சாபஹார்: அமெரிக்காவின் அழுத்தத்தால் இரானிடமிருந்து விலகுகிறதா இந்தியா?

பட மூலாதாரம், Getty Images
இரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவிகித வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் அறிவித்ததிலிருந்து, இது இந்தியாவின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அமெரிக்க தடைகள் காரணமாக இரானுடனான இந்தியாவின் வர்த்தகம் குறிப்பிடத்தக்கதாக இல்லை என்றபோதிலும் இந்தியாவுக்கு இரான் மூலோபாய ரீதியாக முக்கியமானது.
இரானின் தெற்கு கடற்கரையில் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகம், இந்த மூலோபாயத்தின் ஒரு முக்கிய பகுதி. மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானை இந்தியா நேரடியாக அணுக வழிவகை செய்யும் வகையில் இந்தியாவும் இரானும் இணைந்து சாபஹார் துறைமுகத்தை உருவாக்கி வந்தன.
பாகிஸ்தானைத் தவிர்த்து மத்திய ஆசியாவை அணுகுவதற்கு எளிதான வழி என்பதால் சாபஹார் இந்தியாவுக்கு முக்கியமானது. இருப்பினும், அமெரிக்கா கூடுதல் வரியை அறிவித்ததிலிருந்து, சாபஹார் துறைமுகத்திலிருந்து இந்தியா விலகுவது குறித்த செய்திகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்த செய்திகளுக்கும் யூகங்களுக்கும் பதிலளிக்கும் விதமாக, 'சாபஹார் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய, இரான் மற்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக' இந்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை அன்று (ஜனவரி 16) கூறியது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை "உங்களுக்குத் தெரியும், அக்டோபர் 28, 2025 அன்று, அமெரிக்க கருவூலத் துறை ஏப்ரல் 26, 2026 வரை செல்லுபடியாகும், நிபந்தனைக்குட்பட்ட தடை விலக்கு வழிகாட்டுதல்களை வழங்கியது. இந்த ஏற்பாட்டை இறுதி செய்ய அமெரிக்க தரப்புடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இரானுடன் எங்களுக்கு நீண்டகால உறவு உள்ளது. நிகழ்வுகளை நாங்கள் நெருக்கமாகக் கண்காணித்து வருகிறோம். அதேபோல, இந்த கூட்டாண்மையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்", என்று கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு இந்தியா இரானுடன் 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் இரானின் பங்கு 0.15 சதவிகிதமாக இருக்கிறது.
சாபஹார் தொடர்பான ஊகங்கள்
எகனாமிக் டைம்ஸ்-இல் வெளியான ஓர் அறிக்கையால் சாபஹார் தொடர்பான இந்த ஊகங்கள் வெளியாகத் தொடங்கியிருக்கிறது. அந்த அறிக்கையில், இந்தியா சாபஹார் திட்டத்திலிருந்து மூலோபாய ரீதியாக விலகத் தொடங்கியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, இந்தியா ஒப்புக்கொள்ளப்பட்ட தனது முதலீட்டுத் தொகையின் பங்கை ஏற்கெனவே இரானுக்கு அளித்துவிட்டது. அத்தோடு இத்திட்டத்தை செயல்படுத்தும் அரசுக்கு சொந்தமான நிறுவனமான இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட், எதிர்காலத்தில் அமெரிக்க தடைகளைத் தவிர்க்க முறையாக தன்னை விலக்கிக்கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சாபஹார் துறைமுகம் தொடர்பாக இந்தியா டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து விலக்கு பெற்றிருந்தாலும், அமெரிக்காவுக்கு இந்த விலக்கை நீட்டிக்க விருப்பமில்லை. ஆனாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு வரும் ஏப்ரல் வரை அவகாசம் உள்ளது.
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அடுத்த மாதம் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், எதிர்க்கட்சிகள், மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சர்வதேச விவகாரங்களின் நிபுணர்கள் கூட அமெரிக்கா தொடர்பான இந்தியாவின் கொள்கை குறித்து கேள்விகளை எழுப்புகின்றனர்.
அமெரிக்காவை கோபப்படுத்தாமல் இருக்க இந்தியா மீண்டும் மீண்டும் அழுத்தத்திற்கு அடிபணிந்து தனது பெரிய நலன்களுக்குக்கூட தீங்கு விளைவிக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா, தனது எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில், எவ்வளவு காலம்தான் இந்தியா அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ் தனது முடிவுகளை எடுக்கும் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்தோடு, "உண்மையான பிரச்னை சாபஹாரோ ரஷ்ய எண்ணெயோ மட்டும் அல்ல. முக்கியக் கேள்வி இதுதான்: அமெரிக்கா இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க மோதி ஏன் அனுமதிக்கிறார்?", என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அழுத்தத்தின் கீழ் இந்தியா தனது முடிவுகளை எடுக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
மூலோபாய விவகார நிபுணர் பிரம்மா செலானி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், "2019-இல் அமெரிக்கா இரானிய எண்ணெய் இறக்குமதிக்குத் தடை விதித்தபோது, இந்தியா திடீரென்று இரானிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. இது இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையிலான எரிசக்தி உறவை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்தது, இதனால் சீனா நேரடியாக பயனடைந்தது", எனப் பதிவிட்டுள்ளார்.
"இன்று, சீனா மட்டுமே இரானிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது, அதுவும் உலகிலேயே மிகக் குறைந்த விலையில்," என்று குறிப்பிட்டுள்ள செலானி, "ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த தடைகளை அப்பட்டமாக மீறியதற்காக சீனாவுக்கு எதிராக அமெரிக்கா எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை", எனவும் கூறியுள்ளார்.
"தற்போது, சாபஹார் துறைமுகம் மீதான அமெரிக்காவின் தடை விலக்கு ஏப்ரல் மாதத்தில் காலாவதியாவதால், இந்தியா ஒரு காலத்தில் தான் இயக்கி வந்த துறைமுகத்திலிருந்து விலகுகிறது. இந்தத் துறைமுகம், சீனாவால் இயக்கப்படும் பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்துக்கு இந்தியாவின் ஒரு மூலோபாயப் போட்டியாகக் கருதப்படுகிறது", என்கிறார் செலானி.
இந்தியாவின் இந்தச் செயல்பாடு அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறுகிறார்.
"இது ஆச்சரியமானது, ஏனெனில் மே 2024-இல், இந்தியாவும் இரானும் சாபஹாரில் உள்ள ஷாஹித் பெஹேஷ்டி முனையத்திற்கான 10 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா அங்கு சரக்கு மற்றும் கொள்கலன் முனையத்தை உருவாக்க, பொருத்த மற்றும் இயக்கும் உரிமையைப் பெற்றது, குறிப்பாக அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்கும் வசதியுடன்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.

என்னென்ன வழிகள் உள்ளன?
இந்தியாவின் ஆங்கில நாளிதழான தி இந்துவின் ராஜதந்திர விவகாரங்கள் தொடர்பான ஆசிரியர் சுஹாசினி ஹைதரின் கருத்துப்படி, வெளியுறவு அமைச்சகம் சாபஹார் துறைமுகம் பற்றிய எகனாமிக் டைம்ஸ் அறிக்கையை மறுக்கவில்லை.
அமெரிக்க நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கட்டுரையாளர் சதானந்த் துமே தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், "கடந்த 10-12 ஆண்டுகளில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒரு 'சக்திவாய்ந்த இந்தியாவை' முன்னிலைப்படுத்த முயற்சித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டின் நிகழ்வுகள்….இந்தியாவின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் ராணுவ வலிமைக்கு வரம்புகள் இருப்பதை தெளிவாக்கியுள்ளன", என்று பதிவிட்டுள்ளார்.
"உங்கள் வாசலில் 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட ஒரு விரோத நாடும், 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட ஒரு வல்லரசும், 'சமீபத்தில் நீங்கள் எங்களுக்கு என்ன செய்தீர்கள்?' என்ற ஒரே ஒரு கேள்வியுடன் நிற்கும்போது, 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் குறித்து ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் உரத்த குரலில் பேசுவதால் அதிக பயன் இல்லை"
"தனிப்பட்ட முறையில், இந்த இறுமாப்பை குறைக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்," என்றும் துமே குறிப்பிட்டுள்ளார்.
"இது உள்நாட்டு அரசியலுடன் மிகவும் ஆழமாக பின்னிப் பிணைந்திருப்பதால், பின்வாங்குவது எளிதல்ல. 'உண்மை என்னவென்றால், யாரும் நம்மை உலக தலைவராக கருதவில்லை' என்று சொல்வதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற முடியாது. இந்தியா கடினமான அண்டை நாடுகளைக் கொண்ட ஒரு நடுத்தர சக்தி. சில அம்சங்களில் பார்த்தால், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு இருந்ததை விட குறைவான பாதுகாப்பே இந்தியாவுக்கு உள்ளது" என்கிறார்.
அமெரிக்காவின் அல்பானி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துணைப் பேராசிரியர் கிறிஸ்டோபர் க்ளாரியின் பதிவை மறுபதிவு செய்து, துமே இந்தப் பதிவை எழுதியுள்ளார்.
அமெரிக்கப் பேராசிரியர் தனது பதிவில், "முந்தைய அமெரிக்க நிர்வாகங்கள் சாபஹார் தொடர்பாக ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டுமென இந்தியாவை கட்டாயப்படுத்த விரும்பவில்லை, ஏனெனில் அது அனுப்பும் சமிக்ஞை குறித்து அவர்கள் கவலைப்பட்டனர். ஒவ்வொரு இருதரப்பு உறவும் நிபந்தனைகளுடன் தான் வருகிறது என்ற உண்மையை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. டிரம்ப் நிர்வாகம் அந்த நிபந்தனைகளின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது." என்று கூறியுள்ளார்.
ஓ.ஆர்.எஃப் (ORF) ஆய்வு நிறுவனத்தின் மூத்த உறுப்பினர் சுஷாந்த் சரீன், இந்த பிரச்னையை வித்தியாசமாக பார்க்கிறார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், "சாபஹாரில் இருந்து விலகுவதற்காக இந்திய அரசாங்கத்தை கேலி செய்பவர்கள் (அது இந்தியா கட்டாயத்தின் கீழ் எடுத்த நடவடிக்கை, அதன் சொந்த விருப்பத்தின்படி அல்ல, இரான் இதை விரும்பாமல் இருக்கலாம், ஆனால் இதை புரிந்துகொள்ள வேண்டும்), இரானுடனான தங்கள் ஒற்றுமையை நிரூபிக்க இரான் மீதான அமெரிக்க தடைகளை மீறி தங்கள் வார்த்தைகளை செயலாக மாற்றலாம்", என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "தயவுசெய்து உங்கள் விசாக்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, அமெரிக்காவைப் புறக்கணிக்கும் போராட்டத்தை கையில் எடுங்கள். உங்கள் குழந்தைகளை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலிருந்து விலகச் செய்யுங்கள். இதையெல்லாம் செய்ய நீங்கள் தயாராக இல்லை என்றால், தயவுசெய்து அமைதியாக உட்காருங்கள், நீங்கள் மிகவும் கொள்கைப்பிடிப்புள்ளவர் என்று பாசாங்கு செய்வதை நிறுத்துங்கள்", என்று சுஷாந்த் சரீன் பதிவிட்டுள்ளார்.
சரீனின் பதிவை மறுபதிவு செய்த, சர்வதேச விவகார நிபுணர் சோராவர் தௌலத் சிங், "ஒரு தசாப்தத்துக்கு மேலாக, இந்தியா அமெரிக்காவின் புவிசார் அரசியல் வலையமைப்பில் பொருந்த முயற்சி செய்து வருகிறது, பெரும்பாலும் அதன் சொந்த நலன்களுக்கு எதிராக." என்று கூறியுள்ளார்.
"உலகளவில் அதிகாரச் சமநிலை குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்படும் நேரத்தில் இது நடக்கிறது, இன்னும் அமெரிக்கா இந்தியாவுக்கு அதன் கூட்டணியில் ஒரு சுயாதீன பங்கை வழங்க எந்த விருப்பமும் காட்டவில்லை. மூலோபாயம் என விவரிக்கப்படுவதன் நன்மைகள், செலவுகளை விட மிகக் குறைவாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
'இந்தியாவுக்கு சவால்கள் அதிகரித்துள்ளன'
இருப்பினும், ஆய்வு நிறுவனமான புரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூஷனின் மூத்த உறுப்பினர் தான்வி மதன், 'தற்போதைய காலத்தில் இந்தியாவுக்கு இதுதான் நடைமுறைக்கு பொருத்தமான சிறந்த வழி' என்று கூறுகிறார்.
அவர், "இந்தியா பன்முனை வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறது. அதாவது, பல நாடுகளுடன் அதற்கு உறவுகள் உள்ளன. அனைத்துடனும் சமநிலையைப் பேணுவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இது பனிப்போரின் போது இந்தியாவின் உத்தியாக இருந்தது, ஆனால், இன்று இது எளிதானது அல்ல. குறிப்பாக டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில், இந்தியாவுக்கான சவால்கள் அதிகரித்துள்ளன. எனவே, இந்தியா அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் மற்றும் அதன் உறவுகளில் பன்முகத்தன்மையை பேண வேண்டும், ஏனெனில், நாடுகள் முறையான ராணுவ கூட்டணிகளை தவிர்க்கும்போது, அவர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரத்தை வலுப்படுத்த வேண்டும்", என்று குறிப்பிட்டுள்ளார்.
2003-இல் இந்தியா சாபஹார் துறைமுகத்தை உருவாக்க முன்மொழிந்தது, இதனால் இந்திய பொருட்கள் பாகிஸ்தானைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவை சாலை மற்றும் ரயில் திட்டமான சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து நடைபாதை (INCTC) வழியாக அடைய முடியும்.
ஐஎன்சிடிசி என்பது இந்தியா, இரான், ஆப்கானிஸ்தான், ஆர்மீனியா, அஜர்பைஜான், ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட 7,200 கி.மீ நீளமான பல்-முறை போக்குவரத்து திட்டம்.
ஆனால், இரானின் அணு ஆயுத திட்டத்திற்கு அமெரிக்க தடைகள் காரணமாக துறைமுக பணிகள் குறைந்தன. இந்திய பிரதமர் நரேந்திர மோதி 2016-இல் இரான் சென்றார். அதே ஆண்டில் அந்த ஒப்பந்தமும் அங்கீகரிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Indiaportsgloballimited
2019-இல், முதல் முறையாக, ஆப்கானிஸ்தானிலிருந்து பொருட்கள் பாகிஸ்தானைத் தவிர்த்து சாபஹார் துறைமுகம் வழியாக இந்தியாவுக்கு வந்தன.
பின்னர், 2024-இல், இரானின் இரண்டாவது மிக முக்கியமான துறைமுகமான சாபஹாரில் ஷாஹித் பெஹேஷ்டி முனையத்தை இயக்க ஒப்பந்தம் எட்டப்பட்டது.
சாபஹார் துறைமுகம் தொடர்பான இந்த 2024 ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோதி தனது அரசாங்கத்தின் ஒரு பெரிய சாதனையாக குறிப்பிட்டிருந்தார். மேலும், இதில் யாருக்காவது வருத்தம் இருந்தாலும் கூட, இந்தியா தனது முடிவுகளை (அமெரிக்கா போன்ற) எந்தவொரு மூன்றாம் நாட்டின் அழுத்தத்தின் கீழும் எடுப்பதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
ஒரு தனியார் செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "மத்திய ஆசியாவுடனான இணைப்பு நமது பொருளாதாரத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். அவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும், நாங்கள் சாபஹார் ஒப்பந்தத்தை எட்டினோம். நாங்கள் எங்கள் முடிவுகளை மூன்றாம் தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு எடுக்க மாட்டோம். நாங்கள் எப்போதும் சொந்த முடிவுகளைத்தான் எடுப்போம். ஒருவருக்கு மனவருத்தம் ஏற்பட்டால், அவர்கள் மற்றவர்களிடம் பேசக்கூடாது என்று அர்த்தமல்ல. நாங்கள் அப்படிச் செய்வதில்லை. நாங்கள் அனைவரிடமும் பேசுவோம்." என்று அவர் கூறியிருந்தார்.
சாபஹார் துறைமுகத்திலிருந்து இந்தியா விலகிச் செல்வதாக வெளியாகிவரும் செய்திகளுக்கு மத்தியில், பிரதமர் மோதியின் இந்த கூற்று தற்போது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












