'ஒவ்வொரு நாளும் ஒரு மாதம் போல உள்ளது' - இரானியர்களின் பயமும் நம்பிக்கையும் என்ன?

இரானியர்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஃபாரன் தகிசாதே
    • பதவி, பிபிசி பாரசீக சேவை
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிறது.

தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள், பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள் மற்றும் இணைய முடக்கம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள இரானியர்கள், தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முயன்று வருகின்றனர்.

இரானுக்குள் இருப்பவர்களுடன் பேசுவது கடினமாக இருந்தாலும், சில இரானியர்கள் தாங்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பிபிசி பாரசீக சேவையிடம் பேசியுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது அடையாளங்கள் மாற்றப்பட்டுள்ளன.

"கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே நடந்த 12 நாள் போரின்போது நாங்கள் அனுபவித்ததை விட இப்போது நடப்பவை மிகவும் மோசமானவை" என்று கூறிய சலார், "வெடிப்புகளின் எண்ணிக்கை, அழிவு, இப்போது என்ன நடக்கிறது என்பது எல்லாமே நம்ப முடியாததாக இருக்கிறது" என்கிறார். சலார் தெஹ்ரானில் வசிக்கிறார்.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் போரின் முதல் கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, இரானியத் தலைநகரம் பல்வேறு கட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

இரானியர்கள்

பட மூலாதாரம், EPA

சமீபத்திய வான்வழித் தாக்குதல் ஒன்றை விவரித்த சலார், "வெடிப்பு அதிர்வுகள் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை உலுக்கின. கண்ணாடி உடைந்து சிதறாமல் இருக்க நான் ஜன்னல்களைத் திறந்து வைத்தேன். வீடு முழுவதும் அதிர்ந்தது..." என்றார்.

மேலும், "ஒவ்வொரு நாளும் ஒரு மாதம் போலத் தோன்றுகிறது. தாக்குதல்களின் அளவு மிக அதிகமாக உள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

தெஹ்ரானில் வசிக்கும் பாபக் என்பவர், தாக்குதல்கள் தொடங்கியபோது மக்கள் உணவைச் சேமித்து வைக்க வெளியே செல்வதைக் கண்டதாகத் தெரிவித்தார்.

கடந்த 12 நாள் போரை விட இப்போதைய தாக்குதல்கள் மிகவும் தீவிரமானவை என்றும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் தாக்குதல்கள் நடப்பதாக அவரும் உணர்ந்தார்.

"கடந்த முறை, வான் பாதுகாப்பு அமைப்பின் பதில் தாக்குதல் சத்தம் கேட்டபோது, தாக்குதல் நடந்து கொண்டிருப்பதை நாங்கள் அறிந்தோம். இப்போது வித்தியாசமாக உள்ளது. திடீரென்று எங்கோ ஒரு வெடிப்பு அதிர்வும் அழிவும் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது" என்கிறார் பாபக்.

தெஹ்ரானுக்கு வடமேற்கே சுமார் 275 கிமீ தொலைவில் உள்ள ஜஞ்சானில் காவே வசிக்கிறார்.

"முதல் மூன்று நாட்களில், எங்கள் நகரம் கடுமையாகக் குண்டுவீசித் தாக்கப்பட்டது. போர் விமானங்கள் இடைவிடாது கடந்து செல்லும் ஒரு பகுதியில் நாங்கள் வசிக்கிறோம்," என்று காவே கூறினார்.

மேலும், வான்வழித் தாக்குதல்கள் நடந்த இடங்களிலிருந்து கறுப்பு மற்றும் வெள்ளை நிறப் புகைப் படலங்கள் எழுவதால், போரின் முதல் நாளுக்குப் பிறகு வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும் காவே தெரிவித்தார்.

"ஒரே நேரத்தில் அழகாகவும் பயங்கரமாகவும் இருக்கும் ஒரு காட்சி இது" என்கிறார் காவே.

மேலும் , வான்வழித் தாக்குதல்கள் நடந்த இடங்களிலிருந்து கறுப்பு மற்றும் வெள்ளை நிறப் புகைப் படலங்கள் எழுவதால், போரின் முதல் நாளுக்குப் பிறகு வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும் காவே தெரிவித்தார்.

பட மூலாதாரம், Majid Saeedi / Getty Images

படக்குறிப்பு, ஒரு வெடிப்பு ஏற்பட்ட பிறகு புகை மூட்டம் எழும்பும் காட்சியை, மலைச்சரிவிலிருந்து பார்க்கும் ஆண்கள்

பாதுகாப்பு குறித்த அச்சங்கள்

சலார் தனது நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பைப் பற்றி, குறிப்பாகத் தனது தாய் மற்றும் தந்தையைப் பற்றி மிகுந்த கவலை கொண்டுள்ளார்.

"நான் எனது பெற்றோரை வடக்குத் திசைக்கு அனுப்பி வைத்தேன்," என்று அவர் கூறினார். இருப்பினும் அங்கிருக்கும் ஆபத்தின் அளவு குறித்து அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை.

"ஆனால் தெஹ்ரானில் உள்ள அவர்களது வீட்டை விட அது பாதுகாப்பானது" என்கிறார் சலார்.

அவரது பெற்றோரின் வீடு வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் பல ராணுவத் தளங்கள் உள்ள ஒரு பகுதியில் அமைந்துள்ளது.

"எனது அம்மா மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அவர் மிகவும் பயந்திருந்தார்," என்று கூறிய அவர், 1980-களில் நடந்த எட்டு ஆண்டுகால இரான்- இராக் போரின் போது அவர் அனுபவித்த எதையும் விட தற்போதைய தாக்குதல்கள் மோசமானவை என்றும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாள் கடக்கும்போதும், அதிகமான மக்கள் தெஹ்ரானை விட்டு வெளியேறுவதை சலார் காண்கிறார், இருப்பினும் இது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றாக இல்லை.

"எனது நண்பரின் பாட்டி நோய்வாய்ப்பட்டுள்ளார், அவர்களால் அவரை இடமாற்றம் செய்ய முடியாது."

காவே தானும் தனது நண்பர்களும் தங்களது வீடுகளுக்கும் இடையே மாறி மாறிப் பயணம் செய்து வருவதாகக் கூறினார்.

"ஒரு நண்பரின் வீட்டிலிருந்து வெளிப்பகுதியை அதிகம் பார்க்க முடியாது என்பதால், அது ஒருவித மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்ற உணர்வையும் தகவல்களிலிருந்து துண்டிக்கப்பட்ட உணர்வையும் உருவாக்குகிறது. உயிர்பிழைக்கப் போராடுவதோடு சேர்த்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் குறைந்தபட்ச தொடர்பையாவது பேணுவதும், நம்பகமான செய்திகளுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதுமே எங்களது மிகப்பெரிய கவலையாக உள்ளது" என்று அவர் கூறினார்.

போரின் முதல் நாளில் அவரது இணையத் தொடர்பு நண்பகலில் துண்டிக்கப்பட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் மீண்டும் கிடைத்தது.

"என்னால் எப்போதெல்லாம் இணையத்தில் இணைய முடிகிறதோ, அப்போதெல்லாம் தங்கள் குடும்பத்தினரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாத இரானுக்கு வெளியே இருக்கும் நண்பர்களுக்கு, தகவல்களை அனுப்ப முயற்சித்தேன்," என்று அவர் கூறினார்.

காவே மற்றும் சலார் இருவரும் விபிஎன்-களை பயன்படுத்துகின்றனர்.

இவை இரானிய அரசாங்கத்தால் முடக்கப்பட்ட இணையதளங்களை அணுக அவர்களுக்கு உதவும் சேவைகள். ஆனால், அதுவும் எளிதாக இல்லை.

"இணையம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. விபிஎன் மூலம் என்னால் எப்போதாவதுதான் இணைய முடிகிறது. அதுவும் பொதுவாக நண்பகல் வேளையில்தான்" என்று சலார் கூறினார்.

இரானியர்கள்

பட மூலாதாரம், BBC / Getty Images

படக்குறிப்பு, தெஹ்ரானின் எங்கெலாப் சதுக்கத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் தாக்குதல் நடந்த பிறகு, மீட்பு பணியாளர்கள் உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்கின்றனர்

குறுஞ்செய்தி மூலம் வரும் எச்சரிக்கைகள்

"ஒவ்வொரு நாளும் அவர்கள் (இரானியப் பாதுகாப்புப் படைகள்) குறுஞ்செய்திகளை (எஸ்எம்எஸ்) அனுப்புகிறார்கள், நாங்கள் வெளியே சென்றால் எங்களை மிகக் கடுமையாகக் கையாளுவோம் என்று எச்சரிக்கிறார்கள்" என்று சலார் கூறினார்.

"உங்களில் யாராவது வெளியே வந்து போராட்டம் நடத்தினால், 'உங்களை இஸ்ரேலியக் கூட்டாளிகளாகக் கருதுவோம்' என்று ஒரு செய்தி வந்தது" என அவர் குறிப்பிட்டார்.

கீழ்ப்படியாத எவரும் வலுக்கட்டாயமாக ஒடுக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என்பதை அந்தச் செய்தியின் தொனி உணர்த்துவதாக அவர் கருதுகிறார்.

மக்கள் பொருளாதாரா ரீதியான அழுத்தங்களையும் எதிர்கொள்கின்றனர். "ஜனவரி மாதம் ஏற்கனவே கடினமாக இருந்தது" என்கிறார் பாபக்.

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள், தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் அதிகாரிகளால் இணையம் முடக்கப்பட்டமை போன்ற காரணங்களால் ஆண்டின் தொடக்கத்தில் பணிக்குச் செல்வது நிறைய பேருக்கு கடினமாக இருந்தது.

"அரசு ஊழியர்கள் போன்ற மாதச் சம்பளம் வாங்குபவர்களைத் தவிர, பலரால் குளிர்காலத்தில் வருமானம் ஈட்ட முடியவில்லை. இது பல குடும்பங்களைப் பாதித்துள்ளது."

இரானியர்கள்

பட மூலாதாரம், supplied

அதி உயர் தலைவரின் மரணம்

அன்றாட ஆபத்துகள் மற்றும் பிரச்னைகளுக்கு மேலாக, இந்தப் போர் தங்களது நாட்டின் எதிர்காலத்திற்கு என்ன அர்த்தத்தை குறிக்கும் என்பது பற்றியும் மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக சனிக்கிழமையன்று நடந்த வான்வழித் தாக்குதலில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு அவர்கள் அதுகுறித்து சிந்தித்து வருகின்றனர்.

"நாங்கள் முதலில் அதை நம்பவில்லை" என்று கூறிய காவே, "அந்தத் தருணம் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நான் எப்போதும் கற்பனை செய்திருந்தேன், ஆனால் அப்படி இருக்கவில்லை," என்றும் கூறினார்.

இதுகுறித்துப் பேசிய சலார், "ஒரு தனி நபரின் மாயையாலும் பைத்தியக்காரத்தனத்தாலும், எனது வாழ்நாளின் கிட்டத்தட்ட அனைத்து ஆண்டுகளும், என்னைப் போன்ற கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையும் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். ஆனால் அவர் மட்டும் ஒரே நொடியில் அகற்றப்பட்டுவிட்டார் என்ற எண்ணம் எனக்கு உண்மையான கோபத்தை ஏற்படுத்தியது."

"அவரது மரணச் செய்தி இரவு 10:30-11:00 மணியளவில் அறிவிக்கப்பட்டபோது, மக்களின் உற்சாகக் குரல்களுடன் கூடிய ஆரவாரத்தைக் கேட்க முடிந்தது," என்று தெரிவித்தார்.

மேலும், "நான் அத்தகைய எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. தாக்குதலுக்குப் பிறகு நகரத்தின் சூழல் மிகவும் பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்ததாக இருந்தது. அது இப்போதும் தொடர்கிறது" எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நடந்து வரும் போர் மற்றும் இரானில் நிலவும் கடுமையான பாதுகாப்புச் சூழல் காரணமாக, காமனெயி மரணம் குறித்த பரவலான எதிர்வினையை கணிப்பது சாத்தியமில்லை.

சில மக்கள் கொண்டாடுவதற்காகத் தெருக்களில் இறங்கினர், மற்றவர்கள் அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்ட பொது துக்க ஊர்வலங்களில் இணைந்தனர்.

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள், தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் அதிகாரிகளால் இணையம் முடக்கப்பட்டமை போன்ற காரணங்களால் ஆண்டின் தொடக்கத்தில் நிறைய பேர் பணி புரிவது கடினமாக இருந்தது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, தெஹ்ரானின் மையப்பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதல்களுக்கு பின் அழிக்கப்பட்ட கட்டடங்களை பார்வையிடும் காவல்துறையினர்

எதிர்காலம் குறித்த பார்வை

இந்தப் போர் அவர்களுக்கோ, அவர்களின் குடும்பத்தினருக்கோ அல்லது அவர்களது நாட்டிற்கோ எத்தகைய அர்த்தத்தைத் தரும் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.

"எங்களால் முன்பு போல இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை" என்ற சலார், "பலர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர்" எனக் குறிப்பிட்டார்.

மேலும், இரானின் முன்னாள் அரச குடும்பத்துடைய மகனின் ஆதரவாளர்களைக் குறிப்பிட்டு, "வெளிநாடுகளில் இருப்பவர்கள், குறிப்பாக முடியாட்சி ஆதரவாளர்கள், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளை ஆதரித்தவர்கள், உண்மையில் நாங்கள் எதை அனுபவிக்கிறோம் என்பதை அறியவில்லை" என்று கூறிய அவர், "தாக்குதல்களை இன்னும் சரியாகத் தொடங்கவில்லை என்று டிரம்ப் கூறி வருகிறார். வேறு எதை அல்லது எப்படி தாக்க போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்றும் தெரிவித்தார்.

ஆனால் இந்த மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து அவர் கவலைப்படுகிறார்.

"நான் அடிக்கடி வெளியே செல்கிறேன். பக்கத்துக்கு வீட்டாருடனும் கடைக்காரர்களுடனும் பேசுகிறேன்," என்று கூறிய அவர், "எல்லாவற்றிற்கும் விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அனைவரும் நம்புகிறார்கள். போர் நீண்டதாகவோ அல்லது ஆபத்தானதாகவோ மாறும் என்று அவர்கள் உண்மையில் கற்பனை செய்து பார்க்கவில்லை" என்கிறார்.

அதேபோல், "நாங்கள் நினைத்தது போல இந்தப் போர் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராது என்று நான் உணர்கிறேன்," என்றும் அவர் தெரிவித்தார்.

"ஆனாலும், எனது நம்பிக்கை குறையவில்லை, சொல்லப்போனால், அது ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வருகிறது" என்ற அவர், "ஒரு கடினமான அறுவை சிகிச்சையின் அபாயங்கள் மற்றும் வலியை முழுமையாக உணர்ந்து, அதைச் செய்து கொள்ளத் தீர்மானித்த ஒரு முதியவரைப் போல நான் உணர்கிறேன்"

மேலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களைக் குறிப்பிட்டு அவர் கூறுகையில், "இந்த 'அறுவை சிகிச்சைக்குப்' பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் இதைச் செய்யாவிட்டால், நிச்சயமாக இதைவிட மோசமான ஒன்று நடந்திருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்."

"குறைந்தபட்சம் இந்த வழியில், வாழ்வதற்கும் எதிர்காலத்தை நோக்கிச் செல்வதற்கும் இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசி பாரசீக சேவை என்பது பிபிசி நியூஸின் பாரசீக மொழிச் சேவையாகும். இது இரானிய அதிகாரிகளால் முடக்கப்பட்டாலும் அல்லது தடைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போதிலும் - உலகம் முழுவதுமுள்ள 24 மில்லியன் மக்களால் பெரும்பான்மையாக இரானில் உள்ள மக்களால் பயன்படுத்தப்படுகிறது.