'கோலி இடத்தை நிரப்பி வருகிறார்' - சஞ்சு சாம்சன் குறித்து பாகிஸ்தானில் என்ன பேசப்படுகிறது?

பட மூலாதாரம், Alex Davidson-ICC/ICC via Getty Images
'கோலியின் இடத்தை சஞ்சு சாம்சன் நிரப்புகிறார்'
'சஞ்சு தனது சாதனையைக் காட்டிலும் அணியின் நலனுக்கே முன்னுரிமை அளித்தார்'
'அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது, ஆனால் அவர் எவ்வளவு உறுதியான மனதிடம் கொண்ட வீரர் என்பதை நிரூபித்துவிட்டார்.'
இவை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் சஞ்சு சாம்சன் குறித்து தெரிவித்துள்ள சில கருத்துக்கள்.
டி20 உலகக் கோப்பையில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், அவர் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திடும் இன்னிங்ஸை விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான அந்த முக்கிய போட்டியில், இந்தியாவை வெற்றி பெறச் செய்து அரையிறுதிக்கு இட்டுச் சென்ற இன்னிங்ஸ் அது.
அதன்பிறகு இந்தியாவில் மட்டுமல்லாமல், அண்டை நாடான பாகிஸ்தானிலும் சாம்சனின் இன்னிங்ஸ் மற்றும் அவரது முதிர்ச்சி குறித்துப் பேசப்பட்டு வருகிறது.
'அநீதி இழைக்கப்பட்டது, ஆனால் அவர் நிரூபித்துவிட்டார்'
ஜியோ நியூஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷித் லத்தீப் மற்றும் கிரிக்கெட் வீரர் அகமது ஷெஷாத் ஆகியோர் சஞ்சு சாம்சனை பாராட்டினர்.
அகமது ஷெஷாத் கூறுகையில், "சஞ்சு சாம்சனுக்கு அநீதி இழைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக விளையாடினாலும் அவர் அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார். மற்ற வீரர்கள் ரன் எடுக்காத காரணத்தினாலேயே இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்திய அணியில் எவ்வளவு போட்டி நிலவுகிறது என்பதை இது காட்டுகிறது. இந்தப் போட்டியில் சஞ்சு சூழலின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட விதம் மற்றும் தனது பதற்றத்தைக் கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது," என்றார்.
அதே நிகழ்ச்சியில் இருந்த ரஷித் லத்தீப் கூறுகையில், "அவர் வெற்றி ரன்னை அடித்த விதத்தைப் பார்க்கும்போது, பந்து எங்கே வரும் என்பது அவருக்கு முன்பே தெரிந்திருந்தது போலத் தோன்றியது. அதற்கு ஏற்பத் தனது கால்களின் அசைவுகளையும் அவர் மாற்றியமைத்துக்கொண்டார். இதுவே ஒரு சிறந்த வீரரின் அடையாளம்," என்றார்.

பட மூலாதாரம், Alex Davidson-ICC/ICC via Getty Images
அந்த நிகழ்ச்சியில் இருந்த பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கூறுகையில், "190-க்கும் அதிகமான ஸ்கோரை எட்டுவதற்கு ஒரு பெரிய இன்னிங்ஸ் தேவை. சஞ்சு சாம்சன் அந்த இன்னிங்ஸை விளையாடி இந்தியாவுக்குப் போட்டியை வென்று கொடுத்தார்," என்றார்.
ஒரு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் கூறுகையில், "சஞ்சு சதம் அடிக்க முயற்சி செய்யவில்லை. அணியின் தேவைக்கு ஏற்ப அவர் விளையாடினார். அவர் போட்டியை வெல்ல மட்டுமே விரும்பினார். அவரிடம் சதம் அடிப்பதற்கான பேராசை தெரியவில்லை," என்றார்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான முகமது யூசுப், சாம்சனைக் குறிப்பிடும்போது இந்தியாவின் கிரிக்கெட் உள்கட்டமைப்பைப் பாராட்டினார்.
அவர் எக்ஸ் தளத்தில், "சஞ்சு சாம்சன் விராட் கோலியின் இடத்தை நிரப்பி வருகிறார். இது இந்தியாவின் கிரிக்கெட் உள்கட்டமைப்பு எவ்வளவு ஆழமானது என்பதைக் காட்டுகிறது. சாம்சன் எந்த விதமான கண்மூடித்தனமான ஆட்டத்தில் ஈடுபடவில்லை. திறன்களையும், உறுதியான எண்ணங்களுடன் தனது ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தினார்," என்று பதிவிட்டுள்ளார்.
'இந்தியாவின் பெருமை'

பட மூலாதாரம், Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images
நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், சஞ்சு சாம்சனை 'கேரளாவின் பெருமை' என்று அழைத்தார்.
அவர் எக்ஸ் தளத்தில் மேலும், "அவரது அற்புதமான மற்றும் மிகச்சிறந்த இன்னிங்ஸிற்குப் பிறகு, நான் அவர் குறித்து மிகுந்த நிம்மதியையும் பெருமையையும் உணர்கிறேன். அவர் அணியில் தனது இடத்தை இழந்தபோது நான் மிகுந்த வருத்தமடைந்தேன். ஆனால் இன்று அவர் ஆரம்பத்திலிருந்தே அணியில் இருக்கத் தகுதியானவர் என்பதை உலகுக்குக் காட்டிவிட்டார்" என்று எழுதியுள்ளார்.
கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே எக்ஸ் தளத்தில், " திறமையை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது என நமக்கு எப்போதாவது நினைவுபடுத்த வேண்டிய தேவை இருந்தால், சஞ்சு சாம்சன் இன்று அதைச் செய்துள்ளார். அவர் ஒரு தனித்துவமான கிரிக்கெட் வீரர், ஆனால் இன்று அவரது உண்மையான தரம் அவரது முதிர்ச்சியில் தெரிந்தது - இறுதிவரை களத்தில் நின்று பொறுப்பை நிறைவேற்றும் குணத்தில் தெரிந்தது," என்று பதிவிட்டுள்ளார்.
இது தவிர இர்ஃபான் பதான், யுவராஜ் சிங் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவரைப் பாராட்டினர்.
ஞாயிற்றுக்கிழமை ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவுக்கு 196 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது. இதனை இந்திய அணி 19.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து எட்டியது. சஞ்சு சாம்சன் அவரது சிறப்பான இன்னிங்ஸிற்காக 'ஆட்ட நாயகன்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












