உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட மாணவி மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன?

உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட பெண் மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன?

உடல் எடையைக் குறைப்பதற்காக, யூட்யூப் சேனலில் கூறிய தகவலை வைத்து, நாட்டு மருந்துக் கடையில் வெண்காரம் (போராக்ஸ்) வாங்கிச் சாப்பிட்ட மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி உயிரிழந்துள்ளார்.

ஆனால், வெண்காரம் என்பது நச்சுத்தன்மையுடைய பொருள் என்றும், அது நாட்டு மருந்துகளைத் தயாரிப்பதற்கு மிக மிகச் சிறிய அளவில் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

போராக்ஸ் என்று அழைக்கப்படும் சோடியம் போரேட் என்பது, பூச்சிக் கொல்லியைப் போன்ற நச்சுத்தன்மையைக் கொண்ட ஒரு ரசாயனப் பொருள் என்று வேதியியல் பேராசிரியர் விளக்குகிறார்.

உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட இளம்பெண் மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெண்காரம் என்றழைக்கப்படும் போராக்ஸ் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் (சித்தரிப்புப் படம்)

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை சார்ந்து இத்தகைய தவறான பரிந்துரைகளைத் தெரிவிக்கும் யூட்யூப் சேனல்களை அரசு தடுக்க வேண்டுமென்று அலோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மதுரை இளம்பெண் சாப்பிட்டதாகச் சொல்லப்படும் வெண்காரம், ஆங்கிலத்தில் போராக்ஸ் (Borax) என்று அழைக்கப்படுகிறது. இதன் தன்மை உண்மையில் எத்தகையது? இதை உட்கொள்வதால் உடலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? இதுகுறித்துத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் பல்வேறு நிபுணர்களிடம் பேசியது.

'யூட்யூப் பார்த்து வாங்கிச் சாப்பிட்ட இளம்பெண்'

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கலையரசி, ஒரு தனியார் கல்லுாரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

'உடல் சற்று பருமனாக இருந்த கலையரசி, யூட்யூப் சேனல் ஒன்றில், உடல் எடையைக் குறைக்க வெண்காரம் உதவுமென்று கூறியதை அடிப்படையாகக் கொண்டு, நாட்டு மருந்துக் கடையில் அதை வாங்கிச் சாப்பிட்டுள்ளார்' என காவல்துறை தெரிவித்துள்ளது.

போராக்ஸ் எனப்படும் உப்பில், போரேட் மற்றும் போரிக் அமிலம் கலந்து இருப்பதாகக் கூறுகிறார் குடலியல் மருத்துவ நிபுணர் வி.ஜி. மோகன் பிரசாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போராக்ஸ் எனப்படும் உப்பில், போரேட் மற்றும் போரிக் அமிலம் கலந்து இருப்பதாகக் கூறுகிறார் குடலியல் மருத்துவ நிபுணர் வி.ஜி. மோகன் பிரசாத் (சித்தரிப்புப் படம்)

அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அதிகளவில் வாந்தி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

இரவில் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்படவே, அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காவல்துறை விசாரணையில், அந்தப் பெண் நாட்டு மருந்துக் கடையில் வெண்காரம் வாங்கிச் சாப்பிட்டது தெரிய வந்துள்ளது.

கலையரசி ஒரு யூட்யூப் சேனலில் இருந்த வீடியோவை பார்த்து வெண்காரம் வாங்கிச் சாப்பிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனது மகள் யூட்யூப் சேனலை பார்த்து, சுயமாக நாட்டு மருந்து வாங்கி வந்து சாப்பிட்டபோதே, தான் அதைத் தடுத்ததாக கலையரசியின் தந்தை வேல்முருகன் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

போராக்ஸ் எனப்படும் உப்பில், போரேட் மற்றும் போரிக் அமிலம் கலந்து இருப்பதாகக் கூறுகிறார் குடலியல் மருத்துவ நிபுணர் வி.ஜி. மோகன் பிரசாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

வெண்காரம் என்பது என்ன?

எளிமையாகச் சொல்வதெனில், அது நமது கேரம் போர்டில் பயன்படுத்தும் பவுடர்தான் என்கிறார் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் செல்வராஜ்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இது மிகவும் மெல்லிய தன்மையைக் கொண்ட உப்பாகும். பொதுவாக இதை முகத்திற்குப் பூசும் பவுடர்களில் சிறிய அளவில் சேர்ப்பார்கள்'' என்று தெரிவித்த அவர், "'துத்தநாகத்தைக்கூட நமது மருந்துகளில் சிறிய அளவில் கலக்கிறார்கள். ஆனால், அந்த துத்தநாகத்தை நேரடியாகச் சாப்பிட்டால் அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துமோ அதைத்தான் வெண்காரமும் ஏற்படுத்தும்" எனவும் எச்சரித்தார்.

அவரது கூற்றுப்படி, சோடியம் போரேட் (sodium borate) என்ற ரசாயனம்தான் இந்த பவுடர், பேச்சுவழக்கில் அதை போராக்ஸ் என்பார்கள். ஆனால் "இது உணவாக உட்கொள்வதற்கான பொருளே இல்லை.''

''சுத்திகரிப்பு செய்வதற்கான மூலப்பொருளாக மட்டுமே இதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதே தவிர, நேரடியாக உணவாகப் பயன்படுத்தும் அளவுக்கு உகந்த பொருளில்லை. சுருங்கக் கூறுவதெனில், அதுவும் பூச்சிக்கொல்லியை போன்றதொரு ரசாயனம்தான்'' என்றார் பேராசிரியர் செல்வராஜ்.

போராக்ஸ் எனப்படும் உப்பில், போரேட் மற்றும் போரிக் அமிலம் கலந்து இருப்பதாகக் கூறுகிறார் குடலியல் மருத்துவ நிபுணர் வி.ஜி. மோகன் பிரசாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

சித்த மருத்துவத்தில் வெண்காரம் பயன்படுத்தப்படுகிறதா?

போராக்ஸ் பவுடரை சித்த மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள் என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.

அதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கியபோது, "வாய்ப்புண்ணுக்கு வெளிப்புறமாகப் போடக்கூடிய மருந்தாகவும் அதை பயன்படுத்துவார்கள்" என்று தெரிவித்த அவர், தனக்குத் தெரிந்த சித்த மருத்துவத்தில் எடையைக் குறைப்பதற்கு அதைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார்.

மாத்திரைகளால் உடல் எடையைக் குறைக்க முடியாது என வலியுறுத்தும் கு.சிவராமன் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவையே உடல் எடையைக் குறைப்பதற்கான வழிமுறை என்கிறார்.

வெண்காரம் சித்த மருத்துவத்தில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்துப் பேசிய சித்த மருத்துவர் வீரபாபு, "வெண்காரம் சில சித்த மருந்துகளில் மிகச் சிறிய அளவு கலக்கப்படுமே தவிர, நேரடியாக மருந்தாகப் பரிந்துரை செய்யப்படுவதில்லை. அதையும் முறையாகச் சுத்திகரிக்காமல் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது" என்று எச்சரித்தார்.

வெண்காரம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நஞ்சாகவும் இருப்பதாக, சித்த மருத்துவர் வீரபாபு கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, ''பொதுவாக வாய்க்குள், பற்களில் இருக்கும் தொற்றுகளுக்கு, வாய்ப்புண்ணுக்கு இவற்றைச் சிறு அளவில் பரிந்துரைப்பது உண்டு. ஆனால் வெண்காரம் எந்த வகையிலும் உடல் எடையைக் குறைப்பதற்கான மருந்து கிடையாது'' என்றும் சித்த மருத்துவர் வீரபாபு தெரிவித்தார்.

வி.ஜி. மோகன் பிரசாத்
படக்குறிப்பு, வி.ஜி. மோகன் பிரசாத்

பாதிப்புகள் என்ன?

போராக்ஸை மிகச் சிறிய அளவில் எடுத்துக் கொள்வதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் நேராது என கூறுகிறார் குடலியல் மற்றும் லேப்ராஸ்கோபிக் மருத்துவ நிபுணர் வி.ஜி. மோகன் பிரசாத்.

வயிறு மற்றும் செரிமான மண்டல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் வி.ஜி. மோகன் பிரசாத், இந்தியன் சொசைட்டி ஆஃப் கேஸ்ட்ரோ என்ட்ராலஜி அமைப்பின் தலைவராக உள்ளார்.

''சுத்திகரிக்கப்பட்ட போராக்ஸ் பவுடரை மிகவும் நுண்ணிய அளவில் எடுத்திருந்தால் பிரச்னையில்லை. ஆனால் எந்த வயதினராக இருந்தாலும் அதை அதிகமாக உட்கொண்டால் சிறிது நேரத்தில் உடலின் உள்ளுறுப்புகளில் நச்சுத்தன்மை பரவி, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். சிலருக்கு வலிப்பும் ஏற்படலாம். நேரமாகிவிட்டால் அதைச் சாப்பிட்டவரைக் காப்பாற்றுவது சிரமம்'' என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒருவேளை யாரேனும் தவறுதலாக வெண்காரத்தைச் சாப்பிட்டாலும்கூட "ஒரு மணிநேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், டியூப் போட்டு நஞ்சை வெளியே எடுத்து விடுவதன் மூலம் காப்பாற்ற முடியும்" என்கிறார் குடலியல் நிபுணர் வி.ஜி. மோகன்.

அதேவேளையில், தாமதம் ஆகும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவரித்த அவர், "போராக்ஸின் நச்சுத்தன்மை காரணமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். சிறிது நேரத்தில் சிறுநீரகம் செயலிழந்துவிடும், ரத்தப்போக்கு ஏற்படும். உரிய நேரத்தில் சிகிச்சைக்கு செல்லும்பட்சத்தில் நஞ்சை வெளியேற்ற முடியும்" என்று விவரித்தார்.

சமீபகாலமாக யூட்யூப் சேனல்களை பார்த்து சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதும், மருத்துவ சிகிச்சைகளைச் செய்துகொள்வதும் அதிகரித்து வருவதாக அலோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுபற்றிப் பேசிய சித்த மருத்துவர் வீரபாபு, ''முறையான சித்த வைத்தியம் படிக்காமல், எவ்வித ஆராய்ச்சி அனுபவமும் இல்லாமல் யூட்யூப் சேனல்களில் இயற்கை வைத்தியர் என்ற பெயரில் எதையெல்லாமோ மருந்தாக, உணவாகப் பரிந்துரைக்கிறார்கள். அரசு இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் இத்தகைய பதிவுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு