டிரம்பின் கிரீன்லாந்து அணுகுமுறை இந்தியாவுக்கு எவ்வாறு சாதகமாக மாறும்?

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், AFP via Getty Images

ஐரோப்பிய நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்கா தனது நட்பு நாடுகள் மீதே வரிகளை விதிக்கும்போது, வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்தியா அமெரிக்காவை முழுமையாக 'நம்ப' முடியாது என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கிரீன்லாந்து தொடர்பான தனது திட்டத்தை எதிர்த்தால், பிப்ரவரி முதல் இந்த எட்டு அமெரிக்க நட்பு நாடுகள் மீதும் புதிய வரிகளை விதிக்கப்போவதாக ஜனவரி 17 அன்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

பிப்ரவரி 1 முதல் இந்த நாடுகள் மீது 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், இது பின்னர் 25 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும், கிரீன்லாந்து தொடர்பான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இது தொடரும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

உண்மையில், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கவேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்றும், இதைப் பெறுவதற்குத் தேவைப்பட்டால் வலிமையை பயன்படுத்தவும் தான் தயங்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த எட்டு ஐரோப்பிய நாடுகளும் டிரம்பின் திட்டத்தை எதிர்க்கின்றன.

"கிரீன்லாந்தை முழுமையாகவும் இறுதியாகவும் வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் வரை," இந்த வரிகள் அமலில் இருக்கும் என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்றாவிட்டால், சீனா மற்றும் ரஷ்யா அதன் மீது கட்டுப்பாட்டைப் பெறும் அபாயம் அதிகரிக்கும் என்று டிரம்ப் வாதிட்டார்.

பிரதமத் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Prakash Singh/Bloomberg via Getty Images

இந்தியாவுக்கான வாய்ப்பு

டிரம்பின் மிரட்டலால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே வர்த்தகப் போர் ஏற்பட்டால், அது இந்தியாவுக்குச் சாதகமாக அமையும் என்று சந்தை வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக முடங்கியுள்ளன. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, டிரம்ப் மற்றும் ஐரோப்பா இடையிலான இந்த மோதலால், வர்த்தகம் தொடர்பாக இந்தியாவும் ஐரோப்பாவும் நெருங்கி வரக்கூடும் மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் வேகமெடுக்கலாம்.

இதனால் இந்தியாவின் மருந்துத் துறை, ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், எஃகு, ஆட்டோமொபைல், சூரிய சக்தி உபகரணங்கள் மற்றும் தோல் போன்ற துறைகள் வளர்ச்சி அடையக்கூடும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே ஆறு பில்லியன் பவுண்ட் மதிப்பிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தால் இரண்டு நாடுகளும் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வர்த்தக ரீதியாக அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைத்துவிட்டு, புதிய கூட்டாளிகளைத் தேட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இத்தகைய சூழலில் ஐரோப்பாவுடன் வர்த்தகத்தை அதிகரிப்பது இரு தரப்பிற்கும் லாபகரமானதாக இருக்கும்.

டிரம்பின் கிரீன்லாந்து அணுகுமுறை இந்தியாவுக்கு எப்படி லாபமாக மாறும்

பட மூலாதாரம், Brendan SMIALOWSKI/AFP via Getty

இந்தியாவுக்கான பாடம்

ரஷ்ய எண்ணெய் கொள்முதலைச் சுட்டிக்காட்டி டிரம்ப் இந்தியா மீது அதிக வரிகளை விதித்துள்ளார்.

குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் அமைப்பின் அஜய் ஸ்ரீவஸ்தவாவின் கூற்றுப்படி, அமெரிக்க அழுத்தத்தின் காரணமாக இந்தியா ஏற்கனவே தனக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா கணிசமாகக் குறைத்துள்ளது. சீனா, இரான் மற்றும் தென்னாப்ரிக்கா உடனான பிரிக்ஸ் கடற்படைப் பயிற்சியிலிருந்து பின்வாங்கியதுடன், இரான் மற்றும் வெனிசுவேலாவிலிருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்தியது.

இரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் அறிவிப்புக்கு பிறகு, இந்தியா இரானின் சாபஹார் துறைமுகத் திட்டத்திலிருந்து வெளியேறக்கூடும் என்ற செய்திகளும் வலுவடைந்துள்ளன.

இந்தநிலையில் சாபஹார் துறைமுகத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து நடத்துவதற்காக, அமெரிக்காவுடன் மட்டுமல்லாமல் இரானுடனும் தொடர்பில் இருப்பதாக இந்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலும் பொது மேடைகளிலும் இந்தியாவின் மீதான அமெரிக்காவின் அழுத்தம் தொடர்ந்து நீடிக்கிறது என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

"கிரீன்லாந்து விவகாரம் இந்தியாவுக்கு ஒரு தெளிவான பாடத்தைக் கற்பிக்கிறது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இருந்தாலும், எதிர்காலத்தில் அவர்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே வர்த்தக ரீதியாக அமெரிக்காவிற்கு ஒருதலைப்பட்சமான சலுகைகளை இந்தியா வழங்கக் கூடாது," என்றார்.

அமெரிக்க அழுத்தத்தினால் இந்தியா முடிவுகளை எடுக்கிறதா?

படகுகள் நின்றுகொண்டிருக்கும் காட்சி

பட மூலாதாரம், Bahram/Middle East Images/AFP via Getty Images

உத்தி விவகார நிபுணர் பிரம்மா செல்லானி சமூக ஊடக தளமான எக்ஸில், "2019-இல் அமெரிக்கா இரான் எண்ணெய் மீது தடை விதித்தபோது, இந்தியா திடீரென இரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. இது இந்தியா மற்றும் இரான் இடையிலான நீண்டகால எரிசக்தி உறவை முடிவுக்குக் கொண்டு வந்தது, இதன் நேரடி லாபம் சீனாவிற்குச் சென்றது." என எழுதியுள்ளார்.

"இன்று இரானின் கச்சா எண்ணெயை வாங்கும் ஒரே நாடு கிட்டத்தட்ட சீனாதான், அதுவும் உலகின் மிக மலிவான விலையில் வாங்குகிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தடைகளை வெளிப்படையாக மீறியும் சீனா மீது அமெரிக்கா எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை," என்று செல்லானி கூறுகிறார்.

"சாபஹார் துறைமுகம் தொடர்பான அமெரிக்காவின் தடைகளிலிருந்து விலக்கு ஏப்ரல் மாதத்தில் முடிவடைய உள்ள நிலையில், இந்தியா அந்தத் துறைமுகத்திலிருந்து பின்வாங்குகிறது. இது பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திற்கு (சீனாவால் இயக்கப்படுகிறது) இந்தியாவின் வியூக ரீதியான பதிலடியாகக் கருதப்பட்டது.

2024 மே மாதத்தில், சாபஹார் துறைமுகத்தில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தை உருவாக்கவும், தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், இயக்கவும் இந்தியாவுக்கு உரிமை வழங்கும் 10 ஆண்டு ஒப்பந்தத்தை இந்தியா–இரான் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டிருந்தன. இந்தநிலையில் இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது," என செல்லானி தெரிவிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு