'விருமாண்டி', 'லோகா', 'காந்தாரா'- சினிமாவில் நாட்டார் தெய்வக் கதைகள் எப்படி கையாளப்படுகின்றன?

நாட்டார் தெய்வக் கதைகள், திரைப்படங்கள், கேரளா, தமிழ்நாடு

பட மூலாதாரம், Wayfarer Films

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

நள்ளிரவை நெருங்கும் சமயம், அடர்ந்த வனத்தை ஒட்டிய ஒரு கேரள கிராமத்தை நோக்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் இளைஞன் ஒருவன் நடந்து செல்கிறான். இருள் சூழ்ந்த அந்தப் பாதையில், அவன் ஏந்திச் செல்லும் தீப்பந்தத்தின் ஒளியில், தூரத்தில் ஒரு அழகான பெண் நிற்பது போல தெரிகிறது.

அந்த இளைஞனிடம், 'கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வரும் வழியில் பாதை மாறி இங்கு வந்துவிட்டேன். என்னுடன் வீடு வரை வர முடியுமா? தனியாக செல்ல அச்சமாக உள்ளது' என கேட்கிறாள் அந்தப் பெண்.

சரி என அந்த இளைஞனும் உடன் செல்ல, போகும் வழியில் அவள் வெற்றிலை மடித்து அந்த இளைஞனுக்கு தருகிறாள். அதை வாங்கி வாயில் போட்டு மென்றவாறு, அந்தப் பெண்ணுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டே செல்கிறான்.

திடீரென, பின்னிருந்து ஒருவித உறுமல் சத்தம் கேட்க, அவன் திரும்பிப் பார்க்கிறான்.

அந்த அழகான பெண், இப்போது கோர வடிவத்துடன் ரத்தம் குடிக்கும் 'யக்ஷி' அல்லது 'நீலி'-யாக காட்சியளிக்கிறாள். கூர்மையான பற்களும், தலைவிரி கோலமுமாக, அவள் நெருங்க, இளைஞன் மயங்கிச் சரிகிறான். அடுத்த நாள், அந்த இளைஞனின் உயிரற்ற உடல் கிராமத்தின் எல்லையில் கண்டெடுக்கப்படுகிறது.

இது கேரளாவில் பல வருடங்களாக சொல்லப்படும், ஒரு நாட்டுப்புறக் கதை. கேரள எழுத்தாளர் கொட்டாரத்தில் சங்குன்னி தொகுத்த கேரள நாட்டுப்புறக் கதைகளின் பிரபல தொகுப்பான ஐதிஹ்யமாலா (Aithihyamala) உட்பட பல நூல்களில் இந்தக் கதை குறிப்பிடப்படுகிறது.

நாட்டார் தெய்வக் கதைகள், திரைப்படங்கள், கேரளா, தமிழ்நாடு

பட மூலாதாரம், InternetArchive

படக்குறிப்பு, 'யக்ஷி' அல்லது 'நீலி' குறித்த கதைகளை கேரளாவின் இலக்கியங்களிலும், திரைப்படங்களிலும் அதிகம் காண முடிகிறது.

இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு, 'கள்ளியங்காட்டு நீலி' அல்லது 'யக்ஷி' குறித்து பல திரைப்படங்கள் மலையாளத்தில் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'லோகா- சாப்டர் 1 சந்திரா' திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரம் இந்த கள்ளியங்காட்டு நீலி தான்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் இந்த 'கள்ளியங்காட்டு நீலிக்கு' ஒரு கோவில் உள்ளது.

மம்மூட்டி நடிப்பில் 2024இல் வெளியான பிரமயுகம் திரைப்படத்திலும் கேரள நாட்டுப்புறக் கதைகளின் கதாபாத்திரங்களான 'சாத்தன்', 'யக்ஷி' இடம்பெற்றிருக்கும்.

அதேபோல, 'காந்தாரா 1 மற்றும் 2' திரைப்படங்கள், கர்நாடகா மற்றும் கேரளாவின் துளு பகுதிகளில் வணங்கப்படும் நாட்டார் தெய்வங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

'காந்தாரா', 'லோகா- சாப்டர் 1 சந்திரா', 'பிரமயுகம்' போன்ற பான் இந்தியா அளவில் வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் இடம்பெற்ற நாட்டார் தெய்வம் சார்ந்த கதைகள், கதாபாத்திரங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

தமிழ்நாட்டிலும் நாட்டார் தெய்வங்கள் குறித்த கதைகள் அதிகம் உள்ள போதிலும், திரைப்படங்களில் அவை எந்தளவு கையாளப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு சில திரைப்படங்களே பதிலாக உள்ளன.

அதேசமயம், தமிழ்நாட்டின் நாட்டார் தெய்வங்களுக்கும் ஆணவப் படுகொலைகளுக்கும் பெரும் தொடர்பு இருப்பதாகவும், 'ஆணவக்கொலை மட்டுமல்லாது, போர், குடும்பப் பெருமை, குற்றத்தைத் தடுத்தல் எனப் பல்வேறு காரணங்களின் விளைவாகக் கொல்லப்பட்டவர்களும் தெய்வங்களாக தமிழ்ப் பண்பாட்டில் வணங்கப்பட்டு வருகின்றனர்' என்று பண்பாட்டு ஆய்வாளரான ஆ.சிவசுப்பிரமணியன் தனது 'ஆணவக் கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்' நூலில் குறிப்பிடுகிறார்.

'கள்ளியங்காட்டு நீலி'

நாட்டார் தெய்வக் கதைகள், திரைப்படங்கள், கேரளா, தமிழ்நாடு

பட மூலாதாரம், InternetArchive

படக்குறிப்பு, கேரள எழுத்தாளர் கொட்டாரத்தில் சங்குன்னி தொகுத்த கேரள நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பான 'ஐதிஹ்யமாலா'

"விளிம்பு நிலை மக்களுக்கு அவள் 'நீலி' எனும் கடவுள், கெட்ட சக்திகளுக்கு அவள் ஒரு 'யக்ஷி' (ரத்தம் குடிக்கும் காட்டேரி போன்ற ஒரு கதாபாத்திரம்)"- இது 'லோகா- சாப்டர் 1 சந்திரா' திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு வசனம்.

ஒரு ரத்தக் காட்டேரியாக அல்லது ஆபத்தான கதாபாத்திரமாக கேரள நாட்டுப்புறக் கதைகளிலும் திரைப்படங்களிலும் சித்தரிக்கப்பட்டு வந்த 'நீலி' ஒரு கதாநாயகியாக 'லோகா'-வில் சித்தரிக்கப்பட்டிருப்பார்.

இது குறித்துப் பேசிய கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் லக்ஷ்மி ப்ரியா, "கேரள நாட்டுப்புறக் கதைகளில் வரும் நீலி ஒரு தேவதாசியின் மகளாக, அல்லி என்ற பெண்ணாகப் பிறந்திருப்பாள். சாதிய மற்றும் பாலினம் சார்ந்த ஒடுக்குமுறைகளால் அவள் கொல்லப்படுவாள். பின்னர் நீலியாக மாறுவாள். அதுவும், இந்த நீலிக் கதை அழகாக இருக்கும் பெண்ணுக்கு பின்னால் ஆபத்து உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லியது. ஆணாதிக்க மற்றும் சாதிய அமைப்பு முறைகளால் வடிவமைக்கப்பட்ட இத்தகைய கதைகள் நீலியை சித்தரித்த விதம் வேறு. அதை 'லோகா' மாற்றியமைத்துள்ளது" என்கிறார்.

தமிழ்நாட்டின் நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பார்வதிபுரம், களியங்காட்டில், 'நீலி' ஒரு அம்மனாக வணங்கப்படுகிறார்.

"கேரள நாட்டுப்புறக் கதைகளில் வரும் 'நீலி' ஆண்களை காரணமேயின்றி கொல்பவளாகவும், ஒரு மாந்த்ரீக சக்தி வாய்ந்த ஆண் வந்து அவளை அடக்கி வைப்பதாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால், 'லோகா'-வில் நீலியை அடக்க வரும் 'காத்தனார்' எனும் ஆண் கதாபாத்திரம் நீலியுடன் சேர்ந்து தீய சக்திகளை அடக்குவது போல காட்டப்பட்டிருக்கும்."

"நாட்டுப்புறக் கதைகளை உண்மை வரலாறாக கருத முடியாது தான். ஆனால் அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். எனவே 'லோகா' மாதிரியான திரைப்படங்கள் வரவேற்கப்படவேண்டியவை" என்று கூறுகிறார் லக்ஷ்மி ப்ரியா.

ஆணவப் படுகொலைகளும் நாட்டார் தெய்வங்களும்

நாட்டார் தெய்வக் கதைகள், திரைப்படங்கள், கேரளா, தமிழ்நாடு

பட மூலாதாரம், A. Sivasubramanian

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கு அருகே சூரன்குடி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் தனிப்பட்ட ஒரு குடும்பத்தார் 'மங்களவடிவு' என்ற பெண் தெய்வத்தைக் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இத்தெய்வத்தின் தோற்றக் கதையை தனது 'ஆணவக் கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்' நூலில் பண்பாட்டு ஆய்வாளரான ஆ.சிவசுப்பிரமணியன் விளக்கியிருப்பார்.

2003இல் வெளியான 'விசில்' என்ற தமிழ் திரைப்படத்தில் இந்த மங்களவடிவு என்ற பெண்ணின் கதை பயன்படுத்தப்பட்டிருக்கும். 'நாகா' என்ற கதாபாத்திரத்திற்கு பின்புலமாக இந்தக் கதை சொல்லப்படும்.

ஆ.சிவசுப்பிரமணியனின் நூலின்படி, நிலக்கிழார் ஒருவரது வீட்டில் பிறந்தவர் மங்களவடிவு. அவரின் அழகில் மயங்கிய ஆங்கிலேய அதிகாரி ஒருவர், மங்களவடிவை தன் வீட்டிற்கு அனுப்பும்படி கட்டளையிட்டு சென்று விடுகிறார். இக்கட்டளையை மீறுவது முடியாத செயல் என்பதாலும், அதேசமயம் அக்கட்டளையை நிறைவேற்றுவதில் விருப்பம் இல்லை என்பதாலும், மங்களவடிவைக் கொல்ல அவரது குடும்பத்தார் முடிவு செய்கிறார்கள்.

அதன்படி, வீட்டில் நெல் அல்லது தேங்காய் நெற்றுக்களை சேமித்து வைக்க உதவும் ஒரு நிலவறையில் மங்களவடிவை பூட்டி வைத்து விட்டு, வீட்டையும் பூட்டி விட்டு குடும்பத்தார் ஊரைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள்.

இத்தகைய நிலவறைகள் நான்கு பக்கமும் ஜன்னலோ வாயிலோ இன்றி அமைக்கப்பட்டிருக்கும். காற்று புகாத அந்த அறையில் ஒரு பெண்ணை பல நாட்கள் அடைத்து வைத்தால் என்ன நடக்கும் என தனியாகச் சொல்லத் தேவையில்லை எனக் குறிப்பிடுகிறார் ஆ.சிவசுப்பிரமணியன்.

"சமூகத்தில் இருக்கும் பல்வேறு அடக்குமுறைகளின் காரணமாக ஆணவக் கொலை செய்யப்பட்டவர்களில் பலர், பிற்காலத்தில் நாட்டார் தெய்வங்களாக உருவெடுத்துள்ளனர். கொலையுண்டவர்களைச் சார்ந்தவர்கள் அவர்களை தெய்வமாக்கி, கோவில் எழுப்பி வழிபடுவது மட்டுமின்றி, கொலை செய்தவர்களும் தாங்கள் கொன்றவர்களை வழிபடுவார்கள்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஆனால், 'விசில்' திரைப்படத்தில் 'நாகா' எனும் 'நாகம்மாள்' கதாபாத்திரம், தனக்கு தன் குடும்பத்தார் செய்த அநியாயத்திற்காக பேயாக மாறி, பழிவாங்கத் தொடங்கினார், இப்போதும் பேயாக அலைகிறார் என்பது போல ஒரு கதை சொல்லப்படும்.

"தமிழில் பல நாட்டார் தெய்வக் கதைகள் பல்வேறு காலகட்டங்களில் மாற்றப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு காத்தவராயன் என்ற நாட்டார் தெய்வம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர், வேறு சமூக பெண்ணை காதலித்தார் என கொல்லப்படுகிறார். ஆனால் அவரை அப்படியே சித்தரிக்காமல் முன்ஜென்மத்தில் செய்த தவறால் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறக்கிறார் என திரித்து கூறும் கதைகளும் உள்ளன." என்கிறார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான ஆறு.ராமநாதன்.

"அப்படியிருக்க, வணிக நோக்கில், திரைப்படங்களுக்காக நாட்டார் தெய்வக் கதைகளை தேர்ந்தெடுப்பவர்கள், அதை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பது முக்கியம்" என்கிறார் அவர்.

'விருமாண்டிச் சாமி'

நாட்டார் தெய்வக் கதைகள், திரைப்படங்கள், கேரளா, தமிழ்நாடு

பட மூலாதாரம், RKFI

'பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய…

பேச்சியம்மா கூப்பிடுறா…

சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு…

சத்தியத்தை காத்து போடு…'

நடிகர் கமல்ஹாசனின் எழுத்து, இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான விருமாண்டி (2004) திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் வரிகள் இவை. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கருமாத்தூர் காட்டுக்குள்ளே' என்ற பாடலில் 'விருமாண்டி' என்ற மதுரை கருமாத்தூர் பேச்சியம்மன் கோவிலின் நாட்டார் தெய்வத்தின் கதை சொல்லப்படும்.

மதுரையில் சொல்லப்படும் செவிவழிக் கதைகளாகவே இவை காணப்படுகின்றன என்றும் இதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

'கருமாத்தூர் காட்டிற்குள் பேச்சியம்மா பூசை செய்யும்போது, அந்த சத்தம் கேட்டு அங்கு வரும் பேய்க்காமன், அவளை அங்கிருந்து துரத்துகிறான். பேய்க்காமனிடமிருந்து தன்னை பாதுகாக்க தன் அண்ணன் விருமாண்டியை வரவழைக்கிறாள் பேச்சியம்மா. பேய்க்காமனை விரட்டியடித்த பிறகும் கூட, தனக்கு எப்போதும் அண்ணன் துணையாக இருக்க வேண்டுமென என நினைத்து, ஒரு கிணற்றில் விருமாண்டியை சிறை வைத்து விடுகிறாள்.'

'உன்னைக் காப்பாற்ற வந்த என்னை இப்படி செய்துவிட்டாயே என அண்ணன் கேட்க, 'நீ இங்கேயே எனக்கு துணையாக இருக்க வேண்டும். அதற்காக, ஒவ்வொரு ஆடி மாதமும் உனக்கு பூசை செய்கிறேன்' என சத்தியம் செய்கிறாள்.' இதுவே 'விருமாண்டி' தெய்வத்தின் கதை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"விருமாண்டி திரைப்படத்தில் பாடல்களில் மட்டுமல்லாது, பல காட்சிகளிலும் இந்தக் நாட்டார் கதையின் குறியீடு இருக்கும். ஆனால் அது எம்ஜிஆர் நடித்த 'மதுரை வீரன்' (1956) திரைப்படம் போல முழுமையாக நாட்டார் கதையை எடுத்துக்கொள்ளவில்லை" என்கிறார் எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஜா.தீபா.

ஜா.தீபா குறிப்பிடுவது போல, நேரடியாக நாட்டார் தெய்வக் கதைகளை எடுத்துக்கொள்ளாமல், குறியீடுகளாக அவற்றை பயன்படுத்துவதற்கான சமீபத்திய உதாரணங்களாக இயக்குநர் மாரி செல்வராஜின் கர்ணன், பைசன் திரைப்படங்களைச் சொல்லலாம்.

அதேசமயம், மதுரை வீரன், சின்னதாயி, விருமாண்டி என தமிழில் சில திரைப்படங்கள் மட்டுமே நேரடியாக நாட்டார் தெய்வக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு வந்துள்ளன எனக் குறிப்பிடும் ஜா.தீபா, "இங்கு பல திரைப்படங்களில் ஆணவக் கொலையில் கொல்லப்படும் அல்லது அகால மரணம் அடையும் பெண், பேயாக மாறி பழிவாங்குகிறாள் என்றும் அவளை ஒரு ஆண் அல்லது தெய்வ சக்தி வந்து அடக்குகிறது என்று மட்டுமே காட்டுகிறார்கள். ஆனால், அதற்கு பின்னால் இருக்கும் சாதிய/ஆணாதிக்க ஒடுக்குமுறைகள் குறித்து பேசப்படுவதில்லை" என்று கூறுகிறார்.

"தமிழ்நாட்டில் எத்தனையோ பேசப்படாத நாட்டார் தெய்வக் கதைகள் உள்ளன, அதை சமூக அக்கறையோடு எடுத்தால் மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள்" என்கிறார் ஜா.தீபா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு