இந்தியா, பாகிஸ்தானை சேருமாறு டிரம்ப் அழைக்கும் காஸா அமைதி வாரியத்தில் யாரெல்லாம் உள்ளனர்?

பட மூலாதாரம், PRAKASH SINGH/AFP via Getty Images
காஸாவிற்காக டிரம்ப் நிர்வாகம் உருவாக்கியுள்ள புதிய 'அமைதி வாரியத்தில்' இணையுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை அனுப்பிய கடிதத்தை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
"அதிபர் டிரம்ப் சார்பாக, பிரதமர் நரேந்திர மோதியை காஸா அமைதி வாரியத்தில் பங்கேற்க அழைப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இந்த வாரியம் காஸாவில் நிலையான அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பிற்கான ஒரு பயனுள்ள நிர்வாகத்திற்கு ஆதரவளிக்கும்"என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தகவல்படி, 'அமைதி வாரியத்தில்' இணைய பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பிரதமர்களும் இந்த அமைப்பில் இணைவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
முன்னதாக, காஸாவில் அமைதி ஏற்படுத்துவது குறித்த சர்வதேச மாநாடு அக்டோபர் 2025 இல் எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெற்றது. சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் அழைக்கப்பட்டார், ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டார்.
அமெரிக்க அதிபர் 'அமைதி வாரியத்தின்' தலைவராக இருப்பார்.
இந்த வாரியம் தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவின் பணிகளை மேற்பார்வையிடும்.
காஸாவின் தற்காலிக நிர்வாகம் மற்றும் மறுகட்டமைப்புக்கான பொறுப்பு இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது 'அமைதி வாரியம்' ஒரு புதிய சர்வதேச அமைதி அமைப்பாக செயல்படும் என்று கூறி வருகிறது.
இந்த வாரியத்தில் நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற எந்தவொரு நாடும் விரும்பினால், அது பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருக்கும் என்று நியூயார்க் டைம்ஸில் வெளியான ஒரு செய்தி கூறுகிறது.
எந்தவொரு நாடும் அதன் உருவாக்கத்தின் முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் கூட குழுவில் நீடிக்க விரும்பினால், அது ஒரு பில்லியன் டாலர்களை அதாவது சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாயைச் செலுத்த வேண்டியிருக்கும்.
நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, இந்த வாரியம் டொனால்ட் டிரம்பின் காஸா அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் வாரியத்தின் சாசனத்தில் காஸா பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
இஸ்ரேல் ஆட்சேபனை

பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் 'அமைதி வாரியத்தில்' கத்தார் மற்றும் துருக்கியின் வெளியுறவு அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். காஸாவில் துருக்கியின் எந்தவொரு பங்களிப்பையும் இஸ்ரேல் எதிர்க்கிறது. கத்தாரை ஹமாஸ் ஆதரவாளராகவே அது பார்க்கிறது.
இதற்கிடையில், அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய செய்தி சேனலான என்12 வெளியிட்டுள்ள செய்தியில், 'அமைதி வாரியத்தில்' கத்தார் மற்றும் துருக்கி இடம்பெற்றிருப்பது குறித்து இஸ்ரேலுக்கு முன்னதாகத் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
காஸாவிற்கான டிரம்பின் இந்த 'அமைதி வாரியம்' குறித்து விவாதிக்க இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது உயர்மட்ட ஆலோசகர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். வாரியத்தின் உறுப்பினர்கள் குறித்த ஆலோசனைகளில் இஸ்ரேல் சேர்க்கப்படவில்லை என்று அந்நாடு கூறியதைத் தொடர்ந்து இந்த கூட்டம் நடைபெறுகிறது.
வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின்படி, 'காஸா நிர்வாகத்திற்கான தேசியக் குழு' என்ற மற்றொரு நிர்வாக அமைப்பின் கீழ் செயல்படும் அனைத்துப் பணிகளையும் இந்த 'காஸா செயற்குழு' கண்காணிக்கும்.

பட மூலாதாரம், Reuters/Getty Images/EPA
இதனால், டிரம்பின் 'அமைதி வாரியம்' காஸா மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பிற மோதல்களிலும் பங்கு வகிக்க விரும்புவதாகவும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு மாற்றாகத் தன்னை முன்நிறுத்த முயற்சிப்பதாகவும் பல வல்லுநர்கள் கருதுகின்றனர்.
செயற்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் "காஸாவின் நிலைத்தன்மைக்கு முக்கியமான" ஒரு துறைக்கு பொறுப்பாவார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இருப்பினும், எந்த முன்னுரிமைப் பணிக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த உயர்மட்டக் குழுவில் இதுவரை எந்தப் பெண்ணின் பெயரோ அல்லது பாலத்தீனரின் பெயரோ அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், வரும் வாரங்களில் மேலும் பல உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
அப்படியானால், இந்த நிர்வாகக் குழுவில் யாரெல்லாம் சேர்க்கப்பட்டுள்ளனர்?
சர் டோனி பிளேர்

பட மூலாதாரம், BBC/Monika Ghosh
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் சர் டோனி பிளேர், டிரம்பின் "அமைதி வாரியத்தில்" இடம் பெறக்கூடிய ஒரு சாத்தியமான உறுப்பினராக நீண்டகாலமாகக் கருதப்பட்டு வந்தார்.
பிளேர் இதில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் உறுதிப்படுத்தினார்.
பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவரான பிளேர், 1997 முதல் 2007 வரை பிரிட்டனின் பிரதமராகப் பணியாற்றினார்.
அவர் 2003-ஆம் ஆண்டில் இராக் போருக்குத் தனது நாட்டை வழிநடத்தினார். இந்த முடிவின் காரணமாக, இந்த வாரியத்தில் அவர் இருப்பது சர்ச்சைக்குரியதாகக் கருதப்படலாம்.
பதவியிலிருந்து விலகிய பிறகு, 2007 முதல் 2015 வரை நான்கு சர்வதேச சக்திகள் (ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ரஷ்யா) அடங்கிய அமைப்பின் மத்திய கிழக்கு பிராந்திய தூதராகப் பணியாற்றினார்.
இந்த செயற்குழுவில் அமெரிக்க குடிமகன் அல்லாத ஒரே உறுப்பினர் சர் டோனி பிளேர் மட்டுமே ஆவார்.
காஸாவிற்கான டிரம்பின் திட்டங்களை, "இரண்டு ஆண்டுகால போர், வேதனை மற்றும் துயரங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு" என்று அவர் விவரித்துள்ளார்.
மார்கோ ரூபியோ

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக, மார்கோ ரூபியோ டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை சிந்தனைகளின் மையப்புள்ளியாக விளங்குகிறார்.
டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதை ரூபியோ எதிர்த்தார்.
இஸ்ரேல் "ஹமாஸின் ஒவ்வொரு பகுதியையும் அழித்துவிட வேண்டும்" என்று தான் விரும்புவதாக அவர் அப்போது கூறியிருந்தார்.
இருப்பினும், அக்டோபர் மாதம் எட்டப்பட்ட இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதற்கட்டத்தைப் பாராட்டிய அவர், அதுவே 'சிறந்த' மற்றும் 'ஒரே' திட்டம் என்று குறிப்பிட்டார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக இஸ்ரேலிய நாடாளுமன்றம் மேற்கொண்ட முயற்சியை கடந்த அக்டோபரில் ரூபியோ விமர்சித்திருந்தார்.
ஸ்டீவ் விட்காஃப்

பட மூலாதாரம், Reuters
மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த வாரியத்தில் இணைய உள்ளார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் டிரம்பின் முன்னாள் கோல்ஃப் கூட்டாளி ஆவார்.
இந்த மாத தொடக்கத்தில், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்குவதாக விட்காஃப் அறிவித்தார். ஹமாஸை நிராயுதபாணியாக்குவது உட்பட, காஸாவின் மறுசீரமைப்பு மற்றும் காஸாவை ராணுவமற்ற பகுதியாக்குவது ஆகியவை இந்த இரண்டாம் கட்டத்தில் அடங்கும் என்று அவர் கூறினார்.
ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தின் கீழான தனது அனைத்துக் கடமைகளையும் முழுமையாகப் பின்பற்றும் என்று தான் நம்புவதாகவும், இல்லையெனில் "கடுமையான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
ரஷ்யா - யுக்ரேன் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளிலும் விட்காஃப் முக்கிய பங்கு வகித்தார். டிசம்பர் மாதம் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நடைபெற்ற ஐந்து மணி நேர சந்திப்பும் இதில் அடங்கும்.
ஜாரெட் குஷ்னர்

பட மூலாதாரம், EPA
அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர், டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை பேச்சுவார்த்தைகளில் மிக முக்கியமான பங்கினை வகித்துள்ளார்.
விட்காஃபுடன் இணைந்து, குஷ்னர் பெரும்பாலும் ரஷ்யா-யுக்ரேன் மற்றும் இஸ்ரேல்-காஸா மோதல்களில் அமெரிக்காவின் சார்பாக ஒரு மத்தியஸ்தராகச் செயல்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம், அமைதி ஒப்பந்தம் தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க அவர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தார்.
2024-ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உரையாடலின் போது, "மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால், காஸாவின் கடற்கரை நிலம் மிகவும் மதிப்புமிக்கதாக மாறும்" என்று குஷ்னர் கூறியிருந்தார்.
மார்க் ரோவன்

பட மூலாதாரம், Getty Images
செல்வந்தரான மார்க் ரோவன் , நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பெரிய தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் பதவிக்கான போட்டியாளர்களில் ஒரு முக்கிய நபராக ரோவன் கருதப்பட்டார்.
அஜய் பங்கா

பட மூலாதாரம், Getty Images
உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா, முன்னாள் அதிபர் ஒபாமா உட்பட பல மூத்த அமெரிக்கத் தலைவர்களுக்கு ஆலோசகராக இருந்துள்ளார்.
1959-ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த பங்கா, 2007-இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.
அதன்பின்னர், அவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2023-இல் இவரை உலக வங்கியின் தலைவராக்க பரிந்துரைத்தார்.
ராபர்ட் கேப்ரியல்
இந்த "நிறுவனர் செயற்குழுவின்" கடைசி உறுப்பினராக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல் இருப்பார்.
கேப்ரியல் 2016 அதிபர் தேர்தல் பிரசாரத்திலிருந்தே டிரம்புடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
அமெரிக்க பொது ஒளிபரப்பு நிறுவனமான பிபிஎஸ்-இன் படி, அதன் பிறகு சிறிது காலத்திலேயே அவர் டிரம்பின் மற்றொரு முக்கிய ஆலோசகரான ஸ்டீபன் மில்லரின் சிறப்பு உதவியாளராகப் பொறுப்பேற்றார்.
நிகோலே மிலாடெனோவ்

பட மூலாதாரம், Getty Images
பல்கேரிய அரசியல்வாதியும் ஐ.நா. மத்திய கிழக்கு தூதருமான நிகோலே மிலாடெனோவ், காஸாவில் உள்ள வாரியத்தின் பிரதிநிதியாக இருப்பார் என்றும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது.
அவர் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தனி பாலத்தீன தொழில்நுட்பக் குழுவைக் கண்காணிப்பார். இந்தக் குழு 'காஸா நிர்வாகத்திற்கான தேசியக் குழு' (National Committee for the Administration of Gaza - NCAG) என்று அழைக்கப்படும்.
போருக்குப் பிந்தைய காஸாவின் அன்றாட நிர்வாகப் பொறுப்பு இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய குழுவிற்கு பாலத்தீன அதிகார சபையின் முன்னாள் துணை அமைச்சரான அலி ஷாத் தலைமை தாங்குவார். இந்த அதிகார சபை, இஸ்ரேலியக் கட்டுப்பாட்டில் இல்லாத ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதிகளை நிர்வகித்து வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












