'ஸ்டாலின் அனைவரையும் அரவணைக்கிறார், எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரி' - திமுகவில் இணைந்தபின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார் - என்ன நடக்கிறது?
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வருபவருமான ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (பிப்ரவரி 27) சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

"அறிஞர் அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் பெரு மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவர் வெள்ளிக்கிழமை திமுகவில் இணையக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான அய்யப்பனும் திமுகவில் இணைந்தார்.

அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

அதன்பிறகு, தலைமைச் செயலகம் சென்ற பன்னீர்செல்வம், தனது போடிநாயாக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். அவருடன் அய்யப்பனும் தனது உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார் - என்ன நடக்கிறது?

ஓ.பன்னீர் செல்வம் கூறியது என்ன?

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "அறிஞர் அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் பெரு மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்" என்று கூறினார்.

"தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் அனைவரும் மீண்டும் இந்த ஆட்சியையே விரும்புகிறார்கள். உறுதியாக, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைக்கும்" என்றும் அவர் கூறினார்.

"அரசியலில் ஒரு சர்வாதிகாரியாக, ஆணவப் போக்குடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெற முடியாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளார்" என்று கூறினார்.

"இன்றைக்கு அரசியலில் அண்ணா காட்டிய வழியிலும், கலைஞர் (கருணாநிதி) காட்டிய வழியிலும் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரு அரசியலை முதலமைச்சர் மேற்கொள்கிறார் என்பதை உணர்ந்து தான் நான் திமுகவில் இணைந்துள்ளேன்" என்று அவர் கூறினார்.

தலைமைச் செயலகம் சென்ற பன்னீர்செல்வம், தனது போடிநாயாக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார்.
படக்குறிப்பு, தலைமைச் செயலகம் சென்ற பன்னீர்செல்வம், தனது போடிநாயாக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார்.

"திராவிட இயக்கத்தின் நூற்றாண்டில், அதை அழிப்பதற்கான பல முயற்சிகள் எந்தச் சூழலில், எப்படி ஏற்பட்டாலும் அதை தடுத்து, திராவிட இயக்கத்தை கட்டிக் காப்பதில், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் நின்று, திராவிட சித்தாந்தத்தை காப்பதில் முதலமைச்சர் முன்னிலையில் உள்ளார்." என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

"அதிமுகவில் தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியில் சர்வாதிகாரத்தோடு அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் அந்தப் பதவியில் அமர்ந்த பிறகு, அதிமுகவை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றுகொண்டிருக்கிறார். இதை நினைத்து தான் பல அதிமுக தொண்டர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொள்கிறார்கள். தென்மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு தலைவரும் வந்துவிடக்கூடாது என்பதில் பழனிசாமி கவனத்துடன் இருக்கிறார்" என்று அவர் கூறினார்.

"திராவிட இயக்கத்தை காக்க, திராவிட கொள்கையைக் காக்க, தமிழ்நாட்டைக் காப்பதற்கும், வளர்ச்சிக்கும் ஒரு தலைசிறந்த இயக்கமாக திமுக விளங்கி வருகிறது என்பதை உணர்ந்து தான், நான் இன்று திமுகவில் இணைந்துள்ளேன். என்னை அரவணைத்துக் கொண்ட முதல்வருக்கு நன்றி. நான் ஒரு தொண்டனாகவே இணைந்துள்ளேன்" என தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி. ரவீந்திரநாத், "வரும் சட்டப்பேரவை தேர்தலில், தளபதி ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது என்ன?

முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது என்ன?

"முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பாஜகவுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர். அவரது வரவு நல்வரவாகட்டும்" என்றும் தனது பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

'துரதிருஷ்டவசமான முடிவு'

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள வி.கே.சசிகலா, "தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது" எனத் தெரிவித்துள்ளார்.

'தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்துக் கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது' என்று தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசியுள்ள அதிமுக கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், "அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்கள் தான் முகாம் மாறி செல்கிறார்கள், அப்படி முகாம் மாறி செல்பவர்களைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை. அம்மா காலத்திலும், எம்ஜிஆர் காலத்திலும், தேர்தல் சமயங்களிலும் இப்படி நடந்துள்ளது." என்று கூறினார்.

"அவர் நம்முடன் இல்லை, இருந்தவர் போனால் தானே கவலைப்பட வேண்டும். அதிமுகவில் ஒரு தொண்டன் முதலமைச்சர் ஆக முடியும் என்பதற்கு அவர் உதாரணம். இப்போது திமுகவுக்கு சென்று இருக்கும் ஓபிஎஸ் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணம்

ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணம்

அதிமுகவில் இருந்தபோது, 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சரான ஜெ. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.கவுக்கு நெருக்கமாகச் செயல்பட ஆரம்பித்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது, தன்னுடைய ஆலோசனையின் பேரிலேயே அவர் தர்ம யுத்தத்தைத் துவங்கியதாக பத்திரிகை ஆசிரியர் எஸ். குருமூர்த்தி வெளிப்படையாகவே கூறினார்.

இதற்குப் பிறகு, சிறிது காலம் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் தனித்தனியாக இயங்கிவந்த நிலையில் பின்னர் இரு தரப்பும் ஒன்றாக இணைந்தன. ஓ. பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அ.தி.மு.கவுக்கு இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிச்சாமியும் செயல்பட்டனர். அடுத்துவந்த 2019ஆம் ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது. இதே கூட்டணி 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தது.

ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்த பிறகு, அந்தத் தோல்விக்கான முக்கியமான காரணமாக இரட்டைத் தலைமையைக் குறிப்பிட்ட எடப்பாடி கே. பழனிசாமி ஆதரவாளர்கள், கட்சிக்கு ஒற்றைத் தலைமையே வேண்டும், அதுவும் எடப்பாடி கே. பழனிசாமியே அந்தத் தலைமையாக இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டனர்.

இதற்குப் பிறகு, ஒரு கட்டத்தில் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

2023ஆம் ஆண்டு செப்டம்பரில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியேறியது.

அந்தத் தருணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், "மூன்றாவது முறையும் நாட்டை ஆள்வதற்கான தகுதியை பா.ஜ.க. பெற்றுள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் அது நாடகம் என்றாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை" என்று குறிப்பிட்டு அதே கூட்டணியில் தொடர்ந்தார்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தனித்தனிக் கூட்டணியாக போட்டியிட்ட நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்ற ஓ. பன்னீர்செல்வம், ஒரு தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதற்குப் பிறகு, மீண்டும் அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைந்த நிலையில், கடந்த வருடம் ஜூலை மாதம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி விலகுவதாக அறிவித்தது. எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை எனவும் தெரிவித்தது.

இந்தச் சூழலில், கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அரசியல் செய்து வந்த டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணைந்தார்.

ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை.

இந்நிலையில், அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு