரவு கூட்டுறவு சங்கங்களுக்கு பாதகமா?
- மியான்மரில் ஃபேஸ்புக்கை முடக்கியது ராணுவம் - என்ன நடக்கிறது அங்கே?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












