பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: 2-வது ஆண்டாக வருகிறது

ஜனவரி 18: BBC ISWOTY 2019 மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, 'ஆண்டின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதினை' மீண்டும் இந்த ஆண்டு வழங்கவுள்ளது பிபிசி.
முக்கிய விளையாட்டு பத்திரிகையாளர்கள், வல்லுநர்கள் மற்றும் பிபிசி ஆசிரியர்கள் இணைந்து 5 வீராங்கனைகளை விருதுக்கான வேட்பாளர்களாகத் தேர்வு செய்வார்கள். அவர்களின் பெயர்கள் பிப்ரவரி 8-ம் தேதி வெளியிடப்படும்.
அந்த பட்டியலில் உள்ள வீராங்கனைகளுக்கு உலகெங்கும் உள்ள ரசிகர்கள் வாக்களித்து, விருதுக்குரிய ஒருரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
பிபிசி ISWOTY (Indian Sports Woman of the Year) விருதினை வெல்பவர் மார்ச் 8ம் தேதி அறிவிக்கப்படுவார். பிபிசி இந்திய மொழி சேவை தளங்கள் மற்றும் பிபிசி ஸ்போர்ட்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் நேயர்கள் ஆன்லைன் மூலம் வாக்களித்து வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த ஆண்டு, BBC ISWOTY திட்டத்தில் ஸ்போர்ட்ஸ் ஹேக்கத்தான் (Sports Hackathon) என்ற செயல்பாடும் இடம் பெறும். இந்த செயல்பாட்டின் கீழ் இந்தியா முழுவதிலும் உள்ள பல்லூடக இதழியல் மாணவர்கள் (multimedia journalism students) இந்திய விளையாட்டு வீராங்கனைகள் பற்றிய விக்கிபீடியா பக்கங்களை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய ஏழு மொழிகளில் உருவாக்குவர். ஏற்கனவே இருக்கும் பக்கமாக இருந்தால் அதை அவர்கள் மேம்படுத்துவர்.
பெண் விளையாட்டு வீரர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் மேலும் அதிகம் கிடைப்பதற்கு வழி செய்யும் வகையில் இந்த விக்கிபீடியா பக்கங்கள் உருவாக்கப்படும்.
இதுகுறித்த மேலதிக தகவல்கள் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிடப்படும்.

"பிபிசி வழங்கும் ஆண்டின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது இரண்டாவது முறையாக வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய விளையாட்டு வீராங்கனைகளைக் கொண்டாட இது ஒரு சிறப்பான வாய்ப்பு. வீராங்கனைகளின் வெற்றியை அங்கீகரிப்பதில் பிபிசி முன்னிலை வகிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று பிபிசி டைரக்டர் ஜெனரல் டிம் டேவி கூறியுள்ளார்.
"மாற்றத்தை உருவாக்கியவர்களை முன்னிலைப்படுத்துவதும், உலகமே இந்த பெருந்தொற்றினால் கொந்தளிப்பான சூழலை எதிர்கொண்டிருக்கின்ற வேளையில் தங்கள் விளையாட்டின் மீது தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி, அதை மாற்றியமைக்கிற வீராங்கனைகளை கெளரவிப்பதுமே இந்த விருதின் நோக்கமாகும். வளர்ந்து வரும் எங்கள் நேயர்கள் இந்த ஆண்டும் சிறப்பான முறையில் இந்த வாக்களிப்பில் பங்கேற்று தங்கள் விருப்பமான வீராங்கனையை தேர்ந்தெடுப்பதைப் பார்க்க நான் ஆர்வமாக உள்ளேன்" என்று கூறியுள்ளார் பிபிசி இந்திய மொழிகள் பிரிவின் தலைவர் ரூபா ஜா.
பிபிசி ISWOTY-ன் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அறிவிக்கப்பட்டபின் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் ஆன்லைன் வாக்களிப்பு தொடங்கும். நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து போட்டியாளர்களின் பயணத்தை விளக்கும் வீடியோக்கள், செய்திகளை பிபிசி வெளியிடும். விளையாட்டுத் துறையில் `மாற்றத்தை உருவாக்கியவர்களின்` வெற்றிப் பயணங்கள் குறித்த செய்திகளும் வெளியிடப்படும்.
மேலும் இந்திய விளையாட்டுத் துறைக்கு பெரும் பங்களிப்பு செய்த வீராங்கனை ஒருவரை கெளரவிக்கு விதமாக 'வாழ்நாள் சாதனையாளர் விருது'ம், வளர்ந்து வரும் வீராங்கனை ஒருவருக்கு 'வளர்ந்து வரும் விளையாட்டு வீராங்கனை விருது'ம் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு பிபிசி ISWOTY விருதினை இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வென்றார். மேலும் தடகள வீராங்கனை பி.டி. உஷாவுக்கு இந்திய விளையாட்டுத் துறையில் புரிந்த சாதனைகளுக்காகவும், தொடர்ந்து வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் நபராக இருந்து வருவதற்காகவும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












