ஜம்முவில் மருத்துவக் கல்லூரி மூடல் - அதிக முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கைக்கு எதிரான போராட்டம் காரணமா?

பட மூலாதாரம், smvdime.in
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சிறப்பு மருத்துவ கல்லூரியின் உரிமத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) ரத்து செய்துள்ளது. பல்வேறு பற்றாக்குறைகளை சுட்டிக்காட்டி இளங்கலை மருத்துவப் படிப்பை நடத்துவதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக் கல்லூரியின் முதல் மாணவர் சேர்க்கை இதுவாகும்.
இந்தியாவில் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவர்களின் தொழில்முறை நடத்தையை தேசிய மருத்துவ ஆணையம் கண்காணித்து வருகிறது. இந்தியாவில் மருத்துவப் படிப்புகளை நடத்துவதற்கு இந்த ஆணையத்தின் அனுமதி கட்டாயமாகும்.
இந்த (2025-26) கல்வி ஆண்டு முதல் மருத்துவப் படிப்பை தொடங்கவும் முதல்கட்டமாக 50 மாணவர்களை அனுமதிக்கவும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது நிரப்பப்பட்டுள்ள 50 இடங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்கள் முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரியில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கப்பட்டதற்கு எதிராக, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி என்கிற கூட்டமைப்பின் கீழ் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்தன.
தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை, ஒருபுறம் இந்து அமைப்புகள் வெற்றியாகக் கொண்டாடி வருகின்றன. மறுபுறம் இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.

பொறுப்பை உறுதிபடுத்தியிருக்க வேண்டும்: ஒமர் அப்துல்லா
இந்த நிலையில், மருத்துவக் கல்லூரியில் குறைபாடுகள் இருந்திருந்தால், அதற்கான பொறுப்பை உறுதிபடுத்தியிருக்க வேண்டும் என்று, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்ற மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை தனது அரசு மேற்கொள்ளும் எனக் கூறிய ஒமர் அப்துல்லா, மாணவர்கள் அவர்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களைப் பிற கல்லூரிகளில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, "நீங்கள் கல்லூரியின் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை கேள்வி கேட்க வேண்டும்; ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவியுள்ளீர்கள் என்றால், ஏன் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஆய்வில் தேர்ச்சி பெறவில்லை?" என்று கூறினார்.
கடந்த ஜனவரி 2-ஆம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் அந்த மருத்துவக் கல்லூரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி 6-ஆம் தேதி அக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பை நடத்துவதற்கான அனுமதியைத் திரும்பப் பெறுவதாக உத்தரவு பிறப்பித்தது.
ஆய்வின் போது மருத்துவக் கல்லூரியில் நிலவிய பல்வேறு குறைபாடுகளை தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, ஆசிரியர்களின் எண்ணிக்கை, மருத்துவப் பரிசோதனை பொருட்கள் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், ANI
இந்து அமைப்பினரின் போராட்டத்தை தொடர்ந்த நடவடிக்கைகள்
கடந்த நவம்பர் மாதம் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் தொடங்கின.
நீட் தேர்வின் தகுதிப் பட்டியலின் அடிப்படையில், மருத்துவக் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட 50 இடங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 22-ஆம் தேதி ஸ்ரீ வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து, அந்த மருத்துவக் கல்லூரிக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்ததோடு, மருத்துவ படிப்புக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது.
இந்த போராட்டக் குழுவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடைய அமைப்புகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இடம்பெற்றிருந்தன. பஜ்ரங் தளம் அமைப்பும் அந்த மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் முடிவுக்கு ஒரு நாளைக்கு முன்னதாக, ஜம்முவில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வெளியே அந்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஜம்முவில் போக்குவரத்தை முடக்கப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதற்கடுத்த தினம், அந்த கல்லூரி மருத்துவப் படிப்பை நடத்துவதற்கான அனுமதியைத் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரிக்கு எதிராகப் பிரசாரத்தை முன்னெடுத்த போராட்டக் குழுவினர், இது தங்களது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனக் கூறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அக்குழு உறுப்பினர்கள் இனிப்புகளை வழங்கியும், மேளதாளங்கள் முழங்க நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அந்தப் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் ஓய்வுபெற்ற கர்னலுமான சுக்வீர் சிங் மன்கோட்டியா கூறுகையில், "இந்த 45 நாள் போராட்டம் பெரும் வெற்றியைத் தந்துள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த முடிவு விரைவாக எடுக்கப்படுவதை அவர்கள் உறுதி செய்தனர். இது நீதிக்கு கிடைத்த வெற்றி." என்றார்.
போராட்டக் குழுவின் உறுப்பினரும், சனாதன தர்ம சபாவின் ஒருங்கிணைப்பாளருமான புருஷோத்தம் ததீச்சி, "நாங்கள் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் இந்த முடிவுக்கு ஆதரவு அளித்தார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது." எனத் தெரிவித்தார்.
"கல்வி நிறுவனத்திற்குள் சனாதன தர்மத்தின் மரபுகள் மதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில் வாரியத்திற்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட வேண்டும். எங்களது நோக்கம் மதத்தையும் அதன் கண்ணியத்தையும் பாதுகாப்பதே ஆகும்" என்கிறார் சுக்வீர் மன்கோட்டியா.

பட மூலாதாரம், ANI
"கொண்டாடுவதற்கு இதில் என்ன இருக்கிறது?"
போராட்டக் குழுவினரின் கொண்டாட்டங்களை விமர்சித்துப் பேசிய ஒமர் அப்துல்லா, "இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது? குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிதைப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால், தாராளமாகப் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுங்கள்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாட்டின் பிற பகுதிகளில் மக்கள் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்காகப் போராடுகிறார்கள். ஆனால், இங்கே ஒரு மருத்துவக் கல்லூரியை மூடுவதற்காகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். நீங்கள் ஜம்மு காஷ்மீர் குழந்தைகளின் எதிர்காலத்தையே ஆபத்தில் தள்ளியுள்ளீர்கள். ஜம்மு காஷ்மீர் குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிதைப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால், தாராளமாகப் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுங்கள்"
"இந்த முறை 50 மாணவர்களில் 40 பேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். ஆனால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த 50 இடங்கள் 400 இடங்களாக உயர்ந்திருக்கும். அப்போது அந்த 400 பேரில் 200 முதல் 250 மாணவர்கள் ஜம்முவைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு இருந்தது. இப்போது அவர்கள் இந்த மருத்துவக் கல்லூரியில் இடம் பெற முடியாது. ஏனென்றால், மதத்தின் பெயரால் நீங்கள் ஒட்டுமொத்த கல்லூரியையுமே மூடிவிட்டீர்கள்" எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், smvdime.in
நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை: பா.ஜ.க.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாஜக தலைவர்களும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சத் சர்மா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன், தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
"ஜே.பி. நட்டா உள்ளிட்ட எங்களது தேசியத் தலைமைக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தேசிய மருத்துவ ஆணையம் சில தரநிலைகளைக் கொண்டுள்ளது. ஒரு நிறுவனம் அந்தத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்," என்று அவர் கூறினார்.
பாஜக மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ். பதானியா, அந்த நிறுவனத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "அளவை விடத் தரமே முக்கியமானது. தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால், 50 மருத்துவ இடங்களுக்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது. இது தரத்தின் மீதான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் மற்ற மத்திய அரசு கல்லூரிகளில் கூடுதல் இடங்களில் சேர்க்கப்படுவார்கள்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சகினா மசூத் இட்டூவிடம் தான் வலியுறுத்தியுள்ளதாக ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
அரசியல் எதிர்வினைகள்
தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவக் கல்லூரிகளின் தரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எந்தவொரு மருத்துவக் கல்லூரியும் படிப்பைத் தொடங்குவதற்கு முன்னதாக, நீண்ட மற்றும் சிக்கலான ஆய்வு நடைமுறைகளைக் கடக்க வேண்டும். ஆணையத்தின் தரநிலைகளை முழுமையாகப் பூர்த்தி செய்தால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இந்த கல்லூரியும் அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர் ஆய்வு செய்யப்பட்டது.
ஆசிரியர்கள் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை மற்றும் மருத்துவப் பயிற்சி அனுபவ குறைபாடு போன்ற காரணங்களால், தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவப் படிப்புக்கான அனுமதியை ரத்து செய்த பல கல்லூரிகள் உள்ளன.
ஜம்முவின் இந்த விவகாரம் ஒரு விதிவிலக்கல்ல என்றாலும், அதன் அரசியல் மற்றும் வகுப்புவாதப் பின்னணி இதனை ஒரு தனித்த விவகாரமாக மாற்றுகிறது.
தேசிய மருத்துவ ஆணையத்தைக் குறிவைத்து பேசிய முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, 'மருத்துவப் படிப்பை நடத்துவதற்கான அனுமதி கடிதத்தை வழங்குவதற்கு முன்னதாக, அதற்கான ஆய்வை மேற்கொண்டது யார்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், ஒமர் அப்துல்லாவின் கருத்துக்குப் பதிலளித்த பாஜக தலைவர் சத் சர்மா, தேசிய மருத்துவ ஆணையத்தின் முடிவை தனது கட்சி கொண்டாடவில்லை என்றும், உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்த பின்னரே தேசிய மருத்துவ ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு வகுப்புவாத சாயத்தை பூசுவதன் மூலம், முதலமைச்சர் ஒமர் அப்துல்லா இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறார் என்று அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் பேச்சாளர் ரவீந்தர் சர்மா, "மாதா வைஷ்ணோ தேவியின் பெயரில் அமைந்த ஒரு மருத்துவக் கல்லூரியை மூடியதன் மூலம் ஜம்மு பெற்ற பயன் என்ன?" என்ற கேள்வி எழுப்பினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












