'பிறப்பும் இறப்பும் படகில்தான்' - ஆற்றில் மிதக்கும் படகுகளையே வீடாக கொண்டு வாழும் 11 குடும்பங்களின் கதை

- எழுதியவர், லக்கோஜு ஸ்ரீநிவாஸ்
- பதவி, பிபிசிக்காக
அந்த நதிக்கரையில் ஓர் ஊர் இருக்கிறது.
அந்த ஊரில் வீடுகள் மிதப்பது போலத் தோன்றுகின்றன. அந்த வீடுகளுக்குச் சுவர்கள் இல்லை, கதவுகள் இல்லை, முகவரிகளும் இல்லை.
ஆனால் அங்கு தான் மக்கள் வசிக்கிறார்கள்.
ஆந்திரப் பிரதேசத்தின் பொலாவரம் மாவட்டத்தில் உள்ள சிந்தூர் பகுதியில், சபரி ஆற்றின் மீது மிதக்கும் படகுகள் தான் அம் மக்களின் வீடுகள். பிறப்பு முதல் இறப்பு வரை, அங்குள்ள மக்களின் வாழ்க்கை படகுகளிலேயே கழிகிறது.
ஆறு, மணல் மேடுகள், படகுகள்...
இவற்றைத் தவிர வேறொன்றும் தெரியாத சில குடும்பங்கள் சிந்தூர் அருகேயுள்ள சபரி ஆற்றில் வசித்து வருகின்றன.
பல தசாப்தங்களுக்கு முன்பு, வாழ்வாதாரத்தைத் தேடி ஆற்றின் வழியாக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து, சிந்தூரில் உள்ள சபரி ஆற்றின் கரையை அம்மக்கள் அடைந்தனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் மாரேடுமில்லி வனப்பகுதியைக் கடந்த பிறகு அமைந்துள்ள சிந்தூர் பாலத்தின் அடியில், படகுகளையே வீடாக கொண்டு வாழும் 11 குடும்பங்களின் கதை இது.

படகுகளில் வாழ்க்கை
படகுகளில் வசிப்பவர்களின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள பிபிசி குழுவினர் சிந்தூரைச் சென்றடைந்தனர்.
சபரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்திலிருந்து பார்த்தபோது, மணல் திட்டுக்களுக்கு அருகே சில படகுகள் இருப்பதை எங்களால் காண முடிந்தது. படகுகளுக்கு இடையிலிருந்து புகை எழுந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் கடும் குளிர் நிலவியது.
நேரம் அதிகாலை 5.45.
நாங்கள் படகுகளைச் சென்றடைந்த போது, ஒரு படகில் இருந்த சேவல் ஒன்று கூவிக்கொண்டிருந்தது. படகு வீடுகளில் வசித்த மக்கள் ஒவ்வொருவராக எழத் தொடங்கினர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, மீனவர்கள் எழுந்து தேநீர் போடுவதற்காக அடுப்பைப் பற்ற வைத்தனர். குளிரில் நாங்கள் நடுங்குவதைப் பார்த்து, தேநீர் அருந்துகிறீர்களா என்று எங்களிடம் கேட்டனர்.
சிம்மாத்ரி மற்றும் வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த 'ஹரம்மாத்தல்லி' என்ற படகு வீட்டிற்குச் சென்றோம். அருகிலிருந்த மற்ற படகுகளிலும், குடும்பத்தினர் ஒவ்வொருவராக எழுந்து தங்களது அன்றாடப் பணிகளைச் செய்யத் தொடங்கினர்.
படகு வீடுகள்

படகு வீட்டின் மேலிருந்த துளசிச் செடியின் மீது சூரிய ஒளி விழுகிறது.
வெங்கடேஸ்வர ராவ் போர்வைகளை மடித்து வைத்துவிட்டு, தனது மனைவி சிம்மாத்ரியிடம் விறகு அடுப்பைப் பற்றவைக்க குச்சிகளைக் கொடுக்கிறார்.
படகின் நடுப்பகுதி தார்ப்பாய்களைக் கொண்டு ஒரு கூடு போல அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கூட்டிற்கு அடியில் அலமாரிகள், பீரோக்கள் மற்றும் அரிசிப் பெட்டிகள் இருந்தன. மேல்பகுதியில் அலங்காரப் பொருட்களும், கீழ்ப்பகுதியில் எண்ணெய், காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருந்தன.
கரையில் உள்ள மணலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, படகுகளில் ஆண்களும் பெண்களும் சமையல் வேலைகளில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதைக் காண முடிந்தது. சில படகுகள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக ஆற்றின் மறு கரைக்குச் சென்றிருந்தன. கடுங்குளிர் காரணமாக சில குழந்தைகள் தங்கள் படகு வீட்டுக்குளேயே உறங்கிக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு படகிலும் 'ஹரம்மா', 'பொலம்மா' போன்ற பெயர்கள் காணப்பட்டன. அந்தப் பெயர்களே அந்தப் படகு வீடுகளின் முகவரிகளாக இருந்தன. முகவரிகள் அல்லது சுவர்கள் இல்லாத வீடுகளாக இவை இருந்தாலும், இங்குள்ள சில குடும்பங்களுக்கு இந்தப் படகுகளே முழு உலகமாக இருக்கின்றன.

'பிறந்தது முதல் படகில் தான் வசித்து வருகிறோம்'
சிம்மாத்ரியின் பெற்றோருடைய சொந்த ஊர் தவலேஸ்வரம்.
இது கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அங்கிருந்துதான் அவரது பெற்றோர் இங்கு வந்தனர். சிம்மாத்ரி சிந்தூரில் பிறந்தார். அவர் சிந்தூரில் உள்ள சபரி ஆற்றின் மீது ஒரு படகிலேயே தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். சிம்மாத்ரிக்கு இப்போது 45 வயதாகிறது.
"எனது பெற்றோரும் இந்தப் படகில் பயணம் செய்தார்கள். இந்தப் படகு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நாங்களும் இதே வாழ்க்கையைத் தொடர்ந்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.
"பிரசவத்திற்காக எனது தாயை இந்தப் படகிலேயே சிந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிரசவம் மருத்துவமனையில் நடந்திருந்தாலும், பின்னர் அவர்கள் என்னை இதே படகில் தான் திரும்ப அழைத்து வந்தார்கள். நான் இங்கு தான் வளர்ந்தேன்," என்றார் சிம்மாத்ரி.
"எனது குழந்தைகளும் இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்து வருகிறார்கள்," என்று சிம்மாத்ரி கூறினார்.
சிம்மாத்ரியின் வார்த்தைகளில், தங்களுக்கு வேறு வழியில்லை என்பதையும், வாழ்வாதாரத்திற்காக இங்கு வசித்து வருகிறார்கள் என்பதையும் எங்களால் உணர முடிந்தது.

'கல்விக்காக நதியைக் கடக்கிறோம்'
தற்போது, இந்தப் படகுகளில் பிறந்த ஒன்பது குழந்தைகளும் இங்கேயே வளர்ந்து வருகின்றனர். மேலும் இருவர் தவலேஸ்வரத்தில் படித்து வருகின்றனர். இந்தக் குழந்தைகள் படகு மூலம் ஆற்றின் மறு கரைக்குச் சென்று, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
குழந்தைகள் பள்ளிக்குச் சென்றவுடன், பெற்றோர் மீன்பிடிக்கச் செல்கிறார்கள். தாங்கள் பிடிக்கும் மீன்களை உடனுக்குடன் விற்பனை செய்கிறார்கள். இடைப்பட்ட நேரத்தில், படகுகளிலேயே சமைத்து உண்கிறார்கள்.
மாலையில், குழந்தைகள் வருவதற்காகக் காத்திருக்கிறார்கள். இவர்களது ஒவ்வொரு நகர்விலும், படகைத் தவிர வேறு எதுவும் இல்லை.
"எங்கள் குழந்தைகள் எங்களைப் போல் இருக்கக் கூடாது. என் உயிரே போனாலும், அவர்களின் கல்வியை நான் நிறுத்த மாட்டேன்," என்கிறார் சிம்மாத்ரி.
"எங்கள் முன்னோர் இந்தப் படகுகளை எங்களிடம் ஒப்படைத்தனர். நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு ஆற்றில் கழியும் வாழ்க்கை அல்லாமல், ஒரு சிறந்த வாழ்க்கையை வழங்க முயற்சி செய்து வருகிறோம்," என்கிறார் மீனவர் மகேஷ்.
தற்போது இந்த 11 குடும்பங்களின் வாழ்க்கை சபரி ஆற்றையே நம்பி இருக்கிறது.

'படகே கோயில், படகே சொத்து'
இந்த மீனவர்கள் தங்கள் படகுகளைக் கோவில்களாகக் கருதுகின்றனர்.
"நாங்கள் படகுகளுக்குத் தெய்வங்களின் பெயரைச் சூட்டுகிறோம். படகிற்குள் நுழையும்போது காலணிகளை அணிவதில்லை " என்கிறார் மகேஷ்.
50 வயதான வெங்கடேஸ்வர ராவ் என்பவரிடம் மூன்று படகுகள் உள்ளன. "ஒன்று வசிப்பதற்கு, ஒன்று மீன் பிடிக்க, மற்றொன்று மீன் பிடிக்கச் செல்லும் படகு பழுதானால் பயன்படுத்துவதற்கு. ஒவ்வொரு படகும் ஒரு லட்ச ரூபாய் மதிப்புடையது. இதுவே எங்கள் சொத்து, இதுவே எங்கள் பாரம்பரியம்," என்கிறார் அவர்.
மேலும், "இது தான் எங்கள் சொத்து. இதுவே எங்கள் பாரம்பரியமும் கூட. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் மீன் பிடித்து வருகிறோம், ஆனால் பொருளாதார ரீதியாக எதையும் ஈட்டவில்லை," என்றும் அவர் கூறினார்.

'பழகிவிட்டது... ஆனால் பயமும் உள்ளது'
வாழ்வாதாரத்துக்காக தவலேஸ்வரத்திலிருந்து வந்ததாகக் கூறும் மீனவர் மகேஷ், தான் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்.
"இரவும் பகலும் மீன் பிடிக்கச் செல்வது எங்களுக்குப் பழகிவிட்டது, ஆனாலும் எங்களுக்குப் பயம் இருக்கிறது. இரவில் எங்களுக்கு ஏதேனும் அவசரம் என்றால், உடனே படகுகளைக் கட்டிவிட்டு மறு கரையில் உள்ள மருத்துவர்களிடம் செல்வோம்." என்று மகேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.
"பகல் நேரத்தில் நன்றாக மீன் பிடிக்க முடியும், ஆனால் இருட்டிய பிறகு படகுகளில் இருக்கும் சிறுவர்களும் குழந்தைகளும் பயப்படுகிறார்கள். ஏனெனில், தூரத்தில் நரிகள் ஊளையிடுவதும், இடைவிடாத சத்தங்களும் கேட்டுக் கொண்டே இருக்கும். இதனால், நாங்கள் வரும் வரை அவர்கள் பயத்துடனும் அமைதியற்ற நிலையிலும் இருக்கிறார்கள். சில நேரங்களில், மீன் பிடிப்பதற்காக ஒவ்வொரு குடும்பமும் வாரக்கணக்கில் ஒரே இடத்திலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கும்," என்கிறார் மகேஷ்.

சொந்த ஊருக்குச் செல்லாதது ஏன்?
சொந்த ஊரிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் இந்த 11 குடும்பங்களும், மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தவலேஸ்வரத்திற்குச் செல்கின்றனர்.
சிந்தூரிலிருந்து தவலேஸ்வரத்திற்கு ஒருமுறை சென்று வர ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
"ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே நாங்கள் சுமார் 1,000 ரூபாய் செலவழிக்கிறோம். தவலேஸ்வரம் சென்று விட்டுத் திரும்புகிறோம். ரேஷன் மூலம் கிடைக்கும் பொருட்களின் மதிப்பை விட, அதற்கு ஆகும் பயணச் செலவுதான் அதிகம். ஆனால், எங்கள் ரேஷன் கார்டு ரத்தாகிவிடக் கூடாது என்பதற்காகவே நாங்கள் அங்கு செல்கிறோம்," என்று துர்கம்மா கூறினார்.
"ஏனென்றால் ரேஷன் கார்டு தான் எங்களின் அடையாளம். அது ரத்து செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்யவே நாங்கள் தவலேஸ்வரத்திற்குச் செல்கிறோம்," என்று மற்றொரு மீனவரான புஜ்ஜிபாபு பிபிசியிடம் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கணக்கெடுப்பில் தாங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக, தண்ணீரில் வாழும் இந்தக் குடும்பங்கள் மாதம் ஒருமுறை தண்ணீரைத் தாண்டிப் பயணம் செய்கின்றன.
"ஆனால் விசேஷங்கள், பிறந்தநாள் மற்றும் திருமணங்களுக்கு, தவலேஸ்வரத்திலிருந்து உறவினர்களும் நண்பர்களும் வருவார்கள். சபரி ஆற்றின் மணல் திட்டுகளிலேயே நாங்கள் அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம். உள்ளூர் மக்களையும் நாங்கள் அழைக்கிறோம்," என்கிறார் துர்கம்மா.

'எல்லா நேரமும் மீன் கிடைக்காது'
"நாங்கள் மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம் மீன் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சில நேரங்களில், வீசிய தூண்டில் வெறுமனே திரும்பி வரும்" என்கிறார் மீனவர் புஜ்ஜிபாபு.
சில சமயம் குழம்பு வைப்பதற்குத் தேவையான மீன் கூடக் கிடைப்பதில்லை. ஒருமுறை மீன் பிடிக்கச் செல்ல டீசலுக்கு மட்டுமே குறைந்தது 700 முதல் 800 ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலைகளில் எங்களுக்கு இழப்பு ஏற்படும் என்கிறார் புஜ்ஜிபாபு.
"சில நேரங்களில் மீன்கள் அதிகம் கிடைக்கும் போது, அவற்றைப் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிடுவோம். நாங்கள் கரைக்கு வருவதற்குள் வாடிக்கையாளர்கள் தயாராக இருப்பார்கள். நாங்கள் அவர்களிடம் அதிக பேரம் பேசுவதில்லை. ஏனெனில் உள்ளூர் மக்களிடமிருந்து எங்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன, அவர்களுடன் எங்களுக்கு நட்பு இருக்கிறது. எங்களது பேட்டரி விளக்குகள் மற்றும் செல்போன்களை சார்ஜ் செய்ய அவர்களின் வீடுகளுக்குச் செல்வோம்" என்று மகேஷ் கூறினார்.
அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் போது, கரையில்மீன்களை விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள மீன்களை சிந்தூர் சந்தைக்குக் கொண்டு சென்று விற்பதாக அவர் தெரிவித்தார்.
இப்படித்தான் பகல் நேரங்களில் அவர்களது வாழ்க்கை உள்ளது.

நம்பிக்கை நிறைவேறுமா?
காலப்போக்கில், அம்மக்கள் துடுப்புப் படகுகளிலிருந்து மோட்டார் படகுகளுக்கு மாறியுள்ளனர்.
மின்சார வசதியோ அல்லது கேபிள் இணைப்போ அங்கு இல்லை, ஆனால் மொபைல் போன்கள் இருக்கின்றன.
படகுகளில் வாழ்க்கை கடினமாக இருந்தாலும், தங்கள் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் உழைக்கிறார்கள்.
தலைமுறைதலைமுறையாகத் தண்ணீரில் மிதந்து கொண்டே வாழ்வாதாரத்தைத் தேடும் இந்தக் குடும்பங்களின் கதை, சபரி ஆற்றின் ஓட்டத்தைப் போலவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வருங்கால சந்ததியினரின் எதிர்காலம் ஒரு படகிற்குள்ளேயே முடிந்துவிடக் கூடாது என்றே அவர்கள் விரும்புகின்றனர்.
தற்போதைக்கு, அவர்களின் நம்பிக்கைகளும் வாழ்க்கையும் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












