எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு உதவிய 10 படங்கள்

பட மூலாதாரம், Youtube
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
''எம்ஜிஆருக்கு கதாநாயக பிம்பம் எப்படி உருவானது என்பதுதான் என்னுடைய மானுடவியல் ஆய்வு. 1950ஆம் ஆண்டில் கருணாநிதி வசனத்தில் 'மந்திரிகுமாரி' படத்தில் துவங்கி, 'ராஜகுமாரி', 'தேவகி' என பல படங்களில் தொடர்ந்து நடித்த போதுதான் திராவிட இயக்கம் சார்ந்த அவருடைய அரசியல் பயணம் துவங்கியது. அந்தப் படங்களில் கருணாநிதி எழுதிய வசனங்கள் திமுக கொள்கையை வெளிப்படுத்துவதாக இருக்கும்.''
''மலைக்கள்ளன் படத்தில் 1954 ஆம் ஆண்டில் நடித்த பின்புதான் எம்ஜிஆர் மீது முழுமையான திமுக அரசியல் முத்திரை விழுந்தது. ராஜா ராணி காலத்துப் படங்களில்தான் அவர் அதிகமாக அரசியல் வசனங்களைப் பேசினார். சமூகப்படங்களில் நடிக்கத் துவங்கிய பின்பு, உடை, கொடி, பெயர், சூரியன் போல கைகளைக் காண்பிப்பது, பாடல் வரிகள் போன்று குறியீடுகளை மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தினார்.'' என பிபிசி தமிழிடம் இப்படி கருத்துகளைப் பகிர்கிறார் டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன்.
இத்தகைய படங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் பாடல்களின் மூலமாக, எம்ஜிஆர் தனது நாயக பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டதாகவும், அதுவே அவருடைய அரசியல் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்ததாகவும் விளக்குகிறது திராவிட இயக்க ஆய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய 'The Image Trap: M G Ramachandran in Film and Politics நுால். இது 'பிம்பச்சிறை' என்று தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் நடித்த பல்வேறு படங்களில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்களை வைத்து, இதை விளக்குகிறது பிம்பச்சிறை.
எங்க வீட்டுப்பிள்ளை(1965), விவசாயி (1967) ஆகிய படங்களில், இரக்கமற்ற நிலப்பிரபுக்களை எம்ஜிஆர் திருத்தி நல்லவர்களாக மாற்றுகிறார்.
ஆயிரத்தில் ஒருவன் (1965) படத்தில் ஏழைகளை அடக்கும் கொள்ளைக்கூட்டத் தலைவனை மனம் மாற்றுகிறார். நாடோடி (1966) படத்தில், தன்னுடைய தோட்டத்தை தொழிலாளர்கள் வசம் ஒப்படைக்கிறார். நான் ஆணையிட்டால் (1966) படத்தில் தன்னுடைய சொந்த நிலத்தில் நுாற்றுக்கணக்கான வீடுகளைக் கட்டி, ஏழைகளைக் குடியமர்த்துகிறார்.
''எம்ஜிஆர் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசும் படங்களில் நடித்ததில்லை. நம்நாடு போன்ற சில படங்களில் அரசியல் பேசியிருப்பார். சிவாஜி நடித்த பராசக்தியில் நேரடியாக திராவிட இயக்க கொள்கையைப் பேசிய அளவுக்குக்கூட, எம்ஜிஆர் படங்களில் அரசியல் பேசப்பட்டதில்லை. மாறாக அநீதியை, தவறுகளை தனி ஒருவனாக எதிர்க்கின்ற நாயகனைக் காண்பிக்கிற உருவகக்கதைகளை கொண்ட படங்களில் மட்டுமே அவர் அதிகமாக நடித்திருக்கிறார்.'' என்கிறார் ராஜன் குறை.
ஜனவரி 17 அன்று பிறந்த எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில், முக்கியமான படங்கள் என்று திரைத்துறை மற்றும் திராவிட இயக்க ஆய்வாளர்கள் பல படங்களைப் பட்டியலிடுகின்றனர். அவற்றில் 10 படங்களின் தொகுப்பு இது.
1. மந்திரி குமாரி

பட மூலாதாரம், X
எம்ஜிஆர் முதல் முதலாக நடித்த சதி லீலாவதி படம் 1936 ஆம் ஆண்டில் வெளிவந்தது என்றாலும், அவர் அதிகம் கவனிக்கப்பட்டது 1950 ஆண்டில் வெளியான 'மந்திரி குமாரி' படத்தில்தான் என்கிறார் ராஜன் குறை. அந்த படம், குண்டலகேசியைத் தழுவி, கருணாநிதி எழுதிய கதையின் திரைக்கதை வடிவம். படத்துக்கு வசனம் கருணாநிதி.
''வீரர்களே! சிங்கங்கள் உலவும் காட்டில் சிறுநரிகள் திரிவது போல, இன்று நம் நாட்டைச் சுற்றுகிறது ஒரு சோதாக்கும்பல். நிரபராதிகளின் சொத்துகளை சொந்தமாக்கிக் கொள்கிறது. அநாதைகளின் ரத்தத்தை அள்ளிக்குடிக்கிறது. நாட்டிலே ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வி எழும் அளவுக்கு அவர்களின் அட்டகாசம்'' என்று கருணாநிதி எழுதி எம்ஜிஆர் பேசிய வசனம் பெரும் வரவேற்பை பெற்றது.
அந்த படம் கருணாநிதிக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தியதுடன், எம்ஜிஆருக்கும் ஒரு தனி அடையாளத்தைப் பெற்றுத்தந்தது.
எல்லிஸ் டங்கன், டிஆர் சுந்தரம் ஆகியோர் இணைந்து இயக்கிய இப்படத்தில் மன்னர் காலத்துக் கதையில் தளபதி வீரமோகனாக எம்ஜிஆர் நடித்திருப்பார். ஜி.ராமநாதனின் இசையில் 15 பாடல்கள் இடம் பெற்றாலும், 'வாராய் நீ வாராய்' இன்றளவும் பிரபலமான பாடல்.
2. மலைக்கள்ளன்

பட மூலாதாரம், Youtube
இந்த படம் 1954 ஆம் ஆண்டில் வெளிவந்தது. எம்ஜிஆர்–பானுமதி இணையாக நடித்த இந்த படத்தை எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கியிருந்தார்.
இதற்கும் கருணாநிதிதான் வசனம். மொத்தம் 6 மொழிகளில் வெளியான இந்த படம்தான், தமிழில் முதல் முறையாக குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வான படம். அக்காலத்தில் வசூலிலும் சாதனை படைத்த இந்த படம், முழுக்க முழுக்க கோவை பட்சிராஜா ஸ்டூடியோவிலும், கோவையிலுள்ள சில பகுதிகளிலும் படமாக்கப்பட்டது.
வெகுநீளமான வசனங்களை எழுதி பெயர் பெற்ற கருணாநிதி, இந்த படத்தில் சுருக்கமாகவும், சுவையாகவும் எம்ஜிஆருக்கு ஏற்றபடி வசனங்களை எழுதியிருந்ததாகச் சொல்கிறார் வரலாற்று ஆய்வாளர் சி.ஆர்.இளங்கோவன். ஒரு காட்சியில் நாயகி பானுமதி செல்லக்கோபத்துடன் நாயகன் எம்ஜிஆரிடம் என்ன பேசுகிறீர்கள் என்று கேட்க அவர் 'தமிழ்' என்பார்.
அதே படத்தில், ''நாணம்...பெண்கள் ஆடவர் மீது தொடுக்கும் முதல் பானம்'' , ''மங்கைக்கோ மனப்போராட்டம், இந்த மலைக்கள்ளனுக்கோ உயிர்ப்போராட்டம்'', ''மலரிடம் வரும் வண்டு தோட்டக்காரனை எழுப்பி சொல்லிக் கொண்டா வருகிறது.'' என்று கருணாநிதி வசனங்களை எழுதியிருப்பார்.
ஆனால் அதற்குப் பின் 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த 'புதுமைப்பித்தன்' படத்தில், ''திமிங்கலம் கடலில் மட்டுமல்ல, நாட்டிலும் உண்டு. ஆனால் மனித உருவத்திலே அது கப்பலை மட்டுமல்ல, தேசத்தையே கவிழ்த்துவிடும்." என்று அரசியல் கலந்த வசனத்தையும் எம்ஜிஆருக்காக கருணாநிதி எழுதியிருப்பார்.
3. மதுரை வீரன்

பட மூலாதாரம், Youtube
கதையின் நாயகனாக எம்ஜிஆர் நடித்து மெகா வெற்றி பெற்ற இந்த படம், 1956 ஆம் ஆண்டில் வெளியானது. படத்தின் முதல் பாதி கருப்பு வெள்ளையிலும், இரண்டாம் பாதி வண்ணப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.
அதற்கும் முன்பே 1939 ஆம் ஆண்டில் 'மதுரை வீரன்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவந்திருந்தாலும், எம்ஜிஆரும், அவருக்கு நாயகிகளாக பத்மினியும், பானுமதியும் இணைந்து நடித்த இந்தப் படம்தான் மிகப்பெரிய வெற்றியை எட்டி அக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த படமாக வரலாற்றில் இடம் பெற்றது.
ஜி.ராமநாதன் இசையில், ''நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே'', ''ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க'', ''வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பார்த்துப் போங்க'' ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமாகின.
4. நாடோடி மன்னன்

பட மூலாதாரம், MGRPictures
எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு மாபெரும் திருப்புமுனையாக அமைந்த படம் என்று நாடோடி மன்னனைச் சொல்லலாம். சதி லீலாவதி படத்தில் அறிமுகமாகி 22 ஆண்டுகளுக்குப் பின், இந்தப் படத்தில்தான் எம்ஜிஆர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரங்களை எடுத்தார். இரட்டை வேடத்திலும் நடித்திருந்தார். இந்த படம் எம்ஜிஆர் பிக்சர்ஸ் என்ற பெயரிலேயே தயாரிக்கப்பட்டது.
படத்தின் வசனத்தை கண்ணதாசனும் இணைந்து எழுதியிருந்தார். எம்ஜிஆருடன் சரோஜா தேவி முதலில் இணைந்தது இந்தப் படத்தில்தான்.
இந்தப் படத்துக்கு முதலில் 'உத்தமபுத்திரன்' என்று பெயர் வைக்கப்பட்டது. அதேகாலகட்டத்தில் சிவாஜி நடித்த படத்துக்கும் இந்த பெயர் வைக்கப்பட்டதால், இதற்கு 'நாடோடி மன்னன்' என்று பெயர் மாற்றப்பட்டதாக 'தாய்' இதழ் எழுதியுள்ளது.
அக்காலத்தில் எம்ஜிஆர், தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் இந்தப் படத்தில் செலவழித்தும், இறுதியில் பிரிண்ட் எடுக்க பணமில்லாத நிலையில், எம்ஜிஆருக்காக ஆர்.எம்.வீரப்பன் கையெழுத்திட்டு கடன் வாங்கியதாகச் சொல்கிறது அந்தச் செய்தி. படம் வெளியாகும் முன் எம்ஜிஆர், ''இந்தப் படம் வெற்றி பெற்றால் நான் மன்னன்; இல்லாவிட்டால் நான் நாடோடி'' என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
ஆனால் படம் மெகா ஹிட் அடித்து, முந்தைய படமான மதுரை வீரன் படத்தின் ஒரு கோடி வசூலையும் முறியடித்தது. இருப்பினும் அந்த லாபம் விநியோகஸ்தர்களுக்கே பெருமளவில் சென்றது. இந்த படத்துக்குப் பின்பே, தனது படத்தின் எல்லா விஷயங்களையும் தீர்மானிக்கிற சக்தியாக எம்ஜிஆர் உருவெடுத்தார் என்று தாய் இதழ் குறிப்பிடுகிறது.
எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் இப்படத்தின் 'தூங்காதே தம்பி தூங்காதே' பாடல் பெரியளவில் பிரபலமானது. பின்னாளில் கமல் இதே தலைப்பில் ஒரு படத்திலும் நடித்தார்.
5. எங்க வீட்டுப்பிள்ளை

பட மூலாதாரம், Youtube
இந்தப் படம் 1965 ஆம் ஆண்டில் வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்திலும் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். எம்ஜிஆர்–சரோஜா தேவி இணைந்து நடித்து சாணக்கியா இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி தயாரித்திருந்தார்.
விஸ்வநாதன்–ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த இந்தப் படத்தில் வாலி எழுதிய, ''நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்'' என்ற பாடலில் கையில் சாட்டையுடன் எம்ஜிஆர் நடித்த காட்சிகள், அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதாக நினைவு கூர்கிறார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள்.
இந்தப் பாடல், அந்தக் காலகட்டத்தில் எம்ஜிஆரின் அரசியல் விருப்பங்களையும், கொள்கையையும் வெளிப்படுத்தும் குறியீடாகக் கருதப்பட்டது. அதன்பின்பு இந்தப் பாடலின் முதல் வரியை தலைப்பாகக் கொண்டு எம்ஜிஆர் நடித்த 'நான் ஆணையிட்டால்' படமும் வெளியானது. அதுவும் அரசியல் பேசுகிற படமாக இருந்தது.
6. ஆயிரத்தில் ஒருவன்

எம்ஜிஆர்–ஜெயலலிதா இணையாக நடித்த இந்த படமும், எங்க வீட்டுப்பிள்ளை வெளியான அதே ஆண்டில் வெளியானது.
பி.ஆர்.பந்துலு இயக்கிய இந்தப் படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன்–ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்து இருந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்த கடைசிப்படம் இதுதான். படத்தில் 7 பாடல்களில் 4 பாடல்களை வாலியும், 3 பாடல்களை கண்ணதாசனும் எழுதியிருந்தனர்.
உன்னை நான் சந்தித்தேன், ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கையில்லை, ஆடாமல் ஆடுகிறேன், ஓடும் மேகங்களே, பருவம் எனது பாடல், நாணமோ இன்னும் நாணமோ என அத்தனை பாடல்களும் அதில் ஹிட் அடித்தாலும் கண்ணதாசன் எழுதிய ''அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்'' பாடல்தான் இன்று வரையிலும் பண்பலைகளில் அவ்வப்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டில், செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்து இதே பெயரில் வெளியான படத்திலும் இந்தப் பாடல் மறுஆக்கம் செய்யப்பட்டது. எம்ஜிஆர்–ஜெயலலிதா நடித்து வசூல் சாதனை படைத்த இந்தப் படம், கடந்த 2014 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டு, அப்போதும் பல திரையரங்குகளில் வெள்ளிவிழா கண்டது.
7. ஒளி விளக்கு

பட மூலாதாரம், Youtube
சாணக்கியா இயக்கிய இந்தப் படம் எம்ஜிஆரின் நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைத்த ஒரு படம் இது என்று விமர்சனங்கள் எழுதப்பட்டன.
பொதுவாக குடிப்பது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்காமல் இருந்த எம்ஜிஆர், இந்தப் படத்தின் கதையைக் கருத்தில் கொண்டு அப்படி ஒரு காட்சியில் நடித்தார். அந்த காட்சியை நியாயப்படுத்தும் வகையில், அந்த கதாபாத்திரத்தின் மனசாட்சி கேட்பது போல ''தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா, நீதான் ஒரு மிருகம், இந்த மதுவில் விழும் நேரம்'' என்று பாடல் வரிகளை வாலி எழுதியிருப்பார்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல், பிற்காலத்தில் தமிழகமெங்கும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த ஒரு பாடலாக மாறியது. நாயகன் எம்ஜிஆர் மரணத்தோடு போராடும்போது, அவரால் அடைக்கலம் பெற்ற கணவரை இழந்த பெண், தன் உயிரை எடுத்துக்கொண்டு அவரைக் காப்பாற்றச் சொல்லிப் பாடும் ஒரு பாடல் அது. இறைவா உன் காலடியில் எத்தனையோ மணி விளக்கு என்று துவங்கும் அந்தப் பாடலில்,
'உன்னுடனே வருகின்றேன்
என்னுயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல்
இறைவா நீ ஆணையிடு!' என்ற வார்த்தைகள் இடம் பெறும்.
தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் 1984 ஆம் ஆண்டில் நோயுற்றுப் படுக்கையில் இருந்தபோது இந்தப் பாடல் தமிழகத்தில் எங்கெங்கும் இடைவிடாமல் ஒலித்தது. எந்த திரையரங்கில் எந்தப் படம் திரையிட்டாலும், அதற்கு முன்பு இந்தப் பாடல் மட்டும் ஒளிபரப்பப்பட்டது. அதற்கேற்ப எம்ஜிஆர் நலம் பெற்று மீண்டு வந்ததை அதிமுக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

8. அடிமைப்பெண்
எம்ஜிஆர்–ஜெயலலிதா இருவரும் மீண்டும் இணையாக நடித்து மெகா வெற்றி பெற்ற 'அடிமைப்பெண்' படம், 1969 ஆம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில் இருவருமே இரட்டை வேடங்களில் நடித்தது தனிச்சிறப்பு.
கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்தப் படத்தில்தான், பாடும் நிலா என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ''ஆயிரம் நிலவே வா'' பாடலில் அறிமுகமானார்.
இதே படத்தில்தான் ''அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை ஜெயலலிதா தன் சொந்தக்குரலில் பாடியிருந்தார். தமிழக அரசியலில் பின்னாட்களில் பெரும் தலைவராக உருவெடுத்து, தமிழக முதல்வரான ஜெயலலிதா, அதிமுகவினரால் அம்மா என்று அழைக்கப்பட்டார். அப்போது அவர் பங்கேற்கும் நிகழ்வுகளில் இந்தப் பாடல் தவறாமல் ஒலிக்கும்.
எம்ஜிஆரைப் பார்த்து ஜெயலலிதா பாடும் 'காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ' பாடலும் இந்த படத்திற்கு பிற்காலத்தில் தனியான அரசியல் அடையாளத்தைக் கொடுத்தது.
கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தையும் எம்ஜிஆரே தயாரித்திருந்தார். இந்தப் படமும் அவருக்கு வசூலை வாரித் தந்தது. படம் வெளியான ஆண்டில் தமிழக அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருது, இந்தப் படத்துக்கு கிடைத்தது.
9. உலகம் சுற்றும் வாலிபன்

பட மூலாதாரம், Youtube
கருணாநிதியை எதிர்த்து திமுகவை விட்டு எம்ஜிஆர் வெளியேறி, 1972 ஆம் ஆண்டில் அதிமுகவைத் துவக்கிய பின்பு, 1973 ஆம் ஆண்டில் வெளியான படம் உலகம் சுற்றும் வாலிபன். படத்தில் இரட்டை வேடங்களில் எம்ஜிஆர் நடித்ததுடன், இந்தப் படத்தை அவரே இயக்கி தயாரித்தார். படம் பல்வேறு வெளிநாடுகளில் படமாக்கப்பட்டதால் பெரும் பொருட்செலவு ஏற்பட்டது.
அப்போது திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் படத்தை வெளியிடுவதற்கு பல்வேறு தடங்கல்களும் ஏற்பட்டதாக அதிமுகவினர் இப்போதும் மேடைகளில் பேசுவதுண்டு. அக்காலத்தில் படங்களின் வெளியீடு தேதியை அறிவிக்கவும், பிரபலப்படுத்தவும் சுவரொட்டிகளை மட்டுமே நம்பியிருந்த நிலையில், திடீரென சுவரொட்டி விளம்பரங்களுக்கு அரசு வரி உயர்த்தப்பட்டது.
படம் வெளியான நாளில், சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் சாரட் வண்டிகளில் படப்பெட்டியை வைத்து அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து வந்ததாக நினைவு கூர்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். படத்தில் இடம் பெற்ற 'உலகம் அழகுக்கலைகளின் சுரங்கம்', 'பன்சாயி காதல் கவிதைகள்', 'அவள் ஒரு நவரச நாடகம்', 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என அனைத்துப் பாடல்களும் பெரும் ஹிட் அடித்தன.
அதிலும் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர்க்குரலில் பாடிய 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' பாடல், அதிமுகவின் ஆஸ்தான பாடலாக மாறியது.
10. இதயக்கனி

பட மூலாதாரம், Youtube
கட்சி துவங்கி, முழு நேர அரசியலுக்கு வந்த பின்பும் எம்ஜிஆர் நடித்த சில படங்களில் இதயக்கனி, அவருக்கு அடைமொழியாகவே மாறிய ஒரு படமாகும். கடந்த 1975 ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தை, ஏ.ஜெகநாதன் இயக்கியிருந்தார்.
படத்தில் இடம் பெறும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரம், இது யாருடைய தோட்டம் என்கிற கேள்விக்கு, ''கொடுத்துக் கொண்டே இருப்பவரின் தோட்டம் இது'' என்று பதில் சொல்வதாக காட்சி அமைந்திருக்கும்.
எம்ஜிஆர் இறுதியில் தன்னுடைய வளமான தோட்டத்தின் லாபத்தைத் தனக்கும் தொழிலாளர்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுப்பார்.
படத்தின் கதையும் திரைக்கதையும் பெரிதாக பேசப்படாத நிலையிலும், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையும் பாடல்களும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்தன. இந்தப் படத்தில்தான் புலமைப்பித்தன் எழுதிய ''நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற'' என்ற வெகுநீளமான பாடல் (6:21 நிமிடம்) இடம் பெற்றிருந்தது. சீர்காழி கோவிந்தராஜனுடன், டிஎம் செளந்தரராஜன், எஸ்.ஜானகி ஆகியோர் பாடிய இந்தப் பாடல், பிற்காலத்தில் எம்ஜிஆர் பங்கேற்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும், பின்பு ஜெயலலிதா நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து ஒலித்தது.
இப்படி பல்வேறு திரைப்படங்களிலும் கட்டமைக்கப்பட்ட இந்த பிம்பத்தால்தான், 1972 ஆம் ஆண்டில் அதிமுக துவக்கப்பட்ட பின்பு, திரையில் காட்டும் எம்ஜிஆருக்கும், நிஜ எம்ஜிஆருக்கும் வேறுபாடில்லை என்ற தமிழக மக்களின் எண்ணத்தை உடைப்பது திமுகவுக்கு பெரும்சவாலாக இருந்தது என்று தனது நுாலில் எழுதியுள்ளார் எம்எஸ்எஸ் பாண்டியன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












