பெண்களை துன்புறுத்தலில் இருந்து காப்பாற்றியவருக்கு தருமபுரியை ஆண்ட மன்னர் செய்த சிறப்பு

பட மூலாதாரம், ASI
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"எங்களிடம் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் ஏராளமான நடுகற்களும் உள்ளன. ஆனால், பெண்களைக் காப்பாற்றுவதற்காக எதிரிகளுடன் போராடி உயிர் நீத்த நபருக்காக வைக்கப்பட்ட இந்த நடுகல் முக்கியத்துவம் வாய்ந்தது" என்கிறார், இந்திய தொல்லியல் துறையின் (கல்வெட்டியல்) இயக்குநர் முனிரத்தினம் ரெட்டி.
தருமபுரி மாவட்டத்தில் நொளம்ப (Nolamba) மன்னர்களின் காலத்தில் நடப்பட்ட நடுகல் குறித்து இவ்வாறு அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
யார் இந்த நொளம்ப மன்னர்கள்? தருமபுரியில் அவர்கள் வைத்த நடுகல் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுவது ஏன்?
2 நடுகற்கள் கண்டெடுப்பு
தருமபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில் அமைந்துள்ளது நவலை கிராமம். விவசாயம் மற்றும் கால்நடை மேய்ச்சல் பிரதானமாக உள்ள இந்த கிராமத்தின் வயல்வெளிகளில் சில நாட்களுக்கு முன்பு இரண்டு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றில் ஒரு நடுகல்லில், "பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்" பற்றிய குறிப்புகள் இருந்ததாக, டிசம்பர் 15-ஆம் தேதி இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
'கன்னட மொழியில் இரண்டு நடுகற்கள்'
"கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த நடுகற்கள் கி.பி. 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை" என, இந்திய தொல்லியல் துறை கூறியுள்ளது.
அதில், "நவிலூரு (நவலை கிராமத்தின் தொன்மைப் பெயர்) பகுதியை நொளம்ப மன்னர் ஆட்சி செய்த போது சத்ரியன் புலியண்ணாவின் மகன் பிரிதுவா என்ற வீரர், பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்கு எதிரி வீரர்களுடன் சண்டையிட்டு இறந்தார்," என எழுதப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த யாக்கை மரபு அறக்கட்டளையின் நிர்வாகிகள் மூலம் இந்த நடுகற்கள் தொல்லியல் துறைக்கு வந்ததாகக் கூறுகிறார், இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் ரெட்டி.
"எங்களிடம் ஏராளமான நடுகற்கள் உள்ளன. ஆனால், பெண்களிடம் தவறாக நடக்க முயன்றவர்களை எதிர்த்து உயிர்நீத்த காரணத்தால் இந்த நடுகல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ASI
பண்டைய காலத்தில் கிராமங்களுக்குள் எதிரிகள் வந்துவிட்டால் மாடுகள், பெண்கள், கோவில்கள் ஆகிவற்றை காப்பாற்றுவது முக்கியமானதாக இருந்ததாகக் கூறும் முனிரத்தினம் ரெட்டி, "அவ்வாறு காப்பாற்றும் முயற்சியில் இறந்த நபர்களுக்கு நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளன" என்றார்.
"நவலையில் கிடைத்த நடுகல்லில், இறந்த அந்த நபரை சத்ரியர் என அழைத்துள்ளனர். இந்தக் கல்வெட்டு தந்தை, மகன் என இருவரையும் சத்ரியர்கள் எனக் குறிப்பிடுகிறது" என்கிறார் அவர்.
"நவலையில் நடந்த சண்டையில் இரண்டு அம்புகள் பாய்ந்து பிரிதுவா இறந்துவிட்டார். ஒரு சாதாரண மனிதன் சமூக நோக்கத்திற்காகப் போராடி இறந்ததால் அவரை சத்ரியர் எனக் குறிப்பிட்டுள்ளனர்" என்கிறார் கோவையைச் சேர்ந்த யாக்கை மரபு அறக்கட்டளையின் செயலர் குமரவேல்.
"இந்த கிராமத்தில் மூன்று நடுகற்கள் பதிவாகியுள்ளன. அங்கு நிலத்தைச் சீர்படுத்தும் முயற்சியின்போது இந்தக் கற்கள் கிடைத்ததாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"அந்த இடத்தை நாங்கள் ஆய்வு செய்தபோது இரண்டு நடுகற்கள் கிடைத்தன. கன்னட மொழியில் இருந்த அவற்றை தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடுகல்லில் கூறப்பட்டுள்ளது என்ன?
"கர்நாடகா, ஆந்திராவில் உள்ள சில பகுதிகளை நொளம்பர்கள் ஆட்சி செய்தபோது அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக தருமபுரி இருந்துள்ளது. இவர்கள் நொளம்ப பல்லவ மன்னர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளனர்" என்கிறார் முனிரத்தினம் ரெட்டி.
நவலை கிராமத்தில் கிடைத்த நடுகல் குறித்து விளக்கிய அவர், "நடுகல்லில், காப்பாற்றிய நபரின் பின்புறம் ஆடையின்றி பெண்கள் நிற்பது போன்று உள்ளது. அவர் இறந்ததற்கு அடையாளமாக அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வது போல (மேலே செல்வது) கல்லை வடிவமைத்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ASI
"இதை படையெடுப்பு என்பதாகப் பார்க்க முடியாது. இரண்டு குழுக்களுக்குள் நடந்த மோதலை இது குறிப்பிடுவதாக அறியலாம். எதிரிகள், தங்கள் பலத்தைக் காட்டுவதற்காக இந்த மோதலை நடத்தியிருக்கலாம்" என்கிறார், யாக்கை மரபு அறக்கட்டளையின் செயலர் குமரவேல்.
"சமூக நோக்கத்துடன் போராடி இறப்பவர்கள் ஊதியம் பெறுவதில்லை என்பதால் அவர்களுக்கு நடுகல் வைக்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.
குமரவேலின் கூற்றுப்படி, "தருமபுரி தகடூர் மண்டலம் என வரலாற்றில் கூறப்படுகிறது. இப்பகுதிக்கு அரசர்கள் வரும்போது தகடூர் நாடு என அழைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறு இனக்குழுக்கள் வசித்தபோது புறமலை நாடு என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுள்ளது."
"தருமபுரியை நடுகல் மாவட்டம் என்றே கூறலாம்" எனக் கூறும் அவர், "அந்த அளவுக்கு அதிகளவில் நடுகற்கள் கிடைக்கின்றன. இது பெருவழிப் பாதையாகவும் இருந்துள்ளது" என்கிறார்.
"ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு இடப்பெயர்வு நடப்பதை பெருவழிப் பாதை என்கின்றனர். தருமபுரியில் அதியமான் பெருவழிப் பாதை இருந்துள்ளது. இங்கு கன்னட, தமிழ் கல்வெட்டுகள் அதிகம் கிடைக்கின்றன. நிலவியல் ரீதியாகவும் இது முக்கியமான பகுதியாக உள்ளது" என்கிறார் குமரவேல்.

தருமபுரிக்கும் நொளம்பர்களுக்கும் என்ன தொடர்பு?
"நவலையில் கிடைத்த நடுகல்லில் எந்த நொளம்ப அரசர் என்ற விவரம் கிடைக்கவில்லை" எனக் கூறும் குமரவேல், "பொம்முடியில் கிடைத்த ஒரு கல்வெட்டில் அய்யப்ப நொளம்பா என்ற அரசரின் பெயர் இடம்பெற்றுள்ளது" எனக் கூறுகிறார்.
"கி.பி. 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி, பென்னாகரம் உள்பட சில பகுதிகளில் நொளம்பர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஆனால், அவர்களின் எல்லையை வரையறுக்க முடியவில்லை" என்கிறார் குமரவேல்.
இதே கருத்தை முன்வைக்கும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குநரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலருமான சொ. சாந்தலிங்கம், "அவர்கள் பெரிய மன்னர்கள் அல்ல. சிற்றரசர்கள்தான். தருமபுரி பகுதியைச் சில காலம் ஆண்டனர்" என்றார்.
அய்யப்ப நொளம்பா, மகேந்திரன் ஆகியோர் தருமபுரி பகுதியை ஆட்சி செய்ததாகக் கூறும் சொ.சாந்தலிங்கம், "அவர்கள் ஆட்சி செய்த பகுதி நுளம்பபாடி எனப்படுகிறது. தருமபுரியில் கோட்டைக் கோவில் ஒன்றைக் கட்டினர்" எனக் கூறினார்.
"ராஷ்டிரகூட மன்னர்களுக்குக் கீழே இவர்கள் ஆட்சி செய்தனர். நொளம்ப மன்னர்கள் குறித்து 'தமிழ்நாட்டில் நொளம்பர்கள்' என்ற பெயரில் எம்.டி.சம்பத் எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.

நொளம்ப மன்னர்கள் யார்?
நொளம்ப மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அனந்தபூர் மாவட்டத்தில் (ஆந்திரா மாநிலம்) மடகாசிரா தாலுகாவில் ஹேமாவதி என்ற கிராமம் அமைந்துள்ளது. தற்போது இது சிறிய கிராமமாக உள்ளது.
"கி.பி 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டில் ஹெஞ்சேரு என்ற பழங்காலப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்தப் பகுதி, நொளம்ப மன்னர்களின் தலைநகராக இருந்தது" என்று 1958ஆம் ஆண்டு டக்ளஸ் பேரட் எழுதிய 'ஹேமாவதி' என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள புலாபாய் மெமோரியல் நிறுவனம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
நொளம்ப வம்சத்தின் எச்சங்களாகப் பல்வேறு கல்வெட்டுகளும் சிதிலமடைந்த கோவில்களின் பகுதிகளும் உள்ளதாக டக்ளஸ் பேரட் தெரிவித்துள்ளார்.
"நொளம்பர்கள் ராஷ்டிரகூடர்களின் சிற்றரசர்களாக இருந்துள்ளனர். சோழர்கள், சாளுக்கியர்கள், விஜயநகரப் பேரரசு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இவர்கள் சிறிய தென்னிந்திய வம்சத்தினராக இருந்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ள டக்ளஸ் பேரட், "கி.பி. 735 முதல் 1052 வரை அவர்கள் ஆட்சி செய்ததாகவும் எழுதியுள்ளார்.
ஹேமாவதியில் இருந்து தற்கால கிழக்கு கர்நாடகா, மேற்கு ஆந்திர பிரதேசம், தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் ஆட்சி செய்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

பல்லவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத் தங்களை நொளம்பர்கள் கூறிக் கொண்டதாக நூலில் குறிப்பிட்டுள்ள டக்ளஸ் பேரட், "32 ஆயிரம் கிராமங்களைக் கொண்ட நொளம்பவாடியை இவர்கள் ஆட்சி செய்தனர். முதல் மூன்று நொளம்ப மன்னர்கள், ராஷ்டிரகூடர்களுக்கு கட்டுப்பட்ட சிற்றரசர்களாக இருந்துள்ளனர்" என்று எழுதியுள்ளார்.
நான்காவது நொளம்ப மன்னரான போலர்சோராவின் மகன் மகேந்திரன், சிறந்த மன்னராக அறியப்பட்டதாகத் தனது நூலில் குறிப்பிட்டுள்ள டக்ளஸ் பேரட், "இவரது ஆட்சியை உள்ளடக்கிய பகுதிகளாக கோலார், பெங்களூரு மாவட்டத்தின் சில பகுதிகள், தருமபுரி ஆகியவை இருந்துள்ளன. தருமபுரியில் அவரது கல்வெட்டுகள் உள்ளன" என்றும் தெரிவித்துள்ளார்.
கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் ஹேமாவதியில் நொளம்ப மன்னர்களால் கட்டப்பட்ட சித்தேஸ்வரர் மற்றும் தொட்டேஸ்வரர் கோவில்கள், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சித்தேஸ்வரர் கோவில் வளாகத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறிய அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் விரிவுபடுத்தப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












