இரானின் இந்த பலம்தான் அமெரிக்கா தாக்காமல் பின்வாங்க காரணமா?

இரான் - அமெரிக்கா
படக்குறிப்பு, இரான் போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு டொனால்ட் டிரம்பைக் குற்றம் சாட்டினார் ஆயதுல்லா அலி காமனெயி
    • எழுதியவர், ரௌனக் பைரா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவது போலத் தெரிந்தது. அமெரிக்கா இரான் தொடர்பாக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டபோது இந்த அச்சம் மேலும் அதிகரித்தது.

மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க விமானப்படைத் தளமான அல்-உதெய்த் தளத்திலிருந்து தனது சில படைகளைத் திரும்பப் பெற கத்தார் உத்தரவிட்டது.

இரான் போராட்டக்காரர்களைத் தூக்கிலிட்டால், அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று டிரம்ப் கூறியிருந்தார், இருப்பினும் வியாழக்கிழமை மாலைக்குள் மரணதண்டனைகள் ஒத்திவைக்கப்பட்டதாக இரானிலிருந்து செய்திகள் வந்தன.

அதன் பிறகு டிரம்ப், "இரானில் கொலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டங்கள் எதுவும் இல்லை," என்று கூறினார்.

வியாழக்கிழமை மாலைக்குள், மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்து வருவது தெளிவாகத் தெரிந்தது.

புதன்கிழமை எச்சரிக்கையுடன் இருந்த கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் பாதுகாப்பு எச்சரிக்கை அளவை அமெரிக்கா குறைத்தது.

புதன்கிழமை இந்தத் தளத்திலிருந்து அகற்றப்பட்ட அமெரிக்க ராணுவ விமானங்கள் இப்போது மெதுவாகத் திரும்பி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஒரு நம்பகமாக செய்தி ஆதாரத்தை மேற்கோள் காட்டித் தெரிவித்தது.

ஆனால் 'தி டெலிகிராப்' ஆங்கில நாளிதழில் வெளியான ஒரு செய்தி அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் அமெரிக்க ராணுவம் தாக்குதலுக்குத் தயாராக இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

"குறைந்த அளவிலான வாய்ப்புகள் மற்றும் திறன்கள் காரணமாக இரான் மீது தாக்குதல் நடத்த அந்நாட்டு ராணுவம் தயாராக இல்லை என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு ரகசியமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது"என்று பிரிட்டிஷ் நாளிதழான தி டெலிகிராப்பை மேற்கோள் காட்டி பிபிசி பாரசீக சேவை தெரிவித்துள்ளது.

அந்த செய்தியின் படி, "ஆட்சிக்கு எதிராக ஒரு தீர்க்கமான தாக்குதலுக்கு உத்தரவாதம் அளிக்க முடிந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்குமாறு டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு குழுவுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது."

ஆனால் அத்தகைய உத்தரவாதங்களை வழங்க முடியாது என்று அதிகாரிகள் என்.பி.சி நியூஸிடம் தெரிவித்தனர்.

ராணுவ நடவடிக்கை எடுத்தால் அது பல வாரங்கள் நீடிக்கக்கூடிய ஒரு பெரிய மோதலைத் தூண்டும் என்றும், இரானிடமிருந்து கடுமையான பதிலடிக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

தாக்குதல் நடத்தப்படுமா இல்லையா என்ற குழப்பத்திற்கு மத்தியில், ஜனவரி 11-ஆம் தேதி வெளியான 'டைம் மேகசின்' செய்தியிலும் இது போன்ற அறிகுறிகள் வழங்கப்பட்டன.

அலங்கார வார்த்தைகளைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், டிரம்ப் கொடுத்த வாக்குறுதிகளை எந்த ஒரு ராணுவ நடவடிக்கையாலும் நிறைவேற்ற முடியாது என்பதே யதார்த்தமான உண்மை என்று அந்த செய்தி கூறுகிறது.

அமெரிக்கா ஒரு அடையாளப்பூர்வமான தாக்குதலைத் தொடுத்தாலும், அது மிகவும் பலவீனமானதாக இருக்கும் என்பதால் அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது.

தற்போதைக்கு இந்த நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும், இரானின் நிலவியல் அமைப்பும் அதன் மீதான எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் ஒரு 'தடுப்பாக' அமைகிறது என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது தவிர, இரான் கடந்த சில மாதங்களில் தனது பாதுகாப்பு அமைப்பிலும் தீவிர மாற்றங்களைச் செய்துள்ளது.

இரான் எவ்வளவு வலிமையானது?

இரான் - அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜூன் மாதத் தாக்குதலுக்குப் பிறகு தனது ராணுவ பலத்தை கணிசமாக வலுப்படுத்தியுள்ளதாக இரான் கூறுகிறது (கோப்புப் படம்)

இரானிய ராணுவத்தின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி, கடந்த கால மோதல்களுக்குப் பிறகு இரான் எந்த அளவுக்குத் தன்னை பலப்படுத்திக் கொண்டுள்ளது என்பதை பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.

"2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற 12 நாள் போரின் போது இருந்ததை விட, இன்று இரானிய ஆயுதப் படைகள் மிகவும் தயாராக உள்ளன. அந்தப் போர் இரானிய ராணுவத்திற்கு ஒரு தனித்துவமான அனுபவமாக அமைந்தது. அது எங்களின் வலிமையை அதிகரித்ததுடன், வீரர்களின் பயிற்சி அளவை மேம்படுத்தியது மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தியது"என்று அமீர் ஹடாமி கூறியதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டிஏஏஎஸ் (TASS) தெரிவித்துள்ளது.

"சாத்தியமான எந்தவொரு தாக்குதலையும் தடுத்து நிறுத்தவும், இரானின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்கவும் இரான் தனது ஆயுதப் படைகளின் திறன்களை வலுப்படுத்தியுள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான நிபுணரும், ஐசிடபுள்யூஏவின் மூத்த ஆய்வாளருமான முனைவர் ஃபஸ்ஸூர் ரஹ்மான் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "இரானின் நிலவியல் அமைப்பு எப்போதும் அதற்கு சாதகமாகவே இருந்து வருகிறது என்பது உண்மைதான். கடந்த காலங்களிலும், இந்த அமைப்பினால் இரான் உத்தி ரீதியாகப் பயனடைந்துள்ளது"என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இருப்பினும், நவீன கால போர்களில் தரைவழித் தாக்குதலுக்கான வாய்ப்பு குறைவு. அமெரிக்காவிடம் பி-2 ரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் வான்வழியே தாக்குதல்களை நடத்தக்கூடிய பல ஆபத்தான ஏவுகணைகள் உள்ளன. ஆனால், ஒரு தரைவழித் தாக்குதலைத் திட்டமிடும் போது இரானின் நிலவியல் அமைப்பை நிச்சயமாகப் புறக்கணிக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது"என்றும் குறிப்பிட்டார்.

இரானை தாக்குவது ஏன் கடினம்?

இரான் - அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு டிரம்ப் கத்தாரின் அல்-உதெய்த் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்தார் (கோப்பு புகைப்படம்)

"வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை 'சிறைபிடித்த' பிறகு, இரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து டிரம்ப் உற்சாகமாகப் பேசினார்" என்று ஆங்கில செய்தித்தாளான தி கார்டியன் தெரிவித்துள்ளது.

"ஆனால் அமெரிக்கா உண்மையில் ராணுவ ரீதியாக எந்தத் தயாரிப்புகளையும் செய்யவில்லை. சொல்லப்போனால், இரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த அமெரிக்கப் படைகள் கடந்த சில மாதங்களில் குறைக்கப்பட்டன, இது அவர்களின் வாய்ப்புகளைக் குறைக்கிறது. 2025 அக்டோபருக்குப் பிறகு மத்திய கிழக்கில் அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை."

இதன் பொருள், இரானிய அரசாங்க இலக்குகளையோ அல்லது இரானின் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மீதோ அமெரிக்காவால் தனித்துத் தாக்குதல் நடத்த முடியாது என்பதாகும்.

இதைச் செய்ய அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளின் விமானப்படைத் தளங்களைப் பயன்படுத்த வேண்டும், ஆனால் அவ்வாறு செய்வதற்கு எதிராக இரான் ஏற்கனவே அந்த நாடுகளை எச்சரித்துள்ளது.

அமெரிக்காவிடம் பி-2 ரக குண்டுவீச்சு விமானம் என்ற மற்றொரு வழி உள்ளது, இதனை அமெரிக்கா 2025 ஜூன் மாதம் பயன்படுத்தியது. அதுவும் இரானின் அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று இரான் கூறுகிறது.

முனைவர் ஃபஸ்ஸூர் ரஹ்மான் இதுகுறித்து கூறுகையில், "அமெரிக்கா அக்டோபர் மாதத்தில் தனது விமானம் தாங்கி கப்பல்களைத் திரும்பப் பெற்றது, இரானுக்கு சற்று நிம்மதி அளித்தது. ஆனால் இப்போது அமெரிக்கா மீண்டும் தனது விமானம் தாங்கி கப்பல்களை மத்திய கிழக்கு நோக்கி அனுப்புகிறது. இவை தாக்குதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று சொல்ல முடியாது. இரானின் அண்டை நாடுகளில் தனக்குள்ள ராணுவ தளங்களையும் அமெரிக்கா பயன்படுத்த வாய்ப்புள்ளது"என்றார்.

இரானின் நிலவியல் இருப்பிடம் அமெரிக்காவுக்கு முன்வைக்கும் சவால்

இரான் - அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1980களில், நீண்ட போர் நடந்த போதிலும் இராக்கிய ராணுவத்தால் இரானை தோற்கடிக்க முடியவில்லை (கோப்பு புகைப்படம்)

இரானின் நிலவியல் அமைப்பு அதன் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது.

'அட்லஸ் ஆஃப் வார்' இதழின் படி, இரான் நாட்டைச் சுற்றி இயற்கையாகவே அமைந்துள்ள வலுவான அரண்கள் எதிரிகளுக்குப் பெரும் தடையாக இருக்கின்றன. இரான் இயற்கையிலேயே ஒரு பாதுகாப்பான அமைப்புகளால் சூழப்பட்டுள்ளது.

வடக்கே காஸ்பியன் கடல், தெற்கே பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா ஆகியவையும், கிழக்கு மற்றும் மேற்கே பாலைவனங்களும் மலைகளும் சூழ்ந்துள்ளன. மேற்குப் பகுதியில் சாக்ரோஸ் மலைத்தொடரும், வடக்குப் பகுதியில் எல்பர்ஸ் மலைத்தொடரும் அமைந்துள்ளன.

இவை எந்தவொரு எதிரி ராணுவத்திற்கும் பெரும் சவாலாக அமைகின்றன. வரலாற்று ரீதியாக, இந்த மலைத்தொடர்கள் படையெடுக்கும் ராணுவங்களை பலமுறை தடுத்து நிறுத்தியுள்ளன.

1980-களில் இரான் மற்றும் இராக் போர் நடைபெற்றது. 1980-இல் சதாம் உசேனின் படைகள் இரான் மீது படையெடுத்தன. இருப்பினும், சாக்ரோஸ் மலைத்தொடரின் கடினமான நிலப்பரப்பு காரணமாக, இராக் ராணுவத்தால் இரானுக்குள் அதிக தூரம் செல்ல முடியவில்லை.

முதலில் அஹ்வாஸ் (ஒரு முக்கியமான எண்ணெய் பகுதி) பகுதியைக் கைப்பற்றி, பின்னர் மலைகளைக் கடந்து இரானின் உட்பகுதிக்குள் நுழைய வேண்டும் என்பதே சதாம் உசேனின் திட்டமாக இருந்தது. ஆனால் அந்தத் திட்டம் முற்றிலும் தோல்வியடைந்தது.

இயற்கை ஒரு வலிமையான அரணாக இருந்தது. அந்தப் போர் எட்டு ஆண்டுகள் வரை நீடித்தது.

இறுதியில், யாருக்கும் வெற்றி கிடைக்காமல் போர் முடிவுக்கு வந்தது.

அதேபோல், யாராவது கிழக்கிலிருந்து இரானைத் தாக்க விரும்பினால், அவர்கள் 'தஷ்ட்-இ-லுட்' மற்றும் 'தஷ்ட்-இ-கவீர்' போன்ற பரந்த பாலைவனங்களைக் கடக்க வேண்டும். இவை ஒரு பெரிய ராணுவ நடவடிக்கைக்குப் பெரும் சிக்கல்களை உருவாக்கும்.

பாரசீக வளைகுடாவில் உள்ள 'ஹோர்முஸ் நீரிணை' மிகவும் குறுகியதாக இருந்தாலும், இரான் அதன் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.

இது உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடமாகும். உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% இந்த குறுகிய நீரிணை வழியாகவே செல்கிறது. எனவே, எந்தவொரு பெரிய மோதலிலும் இது இரானுக்கு ஒரு முக்கியமான ஆயுதமாகத் திகழ்கிறது.

ஹோர்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், இரானால் உலகின் எண்ணெய் விநியோகத்தை முடக்க முடியும். இந்த அச்சத்தின் காரணமாகவே இரானைத் தாக்கும் முன் அதன் எதிரிகள் பலமுறை தயங்குகிறார்கள்.

அமெரிக்கா - இரான் ராணுவ பலம் ஓர் ஒப்பீடு

இரான் - அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஏவுகணை ஆயுதக் கிடங்கை இரான் கொண்டுள்ளது (கோப்புப் படம்)

'குளோபல் ஃபயர்பவர்' அமைப்பின் தரவுகளின்படி, உலகின் முதல் 20 ராணுவ வலிமை கொண்ட நாடுகளில் இரானும் ஒன்று. 145 நாடுகளில் இரான் 16-வது இடத்தில் உள்ளது.

இரானிடம் 6,10,000 வீரர்களும், 3,50,000 ரிசர்வ் படை வீரர்களும் உள்ளனர். மொத்தமாக சுமார் 9,60,000 வீரர்கள் உள்ளனர். இரானின் புரட்சிகர காவல்படை (IRGC) என்பது வழக்கத்திற்கு மாறான போர்க்கலைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தனிப் பிரிவாகும்.

இரானிடம் 551 போர் விமானங்களும் உள்ளன.

டிரோன் தொழில்நுட்பத்தில் இரான் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கடற்படை பலத்தைப் பொறுத்தவரை, இரான் நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க் கப்பல்களும் உள்ளன.

'இரான் வாட்ச்' அறிக்கையின்படி, மத்திய கிழக்கிலேயே இரானின் ஏவுகணை கையிருப்பு தான் மிகப்பெரியது.

2022-ஆம் ஆண்டில் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் ஜெனரல் கென்னத் மெக்கென்சி கூறுகையில், "இரானிடம் 3,000-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. இதில் குரூயிஸ் ஏவுகணைகளின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை" என்றார்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன தரவுகளின்படி, 2024-இல் இரானின் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் 7.9 பில்லியன் டாலர் ஆகும்.

இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.0% ஆகும்.

2023 ஆம் ஆண்டில் இரானின் இராணுவச் செலவு தோராயமாக 10.3 பில்லியன் டாலராக இருந்தது. ராணுவச் செலவினங்களில் இரான் உலகில் 34வது இடத்தில் உள்ளது.

இரான் 2025 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும் அதன் பாதுகாப்பு பட்ஜெட்டை 200% அதிகரித்து, அதை 16.7 பில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டிருந்தது.

இரான் - அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாகும், மேலும் அதன் பாதுகாப்புச் செலவும் மிகவும் அதிகம். (குறியீட்டு படம்)

அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே ராணுவ வலிமையில் குறிப்பிடத்தக்க இடைவெளி இருக்கிறது. அமெரிக்கா உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக திகழ்கிறது. குளோபல் ஃபயர்பவர் குறியீட்டில் அது முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவிடம் 13.28 லட்சம் வீரர்களும், 799,000 ரிசர்வ் வீரர்களும் உள்ளனர்.

மொத்த வீரர்களின் எண்ணிக்கை தோராயமாக 21 லட்சமாகக் கருதப்படுகின்றது.

2005 முதல், உலகளாவிய ஃபயர்பவர் குறியீட்டில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அதேபோல் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவரிசையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட் 997 பில்லியன் டாலர் என்றும் அது மதிப்பிடுகிறது. இது அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% ஆகும். உலகளாவிய ராணுவ செலவினங்களில் அமெரிக்காவின் பங்கு 37% ஆகும்.

இரான் மற்றும் அமெரிக்காவின் ராணுவ பலத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தாலும், இரானைத் தாக்குவது அவ்வளவு எளிதானது அல்ல என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இரான் - அமெரிக்கா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"இரானைத் தாக்காததற்கு ஒரு காரணம், இரானின் எதிரிகள் இரானை கண்டு பயப்படுகிறார்கள் என்பதல்ல. இரானுக்கு எதிரான எந்தவொரு போரும் மிகவும் கடுமையான போராக இருக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதுதான்" என்று கடற்படை முதுகலை பள்ளியின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான இணைப் பேராசிரியர் அஃப்ஷோன் ஓஸ்டோவர் 2024 இல் கூறினார்.

"அமெரிக்காவை எதிர்த்துப் போராட இரானிடம் உள்ள சிறந்த ஆயுதங்கள் ஏவுகணைகளும் டிரோன்களும் தான். இரானின் போர் விமானங்கள் நீண்ட காலமாகவே செயல்படவில்லை. அதன் கடற்படை சக்தியும் சராசரியாகவே உள்ளது" என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு இரான் பதிலடி கொடுத்தால், அது ஏவுகணைகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. மறுபுறம், அமெரிக்கா கணிசமான ராணுவ சக்தியைக் கொண்டுள்ளது மற்றும் இஸ்ரேலின் ஆதரவையும் கொண்டுள்ளது. இஸ்ரேல் மத்திய கிழக்குப் பகுதியைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறது. அமெரிக்காவிற்கு எல்லா வகையிலும் இஸ்ரேலால் உதவ முடியும்" என்றும் விவரித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு