பாகிஸ்தான் - சௌதி பாதுகாப்பு கூட்டுக்கு பதிலடியாக இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒன்று சேர்கிறதா?

ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் திங்கள்கிழமை இந்தியா வந்தார்.
    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், திங்களன்று சில மணி நேர பயணமாக டெல்லிக்கு வருகை தந்தார்.

இந்த வருகை, டிசம்பர் 2021-இல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்ததை நினைவுபடுத்துவதாக அமைந்தது. அப்போது புதின் ஐந்து மணிநேரம் மட்டுமே தங்கியிருந்தார். கோவிட்-19 பெருந்தொற்று அவரது அந்த குறுகிய பயணத்திற்கு காரணமாகக் கூறப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இரானுக்கான முன்னாள் இந்திய தூதர் கே.சி. சிங் 'தி ட்ரிப்யூன்' இதழில் எழுதியுள்ள கட்டுரையில், இந்த வருகை குறித்து முன்கூட்டியே தகவல்கள் வெளியாகாதது, வளைகுடா மற்றும் மேற்கு ஆசியாவில் வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழலால் நிலைமை இயல்பாக இல்லை என்பதைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் டெல்லியில் வந்திறங்கியபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோதி நேரில் சென்று அவரை வரவேற்றார். பிரதமர் மோதி ஒரு சில உலகத் தலைவர்களுக்கு மட்டுமே இத்தகைய வரவேற்பை அளிக்கிறார்.

கடந்த மாதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் பாகிஸ்தானுக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். டெல்லி பயணத்தின் கால அளவு சில மணிநேரமே என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இதில் மிகவும் முக்கியமாகப் பேசப்படுவது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு உத்தி பாதுகாப்பு கூட்டாண்மையை தொடங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டதுதான்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சௌதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது இந்தியா மற்றும் யுஏஇ இடையே இது கையெழுத்தாகியுள்ளது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது மிக உயர்ந்த குடிமகன் விருதையும் நரேந்திர மோதிக்கு வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் - சௌதி பாதுகாப்பு ஒப்பந்தம்

சௌதி அரேபியா அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது நடத்தப்படும் "எந்தவொரு தாக்குதலும்" இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என்று அவை இரண்டும் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் கூறுகிறது. இது நேட்டோவின் 'பிரிவு 5' போன்றது.

இந்த கூட்டணியில் சேரக்கூடும் என்று கருதப்படும் துருக்கி நேட்டோ அமைப்பில் உறுப்பினராகவும் திகழ்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இருதரப்பு உத்தி பாதுகாப்பு கூட்டாண்மை குறித்து, 'மிடில் ஈஸ்ட் ஐ' செய்தி இணையதளத்தின் துருக்கி செய்தி அலுவலகத் தலைவர் தலைவர் ராகிப் சொய்லு, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"அணு ஆயுத வல்லமை கொண்ட பாகிஸ்தானுடன் சௌதி அரேபியா கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் சமநிலைப்படுத்த, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணு ஆயுத வல்லமை கொண்ட இந்தியாவுடன் கைகோர்ப்பது போல் தெரிகிறது" என அப்பதிவு கூறுகிறது.

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உத்தி பாதுகாப்பு கூட்டாண்மையை, சௌதி அரேபியா - பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான ஒரு எதிர் நடவடிக்கையாகப் பார்க்க வேண்டுமா?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த சௌதி அரேபியாவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் தல்மீஸ் அகமது, பிபிசி ஹிந்தியிடம், "யுஏஇ அதிபரின் இந்திய பயணம் மிகவும் முக்கியமானது. இந்தியா யுஏஇ இடையே ஏற்கனவே உத்தி கூட்டாண்மை இருந்தது. ஆனால் அதில் பாதுகாப்புத் துறை சேர்க்கப்படவில்லை. இப்போது பாதுகாப்புத் துறை சேர்க்கப்படுவது ஒரு முக்கியமான நேரத்தில் நடைபெறுகிறது.

இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது. காஸா பிரச்னை இன்னும் தீரவில்லை. சோமாலிலாந்து விவகாரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேலின் பக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது. சௌதி அரேபியா மற்றும் எமிரேட்ஸுக்கு இடையிலான பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில் மற்றும் சௌதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் துருக்கியும் இணைய வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. இந்த சூழ்நிலையில் இந்த பயணம் நடந்துள்ளது'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தச் சூழலில், இந்தியா மற்றும் யுஏஇ இடையே இருதரப்பு உத்தி பாதுகாப்பு கூட்டாண்மை உருவாவது ஆச்சரியமில்லை. சௌதி அரேபியா-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் துருக்கி இணைந்தால், அது இந்தியாவிற்குச் சாதகமான விஷயமாக இருக்காது" என்று விளக்கினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சௌதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது இந்தியா மற்றும் எமிரேட்ஸ் இடையிலான இந்த மூலோபாய பாதுகாப்பு கூட்டாண்மை ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், @narendramodi

காரணம் என்ன?

"சௌதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் இந்தியப் பிரதமர் நிச்சயம் விவாதித்திருப்பார் என்று நான் நம்புகிறேன். இதற்கு இந்தியா எப்படி எதிர்வினையாற்றப் போகிறது என்பதைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். பாகிஸ்தான் திடீரென முக்கியத்துவம் பெற்றுள்ளது. சௌதி அரேபியா பாகிஸ்தானை நெருக்கமாக அணுகுகிறது, துருக்கி அதன் ஆதரவை விரும்புகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பும் இதில் கவனம் செலுத்துகிறார். இத்தகைய சூழ்நிலையில், மேற்கு ஆசியாவில் இந்தியாவின் உத்தி என்னவாக இருக்கும் என்பது ஒரு பெரிய கேள்வி." என்கிறார் தல்மீஸ் அகமது.

கடந்த ஒரு வருடமாக துருக்கிக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகள் ஆழமடைந்து வருகின்றன. இதன் பின்னால் உள்ள காரணம் என்ன?

மத்திய கிழக்கு நிறுவனத்தின் துருக்கி திட்டத்தின் நிறுவன இயக்குநரான கோனுல் டோல், யுஏஇ அதிபர் முகமது பின் சயீத்தை விட, சௌதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் வலுவான உறவு இருப்பதாகக் கருதுகிறார்.

''அமெரிக்காவுடனான நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இந்த உறவு பயனுள்ளதாக இருக்கும் என்று துருக்கி அதிகாரிகள் கருதுகின்றனர். இத்தகைய காரணிகளே சமீபத்திய ஆண்டுகளில் துருக்கி மற்றும் சௌதி அரேபியா இடையே பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகள் ஆழமடையக் காரணமாகியுள்ளன.''

மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு மாறுபட்ட கொள்கையைக் கடைபிடிக்கிறது. 2020-ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேலை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரித்து, தூதரக உறவுகளை ஏற்படுத்தியது.

சமீபத்தில், சோமாலியாவிற்குள் இருக்கும் 'சோமாலிலாந்தை' இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரித்தபோது, மேற்கு ஆசியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அதைக் கண்டித்தன, ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மௌனம் காத்தது.

இந்தியா கூறியது என்ன?

பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு சில வரம்புகள் இருக்கும் என்று தல்மீஸ் அகமது கருதுகிறார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் வருகைக்குப் பிறகு, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு கூட்டாண்மை எதிர்காலத்தில் வளைகுடா மோதல்களில் சிக்க நேரிடுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த விக்ரம் மிஸ்ரி, "இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே இருந்து வரும் கணிசமான பாதுகாப்பு ஒத்துழைப்பின் இயல்பான பரிணாமமாகவே இதைப் பார்க்கிறேன். பிராந்தியத்தில் நடந்த ஏதேனும் குறிப்பிட்ட சம்பவத்திற்கான எதிர்வினையாகவோ அல்லது கற்பனையான எதிர்கால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டோ இது செய்யப்படவில்லை," என்றார்.

செப்டம்பர் 17, 2025 அன்று பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து சௌதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளது.

சௌதி-பாகிஸ்தான் ராணுவக் கூட்டணி ஏமனில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 17, 2025 அன்று பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து சௌதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளது.

பட மூலாதாரம், @narendramodi

சௌதி, யுஏஇ இரண்டுமே இந்தியாவுக்கு முக்கியமான நாடுகள்

சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளுமே இந்தியாவின் மிக முக்கியமான எரிசக்தி விநியோகஸ்தர்களாகவும், பெருமளவிலான இந்தியப் புலம்பெயர் தொழிலாளர்களை கொண்ட நாடுகளாகவும் உள்ளன.

தனது நலன்களைக் கருத்தில் கொண்டு, வளைகுடா பிராந்தியத்தில் ஏற்படும் மோதல்கள் மற்றும் விரோதப் போக்குகளுக்கு இந்தியா பாரம்பரியமாக மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையையே கடைபிடித்து வருகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு கூட்டாண்மை ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் மட்டுமல்லாமல், "இப்பிராந்தியத்தில் உள்ள வேறு சில நாடுகளுடனும்" வளர்ந்துள்ளதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

சுவாரஸ்யமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் டெல்லி வருகையைத் தொடர்ந்து, சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர், பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசியில் உரையாடினார்.

இந்த உரையாடல்கள் குறித்து சௌதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால நிகழ்வுகள் குறித்து விவாதித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைப் போலவே இந்தியாவும் சௌதி அரேபியாவுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது என்கிறார் தல்மீஸ் அகமது.

''ஆனால் பாகிஸ்தான் சௌதி அரேபியாவிற்குப் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குகிறது, இந்தியா அவ்வாறு செய்வதில்லை. அணு ஆயுத சோதனைகளுக்குப் பிறகு விதிக்கப்பட்ட கடுமையான தடைகளைச் சமாளிக்க சௌதி அரேபியா பாகிஸ்தானுக்கு உதவியது'' என்று குறிப்பிட்டார்.

மோதி பிரதமரான பிறகு, இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உறவுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உத்தி விவகார நிபுணர் பிரம்மா செல்லனி கருதுகிறார்.

"ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்போது இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதி நாடாகவும், ஒரு முக்கியமான எரிசக்தி கூட்டாளியாகவும் உள்ளது. இரு நாடுகளுமே தங்களுக்குள் அவரவர் நாணயங்களில் வர்த்தகம் செய்ய வழிவகை செய்துள்ளன. இது அமெரிக்க டாலர் மீதான சார்பை குறைத்துள்ளது," என்று செல்லானி குறிப்பிட்டுள்ளார்.

மோதி பிரதமரான பிறகு, இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உறவுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மூலோபாய விவகார நிபுணர் பிரம்மா செல்லனி கருதுகிறார்.

பட மூலாதாரம், @MohamedBinZayed

படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் இந்தியப் பயணம் மிகக் குறுகியது.

இந்தப் பயணத்தை பாகிஸ்தான் மற்றும் செளதியுடன் இணைப்பது சரியா?

இந்தியா - யுஏஇ இடையே "உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளும் ஈடுபாடுகளும் முன் எப்போதும் இல்லாத வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதுவே இருதரப்பு உறவுகள் இந்த "புதிய உயரத்தை" எட்டியதற்குக் முக்கிய காரணமாகும்," என்று செல்லானி குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் கே.சி. சிங், "எமிரேட்ஸ் மோதல்கள் இல்லாத வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால் வளைகுடா மற்றும் மேற்கு ஆசியா உறுதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, இது இந்தியாவிற்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது," என்று கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வுகள் மையத்தின் இணைப் பேராசிரியர் முகமது முதாசிர் கமர், இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான உத்தி பாதுகாப்பு கூட்டாண்மையை சௌதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான ஒரு எதிர்வினையாகக் கருதவில்லை.

''மேற்கு ஆசியாவில் இந்தியாவின் ஒவ்வொரு கொள்கையையும் பாகிஸ்தான் குறித்த கண்ணோட்டத்திலேயே நாம் பார்க்க முடியாது. சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் கடந்த செப்டம்பரில் கையெழுத்தானாலும், இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக ராணுவத் தொடர்புகள் இருந்து வருகின்றன," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகியவை ஒரே அணியில் இருப்பது போலத் தெரிவது உண்மை தான். மறுபுறம், பாகிஸ்தான் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் உள்ள முகாமில் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் இதை ஒரு நிரந்தரமான சூழலாக பார்க்க முடியாது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியாவிற்கு இடையிலான பதற்றம், சௌதி இளவரசர் யுஏஇ அதிபர் ஆகியோரின் தனிப்பட்ட ஈகோக்களாலும் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் இவர்களுக்கு இடையிலான நிலைமை சீராகலாம். ஏமனில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைதியாக வெளியேறியது, அது சௌதி அரேபியாவுடன் மோதலை விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. எனவே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா இடையிலான நட்பை மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழலுடன் நேரடியாக இணைக்க முடியாது"என்றும் குறிப்பிட்டார் முகமது முதாசிர் கமர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு