உடல் எடையைக் குறைப்பது சிலருக்கு மட்டும் மிகக் கடினமாக இருப்பது ஏன்?

கப்கேக், பச்சை ஆப்பிள், உடல் பருமன், உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி
    • எழுதியவர், நிக் ட்ரிகல்
    • பதவி, சுகாதார செய்தியாளர், பிபிசி

"உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சுயக்கட்டுப்பாடு என்பது அத்தியாவசியத் தேவை, இது தனிப்பட்ட பொறுப்பு சார்ந்த விஷயம். இதைக் கடைப்பிடிப்பது எளிது, குறைவாகச் சாப்பிட்டாலே போதும்."

கடந்த ஆண்டு உடல் எடையைக் குறைக்கும் ஊசிகள் குறித்து நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு, வாசகர்கள் பதிவிட்ட 1,946 கருத்துக்களில் சில வரிகள் இவை.

உடல் எடையைக் குறைப்பது என்பது வெறும் மன உறுதியை பொறுத்தது மட்டுமே என்றே பலரும் நினைத்துக் கொள்கின்றனர். சில மருத்துவ நிபுணர்களும் இவ்வாறே நினைக்கின்றனர். பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்க மக்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் மட்டுமே உடல் பருமனைக் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்று பத்தில் எட்டு பேர் கூறியுள்ளனர். இந்த ஆய்வு தி லான்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.

இது ஓரளவு உண்மை என்றாலும், 20 ஆண்டுகளாக உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்களுடன் பணியாற்றி வரும் உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர் பினி சுரேஷ் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இது அரைகுறையான உண்மை என்று அவர் கூறுகிறார்.

"உடல் எடையைக் குறைக்க மிகவும் உத்வேகத்துடன், தெளிவான அறிவுடன், தொடர்ந்து முயற்சி செய்து வரும் நோயாளிகளை நான் அடிக்கடி பார்க்கிறேன். அப்படியிருந்தும் அவர்கள் எடையைக் குறைக்கப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்," என்கிறார்.

இந்தக் கருத்தை ஆமோதிக்கும் WeightWatchers அமைப்பின் மருத்துவ இயக்குனர் டாக்டர் கிம் பாய்ட் கூறுகையில், "மன உறுதி மற்றும் சுயக்கட்டுப்பாடு போன்ற வார்த்தைகள் தவறானவை. குறைவாகச் சாப்பிடுங்கள் மற்றும் அதிகமாக உடற்பயிற்சி செய்யுங்கள், உடல் எடை குறைந்துவிடும்' என்று பல தசாப்தங்களாக மக்களிடம் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் உடல் பருமன் என்பது அதைவிட மிகவும் சிக்கலான ஒரு விஷயம்" என்று சொல்கிறார்.

அவர் மட்டுமல்ல, நான் பேசிய வேறு சில நிபுணர்களும், ஒருவரின் எடை அதிகமாக இருப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள், அவற்றில் சில இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் நிலைமை அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்பது தெளிவாகிறது.

பிரிட்டன், இந்தச் சிக்கலைக் கையாள சில விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இரவு 9 மணிக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ஜங்க் ஃபுட் விளம்பரங்கள் மற்றும் ஆன்லைன் விளம்பரங்களுக்கு முழுமையான தடை தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இருப்பினும், பிரிட்டனில் அதிகரித்து வரும் உடல் பருமன் சிக்கலைக் கையாள இந்த நடவடிக்கை போதுமானதாக இருக்காது என்று பலர் கருதுகின்றனர். அங்கு சராசரியாக நான்கு வயது வந்தவர்களில் ஒருவர் உடல் பருமன் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-

உயிரியலுக்கு எதிரான போராட்டம்

உடல் பருமன், உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லண்டனில் உள்ள கிளீவ்லேண்ட் கிளினிக்கின் உணவுமுறைத் தலைவரான பினி சுரேஷ், எடையைக் கட்டுப்படுத்தவும் பராமரிக்கவும் மன உறுதியை மட்டுமே சார்ந்திருப்பது நியாயமற்றது என்று கூறுகிறார் (பிரதிநிதித்துவ படம்).

பேராசிரியர் சதாஃப் ஃபரூக்கி ஓர் ஆலோசகர், உட்சுரப்பியல் நிபுணர் மற்றும் கடுமையான உடல் பருமன் மற்றும் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்.

"ஒருவருடைய எடை எவ்வளவு கூடுகிறது என்பதில் அவர்களுடைய மரபணுக்களின் தாக்கம் அதிகம் உள்ளது. இந்த மரபணுக்கள் ஒவ்வொரு மனிதரிடமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன," என்று அவர் கூறுகிறார்.

குடலில் இருந்து மூளைக்கு அனுப்பப்படும் சமிக்ஞைகளுக்கு ஏற்ப, பசி மற்றும் உணவு உண்பதைக் கட்டுப்படுத்தும் மூளையின் சில பகுதிகளை சில குறிப்பிட்ட மரபணுக்கள் பாதிக்கின்றன என்று அவர் கூறுகிறார்.

"உடல் பருமன் உள்ளவர்களிடம் இந்த மரபணுக்களில் சில மாற்றங்கள் அல்லது பிறழ்வுகள் காணப்படுகின்றன. அதாவது அவர்களுக்கு மற்றவர்களை விட அதிக பசி எடுக்கும் மற்றும் சாப்பிட்ட பிறகும் வயிறு நிறைந்த உணர்வு அவர்களுக்குக் குறைவாகவே இருக்கும்."

இதுவரை அடையாளம் காணப்பட்ட மரபணுக்களில் மிகவும் முக்கியமானது MC4R மரபணு ஆகும். இந்த மரபணுவில் ஏற்படும் ஒரு மாற்றம், ஒருவரை அதிகமாகச் சாப்பிடத் தூண்டுகிறது. இதனால் வயிறு நிறைந்துவிட்டது என்ற உணர்வு நமக்கு மிகக் குறைவாகவே ஏற்படுகிறது. உலகில் தோராயமாக ஐந்தில் ஒருவருக்கு இந்த மரபணு வகை காணப்படுகிறது.

பேராசிரியர் ஃபாரூக்கி மேலும் கூறுகையில், "பிற மரபணுக்கள் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கின்றன. அதாவது நாம் எவ்வளவு விரைவாக ஆற்றலை எரிக்கிறோம் என்பதை இது தீர்மானிக்கிறது. இதன் காரணமாக, ஒரே அளவு உணவைச் சாப்பிட்டாலும் சிலருக்கு மற்றவர்களை விட எடை மற்றும் கொழுப்பு அதிகமாகக் கூடும். அல்லது அவர்கள் உடற்பயிற்சி செய்யும் போது குறைவான கலோரிகளே செலவாகும்."

எடையைப் பாதிக்கும் இது போன்ற ஆயிரக்கணக்கான மரபணுக்கள் இருக்கலாம் என்றும், அதில் 30 முதல் 40 மரபணுக்களைப் பற்றி மட்டுமே நாம் விரிவாக அறிந்துள்ளோம் என்றும் அவர் மதிப்பிடுகிறார்.

உடல் பருமன், உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதய நோய், பக்கவாதம், வகை 2 நீரிழிவு நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களுக்கும் உடல் பருமன் வழிவகுக்கும் (பிரதிநிதித்துவ படம்)

யோ-யோ டயட்டிங்கின் பின்னணியில் உள்ள அறிவியல்

உடல் பருமன் குறித்த இந்தக் கதையில் இன்னும் பல பகுதிகள் உள்ளன. உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணரும், 'Why We Eat Too Much' புத்தகத்தின் ஆசிரியருமான ஆண்ட்ரூ ஜென்கின்சன் சுவாரஸ்யமான விஷயத்தை விளக்குகிறார்.

ஒவ்வொருவருடைய மூளையும் ஒரு குறிப்பிட்ட எடையைத்தான் - அது அதிக எடையாக இருந்தாலும் சரி - அந்த நபருக்குச் சரியான எடை என்று நினைத்துக் கொள்கிறது. இது 'செட் வெயிட் பாயிண்ட் தியரி' என்று அழைக்கப்படுகிறது.

அவர் கூறுகையில், "இந்த நிர்ணயிக்கப்பட்ட எடை மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் உங்கள் உணவுச் சூழல், மன அழுத்தம் மற்றும் தூக்கம் போன்ற பிற காரணிகளும் இதில் பங்கு வகிக்கின்றன," என்கிறார்.

இதன் பொருள் நம் உடல் எடை ஒரு தெர்மோஸ்டாட் போலச் செயல்படுகிறது. உங்கள் உடல் தனக்கு விருப்பமான அந்த எடை வரம்பைத் தக்கவைக்க முயல்கிறது. இந்தத் தத்துவத்தின்படி, எடை அந்த 'நிர்ணயிக்கப்பட்ட புள்ளியை' விடக் குறைந்தால், பசி அதிகரிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றம் மெதுவாகிறது. இது குளிராக இருக்கும்போது தெர்மோஸ்டாட் வெப்பத்தை அதிகரிப்பதைப் போன்றது.

டாக்டர் ஜென்கின்சன் கூறுகையில், ஒருமுறை அந்தப் புள்ளி செட் ஆகிவிட்டால், வெறும் மன உறுதியால் அதனை மாற்றுவது மிகவும் கடினம். இதுவே 'யோ-யோ டயட்டிங்' முறையையும் விளக்குகிறது.

"உதாரணத்திற்கு உங்கள் எடை 127 கிலோ என்று வைத்துக்கொள்வோம். உங்கள் மூளையும் அதை 127 கிலோவாகவே வைத்திருக்க விரும்புகிறது. நீங்கள் குறைவான கலோரி உணவை எடுத்து 12 கிலோ எடையைக் குறைத்தால், உங்கள் உடல் நீங்கள் பட்டினியாக இருப்பதாக நினைத்து எதிர்வினையாற்றும்."

அவர் மேலும் கூறுகையில், "இதன் விளைவாக உங்களுக்கு அதிக பசி எடுக்கும், உணவைத் தேடுபவராக உங்கள் நடவடிக்கை மாறிவிடும், மற்றும் வளர்சிதை மாற்றம் குறைந்துவிடும். இந்த பசி சமிக்ஞைகள் தாகம் எடுப்பதைப் போலவே மிகவும் வலிமையானவை. இவை நாம் உயிர்வாழ்வதற்காக உருவாக்கப்பட்டவை. இவ்வளவு தீவிரமான பசியை அலட்சியப்படுத்துவது என்பது உண்மையில் மிகவும் கடினமான காரியம்," என்று சொல்கிறார்.

உடல் பருமன், உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் உடல் பருமன் மரபியல் ஆய்வின் தலைவரான பேராசிரியர் ஃபரூக்கியின் கூற்றுப்படி, ஒரே அளவு உணவை சாப்பிட்டாலும் சிலருக்கு எடை அதிகரிக்கும், சிலருக்கு எடை அதிகரிப்பதில்லை (பிரதிநிதித்துவ படம்)

இதன் பின்னணியில் உள்ள அறிவியலில் லெப்டின் ஹார்மோனின் பங்கு குறித்து டாக்டர் ஜென்கின்சன் விளக்குகிறார்.

அவர் கூறுகையில், "இது கொழுப்பு செல்கள் உருவாக்கும் ஹார்மோன் ஆகும். இது மூளையில் உங்கள் எடையின் நிர்ணயிக்கப்பட்ட புள்ளியை கட்டுப்படுத்தும் பகுதியான ஹைப்போதாலமஸிற்கு ஒரு சமிக்ஞை போலச் செயல்படுகிறது. உடலில் எவ்வளவு ஆற்றல் சேமிக்கப்பட்டு உள்ளது என்பதை இது மூளைக்குத் தெரிவிக்கிறது."

"ஹைப்போதாலமஸ் உடலில் உள்ள லெப்டின் அளவைக் கண்காணிக்கும். நாம் அதிக ஆற்றலையோ அல்லது அதிக கொழுப்பையோ சேமிக்கிறோம் என்று அது உணர்ந்தால், தானாகவே நமது உடல்களின் செயல்களை மாற்றி, பசியைக் குறைத்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்."

குறைந்தபட்சம் லெப்டின் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று டாக்டர் ஜென்கின்சன் கூறுகிறார். ஆனால் பெரும்பாலும், குறிப்பாக மேற்கத்திய உணவு முறைகளால் இந்தச் செயல்முறை தோல்வியடைகிறது. இதற்குக் காரணம், லெப்டின் சமிக்ஞையும் இன்சுலின் ஹார்மோனும் ஒரே மாதிரியான சமிக்ஞைப் பாதையைப் பகிர்ந்து கொள்கின்றன.

டாக்டர் ஜென்கின்சனின் கூற்றுப்படி, "உடலில் இன்சுலின் அளவு மிகவும் அதிகமாக இருந்தால், அது லெப்டின் அனுப்பும் சமிக்ஞையை பலவீனப்படுத்துகிறது. இதனால் திடீரென மூளையால் உடலில் எவ்வளவு கொழுப்பு படிந்துள்ளது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது."

ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த நிர்ணயிக்கப்பட்ட எடைப் புள்ளி என்பது நிலையானது அல்ல. வாழ்க்கை முறையில் மாற்றம், போதுமான தூக்கம், மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் படிப்படியாக மாற்ற முடியும்.

இது, தெர்மோஸ்டாட்டை (Thermostat) மீண்டும் ரீசெட் செய்வதற்கு ஒப்பானது. காலப்போக்கில், மெதுவான மற்றும் நிலையான மாற்றங்கள் உடல் ஒரு புதிய, ஆரோக்கியமான எடை வரம்பிற்குப் பழகிக்கொள்ள உதவும்.

உடல் பருமன் என்ற ஆபத்தான நிலை

உடல் பருமன், உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகள், உணவு விலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, The Food Foundation அமைப்பின் கடந்த ஆண்டு அறிக்கையின்படி, ஆரோக்கியமான உணவுகள், குறைவான ஆரோக்கியம் கொண்ட உணவுகளை விட இரு மடங்குக்கும் மேல் விலை உயர்ந்தவை

இந்தக் காரணங்கள் எதுவுமே உடல் பருமன் ஏன் இவ்வளவு வேகமாக அதிகரிக்கிறது என்பதை விளக்கவில்லை. ஏனென்றால், நமது மரபணுக்களோ அல்லது நமது உடலின் உயிரியல் கட்டமைப்போ திடீரென மாறிவிடவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளில், அதிக எடை அல்லது உடல் பருமன் பிரிவில் வரும் வயது வந்தவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹெல்த் ஃபவுண்டேஷனின் 2025-ம் ஆண்டின் பகுப்பாய்வு, பிரிட்டனில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பெரியவர்கள் இந்தப் பிரிவில் உள்ளதைக் காட்டுகிறது. இதில் சுமார் 28 சதவீதம் பேர் உடல் பருமன் கொண்டவர்கள்.

இதற்கு முக்கிய காரணம், தரம் குறைந்த மற்றும் அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் ஆகும். குறிப்பாக 'அல்ட்ரா-புராசஸ்டு' வகை உணவுகள் அதிக அளவில் கிடைப்பதும், அவற்றின் விலை குறைவாக இருப்பதுமே இதற்கு முக்கியமான காரணமாகும்.

இதனுடன் துரித உணவுகள் மற்றும் சர்க்கரை கலந்த பானங்களின் ஈர்க்கும் விளம்பரங்கள், உண்ணும் உணவின் அளவு அதிகரிப்பு மற்றும் நகர்ப்புற வாழ்க்கை அல்லது நேரமின்மையால் உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகள் குறைந்தது என அனைத்தும் ஒன்றிணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது.

"இதன் விளைவாக ஒட்டுமொத்த மக்கள் தொகையும் அதிக உடல் பருமன் கொண்டவர்களாக மாறிவிட்டோம். அதிலும் குறிப்பாக, மரபணு ரீதியாக உடல் எடை கூட வாய்ப்புள்ளவர்களுக்கு எடை மிக வேகமாக அதிகரித்துள்ளது," என்று பேராசிரியர் ஃபாரூக்கி கூறுகிறார்.

பொது சுகாதார நிபுணர்கள் இதனை 'ஒபிசோஜெனிக் சூழல்'என்று அழைக்கிறார்கள். 1990-களில் முதன்முதலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. உணவு கிடைப்பதில் உள்ள வசதி, சந்தைப்படுத்துதல் மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறை போன்ற வெளிப்புறக் காரணிகளே உடல் பருமன் அதிகரிக்கக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தொடர்புபடுத்தியபோது இந்தச் சொல் உருவானது.

பல நிபுணர்களின் கூறுவதன்படி, இந்தக் காரணிகள் அனைத்தும் இணைந்து ஒருவரை அதிகமாகச் சாப்பிடத் தூண்டுகின்றன மற்றும் உடல் உழைப்பைக் குறைக்கின்றன. இதன் பொருள், மிகுந்த மன உறுதியுடன் இருப்பவர்கள் கூடச் சீரான உடல் எடையைப் பராமரிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

விருப்ப சக்தி அல்லது மன உறுதி என்பது ஏன் ஒரு விவாதத்திற்குரிய சொல்லாக மாறிவிட்டது என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

உடல் பருமன், உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டனில், இரவு 9 மணிக்கு முன் தொலைக்காட்சியில் சில ஆரோக்கியமற்ற உணவுகளை விளம்பரப்படுத்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது, மேலும் அவற்றின் ஆன்லைன் விளம்பரத்தையும் (குறியீட்டு படம்) முற்றிலுமாக தடை செய்துள்ளது.

'உடல் பருமன் ஒரு தனிப்பட்ட பொறுப்பு' பற்றிய விவாதம்

நியூகாஸில் சிட்டி கவுன்சில் அலுவலகத்தில் பணிபுரியும் பொதுச் சுகாதார இயக்குநர் ஆலிஸ் வைஸ்மேன், எங்கு பார்த்தாலும் உணவுகளையே பார்க்கிறார்.

"ஆங்காங்கே காபி ஷாப்கள், பேக்கரிகள் மற்றும் டேக்-அவே கடைகள் என எங்கும் உணவகங்கள் நிறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. எந்தவொரு உணவகத்தையும் கடக்காமல் உங்களால் பள்ளிக்கோ அல்லது வேலைக்கோ செல்ல முடியாது. இவ்வாறு கண்களால் பார்க்கும்போது, நாம் வெளியில் செல்லும்போதும், வேலைக்குச் செல்லும்போதும் பல டேக்-அவே கடைகளைக் கடந்தால், அங்கிருந்து எதையாவது வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் உடல் தனது சூழலில் உள்ள உணவைப் பார்த்தவுடன் அதற்கு எதிர்வினையாற்றுகிறது," என்கிறார்.

கேட்ஸ்ஹெட் பகுதியில் பொதுச் சுகாதார இயக்குநராகப் பணியாற்றி வரும் வைஸ்மேன், 2015-ம் ஆண்டிலிருந்து புதிய சூடான உணவு விற்பனை செய்யும் கடைகளுக்கு அங்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று சொல்கிறார்.

இருந்தபோதிலும், நாடு முழுவதும் துரித உணவகங்கள் மற்றும் டேக்-அவே தொழில்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. இந்தத் தொழிலின் ஆண்டு மதிப்பு 30 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும். ஆஃப்காம் தகவல் தொடர்பு சந்தையின் சமீபத்திய அறிக்கையின்படி, பிரிட்டனின் உணவு விளம்பரச் செலவுகளில் அதிகப்படியான கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை கொண்ட இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், துரித உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஆனால், ஜங்க் ஃபுட் அல்லது அதிகாரப்பூர்வமாக "ஆரோக்கியம் குறைந்த உணவுகள்" என அழைக்கப்படுபவற்றின் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் விளம்பரங்களைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட புதிய நடவடிக்கைகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே பலன் தரும் என்று வைஸ்மேன் கூறுகிறார்.

தி ஃபுட் ஃபவுண்டேஷன் அமைப்பின் கடந்த ஆண்டு அறிக்கை ஒன்றில், ஆரோக்கியமான உணவுகள் பிற ஆரோக்கியம் குறைந்த உணவுகளை விட இரண்டு மடங்கு அதிக விலை கொண்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது என்பது பண நெருக்கடி உள்ள குடும்பங்களுக்கு மிகவும் கடினம்," என்று வைஸ்மேன் கூறுகிறார். "தனிப்பட்ட பொறுப்பிற்கு இதில் பங்கில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், எது மாறியிருக்கிறது என்று நாம் சிந்திக்க வேண்டும். நமது மன உறுதி திடீரென்று குறைந்துவிடவில்லை," என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்தக் கருத்தை ஆமோதிக்கும் உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர் பினி சுரேஷ், "நாம் அதிகமாகச் சாப்பிடுவதற்காகவே உருவாக்கப்பட்ட சூழலில் வாழ்ந்து வருகிறோம். உடல் பருமன் என்பது ஒருவருடைய குண நலனில் உள்ள குறைபாடு அல்ல. இது உயிரியல் காரணிகளாலும், உடல் பருமனைத் தூண்டும் சூழலாலும் உருவாகும் சிக்கலான மற்றும் நீண்டகால நிலையாகும். வெறும் மன உறுதி மட்டுமே இதற்குப் போதாது. உடல் எடையைக் குறைப்பதைக் வெறும் ஒழுக்கக் கட்டுப்பாடு சார்ந்த விஷயமாக மட்டும் கருதுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று கருதுகிறார்.

இருப்பினும், மன உறுதி குறித்த மக்களின் கருத்துக்களில் வேறுபாடுகள் உள்ளன. 'A Calorie is a Calorie' என்ற புத்தகத்தின் ஆசிரியரான பேராசிரியர் கீத் ஃப்ரெய்ன், 40 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு அதிகமான அளவில் உடல் பருமன் கொண்டவர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறார்.

"சூழ்நிலைதான் மாறியிருக்கிறதே தவிர, மக்களின் மன உறுதியோ அல்லது வேறு ஏதுமோ மாறவில்லை. மன உறுதி என்பதை முற்றிலும் புறக்கணிப்பதன் மூலம், மக்கள் தங்களுக்கு விருப்பமில்லாத அல்லது ஆரோக்கியத்திற்குப் பாதகமான உடல் எடையை மிக எளிதாக ஏற்றுக்கொள்வார்களோ என்றே கவலைப்படுகிறேன்," என்கிறார்.

வெற்றிகரமாக உடல் எடையைக் குறைத்து, அதனைப் பராமரித்து வரும் நபர்களின் பெரிய தரவுத்தளத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார். உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள தேசிய எடை கட்டுப்பாட்டுப் பதிவேட்டில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

கீத் ஃப்ரெய்னின் கூற்றுப்படி, "அவர்கள் உடல் எடையைக் குறைப்பதையும், குறைத்த எடையைத் தக்கவைப்பதையும் 'மிகக் கடினமான' காரியம் என்று கூறுகிறார்கள். அதிலும் குறைந்த எடையைத் தொடர்ந்து பராமரிப்பது இன்னும் சவாலானது. அத்தகையவர்களிடம் சென்று, 'உங்கள் வெற்றிக்கும் மன உறுதிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்று சொன்னால், அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள்."

உடல் பருமன், உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உடல் பருமனை சமாளிக்க கட்டுப்பாடு அவசியம் என்று சிலர் நம்புகிறார்கள் (பிரதிநிதித்துவ படம்)

சட்டம் மக்களை எவ்வளவு தூரம் வழிநடத்த முடியும்?

இந்த விவகாரத்தில், உடல் பருமனைத் தடுப்பதில் அரசாங்கம் எந்த அளவிற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.

உடல் பருமன் சிக்கலைக் கையாள ஒழுங்குமுறை விதிகள் ஒரு முக்கியமான கருவி என்று வைஸ்மேன் நம்புகிறார். 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்'போன்ற விளம்பரங்கள், மக்கள் எதையும் யோசிக்காமல் பொருட்களை வாங்குவதற்குத் தூண்டுகோலாக அமைகின்றன என்பது அவரது வாதம்.

ஆனால், வலதுசாரி சிந்தனைக் குழுவான 'பாலிசி எக்ஸ்சேஞ்ச்' அமைப்பின் சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் கேரத் லியோன், அதிக சட்டங்களைக் கொண்டு வருவது சரியான தீர்வாகாது என்று கருதுகிறார்.

"சட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் மக்களை ஆரோக்கியமானவர்களாக மாற்றிவிட முடியாது. மக்கள் விரும்பி உண்ணும் உணவுகளுக்குத் தடை விதிப்பதும், வரி போடுவதும் அவர்களின் வாழ்க்கையை மேலும் கடினமாக்கிவிடும். அவர்களின் மகிழ்ச்சியைக் குறைப்பதோடு பொருட்களின் விலையையும் உயர்த்தும். பிரிட்டன் ஏற்கனவே விலைவாசி உயர்வால் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில் இது சரியானதல்ல."

மற்றொரு வலதுசாரி சிந்தனைக் குழுவான 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எகனாமிக் அஃபையர்ஸ்' அமைப்பின் வாழ்க்கை முறை பொருளாதாரப் பிரிவுத் தலைவர் கிறிஸ்டோபர் ஸ்னோடன், உடல் பருமன் ஒரு "தனிப்பட்ட பிரச்சனை" என்றும், பொது சுகாதாரப் பிரச்சினை அல்ல என்றும் நம்புகிறார்.

"உடல் பருமன் என்பது ஒரு தனிநபரின் சொந்த முடிவுகளால் ஏற்படுகிறது. எனவே, ஒரு தனிநபரைத் தாண்டிச் செல்ல முடியாது. மக்களின் எடையைக் குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்று சொல்வது மிகவும் விசித்திரமானதாகத் தோன்றுகிறது."

மேலும், "இந்த புதிய கொள்கைகள் குறித்து ஒரு கடுமையான மற்றும் சுயாதீனமான மதிப்பீட்டை நான் காண விரும்புகிறேன். அவை பலன் அளிக்கவில்லை என்றால், அவற்றை ரத்து செய்ய வேண்டும்," என்றும் அவர் சொல்கிறார்.

உடல் பருமன், உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துரித உணவு மற்றும் டேக்-அவே தொழில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது (பிரதிநிதித்துவ படம்)

மன உறுதியைப் பொறுத்தவரை, அது எப்போதும் ஏதேனும் ஒரு பாத்திரத்தை வகிக்கும். ஒரே வித்தியாசம் என்னவென்றால், அது எந்த அளவுக்கு முக்கியமானதாக இருக்க முடியும் என்று நிபுணர்கள் நினைக்கிறார்கள் என்பதுதான்.

இதுவொரு பெரிய படத்தின் ஒரு பகுதி மட்டுமே என்று உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர் பினி சுரேஷ் நம்புகிறார். இதில் முதல் படி, எடை நிர்வாகத்தில் பிற காரணிகளைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதாகும்.

"இந்த அணுகுமுறை மன உறுதியைப் பற்றிய தார்மீக முடிவுகளிலிருந்து கவனத்தை திசை திருப்புகிறது. இது இரக்கம் மற்றும் அறிவியல் அடிப்படையிலான ஆதரவு அமைப்பை நோக்கி கவனத்தை திசை திருப்புகிறது. இறுதியில் இது மக்களுக்கு நீண்டகால வெற்றிக்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது."

பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் டாக்டர் எலினோர் பிரையன்ட், மன உறுதியை வலுப்படுத்த பல வழிகள் உள்ளன என்று கூறுகிறார். "இது எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. இது உங்கள் மனநிலை, நீங்கள் எவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள், எவ்வளவு பசியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது..."

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இது குறித்து நீங்கள் எவ்வாறு சிந்திக்கிறீர்கள் என்பதும் மிக முக்கியமானது. மன உறுதி என்பது இரண்டு வகைப்படும் - ஒன்று நெகிழ்வானது அதாவது வளைந்துக் கொடுப்பது, மற்றொன்று தீவிரமானது, கடுமையானது.

இந்த விஷயத்தில் கடுமையான மன உறுதி கொண்ட ஒருவர், எதனையுமே 'வெள்ளை அல்லது கருப்பு' என்ற கண்ணோட்டத்திலேயே பார்ப்பார்.

டாக்டர் எலினோர் பிரையன்ட் கருத்துப்படி, "நீங்கள் ஏதேனும் ஒரு தின்பண்டத்தின் மீதான ஆசைக்கு அடிபணிந்து விட்டால், நீங்கள் தோற்றுவிட்டதாகக் கருதி பாதியிலேயே விட்டுவிடுவீர்கள். அந்த ஒரு திண்பண்டத்தை சாப்பிட்டுவிட்டால், அத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள்."

உளவியல் ரீதியாக, இது 'தடையற்ற உணவு உண்ணுதல்' என்று அழைக்கப்படுகிறது.

டாக்டர் பிரையன்ட் மேலும் கூறுகையில், "அதே சமயம், நெகிழ்வான மன உறுதி கொண்ட ஒருவர், 'சரி, நான் ஒரு பிஸ்கட் சாப்பிட்டுவிட்டேன். ஆனால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்' என்று கூறுவார். எனவே, நெகிழ்வான அணுகுமுறையே அதிக வெற்றியைத் தரும் என்று சொல்லத் தேவையில்லை."

ஆனால், "வாழ்க்கையின் பிற விஷயங்களை விட, உணவு விஷயத்தில் மன உறுதியைப் பயன்படுத்துவது மிகவும் கடினமானது," என்றும் அவர் கூறுகிறார்.

இதனை ஒப்புக்கொள்ளும் நிபுணர் பினி சுரேஷ், மக்கள் தங்களது மன உறுதியின் எல்லைகளைப் புரிந்துகொண்டால், அதனைப் பயன்படுத்தும் அவர்களின் திறன் உண்மையிலுமே வலுவடையும் என்று கூறுகிறார்.

அவரது கருத்துப்படி, "தங்களது சிக்கல் என்பது ஒழுக்கக் குறைபாட்டினால் ஏற்பட்டது அல்ல, அது உயிரியல் சார்ந்தது என்பதை நோயாளிகள் புரிந்துகொள்ளும்போது மாற்றம் நிகழ்கிறது. முறையான ஊட்டச்சத்து, சீரான உணவுப் பழக்கம், உளவியல் யுக்திகள் மற்றும் நடைமுறை இலக்குகளுடன் கூடிய ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்போது, உணவுடனான அவர்களின் உறவு கணிசமாக மேம்படுகிறது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு