"திரைத்துறை முடிவுகளில் மதவாத கோணம்": ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி குறித்து பாலிவுட் கலைஞர்கள் கூறுவது என்ன?

ஏ.ஆர்.ரஹ்மான், ஷான் மற்றும் ஜாவேத் அக்தர்
படக்குறிப்பு, பிபிசி நேர்காணலில் ஏ.ஆர். ரஹ்மான் கூறிய கருத்து குறித்து பாலிவுட்டின் ஷான் மற்றும் ஜாவேத் அக்தர் போன்ற பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிபிசி-யுடனான ஒரு சிறப்பு நேர்காணலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'கடந்த எட்டு ஆண்டுகளில் பாலிவுட்டில் தமக்கு வாய்ப்பு கிடைப்பது நின்றுவிட்டது' என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானின் கூற்றுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

"இதில் எந்தவொரு மதவாதப் பிரச்னையும் இருப்பதாக நான் கருதவில்லை" என பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கூறினார்.

பாடகர் ஷான் கூறுகையில், "கலையில் எந்தவொரு மதவாத அல்லது சிறுபான்மையினர் அம்சம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு விஷயம் இருந்திருந்தால், கடந்த முப்பது ஆண்டுகளாக இருக்கும் நமது மூன்று சூப்பர் ஸ்டார்களும் சிறுபான்மையினரே, ஆனால் அவர்களின் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறார்கள்," என்றார்.

நாவலாசிரியர் ஷோபா டே

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பாலிவுட் மதவாதமற்ற ஓர் இடம் என்று ஷோபா டே கூறுகிறார்.

ஏ.ஆர். ரஹ்மானின் கூற்று குறித்து நாவலாசிரியர் ஷோபா டே கூறுகையில், "இது மிகவும் ஆபத்தான கருத்து.. நான் ஐம்பது ஆண்டுகளாகப் பாலிவுட்டைப் பார்த்து வருகிறேன். மதவாதமில்லாத ஏதேனும் ஓரிடத்தை நான் பார்த்திருக்கிறேன் என்றால், அது பாலிவுட் தான். உங்களிடம் திறமை இருந்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்," என்றார்.

"உங்களிடம் திறமை இல்லை என்றால், உங்கள் மதம் காரணமாகத்தான் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை என்ற கேள்வியே இல்லை. அவர் மிகவும் வெற்றிகரமான மற்றும் முதிர்ச்சியான நபர். அவர் கூறியவற்றை அவர் பேசியிருக்கக் கூடாது. ஒருவேளை அவருக்கு இதற்கான காரணம் இருக்கலாம்.. இது குறித்து நீங்கள் அவரிடமே கேட்க வேண்டும்," என அவர் மேலும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த பாடகர் சங்கர் மகாதேவன் கூறுகையில், "பாடல் உருவாக்குபவரும், அந்தப் பாடலைக் கொண்டு செல்ல வேண்டுமா இல்லையா, அதைச் சந்தைப்படுத்த வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பவரும் வெவ்வேறு நபர்கள் என்று நான் சொல்வேன். அதைத் தீர்மானிப்பவர்கள் இசைத்துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல," என்றார்.

ஏ.ஆர். ரஹ்மான் பிபிசி-யிடம் என்ன கூறினார்?

ஏ.ஆர். ரஹ்மான்
படக்குறிப்பு, கடந்த எட்டு ஆண்டுகளில் அதிகாரச் சமநிலை மாற்றம் நேர்மறையானதாக இல்லை என்று பிபிசி நேர்காணலில் ஏ.ஆர். ரஹ்மான் கூறினார்.

பல பாலிவுட் படங்களுக்கு மறக்கமுடியாத இசையளித்த ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பிபிசி உடனான ஒரு சிறப்பு நேர்காணலில் தனது இசைப் பயணம், மாறிவரும் சினிமா, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூகத்தின் தற்போதைய சூழல் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

இந்த உரையாடலில் திரைத்துறையைப் பற்றி ரஹ்மான் கூறுகையில், "கடந்த 8 ஆண்டுகளில் அநேகமாக அதிகாரச் சமநிலை மாறியிருக்கலாம் மற்றும் படைப்பாற்றல் இல்லாதவர்கள் முடிவுகளை எடுக்கிறார்கள். ஒருவேளை இதற்கு மதவாத கோணமும் இருக்கலாம், ஆனால் என் முன்னால் யாரும் அவ்வாறு கூறவில்லை," என்றார்.

இருப்பினும் தனக்கு இப்போது வேலை வருவதில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில், "ஆமாம், சில விஷயங்கள் என் காதுகளுக்கு வந்தன. உதாரணமாக, நீங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டீர்கள், ஆனால் மற்றொரு இசை நிறுவனம் படத்திற்கு நிதி வழங்கியதால் அவர்கள் தங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளரைக் கொண்டு வந்தனர். நான் சரி என்று சொல்கிறேன், நான் ஓய்வெடுப்பேன், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவேன். நான் வேலையைத் தேடிச் செல்லவில்லை. வேலை என்னைத் தேடி வர வேண்டும் என்று விரும்புகிறேன். எனது உழைப்பும் நேர்மையும் எனக்குப் பலன்களைத் தர வேண்டும் என்று விரும்புகிறேன்." என்றார்.

ரஹ்மான் கூறுகையில், "ஆனால் நான் இதைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை, ஏனென்றால் இதில் தனிப்பட்ட விஷயம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் சிந்தனை மற்றும் விருப்பம் உள்ளது. நமக்கு எவ்வளவு வேலை கிடைக்க வேண்டும் என்பது நம் கையில் இல்லை," என்றார்.

ஜாவேத் அக்தரின் பதில்

ஜாவேத் அக்தர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறிய தயாரிப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மானிடம் செல்லக்கூடப் பயப்படுகிறார்கள் என்று ஜாவேத் அக்தர் கூறினார் (கோப்புப் படம்).

செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் உடனான உரையாடலில் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஏ.ஆர். ரஹ்மானின் கூற்றுக்குத் தனது எதிர்வினையை அளித்தார்.

அவர் கூறுகையில், "எனக்கு ஒருபோதும் அப்படித் தோன்றியதில்லை. நான் மும்பையில் உள்ள அனைவரையும் சந்திக்கிறேன். மக்கள் அவருக்கு (ஏ.ஆர். ரஹ்மானுக்கு) மிகுந்த மரியாதை அளிக்கிறார்கள். ஒருவேளை பலரும் அவர் (ரஹ்மான்) இப்போது மேற்கத்திய நாடுகளில் அதிக வேலையாக இருப்பதாக நினைக்கலாம். அவருடைய நிகழ்ச்சிகள் மிகப்பெரியதாக இருப்பதாலும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதாலும் அவர்கள் அவ்வாறு நினைக்கலாம்," என்றார்.

ஜாவேத் அக்தர் மேலும் கூறுகையில், "ரஹ்மான் எவ்வளவு பெரிய மனிதர் என்றால், சிறிய தயாரிப்பாளர்கள் அவரிடம் செல்லக்கூடப் பயப்படுகிறார்கள். ஆனால், இதில் எந்தவொரு மதவாத அம்சமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை."

நிதேஷ் திவாரியின் வரவிருக்கும் 'ராமாயணா' படத்தின் பாடல்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும் இப்படத்திற்கு இசையமைப்பது தொடர்பான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

கடந்த ஆண்டு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த 'சாவா' படம் வெளியானது. இந்தப் படம் உண்மைகளைத் திரித்துக் கூறுவதாகவும் பிரிவினைவாதமாகவும் இருப்பதாகப் பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். படம் வெளியான நேரத்தில் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது.

"மூன்று சூப்பர் ஸ்டார்களும் சிறுபான்மையினரே"

ஷான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனக்கும் வேலை கிடைப்பதில்லை என்று ஷான் கூறினார்.

பாடகர் ஷான் திரைத்துறை மற்றும் இசைத் துறையில் எந்தவொரு 'மதவாத அல்லது சிறுபான்மையினர் கோணம் இருப்பதை மறுத்துள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்-உடனான உரையாடலில் ஷான் கூறுகையில், "வேலை கிடைக்காததைப் பொறுத்தவரை, நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். நான் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ பாடியிருக்கிறேன், ஆனாலும் எனக்கும் வேலை கிடைப்பதில்லை. இசையில் எந்தவொரு மதவாத அல்லது சிறுபான்மையினர் கோணம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு விஷயம் இருந்திருந்தால், கடந்த முப்பது ஆண்டுகளாக இருக்கும் நமது மூன்று சூப்பர் ஸ்டார்களும் சிறுபான்மையினரே, ஆனால் அவர்களின் ரசிகர்கள் யாருக்கும் குறைவா என்ன? அவர்கள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறார்கள்," என்றார்.

அனைவரும் நல்ல வேலைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்றும் ஷான் கூறினார். அவர் ஏ.ஆர். ரஹ்மானின் பணியைப் பாராட்டவும் செய்தார். ஏ.ஆர். ரஹ்மான் அற்புதமான இசையமைப்பாளர் என்றும், அவருடைய பாணி தனித்துவமானது என்றும் அவர் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அரசியல் வட்டாரங்களின் எதிர்வினை

சிவசேனாவைச் சேர்ந்த ஷைனா என்.சி.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஏ.ஆர். ரஹ்மானின் அறிக்கையைத் துரதிர்ஷ்டவசமானது என்று சிவசேனா தலைவர் ஷைனா என்.சி. கூறினார்.

ஏ.ஆர். ரஹ்மானின் கருத்துக்குப் பிறகு அரசியல் வட்டாரங்களிலிருந்தும் எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன.

சிவசேனா (ஷிண்டே) தலைவர் ஷைனா என்.சி. கூறுகையில், "ஏ.ஆர். ரஹ்மான் திரைத்துறை மதவாதமாக இருப்பதாகப் பேசுவது துரதிர்ஷ்டவசமானது என்று நான் நினைக்கிறேன். அவருக்கு எல்லாவிதமான வாய்ப்புகளும் கிடைத்துள்ளன, இந்தியாவின் அழகே வேற்றுமையில் ஒற்றுமைதான்," என்றார்.

"ஏதேனும் ஒரு வழி மூடப்பட்டிருந்தால், தகுதியால் எல்லாத் தடைகளையும் நீக்க முடியும் என்பதையும், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது உங்கள் திறமையைக் காட்ட வேண்டும் என்பதையும் நாம் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் சமமான முன்னுரிமை அளிக்கப்படுவதுதான் நமது நாட்டின் பெருமை."

அதே சமயம் பஜன் பாடகர் அனூப் ஜலோட்டா கூறுகையில், "அப்படி எதுவுமில்லை. உண்மை என்னவென்றால் அவர் ஐந்து ஆண்டுகளில் இருபத்தைந்து ஆண்டுகால வேலையைச் செய்து முடித்துவிட்டார். இப்போது என்ன செய்வது. அவர் நிறைய வேலை செய்துள்ளார், அதுவும் மிகச் சிறந்த வேலைகளைச் செய்துள்ளார். மக்கள் மனதில் அவருக்கு மிகுந்த மரியாதை உள்ளது," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு