'விஜய்க்கு குரல் கொடுக்கும் காங்கிரஸ்' - இந்திய கம்யூனிஸ்ட் நிலைப்பாடு என்ன? வீரபாண்டியன் பேட்டி

- எழுதியவர், சி. ஜீவா பாரதி
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வரும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியனிடம் பிபிசி நேர்காணல் நடத்தியது.
இந்த பேட்டியின் முக்கிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
கேள்வி: 2026 சட்டமன்ற தேர்தலில் எதை முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்க போகிறீர்கள்?
பதில்: எங்கள் கூட்டணியை திமுக தலைமை தாங்குகிறது. திமுகவின் நலத்திட்டங்களை நாங்கள் முன்மொழிவோம். மத்திய அரசின் கொள்கைகள் இந்தியாவுக்கு பேராபத்து என்பதை முன்மொழிவோம். தமிழக மக்கள் எப்போதுமே ஒற்றுமையை விரும்புவார்கள். மக்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் அல்லது மக்கள் மதத்தால், சாதியால் பிளவுபடுத்தப்பட வேண்டும் என்கிற இரண்டு கருத்தியலுக்கு இடையே தான் போர். நாங்கள் எப்போதுமே ஒற்றுமையின் பின்னால் நிற்கிறோம் அதை முன்மொழிவோம்.
'ஆட்சி - அதிகாரத்தில் பங்கு'
கேள்வி: ஆட்சி - அதிகாரத்தில் பங்கு என்பதை உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தீவிரமாக வலியுறுத்துகிறது. கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன?
பதில்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதை நோக்கி நகரவில்லை. இந்திய அளவில் அத்தகைய வாய்ப்பு வந்தபோது உழைக்கும், ஏழை எளிய மக்களின் நலன் சார்ந்து ஒரு கொள்கை பூர்வமான கூட்டணியில் சேர்ந்தது உண்டு. தமிழ்நாட்டில் அத்தகைய சூழல் இல்லை, நாங்கள் இடங்களை கேட்டு பெறுகிற இடத்தில் தான் இருக்கிறோம். கூட்டாட்சி முறை கொண்ட இந்தியாவில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது நல்லது. அத்தகைய கால சூழல் வரும் போது நாங்கள் அது குறித்து சிந்திப்போம்.
கேள்வி: காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றும் தொகுதிகளில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை அதனால் ஆட்சியில் பங்கு கேட்கிறோம் என்கிறார்கள். உங்கள் எம்.எல்.ஏ-களால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிகிறதா?
பதில்: தமிழக அரசு பிற மாநிலங்களை ஒப்பிடும் போது நல்ல ஆட்சி தருகிறது. கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக சொல்ல முடியாது. தமிழக அரசுக்கு வர வேண்டிய நிதியை மத்திய அரசு மறுக்கிறது. அதில் அரசியல் இருக்கிறது. இந்த தடைகளை மீறி தமிழக அரசு நல்ல நிர்வாகத்தை தருவதாக தான் நாங்கள் கருதுகிறோம். நாங்கள் இன்னும் வலுப்பெற்ற பிறகு ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து சிந்திப்போம்.
கேள்வி: தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கிறார்கள். நீங்களும் தேசிய கட்சி தான் நீங்கள் அதை நோக்கி நகரவில்லையா?
பதில்: ஆட்சி அதிகாரத்தை நோக்கி நாங்கள் நகர விரும்புகிறோம். அது தான் அரசியலின் மையம். இந்த சமூக அமைப்பை மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு அரசியல் எங்களுக்கு உண்டு. ஆனால் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் கொள்கை பூர்வமான உடன்பாட்டுக்கு வந்தாக வேண்டும். அத்தகைய கொள்கை பூர்வமான முன்மொழிவுகளை ஆரம்பத்தில் பேசி முன்மொழிய வேண்டும். அதற்குரிய கால சூழல் இல்லை. எதிர்காலத்தில் அது குறித்து சிந்திக்கலாம். இப்பொழுது அல்ல.
இப்போது திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். பாஜக-அதிமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறோம். பேராபத்தான பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. முதலில் அதை வீழ்த்தவேண்டும். பிறகு தான் மற்றது எல்லாம்.

பட மூலாதாரம், @mkstalin
கேள்வி: பாஜக தமிழ்நாட்டுக்குள் வந்துவிடும் என்ற மாய பிம்பத்தை வைத்து தான் திமுக கூட்டணி அரசியலை நடத்துவதாக விமர்சனம் வைக்கப்படுகிறதே?
பதில்: அது தவறு, எம்.ஜி.ஆர் பிரிந்த போது கூட வலுவாக இருந்த கட்சி திமுக. மக்கள் நலத்திட்டம், கூட்டணி பலம் இருக்கிறது. எல்லாவற்றையும் விட நாங்கள் நம்புவது தமிழ் மக்களின் ஒற்றுமை சிந்தனையை. நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் அந்த ஒற்றுமை உணர்வு மேலோங்கிய மாநிலம் தமிழ்நாடு. பிரிவினை கருத்துக்களை சுமந்து வரும் பாஜகவை வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
திமுகவின் நல்லாட்சி, கூட்டணி, தமிழ் மக்களின் ஒற்றுமைச் சிந்தனை என்ன மூன்றும் எங்களுக்கு கை கொடுக்கும், நாங்கள் வெல்வோம்.
வாக்குறுதிகள் தொடர்பான மக்களின் அதிருப்தி
கேள்வி: 2019 முதல் உங்கள் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வருகிறார்கள். கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றால் மாற்று கட்சியை நோக்கி மக்கள் செல்வார்கள் என்ற சூழல் உருவாகிறதா?
பதில்: நிச்சயமாக அவ்வாறு இல்லை. பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தமிழக அரசுக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தருவது இல்லை.
உத்தர பிரதேசம், பிகார், தமிழகத்தை ஒப்பிட்டு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டால் தமிழகம் எவ்வளவு வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரியும். உத்தர பிரதேசம், பிகார் மாநிலங்களுக்கு கேட்காமலே கொடுக்கப்பட்டது எவ்வளவு, கேட்டும் தமிழகத்திற்கு தரப்பட்டது எவ்வளவு என நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை வைத்தாலே தெரிந்து விடும். தமிழக அரசு எல்லா துறைகளிலும் முடக்கப்படுகிறது
இந்த காலத்திலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மையாக இருக்கிறது. இதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
கேள்வி: மக்களுக்காக பேசி வந்த கம்யூனிஸ்டுகள் திமுக புகழ் பாடுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரே?
பதில்: புகழ்பாடுவதை முதல்வரே விரும்புவது இல்லை. ஏன் நாங்கள் புகழாரம் சூட்டவேண்டும்? மக்களின் கோரிக்கைகளை மட்டுமே எடுத்து செல்வோம். இப்போதும் மக்களுக்காக நின்று சுகாதாரப் பணியாளர்கள், அரசு ஊழியர்களின் போராட்டங்களை நாங்கள் தான் நடத்தி கொண்டு இருக்கிறோம். எங்கே நாங்கள் போராடவில்லை சொல்லுங்கள். உழைக்கும், ஏழை எளிய, கடைக்கோடி மக்களின் நலன் தான் எங்களின் நலன். எங்கும் நாங்கள் அதை விட்டு கொடுப்பது இல்லை.
கேள்வி: கம்யூனிஸ்டுகள் 'கூட்டணியில் இருந்தாலும் ஒரு எதிர்க்கட்சியாக கடந்த காலங்களில் செயல்பட்டீர்கள். ஆனால் இப்பொது இல்லை' என்று எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரே?
பதில்: அவர் சொல்வதை முற்றிலும் நிராகரிக்கவில்லை. 90% இந்த நாட்டுக்கு பேராபத்து பாஜக. எனவே 90% அவர்களை எதிர்த்தாக வேண்டும்.
முழு சக்தியையும் திரட்டி பாஜகவை எதிர்ப்பதை போல திமுகவை எதிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்கிறார். அதிமுகவே ஆட்சியில் இருந்தாலும் அப்படி நாங்கள் எதிர்க்க மாட்டோம், ஏன் என்றால் அதனை ஜனநாயக வடிவமாக பார்ப்போம். இன்றைக்கு அதிமுக சேர்ந்திருக்கிற இடம் சரியில்லை என்பதால் அதைத் தோற்கடிக்க வேண்டும் என துடிக்கிறோம்.
அதிகாரத்தை குவித்து வைத்திருக்கிற மத்திய அரசு தான் பேராபத்து, மாநில அரசு அல்ல. திமுக ஜாதி, மத கலவரங்களை தூண்டிவிடுகிறதா? இல்லையே. பதற்றச் சூழல் உருவாகினாலும் அமைதிக்கான முன்னெடுப்பை தான் முதல்வர் செய்கிறார். எனவே தான் தோழமை கட்சி திமுகவை ஆதரிக்கிறோம்.
'இளைஞர்கள் இடதுசாரி அரசியல் பக்கம் திரும்புவார்கள்'

கேள்வி: தொழிலாளர்கள் நலன் சார்ந்து, தொழிலாளர் போராட்டத்தை முன்னெடுத்து கட்சிகளை வளர்த்த கம்யூனிஸ்டுகளுக்கு அதே பாணியில் இப்போது கட்சிகளை வளர்ப்பதில் சிக்கல் உள்ளதா? பெருநிறுவனங்கள் வந்த பிறகு அரசே நிறுவனங்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கும் போது உங்களுக்கு மேலும் சிக்கல் ஏற்படுகிறதா?
பதில்:நிச்சயமாக கடினமான சூழல் தான். நாடாளும் அரசே நாடு கடந்த நிறுவனங்களுக்கு எட்டு கதவை திறந்து விடுகிறார்கள், கொள்ளையடி, வளங்களை எடுத்து செல் என்று சொல்கிறார்கள். அதை தடுக்கும் இடத்தில் நாங்கள் இல்லை. நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் ஒரு வலுவான இடம் இருந்தால் எவ்வளவு நல்ல காரியங்களை எங்களால் செய்ய முடியும். அங்கே வலுகுன்றி இருக்கிறோம். அது ஜனநாயகத்திற்கே நல்லதல்ல.
அமர்தியா சென் சொல்வது போல் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் 20 ஆண்டுகளுக்கும் முன் இருந்தது போல கோப, ஆவேசங்கள் வெளிப்படுவதில் ஒரு இடைவேளை இருக்கதான் செய்கிறது. அதை ஒப்புக்கொள்ள வேண்டும். பிறர் நலன், நாட்டு நலன், பொது நலன் என்பது அழிந்து வரும் சூழலில் இருக்கிறோம். ஆனாலும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
படித்த இளைஞர்கள், தொழில்நுட்ப சிந்தனை உள்ளவர்கள் வீடுகள் தோறும் உருவாகி வருகிறார்கள். அவர்களிடம் உலக நோக்கு இருக்கிறது. எல்லோரும் நன்றாக வாழவேண்டும் என்ற நல்ல சிந்தனைகள் இருக்கிறது. இது மேலோங்க மேலோங்க அவர்கள் இடதுசாரிகள் பக்கம் தான் திரும்புவார்கள். அவர்கள் யுத்தத்தை விரும்ப மாட்டார்கள்.
கேள்வி: இந்திய அரசியலில் பாஜக-வுக்கு மீண்டும் மீண்டும் மக்கள் வாய்ப்பளிக்கிறார்கள். விஜயை நோக்கி இளைஞர்கள் நகர்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் களத்தில் போராட்டத்தை நடத்தினாலும் உங்களை பின்பற்றி இளைஞர்கள் வருவது இல்லை என்பது கண்கூடாக தெரிகிறதே?
பதில்: அது உண்மை தான் மறுக்கவில்லை. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இடதுசாரிகள் தான் வெற்றி பெறுகிறோம். உலகம் முழுவதும் உள்ள ஊடகவியாளர்கள், பத்திரிகையாளர்களை கணக்கெடுத்தால் எல்லாரும் இடதுசாரி சிந்தனையாளர்கள் தான்.
பாஜக போல ஜாதி, மொழி, இனம் ஆகியவற்றில் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டால் கூட்டம் வரும். நாங்கள் அவ்வாறு முன்மொழிவது அல்ல. கரத்தால் , கருத்தால் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை கோருகிறோம் அது கொஞ்சம் கடினம் தான். இடதுதான் வெல்லும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
தவெக கூட்டணியை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு?

பட மூலாதாரம், TVK
கேள்வி: திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தவெக மற்றும் விஜயை குறிப்பிட்டு பேசுகிறார்கள். கம்யூனிஸ்டுகளும் விஜயை நோக்கி போகும் வாய்ப்பு ஏதும் உள்ளதா?
பதில்: பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரு கொள்கை முடிவை எடுத்து விட்டோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தை, அரசியல் விழுமியங்களை, நீதி முகமைகளை சுற்றிவளைக்கிறது பாஜக. அது பேராபத்து, அந்த ஒரு புள்ளியில் உறுதியாக இருக்கிறோம். அதை தமிழ்நாட்டில் முதலில் வீழ்த்த வேண்டும்.
கேள்வி: 'பாசிச சக்தி' என பாஜகவை விஜய் விமர்சிக்கிறாரே?
பதில்: சொல்லட்டும், ஆனால் கூட்டணி ஏற்கனவே இங்கு அமைந்து விட்டது. அமைந்த கூட்டணியை உடைத்து வெளியே வர வேண்டும் என்பது எல்லாம் முடியாத காரியம். அவ்வாறான சிந்தனை இருந்தால் பாயசம் என்று ஏன் சொல்ல வேண்டும்? தவறி கூட அவர் சொல்லி இருக்கலாம், அவர் மறு வாசிப்பு செய்ய வேண்டும். விஜய் போன்றவர்கள் மீது எந்த காழ்ப்பும், கசப்பும், வெறுப்பும் இல்லை. கொள்கை வழி தான். யார் கட்சி அமைத்தாலும் மக்கள் அவர்களின் பின்னால் சென்றாலும் போட்டியோ, பொறாமையோ இல்லை. எங்கள் கொள்கை வலுவாக இருக்கிறது. ஒரு சுற்று சுற்றி மக்கள் இங்கே தான் வருவார்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது.
விஜய் கொள்கையை தெளிவுபடுத்தவில்லை. திமுகவை தீய சக்தி என்று சொல்வது என்ன நியாயம். திமுக ஜாதி கட்சியா? மத அரசியல் செய்யும் கட்சியா?
தீமை என்றால் ஆர்.எஸ்.எஸ் என்று சொல்லுங்கள். இந்தியா முழுவதும் நடந்த வகுப்பு கலவரத்திற்கு யார் காரணம்? அவர்கள் தான். எனவே தீமை என்பது, திமுக அல்ல.
கேள்வி: திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பெண்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு தொடர்பான கேள்விகள் என பல்வேறு குற்றச்சாட்டுகளை விஜய் முன்வைக்கிறாரே?
பதில்: பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்று நினைக்கிறீர்களா? இந்தியாவில் பிற மாநிலங்களோடு ஒப்பிட்டால் பெண்களை மதிக்கின்ற பூமி தமிழ் பூமி. எங்கு இருந்து இங்கு வந்தாலும் நிம்மதியாக வாழலாம். இந்த மண்ணே அமைதி பல்கலைக்கழகம் தான். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரச்னைகள் இல்லாமல் இல்லை. அதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?
கேள்வி: சித்தாந்தங்கள் தாண்டி, தனி மனித துதி பாடல் தான் பல கட்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இது கம்யூனிஸ்ட்டுகளுக்கும் பொருந்துமா?
பதில்: எங்களுக்கு பொருந்தாது. நாங்கள் தனி மனிதர்களை துதி பாடுவது இல்லை. தனி மனித முக்கியத்துவத்தை போற்றுகிறோம். நீண்ட நெடுங்காலமாகவே 'பாப்புலரிஸத்தை' முன்மொழிந்து விட்டார்கள். காந்தியை மக்கள் அவ்வாறு வழிபடுவதாக அம்பேத்கர் கூட சொன்னார். தமிழ்நாட்டை பொறுத்த அளவுக்கு பாப்புலரிஸம் தான் மேலோங்கி இருக்கிறது. கொள்கை அதற்கு அடுத்து தான் இருக்கிறது. ஆனால் கொள்கை தான் வெல்லும். கம்யூனிஸ்ட் கட்சியில் தனிநபர் துதிப்பாடல் இல்லை. கூட்டு முயற்சி தான்.
கேள்வி: 2026 தேர்தலில் கடந்த முறையை காட்டிலும் கூடுதல் இடங்களை திமுகவிடமிருந்து பெற முடியுமா?
பதில்: நிச்சயமாக கொடுக்கவேண்டும். நூற்றாண்டு கால கம்யூனிஸ்ட் இயக்கம். அமைப்பாக நாங்கள் இருக்கிறோம். எங்களை யாரும் கடந்து சென்று விட முடியாது. அரசியல் உயிர்ப்போடு இருப்பதற்கு எங்களின் பங்கு பெரியது இல்லை என்றால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அரசியல்வாதிகள் தெரிவார்கள். நாங்கள் அன்றாடம் இயங்குகிறோம். அதற்கே எங்களுக்கு பல இடங்கள் அதிகமாக தர வேண்டும். சூழல் அறிந்து கொஞ்சம் அதிக இடங்கள் கேட்பதற்கு முழு தார்மீகம் உண்டு என நான் நம்புகிறேன்.
ஜனநாயகன்

பட மூலாதாரம், KVNProductions
கேள்வி: ஜனநாயகன், பராசக்தி போன்ற திரைப்படங்கள் மீது மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் நடவடிக்கையை எப்படி பார்க்கிறீகள்?
பதில்: கலை, இலக்கியம் மிக சுதந்திரமாக இருக்க வேண்டும். அத்தகைய சூழலில் கலை இலக்கியம் பிறப்பது நல்லது. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத மதம் சார்ந்த சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் நிலைபெற்று இருக்கிற நாடு நமது நாடு. எதன் பொருட்டும் அதைத் தடை செய்யக் கூடாது. மக்களின் ஒற்றுமையை, நாட்டின் இறையாண்மையை கெடுக்கிற கருத்துகளை தடை செய்யலாமே கூட மற்றபடி விமர்சனங்களை வரவேற்கலாம். விமர்சனங்களால் ஜனநாயகம் வளரும், அதை கண்டு சான்றிதழ் வாரியம் அஞ்சத் தேவையில்லை. வாரியத்தை வைத்து பிறரை வளைக்கவேண்டிய முயற்சியில் பாஜகவும் ஈடுபட தேவையில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












