பாஜகவின் புதிய தேசிய தலைவர்: நிதின் நபின் எதிர்கொள்ளும் 5 முக்கிய சவால்கள்

நிதின் நபின்

பட மூலாதாரம், @NitinNabin

படக்குறிப்பு, 45 வயதான நிதின் நபின் பாஜகவின் 12வது தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

1968-ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பாரதிய ஜன சங்கத்தின் தலைவரான போது, அவருக்கு 44 வயது மட்டுமே.

எல்.கே. அத்வானியும் 1973-ஆம் ஆண்டு தனது 46-வது வயதில் ஜன சங்கத்தின் தலைவரானார். 1977-இல் பாரதிய ஜன சங்கம் ஜனதா கட்சியுடன் இணைந்தது. இருப்பினும், இந்த இணைப்பு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை.

ஏப்ரல் 6, 1980 அன்று பாரதிய ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது, அதன் முதல் தலைவராக அடல் பிஹாரி வாஜ்பாய் பொறுப்பேற்றார்.

அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாற்றாக உருவெடுக்க பாஜக முயற்சி செய்து கொண்டிருந்தது. 1984 மக்களவைத் தேர்தலில் பாஜக இரண்டு இடங்களை மட்டுமே வென்றது.

இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி தனது "மை கண்ட்ரி, மை லைப்ஃ"என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

"இந்தத் தேர்தல் முடிவு 1952-ஆம் ஆண்டு ஜன சங்க காலத்தில் நடந்த முதல் தேர்தலில் இருந்த நிலைக்கே எங்களைத் திரும்பக் கொண்டு சென்றது. இந்த முடிவுக்குப் பிறகு, அடல் ஜி இரண்டு கேள்விகளை எழுப்பினார். 1977-இல் ஜன சங்கம் ஜனதா கட்சியுடன் இணைந்ததும், பின்னர் 1980-இல் அதிலிருந்து பிரிந்ததும் தான் கட்சியின் தோல்விக்குக் காரணமா? என்பது முதல் கேள்வி.

பாஜக மீண்டும் ஜன சங்கமாக மாற வேண்டுமா?" என்பது இரண்டாவது கேள்வி. பாஜக தற்போது இந்த இரண்டு கேள்விகளையும் கடந்து வெகுதூரம் வந்துவிட்டதுடன், 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முன்னணி இயக்கமாக இருந்து வருகிறது.

பாஜக தோன்றி சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 1980 மே 23 அன்று நிதின் நபின் பிறந்தார். இப்போது, அதே நிதின் நபின் பாஜகவின் முக்கியப் பொறுப்பைப் பெற்றுள்ளார்.

45 வயதான நிதின் நபின் பாஜகவின் பொறுப்பை ஏற்றபோது, அவரது வயது குறித்து பல விவாதங்கள் எழுந்தன. ஆனால் இதே போன்ற விவாதங்கள் பாஜக உருவாவதற்கு முன்பே ஜன சங்கத்தில் எழுந்துள்ளன.

 அடல் பிஹாரி வாஜ்பாய்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாஜகவின் முதல் தேசியத் தலைவரானார் அடல் பிஹாரி வாஜ்பாய்.

அடல் முதல் நிதின் நபின் வரை

பாஜக வரலாற்று ரீதியாக மிகவும் வலுவாக இருக்கும் ஒரு காலகட்டத்தில் நிதின் நபின் அதன் தலைவராகியுள்ளார். இன்று பாஜக 240 மக்களவை இடங்களைக் கொண்டுள்ளது.

பாஜக அல்லது அதன் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 21 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. மேலும், ராஜ்யசபாவில் பாஜகவுக்கு 99 எம்பிக்கள் உள்ளனர்.

இத்தகைய சூழலில், நிதின் நபினுக்கு சவால்கள் ஏதும் கிடையாதா என்ற கேள்வி எழுகிறது.

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்காக நீண்ட காலம் பாஜகவைப் பற்றிய செய்திகளைச் சேகரித்த நினா வியாஸ், பாஜக ஆட்சியில் இருக்கும் போது தலைவர் பதவிக்கான வேலை 'ஆம்' சொல்வதை தவிர வேறில்லை என்று நம்புகிறார்.

நீனா வியாஸ் கூறுகையில், "நான் 2014-க்குப் பிந்தைய பாஜகவைப் பற்றி மட்டும் பேசவில்லை. 2014-க்கு முன்பே அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரின் ஆதிக்கமே இருந்தது. கட்சி மற்றும் அரசாங்கம் தொடர்பான அனைத்து முடிவுகளும் பிரதமர் அலுவலகத்திலேயே எடுக்கப்பட்டன. 2002-இல் நரேந்திர மோதி குஜராத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டபோது, அப்போதைய பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்திக்கு அது தெரிந்திருக்கவில்லை. அத்வானியின் சம்மதம் இல்லாமல் குஷாபாவ் தாக்ரேயால் எதையும் செய்ய முடியவில்லை. பங்காரூ லஷ்மணின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. வாஜ்பாய் மற்றும் அத்வானிக்கு இணையாக முரளி மனோகர் ஜோஷி மட்டுமே அப்போது ஓரளவுக்கு செயல்படும் நிலையில் இருந்தார்," என்றார்.

இதுகுறித்து நீனா வியாஸ் மேலும் கூறுகையில், "நான் சொல்ல வருவது என்னவென்றால், நிதின் நபினைத் பொறுத்தவரை அமித் ஷாவும் மோதியும் தான் தற்போதைய சவாலாகவும் தீர்வாகவும் உள்ளனர்." என்றார்.

நிதின் நபின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. பாஜக ஆதரவாளர்கள், இது ஒரு சாதாரணத் தொண்டன் கூட தேசியத் தலைவராக வரக்கூடிய கட்சி என்கிறார்கள். அதேசமயம், விமர்சகர்களோ, நரேந்திர மோதியும் அமித் ஷாவும் என்ன விரும்புகிறார்களோ அதுதான் கட்சியில் நடக்கிறது என்கிறார்கள்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அரசியலை நெருக்கமாகப் பின்பற்றும் மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நிலாஞ்சன் முகோபாத்யாய், நிதின் நபின் தேசியத் தலைவரானதை மேலே உள்ள இரண்டு வாதங்களுக்கும் இடைப்பட்ட ஒன்றாகப் பார்க்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அதிகம் அறியப்படாத பாஜக தொண்டர்களுக்குக் கட்சியின் உயர்மட்டப் பொறுப்புகளுக்கு உயரும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது உண்மைதான். நிதின் நபின் பலரைப் பின்னுக்குத் தள்ளவில்லை என்றாலும், நிச்சயமாக அவர்களை முந்திக்கொண்டு முன்னேறியுள்ளார்."

"இருப்பினும், அப்படி முந்திச் செல்லும் அவரது திறன் தேசிய அளவிலோ அல்லது அவரது சொந்த மாநிலமான பிகாரிலோ வெளிப்படையாகத் தெரியவில்லை. மறுபுறம், வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் இதே வயதில் ஜன சங்கத் தலைவர்களானபோது, ஏற்கனவே தங்களை நிரூபித்திருந்தனர். எனவே, அமித் ஷா மற்றும் நரேந்திர மோடிக்கு விசுவாசமாக இருக்கிறார் என்பதாலேயே நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது உண்மையாகத் தோன்றுகிறது." என்றார்.

நிதின் நபின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிதின் நபின் 2006 ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார், அதன் பின்னர் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறார்.

ஆர்எஸ்எஸ் விருப்பு வெறுப்புகள்

பாஜக தேசியத் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடனான புரிதல் குறைபாட்டோடு தொடர்புடையதாகக் கருதப்பட்டது. நிதின் நபினைப் பொறுத்தவரை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் எதிர்க்க முடியாத ஒருவராகவும், அதே சமயம் பாஜகவுக்குள் அவரது ஏற்புடைமை குறித்து எந்த சர்ச்சையும் இல்லாத ஒருவராகவும் அவர் பார்க்கப்படுகிறார்.

நிதின் நபின் பாஜக தலைவருக்கான முதல் தேர்வாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் சில நேரங்களில் பாஜகவில் அதிகம் வெளிச்சத்திற்கு வராமல் இருப்பது உங்களுக்குச் சாதகமாக அமையும் என்று நீனா வியாஸ் கருதுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாஜக தலைவருக்கு இருக்கும் ஒரு பெரிய சவால், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நல்ல ஒருங்கிணைப்பைப் பராமரிப்பதாகும். எனது கருத்துப்படி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் முரண்பட்ட எந்தவொரு பாஜக தலைவரும் நீடித்ததில்லை.

2005-ஆம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நெருக்கடி காரணமாகவே அத்வானி பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது." என்று விளக்கினார்.

2005-ஆம் ஆண்டில் அப்போதைய பாஜக தலைவராக இருந்த லால் கிருஷ்ண அத்வானி பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தார். கராச்சியில் உள்ள ஜின்னாவின் நினைவிடத்திற்குச் சென்ற அவர், அங்கு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஜின்னாவுக்கு அஞ்சலி செலுத்திய அத்வானி, அவரை மதச்சார்பின்மை மற்றும் இந்து-இஸ்லாமியர் ஒற்றுமையின் தூதுவர் என்று வர்ணித்திருந்தார்.

ஜின்னாவைப் புகழ்ந்து அத்வானி அங்கிருந்த பதிவேட்டில், "வரலாற்றில் பலர் அழிக்க முடியாத தடயங்களை விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் மிகச் சிலரே வரலாற்றைப் படைத்துள்ளனர். காயிதே ஆசம் முகமது அலி ஜின்னா அந்தச் சிலரில் ஒருவர்," என்று எழுதியிருந்தார்.

நிதின் நபினுக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி இல்லை என்றாலும், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியின் (யுவ மோர்ச்சா) தேசிய பொதுச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

இருப்பினும், 2014-க்குப் பிந்தைய பாஜகவில், ஒரு நபரின் பின்னணி என்ன என்பது பெரிய விஷயமாகக் கருதப்படுவதில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தவர்கள் கூட முதலமைச்சர்களாக ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதின் நபினின் முன்னுள்ள சவால்கள்

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராக, நிதின் நபின் தனது திறனை வெளிப்படுத்தினார். நவம்பர் 2023-இல் நடைபெற்ற சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பாஜகவின் இணைப் பொறுப்பாளராக இருந்த நபின், அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகலைத் தோற்கடித்து, கட்சிக்கு எதிர்பாராத வெற்றியைத் தேடித்தந்து மத்தியத் தலைமையைக் கவர்ந்தார்.

அடுத்த ஆண்டு, சத்தீஸ்கர் மாநில மக்களவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். அங்கு அக்கட்சி மாநிலத்தில் உள்ள அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. ஜூலை 2024-இல், அவர் அந்த மாநிலத்திற்கான கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட தேசியத் தலைவர் நிதின் நபின்

பட மூலாதாரம், @NitinNabin

படக்குறிப்பு, உத்தரபிரதேச முதலமைச்சருடன் பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட தேசியத் தலைவர் நிதின் நபின்.

சவால்1: 2026 சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2029 மக்களவைத் தேர்தல்கள்

தற்போது, தேசியத் தலைவராக நிதின் நபின், இந்த ஆண்டு மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இம்மாநிலங்களிலும் பாஜகவுக்கு சவால்கள் இல்லாமல் இருக்காது. ஆனால், உண்மையான சவால் என்பது 2029 மக்களவைத் தேர்தலுக்குக் கட்சியைத் தயார்படுத்துவதில் தான் உள்ளது.

நாட்டில் தொகுதி மறுவரையறை செயல்முறை நடைபெற்று வரும் காலகட்டத்தில் இந்தத் தேர்தல்கள் நடைபெறும்.

மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். எனவே, மாற்றமடைந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப புதிய தலைவர் கட்சியைத் தயார்படுத்த வேண்டியிருக்கும்.

மோதி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாரி சக்தி வந்தன் சட்டத்தின் படி, மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். இந்த இடஒதுக்கீடு, அந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே நடைமுறைக்கு வரும்.

2029 பொதுத்தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதை மோதி அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்குவதற்கான அறிவிப்பை அரசாங்கம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இது 2027 மார்ச் 1 நிலவரப்படி நாட்டின் மக்கள் தொகை குறித்த மதிப்பீட்டை வழங்கும். இதுவே பின்னர் தொகுதி மறுவரையறை செயல்முறைக்கான களத்தை அமைக்கும்.

2029 பொதுத்தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதை மோதி அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நரேந்திர மோதிக்குப் பிறகு பாஜகவை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்வியையும் நிதின் நபின் சமாளிக்க வேண்டியிருக்கும்.

சவால்2: தலைமைத்துவ சவால்கள்

2029 மக்களவைத் தேர்தலின் போது நரேந்திர மோதிக்கு 80 வயது நெருங்கியிருக்கும்.

இத்தகையச் சூழலில், மோதிக்குப் பிறகு பாஜகவை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்வியையும் நிதின் நபின் கையாள வேண்டியிருக்கும். 2013-இல் நரேந்திர மோதியிடம் பாஜகவின் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டபோது, அது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவாக இருக்கவில்லை. அத்வானி அதற்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கவில்லை.

நரேந்திர மோதிக்கு அடுத்தபடியாக அமித் ஷா பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவராகப் பார்க்கப்படுகிறார். இருப்பினும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒருவராக அவரை உருவாக்குவது ஒரு சவாலாகவே இருக்கும்.

"பாஜகவில் மோதிக்கு அடுத்து யார்?" என்ற கேள்விக்கு மக்கள் பெரும்பாலும் யோகி ஆதித்யநாத் என்றே பதிலளிக்கிறார்கள்.

இருப்பினும், பாஜக அமைப்பிற்குள் அமித் ஷாவிற்கு இருப்பதைப் போன்ற செல்வாக்கு யோகிக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து நீனா வியாஸ் கூறுகையில், "யோகி மிகவும் பிரபலமானவர், ஆனால் அவர் கட்சி அமைப்பிற்குள் போராட வேண்டியிருக்கும். மறுபுறம், அமித் ஷாவிற்கு அமைப்பிற்குள் வலுவான பிடி உள்ளது, ஆனால் யோகி அவருக்குச் சவால் விடுத்தால், அவர் மக்களிடையே போராட வேண்டியிருக்கும்." என்கிறார்.

பாஜகவில் உயர்மட்டத் தலைமைக்கு அடுத்தபடியாக, அடிமட்டத் தலைமை என்பது இல்லாமலேயே இருக்கிறது என்றும், எதிர்காலத்தில் பாஜக இந்த நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் நிலாஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார்.

முகோபாத்யாய் மேலும் கூறுகையில், "மோதிக்குப் பிந்தைய தலைமைத்துவச் சூழல் என்பது அமித் ஷா மற்றும் யோகிக்கு இடையிலான மோதலாக மாறக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை. 2013-இல் அத்வானியின் குழுவிலிருந்து கட்சி பிரிந்து வந்தபோது பாஜகவுக்குள் இதுபோன்ற ஒரு போராட்டத்தைக் காண முடிந்தது. நிதின் நபின் அமித் ஷாவின் தேர்வாக இருக்கலாம், ஆனால் யோகியுடன் அவர் கொண்டிருக்கும் உறவும் இங்கே முக்கியமானது." என்கிறார்.

யோகி ஆதித்யநாத்-அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பலர் நரேந்திர மோதிக்குப் பிறகு அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பெயர்களை முன் வைக்கின்றனர்.

சவால்3: அமைப்பில் உள்ள சவால்கள்

நிதின் நபின் ஒரு சிறந்த நிறுவன அமைப்பாளராக அறியப்படுகிறார். பாஜக தலைவராக அவர் உருவெடுத்ததில் இந்த அடையாளம் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

2006-ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து, பாட்னா மேற்குத் தொகுதியிலிருந்து நிதின் நபின் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினரானார். அப்போது அவர் தனது பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருந்தார்.

எனவே, அவரது அரசியல் பிரவேசம் எதிர்பாராத ஒன்றாகவே அமைந்தது.

இருப்பினும், தன்னைத் தகுதியானவராக நிரூபித்த அவர், தற்போது ஐந்தாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பிகார் மாநில அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.

சிமன்பாய் படேல் நிறுவனத்தின் இயக்குனர் ஹரி தேசாய், நிதின் நபின் கட்சி அமைப்பின் மட்டத்தில் பெரிய சவால்களைச் சந்திக்க நேரிடும் என்று கருதுகிறார்.

இதுகுறித்து தேசாய் கூறுகையில், "பாஜகவும் தற்போது 'உயர்மட்டத் தலைமை கலாச்சாரம்' உள்ள கட்சியாக மாறியுள்ளது. அதிகாரம் ஒரு இடத்தில் குவியும்போது, கட்சி அமைப்பு அதன் சுயக்கட்டுப்பாட்டை விட, தலைமையின் விருப்பப்படியே செயல்படத் தொடங்கும். இத்தகைய சூழலில், தலைமையின் பேச்சைக் கேட்பதா அல்லது கட்சி அமைப்பின் ஒழுங்குமுறைக்கு முன்னுரிமை அளிப்பதா என்பதுதான் நிதின் நபினுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். பாஜக அமைப்பு வலுவடைந்தால், எந்தவொரு தனிநபரும் முழுமையான கட்டுப்பாட்டைச் செலுத்த முடியாது." என்கிறார்.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் ஹிமாத்ரி சட்டர்ஜி இதுகுறித்துக் கூறுகையில், பாஜகவின் எந்திரமும் அமைப்பும் மிகப் பெரியது மட்டுமல்லாமல் மிகவும் சிக்கலானதும் கூட. எனவே, அனைத்து அமைப்புகளையும் சீராக வைத்திருப்பது நிதின் நபினுக்கு எளிதான காரியமாக இருக்காது என்கிறார்.

மேலும், தென்னிந்தியாவில் கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதே நிதின் நபினுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்றும் ஹிமாத்ரி சட்டர்ஜி குறிப்பிடுகிறார்.

சவால் 4: உலக அரசியலில் ஏற்படும் மாற்றங்கள்

டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு உலகளாவிய சூழல்கள் வேகமாக மாறியுள்ளன.

தற்போது நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவிற்குச் சாதகமாக இல்லை. இந்தியா தயக்கத்துடன் சீனாவுடனான உறவை இயல்பாக்கி வருகிறது.

2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பாரதிய ஜனதா கட்சி தனது பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஒரு சீனக் குழு டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு வருகை தந்து கட்சித் தலைவர்களைச் சந்தித்தது.

டிரம்ப் ஏற்கனவே இந்தியாவிற்கு 50 சதவீத வரி விதித்துள்ளார், மேலும் இரானுடனான வர்த்தகத்திற்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஆளும் கட்சியாக இருப்பதால், பாஜகவால் இதனைப் புறக்கணிக்க முடியாது. புதிய கட்சித் தலைவராக, நிதின் நபின் இந்த எதார்த்தங்களையும் கையாள வேண்டியிருக்கும்.

பேராசிரியர் ஹிமாத்ரி சட்டர்ஜி இதுகுறித்துக் கூறுகையில், "இந்தியா எப்போது வேண்டுமானாலும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடலாம், மேலும் வளர்ச்சியைப் பற்றிய ஒரு கதையாடலை பராமரிப்பது பாஜகவுக்கு எளிதாக இருக்காது. நமது வளர்ச்சி தேவையான அளவு இல்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் விநியோகத்தை எவ்வாறு ஜனநாயகப்படுத்துவது என்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்தியாவின் பெரும்பாலான மக்கள் தொகை அடுத்த 10 ஆண்டுகளுக்கு இளைஞர்களாகவே இருக்கப் போவதில்லை. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா தனக்கான அனைத்து முன்னேற்றங்களையும் எட்ட வேண்டும். அதற்குப் பிறகு, சூழல் மிகவும் கடினமாகிவிடும். இதுவே எதிர்காலத்தில் பாஜகவுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும்." என்கிறார்.

2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பாரதிய ஜனதா கட்சி தனது பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு காலத்தில் பாஜக இந்து, இந்தி, இந்துஸ்தான் பற்றிப் பேசி வந்தது.

சவால் 5: கருத்தியல் மற்றும் கலாச்சார மோதல்

ஒவ்வொரு பாஜக தலைமையும் எப்போதும் சில குறிப்பிட்ட சவால்களைச் சந்தித்து வந்துள்ளன. இந்தியாவின் மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை ஒருங்கிணைப்பது என்பது பாஜகவுக்கு எப்போதுமே ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.

தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இது பாஜகவுக்கு நீண்டகாலப் பிரச்னையாக உள்ளது. வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவைச் சேர்ந்த பாஜக தலைவர்களுக்கு, தெற்கு மற்றும் கிழக்கின் கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை ஒரு சவாலாகவே இருந்துள்ளது. நிதின் நபினும் இந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கூடுதலாக, வலுவான பிராந்திய மற்றும் சாதி சார்ந்த கட்சிகள் பாஜகவுக்கு பெரிய சவாலாக விளங்குகின்றன.

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக இந்த இரண்டு சவால்களையும் எதிர்கொள்ளும். இவற்றைச் சமாளிக்க நிதின் நபினுக்கு எளிதான வழி கிடைக்கும் என்பது தற்போதைக்குச் சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு