சோனாலி விஷ்ணு ஷிங்காட்டே: ஷூ வாங்க காசில்லாதவர் சர்வதேச கபடி வீராங்கனை ஆன கதை

சோனாலி விஷ்ணு ஷிங்கடே

புகழ்பெற்ற இந்திய கபடி வீராங்கனை சோனாலி விஷ்ணு ஷிங்காட்டே தனது பயிற்சியை தொடங்கும்போது அவரிடத்தில் ஷூ இருந்திருக்கவில்லை. அவரின் குடும்பத்தாலும் அதை வாங்க இயலவில்லை.

அதுமட்டும் ஒரே சவால் அல்ல. அவர் 100 மீட்டர் ஓடுவதற்கே சிரமப்படுவார்.

அவரின் கால்களையும், வயிற்றுப் பகுதியையும் வலுவாக்க, அவரின் கால்களில் பளுவை கட்டிக் கொண்டு ஓடிப் பயிற்சி செய்வார்.

அந்த கடினமானபயிற்சி மற்றும் போட்டிக்கு பிறகு அவர் நடு இரவில் எழுந்து தனது தேர்வுக்காகத் தயார் செய்வார்.

சோனாலி ஷிங்காட்டேவின் குடும்பம் முடிந்தவரை அவருக்கு முழு ஆதரவு வழங்கியது. ஷிங்கடேவின் தந்தை காவலாளியாக உள்ளார், மாற்றுத் திறனாளியான அவரின் தாய் உணவுக் கடை நடத்தி வருகிறார்.

கடும் பயிற்சிக்கு பிறகு இந்தியா சார்பில் அவர் பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஆரம்பகால சவால்

ஷிங்காட்டே மும்பையில் 1995ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி பிறந்தார். மும்பை மஹரிஷி தயானந்த் கல்லூரியில் பயின்றார்.

சிறுவயதில் அவருக்கு கிரிக்கெட்டின் மீது ஆர்வம் இருந்தது. ஆனால் அவரின் குடும்பத்தினரால் அதற்கு செலவு செய்ய இயலவில்லை.

அதன்பின் எந்தவித தீவிர திட்டமும் இல்லாமல் கல்லூரியில் கபடி விளையாடத் தொடங்கினார்.

கல்லூரி நாட்களில், உள்ளூரில் உள்ள ஷிவ் ஷக்தி மஹிளா சங்கா கிளப்பின் பயிற்சியாளர் ராஜேஷ் படாவேயிடம் பயிற்சி எடுத்தார்.

சோனாலி

படாவே அவருக்கு ஷூ மற்றும் தேவையாக `கிட்`-ஐ வழங்கினார். சோனாலி கடினமாக பயிற்சி செய்தார்.

தனது குடும்ப உறுப்பினர்களைப் போல தனது பயிற்சியாளர்களும், சீனியர் வீரர்களான கெளரி வடேகர் மற்றும் சுவர்னா பர்டாகே குறித்தும் குறிப்பிடுவார் சோனாலி.

சில வருடங்களில் சோனாலி மேற்கு ரயில்வே பணியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு பயிற்சியாளர் கெளதமி அரோஸ்கர் பயிற்சியில் உதவினார்.

போட்டிக்கு தயாரான சோனாலி

சோனாலி

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை கபடிப் போட்டி சோனாலி விஷ்ணு ஷிங்காட்டேவுக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. இந்திய ரயில்வே அணி இமாச்சல் அணியை வென்றது. அதே அணியிடம் 65ஆவது தேசிய கபடிப் போட்டியில் இந்திய ரயில்வே அணி தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வெற்றி ஷிங்காட்டேவுக்கு ஒரு சிறப்பான வெற்றியாக இருந்தது. அந்த போட்டிக்கு பிறகு தேசிய பயிற்சி முகாமில் சேரும் வாய்ப்பு கிடைத்தது அதன்பின் அதே வருடம் ஜகார்த்தாவில் நடைபெற்ற 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அணியில் தேர்வானார்.

அதன்பின் ஜகார்த்தாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியின் அங்கமாக இருந்தார். பின் 2019ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்க பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இந்த இரண்டு பதக்கங்களும் ஷிங்காட்டேவுக்கு சாதனை புரிந்த நம்பிக்கையை அளித்தன.

சோனாலி

மகாராஷ்டிர அரசு 2019ஆம் ஆண்டு ஷிங்காட்டேவுக்கு மாநிலத்தின் உயரிய விருதான ஷிவ் சத்ரபதி விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

அதற்கு அடுத்த வருடம் அவர் 67ஆவது தேசிய கபடி போட்டியின் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் இம்மாதிரியாக இந்திய அணி சார்பில் பல சர்வதேச போட்டிகளில் பங்குபெற கடினமாக உழைக்க வேண்டும் என ஷிங்காட்டே விரும்புகிறார்.

இந்தியாவில் பெண்கள் கபடி விளையாடுவதை ஊக்குவிக்க, ஆண்களுக்கான ப்ரோ கபடி லீக் போட்டியை போன்று பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கிறார் சோனாலி.

(சோனாலி விஷ்ணு ஷிங்காட்டேவிற்கு பிபிசி அனுப்பிய மின்னஞ்சலுக்குக் கிடைத்த பதிலைக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: