"வணக்க தலங்களில் மோதல்": பௌத்த விகாரைகள், தமிழர்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி கூறியது என்ன?

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம், PATHMANATHAN SARUJAN

படக்குறிப்பு, தையிட்டி பௌத்த விகாரைக்காக காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி நடந்த போராட்டம்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையின் பௌத்த விகாரைகள் முன்பாக நடைபெறும் போராட்டங்கள் மற்றும் இனவாதம் ஆகியவற்றைக் குறிப்பிடும் பொருளில் பேசியுள்ளார், அந்நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க. ஆனால் இவரது கருத்து தெளிவற்றதாக இருப்பதாக தமிழர்களின் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக போராட்டம் நடத்துவோர் கூறுகின்றனர்.

மற்ற விகாரைகளைக் கடந்து யாழ்ப்பாணத்திலுள்ள பௌத்த விகாரைகளுக்கு மக்கள் செல்வது, "வழிபாடுகளை மேற்கொள்வதற்காக அல்ல" எனவும், மாறாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடு எனவும் நாட்டின் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

''அங்காங்கே இனவாத செயற்பாடுகள் சிறு சிறு அளவில் காணப்படுவதை நான் அறிவேன். வணக்க தலத்தை மையமாகக் கொண்டு மோதல்கள் இடம்பெறுகின்றன. '' என்று ஜனாதிபதி பேசியுள்ளார்.

அத்தோடு ''ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் விகாரையை சூழ்ந்து இருக்கின்றார்கள். அது காணிக்காக அல்ல. இனவாதத்திற்காகவே சூழ்கின்றார்கள். மீண்டும் இனவாதத்தை தலைதூக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இனவாத செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.'' என்றும் திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.

பௌத்த விகாரைகளை ஸ்தாபிப்பதற்கு எதிராக போராட்டங்கள்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் பௌத்த விகாரைகளை ஸ்தாபிப்பதற்கு எதிராக அந்த பகுதி மக்கள் பல வருட காலமாக எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பௌத்தர்களின் புனித தினமாக அனுஷ்டிக்கப்படும் பௌர்ணமி தினங்களில் யாழ்ப்பாணம் தையிட்டி பௌத்த விகாரையில் விசேட வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழர்கள் தமது காணி உரிமையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி தையிட்டி விகாரை வளாகத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வருவதை கடந்த சில வருடங்களாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களுக்கு சொந்தமானது என போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், மாறி மாறி வந்த அரசாங்கங்கள் இதுவரை இறுதியாக தீர்மானத்தை எடுக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் மாவட்ட ரீதியிலும், மத்திய அரசாங்கத்தின் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அது தொடர்பில் இறுதி தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை.

இலங்கை, பௌத்தம்
படக்குறிப்பு, குருந்தூர்மலை முழுமையாக பௌத்தர்களுக்கு சொந்தமான இடம் என கோரி கடந்த காலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பேசுகையில் முன்வைத்த கருத்துக்கள் தமது பிரச்னையை அடிப்படையாகக் கொண்டே முன்வைத்தார் என யாழ்ப்பாணம் - தையிட்டி காணி பிரச்னையை எதிர்நோக்கியுள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி தையிட்டி விகாரை பிரச்னையை அடிப்படையாகக் கொண்டே கருத்து வெளியிட்ட போதிலும், அதில் போதிய தெளிவின்மை காணப்படுகின்றது என தையிட்டி காணி பிரச்னையை முன்னிறுத்தி வரும் பத்மநாதன் சாருஜன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

பௌர்ணமி தினங்களில் தாமே போராட்டங்களை நடத்தி வருவதாகவும், அதனை அடிப்படையாக் கொண்டே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''குறிப்பாக அவர் நேற்றைய தினம் பேசிய விடயம் தையிட்டியை பற்றி தான். ஏனென்றால், போயாவிற்கு (பௌர்ணமி தினம்) போராட்டம் செய்யும் இடம் தையிட்டி தான். போயாவிற்கு ஆர்ப்பாட்டம் செய்வதை பிழையாக நினைக்கக்கூடாது. போயாவிற்கு அங்கு வரும் மக்களை தெளிவுப்படுத்தி அனுப்புவதற்காக தான் போயா தினத்தில் போராட்டங்களை செய்கின்றோம். நாங்கள் குழப்பத்திற்கு போகவில்லை. எங்களுடைய உரிமைகளை எங்களுடைய ஆதங்கங்களை வெளியில் கொண்டு வருவதற்காகவே அந்த போராட்டங்கள் தொடங்கப்பட்டது,' என அவர் குறிப்பிடுகின்றார்.

''ஜனாதிபதி, தென் பகுதியிலிருந்து பல பௌத்த ஆலயங்களைத் தாண்டி இங்கு வந்து வழிபடுவது இனவாதம் என்று சொல்கின்றாரா?. போயா தினங்களில்; போராடுவது பிழை என்று சொல்கின்றாரா? என்று எங்களுக்கு தெரியவில்லை." என்கிறார்.

"'போராடுபவர்களின் காணிகள் அந்த இடத்தில் இருக்கின்றதா என்று புலனாய்வு துறையிடம் சொல்லி விசாரணை செய்ய வேண்டும்' என்றும் ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில், இது மக்களுடைய காணி என்பதை எங்களுடைய அரச அலுவலகங்களில் உறுதிப்படுத்தியுள்ளோம்." என பத்மநாதன் குறிப்பிடுகின்றார்.

தையிட்டி பௌத்த விகாரை, இலங்கை குருந்தூர் மலை
படக்குறிப்பு, குருந்தூர் மலை

இந்த காணி பிரச்னை நிலவும் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரின் காணி காணப்படுகின்ற போதிலும், அதையும் தாண்டி மக்களின் காணிகளை ஆக்கிரமித்தே இந்த விகாரை விஸ்தரிக்கப்பட்டு வருவதாக பத்மநாதன் கூறுகின்றார்.

''அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம். நீதி அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியன தலையீடு செய்திருந்தன. அவர்களின் குழுக்கள் இது பொது மக்களின் காணி என உறுதிப்படுத்தியிருந்தன.'' என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த காணி பிரச்னைக்கு இறுதி தீர்மானம் கிடைக்கப் பெறும் வரை பௌர்ணமி தினங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என காணி உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தையிட்டி பௌத்த விகாரை, இலங்கை

பட மூலாதாரம், KOGULAN

படக்குறிப்பு, வெடுக்குநாறி மலையில் சைவ அடையாளங்கள் காணப்பட்ட பகுதியில் பௌத்த சின்னங்கள் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது

சமூக செயற்பாட்டார்களின் பார்வை?

வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடுவோரின் பின்னணியில் அரசாங்கத்தின் அனுமதி இருக்கின்றது என சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன் தெரிவிக்கின்றார்.

''ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட விகாராதிபதியை தான் முன்வரிசையில் அமர்த்தி அழகு பார்த்தீர்கள். தமது இடம் பறி போகின்றது. இது நாங்கள் வாழ்ந்த இடம் என்று போராடிக் கொண்டிருக்கின்ற எந்தவொரு குடும்பத்தையாவது ஜனாதிபதி இம்முறை சந்தித்தாரா?" என மாணிக்கம் ஜெகன் கேள்வி எழுப்புகிறார்.

"நீங்கள் ஆக்கிரமிக்கும் ஆட்கள், நாங்கள் பாதிக்கப்படும் ஆட்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த அதேவேலையை தான் இந்த அரசாங்கமும் செய்து வருகின்றது.'' எனவும் ஜெகன் கூறகிறார்.

ஜனாதிபதியின் பேச்சை பத்திரிகையாளர் எவ்வாறு பார்க்கின்றார்?

வடக்கு, கிழக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர, பௌத்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் தெரிவிக்கின்றார்.

''தமிழ் இந்துக்கள் ஏன் பௌத்த அடையாளங்களை எதிர்க்கின்றார்கள் என்ற ஒரு கேள்வி வருகின்றது, போராட்டங்கள் ஆக்கிரமிப்பின் அடையாளமாக செய்வது தான். யாழ்ப்பாணத்தில் நாகவிகாரை இருக்கின்றது, நாகவிகாரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது வேறு கோவிலாக கட்டினார்களா?'' என வித்தியாதரன் கேள்வி எழுப்புகிறார்.

''இது பௌத்தத்திற்கு எதிராக எதிர்ப்பு அல்ல. ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பு. பௌத்தத்தை எதிர்க்க போவதில்லை. ஆனால் எங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு குறியீடாக தான் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன,'' என அவர் கூறுகின்றார்.

பௌத்த விகாரை

பட மூலாதாரம், VITHIYADARAN

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன்

தமிழர்கள் இனி ஆயுதம் ஏந்த மாட்டார்கள் என்பதை அநுர குமார திஸாநாயக்க நன்கறிந்தமையினாலேயே யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டார் என தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன், அவ்வாறு பாதுகாப்பு பிரச்னை இல்லை என உறுதியாக தெரிந்த அவருக்கு ஏன் தமிழர்களின் காணிகளை விடுக்கவிக்க முடியாது எனவும் கேள்வி எழுப்புகின்றார்.

''வடக்கில் அப்படி நடக்காது என்று அவருக்கு தெரியும். தமிழர் மக்கள் இன்னுமொரு 100 வருடங்களுக்கு ஆயுதம் ஏந்த போவதில்லை என்பதை நூற்றுக்கு இருநூறு விகிதம் அவருக்கு தெரியும். அதை தெரிந்தவர் காணிகளை விடுவிக்க வேண்டும். அதிகாரத்தை வழங்க வேண்டும். சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும். அதையெல்லாம் செய்யவில்லை,'' என அவர் வினவுகிறார்.

இலங்கை யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்கள்

பட மூலாதாரம், PATHMANATHAN SARUJAN

படக்குறிப்பு, யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள்

ஆனால் விகாரை பிரச்னை யாழ்ப்பாணத்துடன் முடிந்துவிடவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் பெறுமதியாக இடமாக குருந்தூர்மலை காணப்படுகின்றது,

இந்த குருந்தூர்மலையில் பௌத்த விகாரை மற்றும் சிவன் ஆலயம் இருந்தமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்ற போதிலும், இது முழுமையாக பௌத்தர்களுக்கு சொந்தமான இடம் என கோரி கடந்த காலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த பிரச்னையும் இறுதி தீர்மானம் இன்றி இன்றும் சர்ச்சையை தோற்றுவிக்கும் விடயமாக காணப்படுகின்றது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி மலையில் தொல்லியல் பெறுமதியாக சைவ அடையாளங்கள் காணப்பட்ட இடத்தில், புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்ய பௌத்த தேரர்கள் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு எதிராகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான பிரச்னைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு