சீர்காழி கோவிந்தராஜனின் 10 பிரபல பக்தி, சினிமா பாடல்கள்

சீர்காழி கோவிந்தராஜன், சீர்காழி சிவசிதம்பரம்

பட மூலாதாரம், Sivachidambaram

படக்குறிப்பு, சீர்காழி சிவசிதம்பரம்
    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இன்றைக்கும் அதிகாலையில் கோவில்களில், வீடுகளில், தேநீர் கடைகளில், வாகனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் குரல். ஆன்மிக பாடல் மட்டுமல்ல, சினிமா பாடல், தனியிசை பாடல்கள் என ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய கோவிந்தராஜன் தனது 55வது வயதில் காலமானார்.

பாடகராக, நடிகராக, இசையமைப்பாளராக விளங்கிய கோவிந்தராஜனுக்கு இன்று 93வது பிறந்தநாள். அவரின் நினைவலைகள் குறித்தும் சிறந்த பாடல்கள் குறித்தும் அவரின் மகனான சீர்காழி கோ.சிவசிதம்பரம் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

''அப்பாவுக்கும் பிபிசிக்கும் அந்த காலம் தொட்ட நெருங்கிய தொடர்பு உண்டு'' என்று கூறுகிறார் சிவசிதம்பரம்.

"பிபிசி தமிழோசையிலும் சீர்காழி கோவிந்தராஜின் குரல் ஒலித்தது. தேம்ஸ் நதிக்கரையில் இருந்து தேடி வரும் ஓசை. தேன் தமிழில் பல சேதிபாடி வரும் ஓசை, எங்கள் தமிழோசை' என்ற பாடலை பாடிக்கொடுத்தார்.'' என்றார்.

தனது தந்தை பாடிய ஆன்மிக மற்றும் சினிமா பாடல்களில் மிகவும் பிடித்த பத்து பாடல்களை பட்டியலிட்டார் சிவசிதம்பரம்.

சீர்காழி கோவிந்தராஜன், சீர்காழி சிவசிதம்பரம்

பட மூலாதாரம், Sivachidambaram

1) விநாயகனே வினை தீர்ப்பவனே

இந்த பாடல் பல்வேறு கோவில்களில், பயணங்களில் முதல் பாடலாக ஒலிக்கிறது. டி.பி.ராமசந்திரன் இசையமைத்தார். உளுந்தூர்பேட்டை' சண்முகம் பாடல் வரிகளை எழுதினார்.

2) தாமரை மலர்கள் ஆறு, அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆறு

''இந்த பாடலை கீதப்ரியன் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு அப்பாவே இசையமைத்து இருந்தார். அப்பா பாடும் போது முருகனே ஆறு முகத்துடன் வருவதாக இருக்கும்.'' என்கிறார் சிவசிதம்பரம்.

3) நீயல்லால் தெய்வமில்லை, எனது நெஞ்சே நீ வாழும் எல்லை

இந்த பாடலுக்கும் டி.பி.ராமசந்திரன் இசையமைத்து இருந்தார்.

4) அறுபடை வீடு கொண்ட திருமுருகா

''திருவிளையாடல் படத்தில் நக்கீரராக நடித்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன், இந்த பாடல் இடம்பெற்ற கந்தன் கருணை படத்தில் அப்பாவை நக்கீரராக நடிக்க வைத்தார். கே.வி.மகாதேவன் இசையமைக்க, முருகனாக சிவகுமார் நடித்தார். கண்ணதாசன் பாடல் எழுதினார்.'' என்கிறார் சிவசிதம்பரம்.

5) உள்ளம் என்று கோயிலில் உறைகிறாய் குமாரா

''இந்த பாடலுக்கு டி.கே. கல்யாணம் இசையமைத்து இருந்தார். குமரனை புகழும் அருமையான பாடல் இது.''

6) சிவசங்கரி சிவானந்த லஹரி

''ஜகத்தலப்பிரதாபன் படத்தில் இடம் பெற்ற இந்த பாடலுக்கு நாகேஸ்வரராவ் இசையமைத்து இருந்தார். அம்மன் பாடல் இது.'' என்கிறார் சிவசிதம்பரம்.

7) உள்ளத்தில் நல்ல உள்ளம்

கர்ணன் படத்தில் இடம்பெற்ற போர்க்கள பாடல். கண்ணதாசனின் வரிகளில், எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையில் இந்தப் பாடல் உருவானது.

8) ஆண்டவன் ஒருவன் இருக்கிறான், அன்பு மனங்களில் சிரிக்கிறான்

எம்ஜிஆரின் நல்லவன் வாழ்வான் படத்தில் இடம் பெற்ற பாடல். கண்ணதாசன் எழுத, டி.ஆர்.பாப்பா இசையமைத்து இருந்தார். எம்ஜிஆர் ஆன்மிகவாதியாக அதில் நடித்திருப்பார்

9) காலத்தை உருவாக்கும் காரணமே அந்த காலனையும் உதைக்கும் பூரணமே பரிபூரணமே சிவமே

''அப்பாவே இசையமைத்து பாடிய சிவன் பாடல். கேட்டால் மனதை உருக்கும்''

10) சின்னஞ்சிறு பெண் போல, சித்தாடை உடை உடுத்தி சிவகங்கை குளத்தருகே

இந்தப் பாடலை டி.பி.ராமசந்திரன், கலைமாமணி டி.ஆர் பாப்பா இசையில் உளுந்தூர்பேட்டை' சண்முகம் எழுதியிருந்தார்.

''பலரும் இந்த பாடலை கேட்டு, சிவகங்கையில் இருக்கும் துர்கையை பாடியிருப்பதாக நினைக்கிறார்கள். உண்மையில் இந்த பாடல் சிதம்பரம் கோவில் குளக்கரையில் இருக்கும் துர்கையை பாடியது. இந்து கடவுள்கள் மீது மட்டுமல்ல, அனைத்து மத பாடல்களையும் பாடி அப்பா சர்வசமய சங்கீத வித்வானாக திகழ்ந்து இருக்கிறார்'' என்கிறார் சிவசிதம்பரம்.

சீர்காழி கோவிந்தராஜன், சீர்காழி சிவசிதம்பரம்

பட மூலாதாரம், Sivachidambaram

"எம்ஜிஆர், அண்ணாவுக்காக பாடியவர்"

பக்தி பாடல்களைப் போல விருப்பமான 10 சினிமா பாடல்களையும் சொல்ல முடியுமா என்று கேட்டபோது, அதனை விவரித்துப் பேசினார் சிவசிதம்பரம்.

"சிரிப்புதான் வருகிறது என்ற பாடலைதான் பொன் வயல் படத்துக்காக அவர் முதலில் பாடினார். அது சுத்தானந்த பாரதியின் பாடல். துறையூர் ராஜகோபால சர்மா இசையில் பாடினார். அந்த பாடலில் அவரே வித்வானாக நடித்தார்." என்கிறார் சிவசிதம்பரம்.

சினிமா இசை கலைஞர்களின் பலரின் முதல் பாடலை தனது தந்தை தான் பாடியதாக குறிப்பிடுகிறார் சிவசிதம்பரம்.

"அதிமுகவை பொறுத்த வரையில் 2 பாடல்கள் மேடையில் பாடப்படுவது வழக்கம். அதை பாடியவர் அப்பாதான். நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் பாடல் எம்ஜிஆருக்காக, அதிமுக வெற்றிக்காக பாடப்பட்டது. ஜெயலலிதாவின் புகழ் சொல்ல, தொட்ட இடம் துலங்க வரும் பாடல் பாடப்பட்டது. இரண்டையும் பாடியவர் அப்பா என்பதில் பெருமை."

"நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற என்ற பாடலும் அவர் பாடியதுதானே. அனைத்து கட்சிகளின் அபிமானியாகவும் அவர் இருந்தார். கலைஞர் கருணாநிதி எழுதிய இதயத்தை தந்திடு அண்ணாவை அவர்தான் உருக்கமாக பாடினார். அந்தப் பாடல் அந்த காலத்தில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பாரதிதாசனின் பல பாடல்களை பாடினார். சங்கே முழங்கு (கலங்கரை விளக்கம்), புதியதோர் உலகு செய்வோம் (சந்திரோதயம்) எனச் சொல்லலாம்," என்றார்.

பெரியார் மேடைகளில் பாடல்

ஆன்மிகவாதியாக அறியப்பட்ட தனது தந்தை பெரியார் மேடைகளில் பாடியிருக்கிறார் என்பதை நம்ப முடியாது என்கிறார் சிவசிதம்பரம்.

"ஆம், பல திராவிட கழக மேடைகளில் பாடியிருக்கிறார். 'நானும், என் குழுவும் ஆன்மிக அடையாளத்துடன் இருப்போம்' என அப்பா சொல்ல, அதை ஏற்றுக்கொண்டு இருக்கிறார் பெரியார். அந்த மேடைகளில் திருக்குறள் உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார்."

"சின்ன வயதில் பெரியார் முன்னிலையில் பள்ளி மாணவனாக திருவருட்பா பாடியிருக்கிறார். மகாத்மா காந்தி முன்னிலையில் சிறுவனாக ரயில் நிலையத்தில் ரகுபதிராகவ பாடலை பாடியிருக்கிறார்." என்றும் கூறினார்.

சீர்காழி கோவிந்தராஜன், சீர்காழி சிவசிதம்பரம்

பட மூலாதாரம், Sivachidambaram

சிறந்த சினிமா பாடல்கள்

தனது தந்தையின் சிறந்த சினிமா பாடல்கள் என சிவசிதம்பரம் பட்டியலிட்டவை

1) காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை

2) ஆடி அடங்கும் வாழ்க்கையடா

3) அமுதும் தேனும் எதற்கு

4) "வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்"

5) உழைப்பதிலா உழைப்பை

6) கல்லிலே கலை வண்ணம் கண்டான்

7) எங்கிருந்தோ வந்தான்

8) வெற்றி வேண்டுமா போட்டு பாராடா எதிர்நீச்சல்

9) ஆண்டுக்கு ஆண்டு சுபதினம்

10) ஓடம் நதியினிலே, ஒருத்தி மட்டும் கரையினிலே

அகஸ்தியர், நக்கீரர்

தனது அப்பா பல படங்களில் நடித்து இருக்கிறார் எனக் கூறும் சிவசிதம்பரம் அதில் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது அகஸ்தியர் படம்தான் என்றார்.

"அதில் அகஸ்தியராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். 1972-இல் வெளியான அந்தப் படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கினார். உருவ ஒற்றுமை காரணமாக, இன்றைக்கும் அகஸ்தியர் என்றால், சீர்காழிதான் நினைவுக்கு வருகிறார் என்பார்கள்."

"கந்தன் கருணை படத்தில் 'அறுபடை வீடு கொண்ட திருமுருகா' என்று நக்கீரராக நடித்து பாடினார். அந்த பாடல் உலகப் புகழ்பெற்ற பாடலாகிவிட்டது." என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

''இன்றைக்கும் திருச்செந்துாரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் பாடல் பல்வேறு வீடுகளில், கோவில்களில் ஒலிக்கிறது. அந்த பாடலில் அப்பாவும், டி.எம்.சௌந்தரராஜனும் இணைந்து பாடி, அவர்களே அந்த பாடலில் தோன்றினார்கள்'' என்று கூறுகிறார் சிவசிதம்பரம்.

"இருவருமே தீவிர முருகபக்தர்கள். ஏகப்பட்ட பாடல்களை பாடியவர்கள். அதனால், பாடலுடன் ஒன்றிபோய்விட்டார்கள். தேவர் பிலிம்ஸ் தயாரித்த அந்த படத்திற்காக அப்பா சம்பளம் வாங்கவில்லை'' என்றார் சிவசிதம்பரம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு