வங்கதேசத்தில் இருந்து தூதர்களின் குடும்பங்களை திரும்ப அழைத்த இந்தியா - வங்கதேசம் என்ன கூறுகிறது?

பட மூலாதாரம், @DrSJaishankar
- எழுதியவர், சுப்ஜோதி கோஷ்
- பதவி, பிபிசி
வங்கதேசத்தை 'குடும்பம் சாரா' தூதரகப் பணி இடமாகப் பதிவு செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாக பிபிசி அறிந்துள்ளது.
அதாவது, வங்கதேசத்தில் பணியமர்த்தப்படும் இந்திய தூதர்கள் மற்றும் அதிகாரிகள் இனி தங்கள் துணைவர் மற்றும் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் செல்ல முடியாது என்பது தான் இதன் பொருள்.
இதுவரை, இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த "குடும்பம் சாரா" பிரிவை இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தியிருந்தது. இந்த சமீபத்திய முடிவின் மூலம், அந்தப் பட்டியலில் வங்கதேசமும் சேர்க்கப்பட்டுள்ளது.
பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி, இந்த முடிவு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. வங்கதேசத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரிகளிடம், அவர்களின் துணைவர் மற்றும் குழந்தைகள் ஜனவரி 8-ஆம் தேதிக்குள் இந்தியா திரும்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
பள்ளி செல்லும் குழந்தைகளைக் கொண்ட அதிகாரிகளுக்கு கூடுதலாக ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
இதன் விளைவாக, கடந்த வியாழக்கிழமைக்குள் (ஜனவரி 15), டாக்கா, சிட்டகாங், குல்னா, சில்ஹெட் மற்றும் ராஜ்ஷாஹி ஆகிய இடங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் குடும்பங்கள் மிகக் குறுகிய கால அறிவிப்பில் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது.
இந்த முடிவு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை எந்த பொது அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், சவுத் பிளாக்கில் உள்ள பல வட்டாரங்கள் இந்த முடிவை பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளன.
'உளவுத்துறை தகவலின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்'

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்திற்கான முன்னாள் இந்திய உயர் ஆணையர் பினாக் ரஞ்சன் சக்ரவர்த்தி, பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வங்கதேசத்தின் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறார்.
இது தூதரக ஊழியர்களின் குடும்பங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் நம்புகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், "தேர்தலுக்கு முன்னதாக இத்தகைய முடிவு எடுக்கப்படுவது அசாதாரணமானது என்று நான் நினைக்கவில்லை. இந்திய குடிமக்கள் அல்லது தூதரக ஊழியர்களின் குடும்பங்களைக் குறிவைத்து வன்முறை நடத்தப்படலாம் என்பதற்கான சில உளவுத்துறை தகவல்கள் இந்தியாவிற்கு கிடைத்திருக்க வேண்டும். அதனால்தான் வங்கதேசம் 'குடும்பம் சாரா' பணி இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது," என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அவாமி லீக் போன்ற ஒரு பெரிய அரசியல் கட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை மற்றும் இந்த முடிவு தொடர்பாக நிறைய சர்ச்சைகள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ வன்முறை ஏற்படுவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது," என்றார்.
இருப்பினும், இந்த முடிவு தற்காலிகமானது என்று சக்ரவர்த்தி நம்புகிறார்.
தேர்தலுக்குப் பிறகு, ஓர் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நிலைமை சீராகும்போது, இந்தக் கொள்கை மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும், அதிகாரிகள் மீண்டும் தங்கள் குடும்பங்களுடன் வங்கதேசத்தில் வசிக்க அனுமதிக்கப்படலாம் என்றும் அவர் கருதுகிறார்.
தங்கள் நாட்டு தூதர்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே கடந்த சில காலமாகவே பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உயர் ஆணையர்களை நேரில் அழைத்து விளக்கம் கேட்கும் அளவிற்கு இந்த விவகாரம் முற்றியுள்ளது.
டிசம்பர் 20-ஆம் தேதி பிற்பகுதியில், வங்கதேசத்தில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி போராட்டம் நடத்திய ஒரு குழுவினர், டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஆணையர் ரியாஸ் ஹமிதுல்லாவின் இல்லத்தை நெருங்கியதாகத் தெரிகிறது. போராட்டக்காரர்கள் வங்கதேசத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதோடு, உயர் ஆணையரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
வங்கதேசத்தின் வெளியுறவு ஆலோசகர் தவ்ஹீத் ஹொசைன் இது குறித்து கூறுகையில், அதீத பாதுகாப்பு நிறைந்த சாணக்யபுரியில் உள்ள தூதரகப் பகுதிக்குள் போராட்டக்காரர்கள் உயர் ஆணையரின் இல்லத்திற்கு "மிக அருகில்" செல்ல முடிந்தது என்றால், அதற்கு அனுமதி அளிக்கப்பட்டதே காரணம் என்று தெரிவித்தார். அவரது கூற்று, போராட்டங்களுக்கு இந்தியாவின் ஆதரவு இருக்கக்கூடும் என்பதைக் குறிப்பதாகப் பார்க்கப்பட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக நிராகரித்தது. அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், வங்கதேச உயர் ஆணையரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் ஆதாரமற்றவை என்று தெரிவித்தார்.
'அதிகப்படியான எதிர்வினை'

பட மூலாதாரம், Getty Images
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள், வங்கதேசத்தை 'குடும்பம் சாரா' தூதரகப் பணி இடமாக அறிவிக்க இந்தியா முடிவு செய்தது.
டாக்காவில் குறைந்தது இரண்டு முறை பணியாற்றிய மற்றொரு மூத்த முன்னாள் இந்திய தூதர், இந்த நடவடிக்கையில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறினார். அமெரிக்க தூதர்களுக்குப் பல ஆண்டுகளாகவே வங்கதேசம் ஒரு 'குடும்பம் சாரா' பணி இடமாகவே இருந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் பிபிசியிடம் பேசுகையில், "2016-இல் டாக்காவின் ஹோலி ஆர்டிசன் பேக்கரி மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, வங்கதேசத்தில் பணியமர்த்தப்படும் அமெரிக்க தூதர்கள் தங்கள் துணைவர் மற்றும் குழந்தைகளை அழைத்து வர அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களில் பலர் இந்த முடிவை மாற்ற கடுமையாக முயற்சி செய்தும், அது ஒருபோதும் திரும்பப் பெறப்படவில்லை என்பதை நான் அறிவேன்," என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், "அமெரிக்கா கடந்த ஒரு தசாப்தமாக இந்த விதியைப் பின்பற்றி வருகிறது. அந்த வகையில் பார்த்தால், நாம் இப்போதுதான் இதை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்," என்றார்.
இந்தியாவின் இந்த முடிவு குறித்து தவ்ஹீத் ஹொசைன் பிபிசி செய்தியாளர் இஷாத்ரிதாவிடம் கூறுகையில், "இந்தியர்களின் பாதுகாப்பை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கே.கே.ஆர் அணி முஸ்தபிசுரை வாங்கியது, அவர் ஒன்றும் அரசியல்வாதி கிடையாது. ஆனால் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என இந்தியா ஒப்புக்கொண்டது. இத்தகைய விஷயங்கள் நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியா வங்கதேசத்தை பாகிஸ்தானுக்கு நிகரான பட்டியலில் வைக்கிறதா இல்லையா என்பது அதன் விருப்பம். இது வருத்தமளிக்கக்கூடியதுதான், ஆனால் அவர்களது முடிவை என்னால் மாற்ற முடியாது. அவர்கள் இங்கு பாதுகாப்பாக இல்லை என்று நினைத்தால், அவர்கள் அப்படிச் செய்யட்டும். அவர்களுக்குப் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக இதுவரை எந்தச் சம்பவமும் நிகழ்ந்தது கிடையாது," என்றார்.
மேலும், "கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவுடன் பல்வேறு பொறுப்புகளில் எனக்கு இருந்த அனுபவத்தை வைத்துப் பார்த்தால், இந்தியா இந்த விஷயத்தில் சற்று அதீதமாக எதிர்வினையாற்றுவதாகவே நான் கருதுகிறேன். இந்தியாவிடமிருந்து இன்னும் சமநிலையான பதிலை நான் எதிர்பார்த்திருப்பேன்." என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












