அர்ச்சனா காமத்: டேபிள் டென்னிசில் சர்வதேச அரங்கில் கோலூச்சும் இந்திய வீராங்கனை

அர்ச்சனா காமத்:
படக்குறிப்பு, அர்ச்சனா காமத்

தனது ஒன்பதாவது வயதில் டேபிள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்த அர்ச்சனா கிரிஷ் காமத், தற்போது, மகளிர் இரட்டையர் பிரிவில் உலகளவில் 24ஆம் இடத்திலும், கலப்பு இரட்டையர் பிரிவில் 36ஆவது இடத்திலும் உள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த இவரின் பெற்றோர் இருவருமே கண் மருத்துவர்கள். ஆரம்ப காலத்தில் அர்ச்சனாவுடன் சேர்ந்து விளையாடியவர்கள் இவர்களே.

குழந்தை அழக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே அர்ச்சனாவிடம் தோற்பார்களாம் அவரின் பெற்றோர். ஏனெனில், அப்போதுதான் அர்ச்சனா அழாமல் இருப்பாராம். சர்வதேச வீராங்கனையாக மகள் மாறியுள்ள போதிலும், அவருக்கு தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளிக்கும் முக்கிய நபர்களாக பெற்றோர் இருக்கின்றனர்.

மகளுக்காக அர்ச்சனாவின் தாயார் தனது வேலையை விட்டதோடு, அவருக்கு பயிற்சி பெறவும் உதவி வந்தார். விளையாட்டுப் போட்டிகளுக்கு அவரை அழைத்துச் சென்றார்.

மகளுக்கு டேபிள் டென்னிஸ் மீது ஆர்வம் உள்ளதை கண்டறிந்து பெற்றோர் ஊக்குவித்த போதிலும், அர்ச்சனாவின் மூத்த சகோதரர்தான் அவருக்கு இந்த விளையாட்டில் உள்ள திறனை முதலில் கண்டறிந்து ஊக்குவித்தார்.

வெறும் பொழுதுபோக்காக தொடங்கிய இந்த ஆட்டத்தை, தனக்காக விளையாட்டாக மாற்றிக்கொண்டார் அர்ச்சனா.

சிறந்த வீராங்கனை

விளையாட்டில் தாக்குதல் பாணியைக்கொண்டே அர்ச்சனா எப்போதும் விளையாட, அதுவே அவரின் விளையாட்டு முறையாகிப்போனது. தனது வேகமான விளையாட்டால், மிக விரைவிலேயே மாநில மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றியைக் காண ஆரம்பித்தார் அர்ச்சனா.

2013ஆம் ஆண்டு நடந்த சப்-ஜூனியர் பிரிவு விளையாட்டுகளில் வெற்றி பெற்றது தனக்கு திருப்பு முனையாக அமைந்ததாக கூறுகிறார் அர்ச்சனா. தனது தன்னம்பிக்கையை மேம்படுத்திக்கொள்ள அது ஒரு முக்கிய விஷயமாக அமைந்தது என்கிறார்.

அதைத்தொடர்ந்து, பல முக்கிய வீரர்களும், அர்ச்சனாவின் தாக்குதல் பாணி விளையாட்டை எதிர்கொள்ளும் இடத்தில் இருந்தனர். சமீப காலத்தில், 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவில் முதல் இடத்திலுள்ள வீராங்கனையான மனிகா பத்ராவை குறைந்தது இரண்டுமுறை தோற்கடித்துள்ளார் அர்ச்சனா.

அதில் ஒரு வெற்றி 2019 ஆம் ஆண்டு, சீனியர்களுக்கான தேசிய விளையாட்டுகளின்போது நடந்தது. அப்போது அர்ச்சனாவிற்கு வயது வெறும் 18 மட்டுமே.

கடின உழைப்பும், வெற்றிகளும்

கடின உழைப்பும், வெற்றிகளும்

பட மூலாதாரம், Remy Gros

2014ஆம் ஆண்டு நடந்த வயது-வாரியான போட்டிகளில் தனது முதல் சர்வதேச ஆட்டத்தை ஆடினார் அர்ச்சனா. 2016ஆம் ஆண்டு, மொராக்கோவில் நடந்த ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றதோடு, அதே ஆண்டு நடந்த ஸ்பானிஷ் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் போட்டியில் அரை இறுதி போட்டியாளராக தனது ஆட்டத்தை நிறைவு செய்தார்.

சீனியர்கள் ஆட்டத்தை பொருத்தவரையில், 2018ஆம் ஆண்டு நடந்த யூத் ஒலிம்பிக்ஸ் ஆட்டமே தனக்கு கடினமாக இருந்ததாக கூறுகிறார் அர்ச்சனா. இந்த போட்டியில் நான்காம் இடம் பிடித்தபோதிலும், தனது திறனுக்கு மிகவும் சவாலாக சில பாடங்களை இந்த ஆட்டம் கற்றுக்கொடுத்ததாக அவர் கூறுகிறார்.

2019ஆம் ஆண்டு, கட்டக்கில் நடந்த காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில், கலப்பு இரட்டனியர் பிரிவில் குணசேகரன் சத்யனுடன் இணைந்து விளையாடிய அர்ச்சனா தங்கம் வென்றார். சர்வதேச போட்டிகளில் இணைந்து விளையாட தங்களின் ஜோடி சிறந்தது என்கிறார் அவர்.

வருங்காலம்

தாக்குதல் பாணியில் விளையாடும் முறை பல பெரிய வீரர்களை எதிர்கொள்ள அர்ச்சனாவிற்கு உதவினாலும், அவருக்கு பல காயங்கள் படவும் இதுவே காரணமாகிறது.

தங்களின் விளையாட்டு மிகவும் மேம்பட்டுள்ளதாக கூறும் அர்ச்சனா, தொடர்ந்து மாற்றம் அடைந்து, மேம்படும் இந்த விளையாட்டில் தொடர, காயங்கள் படாமல் பார்த்துக்கொள்வது முக்கியமான ஒன்றாக அமைவதாக அவர் கருதுகிறார். இதற்காக நிறைய கடின பயிற்சிகளையும் அவர் மேற்கொள்கிறார்.

உலகளவில் டேபி டென்னிஸ் ஆட்டத்தில் ஒற்றையர் பிரிவில் 135ஆவது இடத்தில் உள்ள அர்ச்சனா, படிப்படியாக முன்னேறி 2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்.

2014ஆம் ஆண்டு, கர்நாடக மாநிலத்தில் விளையாட்டுத்துறையில் அளிக்கப்படும் மிக உயரிய விருதான ஏலகைவா விருது பெற்ற இந்த வீராங்கனை, வருங்காலத்தில் தனது விளையாட்டிற்காக பல பதக்கங்களையும் விருதுகளையும் வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

(அர்ச்சனாவிற்கு பிபிசி அனுப்பிய கேள்விகளுக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில் இந்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: