இரான் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் ஏன் பிளவுபட்டுள்ளன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரௌனக் பைரா
- பதவி, பிபிசி செய்தியாளர்
"முஸ்லிம் நாடுகள் வெளிநாட்டு சக்தி (அமெரிக்கா) ஏற்படுத்தும் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது. அது பிராந்தியத்தில் தடுமாற்றத்தையும் நண்பர்களுக்கிடையேயான பிளவுகளையும் உருவாக்குகிறது. ஒரு இஸ்லாமிய நாடு வலிமை பெறும்போதெல்லாம் மற்ற இஸ்லாமிய நாடுகள் மகிழ்ச்சியடைய வேண்டும். எங்களது பலம் உங்களுடையது, உங்களது பலம் எங்களுடையது'' என்று 2010-ல் நடைபெற்ற ஒரு மாநாட்டின் போது இரானின் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் மனுசெஹர் மொட்டாகி கூறினார்.
இரான் எப்போதெல்லாம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்கொள்கிறதோ, அப்போதெல்லாம் தனது இஸ்லாமிய அடையாளத்தை அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆனால், இந்த அடையாளம் இன்னும் இஸ்லாமிய நாடுகள் தங்கள் நலன்களை விட மத அடையாளத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அளவுக்குப் பெரிதாக மாறவில்லை.
1979 புரட்சிக்குப் பிறகு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு தொடர்ந்து சவால் விடும் ஒரே நாடாக இரான் இருந்து வருகிறது.
மற்ற இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளாக இருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.
இரான் சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமாக உள்ளது. ஆனால் இரு நாடுகளும் அமெரிக்காவுடன் நேரடி ராணுவ மோதலைத் தவிர்க்கின்றன.
துருக்கி இரானை பகிரங்கமாக ஆதரிப்பது போல் தோன்றினாலும், அது நேட்டோவில் உறுப்பினராக உள்ளது. துருக்கியின் ஆதரவு இல்லாமல், சிரியாவில் பஷர் அல்-அசத்தின் இரான் ஆதரவு அரசாங்கம் வீழ்ந்திருக்காது.
இருந்தபோதிலும், இஸ்லாமிய அடையாளத்தின் அடிப்படையில் அணிதிரள்வதற்கான அழைப்புகள் அவ்வப்போது எழுகின்றன.
'ஒற்றுமை இல்லை'
ரஷ்ய அரசியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் டுகின் எக்ஸ் தளத்தில், "இஸ்லாமிய உலகம் முன்னெப்போதையும் விட பிளவுபட்டுள்ளது. பொதுவான பார்வை இல்லை, பொதுவான உத்தி இல்லை, பொதுவான முடிவெடுக்கும் வழிமுறை இல்லை.
டிரம்ப் உலகில், ஒரு புதிய ஏகாதிபத்திய அலை உருவாகி வரும் நிலையில், இஸ்லாமிய நாடுகள் காலனித்துவத்திற்கு அடிபணிவதையே இது குறிக்கிறது. அங்கு ஒற்றுமை இல்லை, இறையாண்மை இல்லை" என என கூறியுள்ளார்
அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்குமாறு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கூட்டாளிகளிடம் இரான் கோரிக்கை விடுத்துள்ளதாக இரானிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்கா இரானை தாக்கினால், அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் தாக்கப்படும் என்று செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் துருக்கி போன்ற நாடுகளுக்கு இரான் தெளிவாக எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய கிழக்கின் பல நாடுகளில் அமெரிக்கா ராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது.
எனவே, அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் மத அடையாளத்தின் அடிப்படையில் இரானின் பக்கம் நிற்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

பட மூலாதாரம், Getty Images
இஸ்லாமிய நாடுகளின் நிலைப்பாடு
கடந்த ஆண்டு இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது, 21 முஸ்லிம் நாடுகள் அதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டன. இதில் செளதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், எகிப்து, கத்தார், சூடான், சோமாலியா, புருனே, சாட், பஹ்ரைன், குவைத், லிபியா, அல்ஜீரியா மற்றும் ஜிபூட்டி போன்ற நாடுகள் அடங்கும்.
மத்திய கிழக்கு விவகாரங்களில் நிபுணரும், உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் மூத்த ஆய்வாளருமான முனைவர் ஃபஸுர் ரஹ்மான், "அப்போது தாக்குதலைக் கண்டித்த இஸ்லாமிய நாடுகள், தாங்களும் உலகில் ஒரு சக்தியாக இருப்பதை காட்டிக்கொள்ள மட்டுமே விரும்பின. அவை தங்கள் பிம்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றன. இஸ்லாமிய நாடுகள் தங்கள் பிம்பத்தைத் தக்கவைக்கவே பொது அறிக்கைகளை வெளியிடுகின்றன" என்கிறார்.
'தி ஸ்பெக்டேட்டர்' இதழில் வெளியான ஒரு கட்டுரை, அந்த நேரத்தில் இஸ்லாமிய நாடுகள் இரானுடன் நின்றது அல்லது 'இஸ்லாமிய ஒற்றுமையை' காட்டியது வெறும் கண் துடைப்பு மட்டுமே என்று குறிப்பிடுகிறது.
இந்த நாடுகளில் பல இஸ்ரேலுடன் நல்ல ராஜீய உறவுகளைக் கொண்டுள்ளன.
லெபனான் அதிகாரிகள் அப்போது இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தடுத்தனர்.
சிரியாவில், இரான் ஆதரவு பெற்ற பஷர் அல் அசத் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, அகமது அல்-ஷாரா தலைமையிலான அரசாங்கம் இப்போது ஆட்சியில் உள்ளது. தற்போதைய சிரியா அரசாங்கம், அசத் அரசாங்கத்தைப் போல இஸ்ரேல் மீது ஆக்ரோஷமாக இருப்பதாகத் தெரியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இரானின் பிம்பம்
இரான் ஒரு ஷியா பெரும்பான்மை நாடாகும். மேலும் ஷியா மற்றும் சுன்னி பிரிவினருக்கு இடையிலான போட்டி ஒன்றும் புதியதல்ல.
1979-ஆம் ஆண்டு இரானியப் புரட்சிக்குப் பிறகு, இரான் மீதான சுன்னி நாடுகளின் அவநம்பிக்கை அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகள் மன்னராட்சி முறையைக் கொண்டவை, எனவே இரானில் ஏற்பட்டதைப் போன்ற புரட்சி இயக்கங்கள் தங்கள் நாடுகளுக்கும் பரவுவது குறித்து அவை எச்சரிக்கையாக இருக்கின்றன.
பஹ்ரைன் போன்ற நாடுகளில் சுன்னி ஆட்சியாளர்களுக்கு எதிராக ஷியா கிளர்ச்சிகளைத் தூண்டியதாக இரான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இராக் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் சுன்னி ஆட்சியாளர்களின் நிலைத்தன்மையை குலைக்க முயன்றதாகவும் இரான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இஸ்லாமிய நாடுகளின் தற்போதைய நிலைப்பாடு என்ன?
வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலின் (CFR) கருத்துப்படி, இரானில் உள்ள இஸ்லாமிய அரசாங்கத்தின் வீழ்ச்சி வளைகுடா நாடுகளுக்குப் பெரிய அளவில் பயனளிக்கக்கூடும். செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் போன்ற முக்கிய வளைகுடா நாடுகள் டிசம்பர் மாத இறுதியில் இருந்து இரானில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து மௌனம் காத்து வருகின்றன.
கத்தார் இரானுடன் நீண்டகால மற்றும் நல்லுறவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல ஆண்டுகால பகைமைக்குப் பிறகு இரானுடனான உறவை மேம்படுத்தியுள்ளன. அவை ராஜீய உறவுகளை மீண்டும் நிலைநாட்டி, முதலீட்டுத் துறையில் ஓரளவு நிலைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளன..
இந்தப் பிராந்தியத்தில் ஓமன் நாடு அனைத்து வகையான சர்ச்சைகளையும் தீர்க்கும் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுகிறது. ஓமன் பெரும்பாலும் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான ஒரு பாலமாக விளங்குகிறது.
ஜனவரி 10 அன்று, ஓமன் வெளியுறவு அமைச்சர் தெஹ்ரானில் இரானிய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில், இரு தரப்பினரும் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும், பதற்றத்தை அதிகரிக்கக்கூடிய கொள்கைகளைத் தவிர்ப்பது குறித்தும் விவாதித்தனர்.
இது இரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளது என்ற செய்தியை அமெரிக்காவிற்குத் தெரிவிக்கும் விதமாக அமைந்தது.
செளதி அரேபியா மற்றும் இரான் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்தப் போட்டியானது சுன்னி - ஷியா மோதலில் தொடங்கி, செளதி அரேபியாவின் மன்னராட்சி மற்றும் இரானின் இஸ்லாமிய புரட்சிக்கு இடையிலான மோதல் வரை நீடிக்கிறது.
அஜர்பைஜான் ஒரு ஷியா பெரும்பான்மை கொண்ட இஸ்லாமிய நாடு, ஆனால் அது இஸ்ரேலுடன் நெருக்கமாகவும், ஷியா பெரும்பான்மை கொண்ட இரானுடன் முரண்பட்ட நிலையிலும் உள்ளது.
அமெரிக்கா இராக் மீது தாக்குதல் நடத்தி, சதாம் உசேன் தூக்கிலிடப்படுவதை உறுதி செய்தபோது, இரான் அமெரிக்காவிற்கு எதிராக நிற்கவில்லை.
இரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்ட அதே ஆண்டில், எகிப்து இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்து ராஜீய உறவுகளை ஏற்படுத்தியது.
ஜோர்டானும் 1994-ல் இஸ்ரேலை அங்கீகரித்தது. 2020 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், மொராக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் இஸ்ரேலுடன் ராஜீய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.

பட மூலாதாரம், Getty Images
இஸ்லாமிய நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள்
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், அது இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று மத்திய கிழக்கு விவகார நிபுணர் முனைவர் ரஹ்மான் கருதுகிறார்.
"இந்த நாடுகள் அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேண விரும்புகின்றன, அதே நேரத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களிடையே தங்கள் பிம்பத்தைக் கெடுத்துக்கொள்ளவும் விரும்பவில்லை. குறிப்பாக, அரபு நாடுகள் அமெரிக்காவுடன் இயல்பான உறவைக் கொண்டுள்ளன, அதை அவை சிதைக்க விரும்பாது" என்றார்.
ராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து முனைவர் ரஹ்மான் கூறுகையில், "இதில் இஸ்லாமிய நாடுகளுக்கு நேரடிப் பங்கு இருக்காது. ஆனால் அமெரிக்கா விரும்பினால், அங்கு உள்ள தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளும்"என்றும்,
"இந்த நாடுகள் அமெரிக்காவை மறுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று" என்றும் முனைவர் ரஹ்மான் கூறுகிறார்.
மேலும், "2003-ல் அமெரிக்கா இராக் மீது படையெடுத்தபோது துருக்கி தங்கள் நாட்டில் உள்ள தளங்களை பயன்படுத்திகொள்ள அனுமதி வழங்கவில்லை. ஆனால் அதன் பிறகு காலம் வெகுவாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்தியபோது கூட, இந்த ராணுவத் தளங்கள் பயன்படுத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. தற்போதைய சூழ்நிலையில் இந்த நாடுகள் அமெரிக்காவுக்கு மறுப்பு கூற முடியாத நிலையில் உள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
பனிப்போர் காலத்திலிருந்தே பாகிஸ்தான் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. இரானிய அரசாங்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஒரு ஏகாதிபத்தியவாதி என்று அழைக்கிறது, ஆனால் பாகிஸ்தானோ டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை பரிந்துரைத்தது.
இரானும் பாகிஸ்தானும் இடையே எல்லையில் மோதல்களும் நடந்துள்ளன. எனவே, ஒரு தாக்குதல் நிகழும் பட்சத்தில், பாகிஸ்தான் தனது இஸ்லாமிய அடையாளத்தின் அடிப்படையில் இரானின் பக்கம் நின்று அமெரிக்காவை எதிர்க்குமா என்பது குறித்து சொல்வது கடினம்.
பாகிஸ்தானின் ஆங்கில நாளிதழான 'தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்' வெளியிட்ட ஒரு செய்தியில், பாகிஸ்தான் இரானில் நிலையற்ற தன்மையை விரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
"இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை பாகிஸ்தான் விரும்பவில்லை, ஏனெனில் அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும். இரானும் பாகிஸ்தானும் 900 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த எல்லை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் வழியாகச் செல்கிறது." என்று அச்செய்தி கூறுகிறது.
"இரானில் ஏற்படும் எந்தவொரு கொந்தளிப்பும் பாகிஸ்தானை நேரடியாகப் பாதிக்கும். எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஆயுதக் கடத்தல், அகதிகள் வருகை மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவை சிக்கல்களுக்கு வழிவகுக்கும்." என்கிறது அச்செய்தி
முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஆசிப் துரானி 'ட்ரிப்யூன்' இதழுக்கு அளித்த பேட்டியில், "இரானில் ஏற்படும் மாற்றங்கள், அது உள்நாடாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாட்டின் தலையீடாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு முன் இரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் உதவியுள்ளது" என்று கூறினார்.
"கடந்த முறை இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, இரானின் இறையாண்மைக்கு பாகிஸ்தான் மிகத் தெளிவாக ஆதரவு அளித்தது. ஆனால் ராணுவ மோதல்கள் இரானை பலவீனப்படுத்தும் என்று பாகிஸ்தானில் கூறிய ஒரு சிலரில் நானும் ஒருவன்" என்று பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஜோஹர் சலீம் ட்ரிப்யூனிடம் கூறினார்.
"இன்று நாம் காணும் நிலைமை இந்த அரசியல் நெருக்கடியின் விளைவாகும். இப்போது, பொருளாதாரம், சைபர் அல்லது ராணுவம் என எந்தவொரு வெளித் தலையீடும் நிலைமையை மோசமாக்கும். இரான் ஏற்கனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களால் பலவீனமாக உள்ளது."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












