வெளிநாட்டில் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் தமிழக அரசு - என்ன பணி? எவ்வளவு சம்பளம்?

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் மூலம் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கே.எம்.எஸ் கத்தார் மெடிக்கல் சென்டரில் ஆண் மற்றும் பெண் டெக்னீஷியன்கள் 50 பேர். மாதசம்பளம் 72,000 வரை வழங்கப்படும். ஸ்டாப் செவிலியர் படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.
அயர்லாந்து ரீகொயர்மென்ட் நிறுவனத்தில் ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 40 பேர் தேவை. மாத சம்பளம் 2.5 லட்சம் வரை. இங்கிலாந்து தேசிய சுகாதார மையம் சார்பில் பணியாற்ற ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 100 நபர்கள் தேவை. மாத சம்பளம் 2.5 லட்சம் வரை வழங்கப்படும். கத்தார் நாட்டில் உள்ள தோகா கத்தார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்ற பிஎஸ்சி முடித்த பெண்கள் 15 நபர்கள் தேவை. மாத சம்பளம் 70 ஆயிரம்.
ஓமன் நாடு டீனஸ் ஓமன் எல்எல்சி நிறுவனத்தில் டர்னர், பிட்டர், மெக்கானிஸ்ட் மற்றும் மெக்கானிக் 20 நபர்கள் தேவை. மாத சம்பளம் 29 ஆயிரம் வரை கிடைக்கக்கூடும்.
மேலும், இந்தியாவில் ஆந்திர மாநிலம், நாயுடுபேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரேக்ஸ் இந்தியா லிமிடெட் (டிவிஎஸ்) நிறுவனத்தில் பணியாற்ற ஆபரேட்டர்கள் 200 நபர்கள் தேவை. மாத சம்பளம் 12,000 வரை உள்ளது. இதில் ஆந்திராவில் உள்ள நிறுவனங்களில் ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியவேண்டும். உணவு, தங்குமிடம் இலவசம். வாரம் 6 நாட்கள் வேலை 8 மணி நேரம் ஷிப்ட் முறையில் பணியாற்ற வேண்டும்.
சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சிப்காட்டில் 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற பெண் மற்றும் ஆண் 40 நபர்களுக்கு சிஎன்சி மில்லிங், வெல்டிங் டிரெய்னிங் மற்றும் சாப்ட் ஸ்கில்ஸ் ஆகியவற்றில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. உணவு, தங்குமிடம் இலவசம். இந்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி குறித்து விளக்கமாக தெரிந்து கொள்ள [email protected]. என்ற மின்னஞ்சல் மற்றும் www.omcmanpower.com. இணையத்திலும் தொடர்பு கொள்ளலாம்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை - வல்லபபாய் படேல் சிலை பகுதிக்கு ரயில் சேவை

பட மூலாதாரம், Getty Images
சென்னையிலிருந்து குஜராத்திலுள்ள வல்லபபாய் படேல் சிலைப் பகுதிக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்கியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"சென்னை உள்பட 9 ரயில்களின் புதிய சேவையை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோதி தொடக்கி வைத்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கெவாடியாவில் உள்ள வல்லபபாய் படேல் சிலைக்கு ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாவை மேம்படுத்த நர்மதா ஆற்றங்கரையில் உள்ள வல்லபபாய் படேல் சிலைக்கு புதிய ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
படேல் சிலை உள்ள கெவாடியாவுக்கு மத்தியப் பிரதேசத்தின் ரெவா நிலையத்திலிருந்தும் புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பிரதாப் நகர் - கெவாடியா இடையே இரு மார்கத்திலும் புதிய புறநகர் ரயில் சேவையும் பிரதமர் தொடக்கி வைத்தார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதம்
குறைக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"தமிழகத்தில் நாளை முதல் (ஜனவரி 19) முதற்கட்டமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதற்கிடையில் தற்போதைய கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை முழு அளவில் நடத்த முடியாத நிலை இருப்பதால், பாடத்திட்டங்கள் கணிசமான அளவில் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில்,
குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலமாக கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பற்றிய முழு விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த விவரங்கள் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட இருக்கின்றன.
அதன் அடிப்படையில் இந்த கல்வி ஆண்டில் மீதம் இருக்கும் நாட்களில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












