மருத்துவர் சாந்தா காலமானார்: மருத்துவ உலகம் போற்றும் இவரது பின்னணி என்ன?

பட மூலாதாரம், Cancer Institute (WIA)
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட டாக்டர் சாந்தா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
60 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றிய சாந்தா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இந்திய அளவில் முன்னோடியாக கருதப்படுகிறார்.
மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், புற்றுநோய் மருத்துவத்துறைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவராக அறியப்படும் மருத்துவர் சாந்தாவின் வாழ்க்கை வரலாறை பார்ப்போம்.
யார் இந்த மருத்துவர் சாந்தா?
மருத்துவர் சாந்தா 1927ல் மார்ச் 11ல் சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் - பாலாபார்வதி தம்பதிக்கு பிறந்தார்.
பள்ளிப்படிப்பிற்கு பிறகு, 1949ல் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்த சாந்தா, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அதிக கவனம் செலுத்தினார். 1952ல் சென்னை பல்கலைகழகத்தில் மகளிர் மருத்துவத்தில் டிப்ளோமா படித்தார். அதனை தொடர்ந்து, 1955ல் மருத்துவத்தில் முதுகலை பட்டப் படிப்பை முடித்தார்.
ஒரு வருடம் கனடாவில் பணிபுரிந்தார். பின்னர், மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவருமான முத்துலட்சுமி ரெட்டி மூலமாக தொடங்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரியாக (Resident Medical Officer) பணியமர்த்தப்பட்டார். 1955ல் தொடங்கி, அவரின் இறுதி நாள் வரை மருத்துவ சேவையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
மருத்துவர் சாந்தா பணிக்கு சேர்ந்த காலத்தில் வெறும் 12 படுக்கைகளை கொண்ட சிறிய மருத்துவமனையாக அடையார் புற்றுநோய் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பலரின் உதவியோடு அந்த மருத்துவமனையை, சர்வதேச அளவில் வளர்த்தெடுத்தவர் மருத்துவர் சாந்தா. புற்றுநோயியல் என்ற துறையில் ஆழ்ந்து படித்து, தனிப்பட்ட படிப்பாகவும், ஆராய்ச்சி படிப்பாகவும் மாற காரணமாக இருந்தவர்.

பட மூலாதாரம், ANI
1980ஆம் ஆண்டு அந்த மருத்துவமனையின் இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். பின்னர், அந்த மருத்துவமனையை உலகளவில் பிரபலமான புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமாகவும், இந்திய அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பயன் பெறும் மையமாகவும் மாற்றினார்.
சுமார் 1,000 மருத்துவ பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் அடையாறு மருத்துவமனையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்பெறும் இடமாக மாற்றியுள்ளார்.
கொரோனா காலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட போதும், எந்த மருத்துவரையும் பணியிடை நீக்கம் செய்யவில்லை என்றும், எந்த நோயாளிக்கும் சிகிச்சை தருவதில் தடங்கல் இருக்கக்கூடாது என அயராது பாடுபட்டார் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக சுகாதார நிறுவனம் நடத்திய புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளில் இவரது பங்கு அளப்பரியது. தமிழக அரசின் திட்ட குழு உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மருத்துவ சஞ்சிகைகளில் 90க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பதிப்பித்துள்ளார். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளையும், தமிழக அளவில் ஔவையார் விருதையும் பெற்றுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












